மத்தேயு 10:1-42

10  பின்பு, அவர் தன்னுடைய 12 சீஷர்களையும் கூப்பிட்டு, பேய்களை விரட்டுவதற்கும்+ எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.  அந்த 12 அப்போஸ்தலர்களின் பெயர்கள் இவைதான்:+ பேதுரு என்ற சீமோன்,+ இவருடைய சகோதரர் அந்திரேயா;+ செபெதேயுவின் மகன் யாக்கோபு, இவருடைய சகோதரர் யோவான்;+  பிலிப்பு, பர்த்தொலொமேயு,+ தோமா;+ வரி வசூலிப்பவரான மத்தேயு;+ அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு;  பக்திவைராக்கியமுள்ள சீமோன், இயேசுவைப் பிற்பாடு காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.+  அந்த 12 பேருக்கும் இயேசு இந்த அறிவுரைகளைக் கொடுத்து அனுப்பினார்:+ “மற்ற தேசத்தாரின் பகுதிக்குள் போகாதீர்கள்; சமாரியர்களுடைய எந்த நகரத்துக்குள்ளும் நுழையாதீர்கள்.+  வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் தேசத்தாரிடமே போங்கள்.+  அப்படிப் போகும்போது, ‘பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்று பிரசங்கியுங்கள்.+  நோயாளிகளைக் குணப்படுத்துங்கள்,+ இறந்தவர்களை உயிரோடு எழுப்புங்கள், தொழுநோயாளிகளைச் சுத்தமாக்குங்கள், பேய்களை விரட்டுங்கள். இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.+  தங்கம், வெள்ளி, அல்லது செம்புக் காசுகளை உங்களோடு* கொண்டுபோகாதீர்கள்.+ 10  பயணத்துக்காக உணவுப் பையையோ, இரண்டு உடைகளையோ,* செருப்புகளையோ, தடியையோ+ வாங்கிக்கொண்டு போகாதீர்கள். ஏனென்றால், வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.+ 11  நீங்கள் எந்த நகரத்துக்குப் போனாலும், எந்தக் கிராமத்துக்குப் போனாலும், தகுதியுள்ளவர் யார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள்; அங்கிருந்து புறப்படும்வரை அவருடனேயே தங்கியிருங்கள்.+ 12  ஒரு வீட்டுக்குள் போகும்போது, அங்கிருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். 13  அந்த வீட்டில் இருப்பவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், நீங்கள் வாழ்த்துச் சொன்னபடி அவர்களுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்;+ தகுதியில்லாதவர்களாக இருந்தால், அந்தச் சமாதானம் உங்களிடமே திரும்பட்டும். 14  யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அல்லது உங்களுடைய வார்த்தைகளைக் கேட்காவிட்டால், அந்த வீட்டையோ நகரத்தையோ விட்டுப் புறப்படும்போது உங்களுடைய பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.+ 15  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் சோதோம் கொமோரா+ நகரங்களுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட அந்த நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும். 16  இதோ! ஓநாய்கள் நடுவில் ஆடுகளை அனுப்புவதுபோல் உங்களை அனுப்புகிறேன்;+ அதனால், பாம்புகளைப் போல் ஜாக்கிரதையாகவும் புறாக்களைப் போல் கள்ளம்கபடம் இல்லாமலும் நடந்துகொள்ளுங்கள்.+ 17  எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், மனுஷர்கள் உங்களை உள்ளூர் நீதிமன்றங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்துவார்கள்;+ தங்களுடைய ஜெபக்கூடங்களில்+ உங்களை முள்சாட்டையால் அடிப்பார்கள்.+ 18  அதுமட்டுமல்ல, நீங்கள் என்னுடைய சீஷர்களாக இருப்பதால், உங்களை ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்னால் நிறுத்துவார்கள்,+ அப்போது நீங்கள் அவர்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் சாட்சி கொடுக்க முடியும்.+ 19  ஆனாலும், அவர்கள் உங்களை அதிகாரிகள்முன் நிறுத்தும்போது, எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன பேச வேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.+ 20  அப்போது நீங்களாகவே பேச மாட்டீர்கள், உங்கள் பரலோகத் தகப்பனுடைய சக்தி உங்களைப் பேச வைக்கும்.+ 21  சகோதரனின் சாவுக்குச் சகோதரனும், பிள்ளையின் சாவுக்கு அப்பாவும் காரணமாக இருப்பார்கள். பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களுடைய சாவுக்குக் காரணமாவார்கள்.+ 22  நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்;+ ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்.+ 23  அவர்கள் உங்களை ஒரு நகரத்தில் துன்புறுத்தினால், வேறொரு நகரத்துக்குத் தப்பித்து ஓடுங்கள்;+ உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனிதகுமாரன் வருவதற்குள் இஸ்ரவேலில் உள்ள எல்லா நகரங்களிலும் பிரசங்கித்து முடித்திருக்கவே மாட்டீர்கள். 24  மாணவன் தன்னுடைய குருவைவிட பெரியவன் அல்ல, அடிமை தன்னுடைய எஜமானைவிட பெரியவன் அல்ல.+ 25  மாணவன் தன் குருவைப் போலவும், அடிமை தன் எஜமானைப் போலவும்+ ஆனாலே போதும். வீட்டு எஜமானையே பெயல்செபூப்+ என்று மக்கள் சொல்லியிருக்கும்போது, அவருடைய வீட்டில் இருப்பவர்களை அப்படிச் சொல்வது இன்னும் நிச்சயம்தானே? 26  அதனால், அவர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள்; மூடிமறைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, ரகசியமாக வைக்கப்படுகிற எதுவும் வெட்டவெளிச்சமாகாமல் போகாது.+ 27  நான் உங்களுக்கு இருட்டில் சொல்வதை நீங்கள் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; காதோடு காதாகச் சொல்வதை* வீட்டு மாடிகளிலிருந்து பிரசங்கியுங்கள்.+ 28  உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள்.+ உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில் அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்.+ 29  குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றுகூட உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியாமல் தரையில் விழுவதில்லை.+ 30  உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.+ 31  அதனால், பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்.+ 32  மனுஷர்களுக்கு முன்னால் என்னை ஏற்றுக்கொள்கிறவனை+ என் பரலோகத் தகப்பனுக்கு முன்னால் நானும் ஏற்றுக்கொள்வேன்.+ 33  ஆனால், மனுஷர்களுக்கு முன்னால் என்னை ஒதுக்கித்தள்ளுகிறவனை என் பரலோகத் தகப்பனுக்கு முன்னால் நானும் ஒதுக்கித்தள்ளுவேன்.+ 34  பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க* வந்தேன்.+ 35  அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன்.+ 36  சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள். 37  என்மேல் காட்டும் பாசத்தைவிட தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது; என்மேல் காட்டும் பாசத்தைவிட தன் மகனிடமோ மகளிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது.+ 38  தன்னுடைய சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது.+ 39  தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறவன் அதை இழந்துபோவான்; ஆனால், எனக்காகத் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்.+ 40  உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான், என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்.+ 41  ஒருவர் தீர்க்கதரிசியாக இருப்பதால் அவரை ஏற்றுக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறுகிற அதே பலனைப் பெறுவான்;+ ஒருவர் நீதிமானாக இருப்பதால் அவரை ஏற்றுக்கொள்கிறவன், நீதிமான் பெறுகிற அதே பலனைப் பெறுவான். 42  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், தாழ்மையானவர்களான இவர்களில் ஒருவர் என்னுடைய சீஷராக இருப்பதால், இவருக்கு ஒரு குவளை குளிர்ந்த தண்ணீர் கொடுக்கிறவனும்கூட கண்டிப்பாகத் தன்னுடைய பலனைப் பெறுவான்.”+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

அப்போஸ்தலர்களின்: வே.வா., “அனுப்பப்பட்டவர்களின்.” இதற்கான கிரேக்க வார்த்தை அப்போஸ்ட்டோலாஸ். இது, “அனுப்பி வைப்பது” என்ற அர்த்தத்தைத் தரும் அப்போஸ்ட்டெல்லோ என்ற வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கிறது. (மத் 10:5; லூ 11:49; 14:32) இந்த வார்த்தையின் அடிப்படை அர்த்தம், யோவா 13:16-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது; அங்கே இந்த வார்த்தை ‘அனுப்பப்பட்டவர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பேதுரு என்ற சீமோன்: பேதுருவுக்கு ஐந்து விதமான பெயர்களை பைபிள் குறிப்பிடுகிறது: (1) “சிமியோன்” (இது எபிரெயப் பெயரின் கிரேக்க வடிவம்); (2) “சீமோன்” என்ற கிரேக்கப் பெயர் (சிமியோன், சீமோன் ஆகிய இரண்டுமே, “கேட்பது; கவனித்துக் கேட்பது” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கின்றன); (3) “பேதுரு” என்ற கிரேக்கப் பெயர் (இதன் அர்த்தம், “பாறாங்கல்”; பைபிளில் இவருக்கு மட்டும்தான் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது); (4) “கேபா” என்ற செமிட்டிக் பெயர் (இது பேதுரு என்பதற்கு இணையான பெயர்; ஒருவேளை, யோபு 30:6; எரே 4:29 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கேஃபிம் [பாறைகள்] என்ற எபிரெய வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கலாம்); (5) “சீமோன் பேதுரு” (இது இரண்டு பெயர்கள் சேர்ந்த ஒரு பெயர்).—அப் 15:14; யோவா 1:42; மத் 16:16.

வரி வசூலிப்பவர்களும்: நிறைய யூதர்கள் ரோம அதிகாரிகளுக்காக வரி வசூலித்தார்கள். மக்களுக்கு அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஏனென்றால், தாங்கள் வெறுக்கிற வேறொரு நாட்டுக்கு அவர்கள் துணைபோனதோடு, சட்டப்படி வசூலிக்க வேண்டிய தொகையைவிட அதிகமாக வசூலித்தார்கள். வரி வசூலித்த யூதர்களிடமிருந்து மற்ற யூதர்கள் பொதுவாக ஒதுங்கியே இருந்தார்கள். அவர்களைப் பாவிகள் போலவும் விலைமகள்கள் போலவும் பார்த்தார்கள்.—மத் 11:19; 21:32.

பர்த்தொலொமேயு: அர்த்தம், “தொல்மாயின் மகன்.” இவரைத்தான் நாத்தான்வேல் என்று யோவான் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது. (யோவா 1:45, 46) சுவிசேஷப் புத்தகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாத்தான்வேலையும் பிலிப்புவையும் யோவான் எப்படி சம்பந்தப்படுத்திப் பேசுகிறாரோ அப்படித்தான் பர்த்தொலொமேயுவையும் பிலிப்புவையும் மத்தேயு மற்றும் லூக்கா சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள்.—மத் 10:3; லூ 6:14.

வரி வசூலிப்பவரான: இந்த சுவிசேஷப் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு முன்பு வரி வசூலிப்பவராக இருந்தார்; அதனால், எண்ணிக்கைகளையும் பண மதிப்புகளையும் நிறைய தடவை குறிப்பிட்டிருக்கிறார். (மத் 17:27; 26:15; 27:3) அதுவும், எண்ணிக்கைகளை அதிகத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இயேசுவின் வம்சாவளிப் பட்டியலை 14 தலைமுறைகள்கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார் (மத் 1:1-17); மாதிரி ஜெபத்தில் ஏழு விண்ணப்பங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் (மத் 6:9-13); மத் 13-ல் ஏழு உவமைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்; கேடு வருமென்று மத் 23:13-36-ல் ஏழு முறை சொல்லியிருக்கிறார். “வரி வசூலிப்பவர்” என்ற வார்த்தைகளைப் பற்றி மத் 5:46-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மத்தேயு: லேவி என்றும் அழைக்கப்படுகிறார்.—லூ 5:27.

அல்பேயுவின் மகன் யாக்கோபு: மாற் 3:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

ததேயு: லூ 6:16; அப் 1:13 ஆகிய வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள அப்போஸ்தலர்களின் பட்டியலில் ததேயுவின் பெயர் இல்லை. அதற்குப் பதிலாக, “யாக்கோபின் மகன் யூதாஸ்” என்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், ‘யூதாஸ் (யூதாஸ் இஸ்காரியோத்து அல்ல)’ என்று யோவான் குறிப்பிடும் அப்போஸ்தலரின் இன்னொரு பெயர்தான் ததேயு என்ற முடிவுக்கு நாம் வரலாம். (யோவா 14:22) இந்த யூதாசையும் துரோகியான யூதாஸ் இஸ்காரியோத்தையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே சிலசமயங்களில் ததேயு என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

பக்திவைராக்கியமுள்ள: நே.மொ., “கெனனீயனாகிய.” இது, அப்போஸ்தலன் சீமோனை அப்போஸ்தலன் சீமோன் பேதுருவிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள பட்டப்பெயர். (மாற் 3:18) ‘கெனனீயன்’ என்ற வார்த்தை எபிரெய அல்லது அரமேயிக் வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது; இதன் அர்த்தம், “போராளி; ஆர்வலர்.” லூக்கா இந்த சீமோனை “பக்திவைராக்கியமுள்ளவன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு அவர் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை சீலோட்டேஸ். இதன் அர்த்தம், “போராளி; ஆர்வலர்.” (லூ 6:15; அப் 1:13) சீமோன், ரோமர்களை எதிர்த்த யூதப் போராளிகளில் ஒருவராக முன்பு இருந்திருக்கலாம் என்பது உண்மைதான்; ஆனால், பக்திவைராக்கியமும் ஆர்வமும் காட்டியதற்காக அவருக்கு இந்தப் பட்டப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

இஸ்காரியோத்து: ஒருவேளை இதன் அர்த்தம், “கீரியோத்தைச் சேர்ந்தவன்.” யூதாசின் அப்பா சீமோனும் “இஸ்காரியோத்து” என்று அழைக்கப்படுகிறார். (யோவா 6:71) சீமோனும் யூதாசும் யூதேயாவில் இருந்த கீரியோத்-எஸ்ரோன் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த வார்த்தை காட்டுவதாக நம்பப்படுகிறது. (யோசு 15:25) அது உண்மை என்றால், 12 அப்போஸ்தலர்களில் யூதாஸ் மட்டும்தான் யூதேயாவைச் சேர்ந்தவன்; மற்றவர்கள் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்.

பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது: ஒரு புதிய அரசாங்கம் உலகத்தை ஆட்சி செய்யும் என்பதுதான் இயேசு பிரசங்கித்த முக்கிய செய்தியாக இருந்தது. (மத் 10:7; மாற் 1:15) இயேசுவின் ஞானஸ்நானத்துக்குச் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு செய்தியை யோவான் ஸ்நானகர் அறிவிக்க ஆரம்பித்திருந்தார் (மத் 3:1, 2); இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கம் ‘நெருங்கி வந்துவிட்டதாக’ இயேசு சொன்னதில் இன்னும் அதிக அர்த்தம் இருந்தது; ஏனென்றால், அந்த அரசாங்கத்தின் எதிர்கால ராஜாவாக நியமிக்கப்பட்டிருந்த அவர் அப்போது அங்கு இருந்தார். கடவுளுடைய அரசாங்கம் ‘நெருங்கி வந்துவிட்டதை,’ அதாவது சீக்கிரத்தில் வரவிருந்ததை, பற்றி இயேசுவின் மரணத்துக்குப் பிறகு அவருடைய சீஷர்கள் தொடர்ந்து அறிவித்ததாக எங்கும் சொல்லப்படவில்லை.

பிரசங்கித்துக்கொண்டிருந்தார்: ‘பிரசங்கிப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “ஒரு பொதுத் தூதுவராக எல்லாருக்கும் ஒரு செய்தியை அறிவிப்பது.” இந்த வார்த்தை, பிரசங்கிக்கும் விதத்தை வலியுறுத்துகிறது; அதாவது, ஒரு தொகுதிக்கு முன்பு பிரசங்கம் செய்வதைக் குறிக்காமல், வெளிப்படையாக எல்லாருக்கும் பிரசங்கிப்பதைக் குறிக்கிறது.

பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது: மத் 4:17-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பிரசங்கியுங்கள்: பிரசங்கிப்பது என்றால், வெளிப்படையாக எல்லாருக்கும் செய்தியை அறிவிப்பது.—மத் 3:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

தொழுநோயாளி: அதாவது, “பயங்கரமான தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்.” பைபிளில் சொல்லப்பட்டுள்ள தொழுநோய், இன்று தொழுநோய் என்று அழைக்கப்படுகிற நோயை மட்டுமே குறிப்பதில்லை. இதற்கான எபிரெய வார்த்தை, தொற்றக்கூடிய பலவிதமான தோல் நோய்களைக் குறிக்கலாம். துணிமணிகளிலும் வீடுகளிலும் பரவுகிற பூஞ்சணத்தைக்கூட குறிக்கலாம். தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாகும்வரை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டார்.—லேவி 13:2, 45, 46; சொல் பட்டியலில் “தொழுநோய்; தொழுநோயாளி” என்ற தலைப்பைப் பாருங்கள்.

தொழுநோயாளிகளை: மத் 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “தொழுநோய்; தொழுநோயாளி” என்ற தலைப்பையும் பாருங்கள்.

வாழ்த்து: யூதர்கள் பொதுவாக, “உங்களுக்குச் சமாதானம்!” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.—நியா 19:20, அடிக்குறிப்பு; மத் 10:13; லூ 10:5.

உங்களுடைய பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்: இப்படிச் செய்வது, இனி கடவுள் கொடுக்கப்போகும் தீர்ப்புக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று சீஷர்கள் சொல்வதற்கு அடையாளமாக இருந்தது. இதே வார்த்தைகள் மாற் 6:11; லூ 9:5 ஆகிய வசனங்களிலும் வருகின்றன. கூடுதலாக, இது அவர்களுக்கு ஒரு [அல்லது, “அவர்களுக்கு எதிரான”] சாட்சியாக இருக்கும் என்ற வார்த்தைகளும் அந்த வசனங்களில் வருகின்றன. பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவில் பவுலும் பர்னபாவும் இந்த அறிவுரையைப் பின்பற்றினார்கள் (அப் 13:51); பவுல் கொரிந்துவில் இருந்தபோதும், இதேபோன்ற ஒன்றைச் செய்தார். அதாவது, தன் உடையை உதறி, “இனி உங்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு, நான் பொறுப்பல்ல” என்று விளக்கினார். (அப் 18:6) இப்படிப்பட்ட சைகைகள், சீஷர்களுக்குப் புதிதாக இருந்திருக்காது. ஏனென்றால், மற்ற தேசங்களுக்குப் போய்விட்டுத் திரும்பிய யூதர்கள் தங்களுடைய பாதங்கள் அசுத்தமாகிவிட்டதாக நினைத்தார்கள்; அதனால், தங்களுடைய தேசத்துக்குள் மறுபடியும் நுழைவதற்கு முன்னால் தங்கள் செருப்புகளில் படிந்திருந்த தூசியை உதறிப்போட்டார்கள். ஆனால் இயேசு, அநேகமாக வேறொரு அர்த்தத்தில்தான் இந்த அறிவுரைகளைத் தன் சீஷர்களுக்குக் கொடுத்திருப்பார்.

உண்மையாகவே: கிரேக்கில், ஆமென். இது, ஆமன் என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பு. இதன் அர்த்தம், “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே.” ஒரு விஷயத்தை, வாக்குறுதியை, அல்லது தீர்க்கதரிசனத்தைச் சொல்வதற்கு முன்பு இயேசு அடிக்கடி இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். இப்படி, அவர் சொல்லவந்த விஷயம் முழுக்க முழுக்க உண்மை என்பதையும் நம்பகமானது என்பதையும் வலியுறுத்திக் காட்டினார். “உண்மையாகவே” அல்லது ஆமென் என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தியதுபோல் வேறு யாரும் பயன்படுத்தியதாக வேறெந்தப் புனித நூலும் சொல்வதில்லை. தான் சொல்லவரும் விஷயம் நம்பகமானது என்பதை இன்னும் அதிகமாக வலியுறுத்துவதற்காக இயேசு இந்த வார்த்தையை அடுத்தடுத்து இரண்டு தடவை சொல்லியிருக்கிறார் (ஆமென் ஆமென்); யோவான் சுவிசேஷம் முழுவதிலும் அந்தப் பதிவுகளை நாம் பார்க்கலாம்.—யோவா 1:51.

இதோ!: இதற்கான கிரேக்க வார்த்தை இடோ. அடுத்து சொல்லப்படும் விஷயத்துக்குக் கவனத்தைத் திருப்புவதற்கு இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது; காட்சியைக் கற்பனை செய்துபார்க்கும்படியோ ஒரு விவரத்தைக் கவனிக்கும்படியோ தூண்டுவதற்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்கோ, புதிய அல்லது ஆச்சரியமான ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்துவதற்கோகூட அது பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்களிலும், வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிரேக்க வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை எபிரெய வேதாகமத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதோ!: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பாம்புகளைப் போல் ஜாக்கிரதையாகவும்: இந்த வசனத்தில், ஜாக்கிரதையாக நடந்துகொள்வது என்பது விவேகத்தோடும் புத்தியோடும் சாமர்த்தியத்தோடும் நடந்துகொள்வதை அர்த்தப்படுத்துகிறது. பெரும்பாலான பாம்புகள் மிகவும் உஷாராக இருக்கின்றன என்றும், தாக்குவதற்குப் பதிலாகத் தப்பியோடவே விரும்புகின்றன என்றும் விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். பாம்புகளைப் போல் தன் சீஷர்களும் எதிரிகளைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று இயேசு எச்சரித்தார்; ஊழியம் செய்யும்போது ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாதபடி கவனமாக இருக்க வேண்டுமென்றும் எச்சரித்தார்.

உச்ச நீதிமன்றத்தில்: எருசலேமில் இருந்த நீதிவிசாரணைக் குழுவாகிய நியாயசங்கத்தைக் குறித்தது. தலைமைக் குருவும் 70 மூப்பர்களும் வேத அறிஞர்களும் அதன் உறுப்பினர்களாக இருந்தார்கள். அதன் தீர்ப்பை இறுதித் தீர்ப்பாக யூதர்கள் கருதினார்கள்.—சொல் பட்டியலில் “நியாயசங்கம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

நியாயசங்க: நியாயசங்கம் என்பது எருசலேமில் இருந்த யூத உயர் நீதிமன்றம். இதற்கான கிரேக்க வார்த்தையின் (சினெடிரியோன்) நேரடி அர்த்தம், “சேர்ந்து உட்காருதல்.” அது ஒரு கூட்டத்தை அல்லது பேரவையைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தது; ஆனாலும், இஸ்ரவேலில் அது பெரும்பாலும் மத சம்பந்தப்பட்ட நீதி விசாரணைக் குழுவை அல்லது நீதிமன்றத்தைக் குறித்தது.​—மத் 5:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “நியாயசங்கம்” என்ற தலைப்பையும் பாருங்கள்; நியாயசங்க மன்றம் எங்கே இருந்திருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இணைப்பு B12-ஐயும் பாருங்கள்.

உள்ளூர் நீதிமன்றங்களுக்கு: உள்ளூர் நீதிமன்றங்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை, சினெடிரியோன். இங்கே அது பன்மையில் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அந்த வார்த்தை, எருசலேமில் இருந்த யூத உயர் நீதிமன்றத்தை, அதாவது நியாயசங்கத்தை, பெரும்பாலும் குறித்தது. (சொல் பட்டியலில் “நியாயசங்கம்” என்ற தலைப்பையும், மத் 5:22; 26:59-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பாருங்கள்.) அதேசமயத்தில், ஒரு மாநாட்டை அல்லது கூட்டத்தைப் பொதுப்படையாகக் குறிப்பதற்கும் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்த வசனத்தில், ஜெபக்கூடங்களோடு இணைந்திருந்த உள்ளூர் நீதிமன்றங்களைக் குறிக்கிறது. முள்சாட்டையால் அடிக்கும்படியும் ஜெபக்கூடத்திலிருந்து நீக்கும்படியும் உத்தரவிட இந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருந்தது.—மத் 23:34; மாற் 13:9; லூ 21:12; யோவா 9:22; 12:42; 16:2.

சகித்திருப்பவர்தான்: ‘சகித்திருப்பது’ என்பதற்கான கிரேக்க வினைச்சொல்லின் (ஹைப்போமீனோ) நேரடி அர்த்தம், “தொடர்ந்து இருப்பது (தங்குவது).” அது, “ஓடாமல் அதே இடத்தில் இருப்பது; உறுதியாக நிற்பது; விடாமுயற்சி செய்வது; நிலையாக இருப்பது” என்ற அர்த்தங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. (மத் 10:22; ரோ 12:12; எபி 10:32; யாக் 5:11) இந்த வசனத்தில், எதிர்ப்புகளின் மத்தியிலும் சோதனைகளின் மத்தியிலும் தொடர்ந்து கிறிஸ்துவின் சீஷர்களாக வாழ்வதைக் குறிக்கிறது.—மத் 24:9-12.

சகித்திருப்பவர்தான்: மத் 24:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மனிதகுமாரனுக்கு: வே.வா., “ஒரு மனிதனின் மகனுக்கு.” இந்த வார்த்தை சுவிசேஷப் புத்தகங்களில் கிட்டத்தட்ட 80 தடவை வருகிறது. இயேசு தன்னைப் பற்றிச் சொல்லும்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்; அநேகமாக, தான் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த உண்மையான மனிதர் என்பதை வலியுறுத்தினார். அதோடு, ஆதாமுக்குச் சரிசமமான ஒரு மனிதராக இருந்ததையும், மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இருந்ததையும் வலியுறுத்தினார். (ரோ 5:12, 14, 15) இதே வார்த்தை இயேசுவை மேசியாவாகவும், அதாவது கிறிஸ்துவாகவும்கூட, அடையாளம் காட்டியது.—தானி 7:13, 14; சொல் பட்டியலைப் பாருங்கள்.

மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

இன்னும் எந்தளவுக்கு: இயேசு அடிக்கடி இதுபோல் நியாயங்காட்டிப் பேசினார். முதலில், எல்லாருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உண்மையைச் சொன்னார்; பிறகு, அந்த உண்மையின் அடிப்படையில் அதைவிட முக்கியமான ஒரு உண்மையை எடுத்துக் காட்டினார். இப்படி, ஒரு எளிமையான விஷயத்தைச் சொல்லி மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தினார்.—மத் 10:25; 12:11, 12; லூ 11:13; 12:28.

பெயல்செபூப்: ஒருவேளை, பாகால்-செபூப் என்ற பெயரின் மாற்று வடிவமாக இது இருக்கலாம். பாகால்-செபூப் என்பது எக்ரோனில் இருந்த பெலிஸ்தியர்களால் வணங்கப்பட்ட பாகால் தெய்வம். பாகால்-செபூப் என்பதன் அர்த்தம், “ஈக்களின் சொந்தக்காரன் (எஜமான்).” (2ரா 1:3) சில கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில், பெயல்செபோல் அல்லது பெயசெபோல் என்ற மாற்று வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன; ஒருவேளை இவற்றின் அர்த்தம், “உன்னதமான குடியிருப்பின் சொந்தக்காரன் (எஜமான்).” பைபிளில் பயன்படுத்தப்படாத செவெல் (சாணி) என்ற எபிரெய வார்த்தை இங்கே சொல்வித்தையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இதன் அர்த்தம் “சாணியின் சொந்தக்காரன் (எஜமான்).” மத் 12:24 காட்டுகிறபடி, பெயல்செபூப் என்பது பேய்களின் தலைவனான சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்.

இன்னும் நிச்சயம்தானே?: மத் 7:11-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் “இன்னும் எந்தளவுக்கு” என்ற தலைப்பைப் பாருங்கள்.

வெளிச்சத்தில்: அதாவது, “வெளிப்படையாக; எல்லாருக்கும்.”

வீட்டு மாடிகளிலிருந்து பிரசங்கியுங்கள்: “வெளிப்படையாக அறிவிப்பு செய்வதை” அர்த்தப்படுத்தும் ஒரு மரபுத்தொடர். பைபிள் காலங்களில், வீடுகளின் மொட்டைமாடிகளிலிருந்து அறிவிப்புகள் செய்யப்பட்டன; அங்கே நடந்த சில செயல்கள் எல்லாருக்கும் தெரியவந்தன.—2சா 16:22.

கெஹென்னாவுக்குள்: ‘கெஹென்னா’ என்ற வார்த்தை, “இன்னோம் பள்ளத்தாக்கு” என்ற அர்த்தத்தைத் தரும் ஃகேஹ் இன்னோம் என்ற எபிரெய வார்த்தைகளிலிருந்து வந்திருக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு பழங்கால எருசலேமுக்கு மேற்கிலும் தெற்கிலும் அமைந்திருந்தது. (இணைப்பு B12-ஐயும், “எருசலேமும் சுற்றுப்புறமும்” என்ற வரைபடத்தையும் பாருங்கள்.) இயேசுவின் காலத்தில், அது குப்பைக்கூளங்களை எரிக்கும் இடமாக ஆகியிருந்தது. அதனால், “கெஹென்னா” என்ற வார்த்தை நிரந்தர அழிவைக் குறிப்பதற்குப் பொருத்தமான வார்த்தையாக இருந்தது.—சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.

உயிரை: இங்கே ‘உயிர்’ என்பது, உயிர்த்தெழுதலின் மூலம் எதிர்காலத்தில் பெறப்போகும் உயிரைக் குறிக்கிறது. சைக்கீ என்ற கிரேக்க வார்த்தையும், நெஃபெஷ் என்ற எபிரெய வார்த்தையும் பெரும்பாலான தமிழ் பைபிள்களில் “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவை முக்கியமாக (1) நபரை, (2) மிருகத்தை, (3) ஒரு நபரின் அல்லது மிருகத்தின் உயிரை அர்த்தப்படுத்துகின்றன. (ஆதி 1:20; 2:7; 1பே 3:20; அடிக்குறிப்புகள்) பின்வரும் வசனங்களில், சைக்கீ என்ற கிரேக்க வார்த்தை “ஒரு நபரின் உயிரை” குறிப்பதால் ‘உயிர்’ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: மத் 6:25; 10:39; 16:25, 26; மாற் 8:35-37; லூ 12:20; யோவா 10:11, 15; 12:25; 13:37, 38; 15:13; அப் 20:10. இதுபோன்ற வசனங்கள், இந்த வசனத்திலுள்ள இயேசுவின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.—சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.

உயிர், உடல் இரண்டையுமே . . . அழிக்க முடிந்தவருக்கே: ஒருவரின் ‘உயிரை’ (இந்த வசனத்தில், மறுபடியும் வாழ்வதற்கான நம்பிக்கையை) அழிக்கவோ ஒருவரை உயிரோடு எழுப்பி என்றென்றும் வாழ வைக்கவோ கடவுளால் மட்டும்தான் முடியும். “ஆத்துமா” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தை, அழியக்கூடிய ஒன்றைக் குறிப்பதை இந்த வசனம் காட்டுகிறது. இதைக் காட்டும் மற்ற வசனங்கள் இவைதான்: மாற் 3:4; லூ 17:33; யோவா 12:25.

கெஹென்னாவில்: இது நிரந்தர அழிவைக் குறிக்கிறது.​—மத் 5:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பையும் பாருங்கள்.

குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு: நே.மொ., “அசாரியன் காசுக்கு.” இது 45 நிமிட வேலைக்குக் கொடுக்கப்பட்ட கூலி. (இணைப்பு B14-ஐப் பாருங்கள்.) இயேசு மூன்றாவது தடவையாக கலிலேயாவில் ஊழியம் செய்த இந்தச் சமயத்தில், ஒரு அசாரியன் காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்கப்பட்டதாகச் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகு அவர் யூதேயாவில் ஊழியம் செய்த சமயத்தில், இரண்டு அசாரியன் காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்கப்பட்டதாகச் சொன்னார். (லூ 12:6) இந்த இரண்டு பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிட்டுக்குருவிகளை வியாபாரிகள் எந்தளவுக்குக் குறைவாக மதிப்பிட்டார்கள் என்று தெரிகிறது; ஐந்தாவது சிட்டுக்குருவியை அவர்கள் இலவசமாகவே கொடுத்துவிட்டார்கள்.

சிட்டுக்குருவிகளை: கிரேக்கில், ஸ்ட்ரௌத்தியான் என்ற வார்த்தை குறுமை வடிவத்தில் இருக்கிறது; அப்படியென்றால், அது எந்தவொரு சின்னஞ்சிறு பறவையையும் குறித்திருக்கலாம். ஆனாலும், அது பெரும்பாலும் சிட்டுக்குருவிகளைக் குறித்தது. உணவுக்காக விற்கப்பட்ட பறவைகளிலேயே அவைதான் விலை குறைவாக இருந்தன.

உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது: மனிதர்களுடைய தலையில் சராசரியாக 1,00,000-க்கும் அதிகமான முடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நுணுக்கமான விவரங்களைக்கூட யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருப்பது, கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவர் மீதும் அவர் காட்டுகிற அளவுகடந்த அக்கறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

சித்திரவதைக் கம்பத்தை: வே.வா., “மரண தண்டனைக் கம்பத்தை.” இதற்கான கிரேக்க வார்த்தையான ஸ்டவ்ரஸ் இங்குதான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்க மொழியில், முக்கியமாக ஒரு செங்குத்தான மரக் கம்பத்தை அது குறித்தது. அடையாள அர்த்தத்தில், இயேசுவின் சீஷராக இருப்பதால் ஒரு நபர் அனுபவித்த வேதனையையும் அவமானத்தையும் சித்திரவதையையும், அந்த நபர் எதிர்ப்பட்ட சாவையும்கூட சிலசமயம் குறித்தது.​—சொல் பட்டியலில் “சித்திரவதைக் கம்பம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

சுமந்துகொண்டு: நே.மொ., “எடுத்துக்கொண்டு; பிடித்துக்கொண்டு.” இங்கே அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இயேசுவின் சீஷராக இருப்பதால் வரும் பொறுப்புகளையும் அதன் விளைவுகளையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.

உயிரை: ‘உயிர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை சைக்கீ. சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.

பெயரிலும்: ‘பெயர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை (ஓனோமா) ஒருவருடைய தனிப்பட்ட பெயரை மட்டும் குறிப்பதில்லை. இந்த வசனத்தில், பரலோகத் தகப்பன் மற்றும் மகனுடைய அதிகாரத்தையும் ஸ்தானத்தையும், கடவுளுடைய சக்தியின் பங்கையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்போது கடவுளோடு புதிய பந்தம் உருவாகிறது.​—மத் 10:41-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒருவர் தீர்க்கதரிசியாக இருப்பதால்: நே.மொ., “தீர்க்கதிரிசி என்ற பெயரில்.” இந்த வசனத்தில் “பெயரில்” என்ற கிரேக்க மரபுத்தொடர், ஒரு தீர்க்கதரிசி வகிக்கிற பொறுப்பையும் செய்கிற வேலையையும் மதிப்பதைக் காட்டுகிறது.​—மத் 28:19-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

தீர்க்கதரிசி பெறுகிற அதே பலனை: கடவுளுடைய உண்மையான தீர்க்கதரிசிகளை ஏற்றுக்கொண்டு அவர்களை ஆதரிப்பவர்கள் மிகுந்த பலனைப் பெறுவார்கள். ஒரு விதவையைப் பற்றி 1ரா 17-ல் உள்ள பதிவு இதற்கு ஒரு உதாரணம்.

மீடியா

தடியும் உணவுப் பையும்
தடியும் உணவுப் பையும்

பழங்காலத்தில் எபிரெயர்கள் தடிகளை அல்லது கம்புகளைப் பயன்படுத்துவது சகஜமாக இருந்தது. பல காரணங்களுக்காக அவர்கள் தடிகளைப் பயன்படுத்தினார்கள்; உதாரணமாக, பிடிமானத்துக்கு (யாத் 12:11; சக 8:4; எபி 11:21), தற்காப்புக்கு அல்லது பாதுகாப்புக்கு (2சா 23:21), போரடிப்பதற்கு (ஏசா 28:27) மற்றும் ஒலிவப்பழங்களை உதிர்ப்பதற்கு (உபா 24:20) அவற்றைப் பயன்படுத்தினார்கள். உணவுப் பை பொதுவாகத் தோலால் செய்யப்பட்டிருந்தது. பயணிகளும் மேய்ப்பர்களும் விவசாயிகளும் மற்றவர்களும் அதைத் தங்கள் தோளில் சுமந்துகொண்டு போனார்கள். உணவு, துணிமணி போன்றவற்றை எடுத்துக்கொண்டு போவதற்காக அந்தப் பைகள் பயன்படுத்தப்பட்டன. ஊழியம் செய்வதற்காக இயேசு தன் அப்போஸ்தலர்களை அனுப்பியபோது, பல அறிவுரைகளைக் கொடுத்தார். அப்போது, தடிகளையும் உணவுப் பைகளையும் பற்றிக் குறிப்பிட்டார். யெகோவா அவர்களுக்குத் தேவையானதைத் தருவார் என்பதால், தங்களிடம் இருப்பதை மட்டும் கொண்டு போக வேண்டும் என்றும், எதையும் கூடுதலாக வாங்கிக்கொண்டு போகக் கூடாது என்றும் அவர் சொன்னார்.—இயேசு கொடுத்த அறிவுரைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள லூ 9:3 மற்றும் 10:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

ஓநாய்
ஓநாய்

இஸ்ரவேலில் இருக்கும் ஓநாய்கள் முக்கியமாக இரவு நேரங்களில்தான் வேட்டையாடுகின்றன. (ஆப 1:8) ஓநாய்களுக்கு முரட்டுத்தனமும் பசிவெறியும் துணிச்சலும் பேராசையும் அதிகம். அவற்றால் ஓரளவு செம்மறியாடுகளைத்தான் சாப்பிட அல்லது இழுத்துச்செல்ல முடியும் என்றாலும், பொதுவாக அதைவிட அதிகமான செம்மறியாடுகளைக் கொன்று குவிக்கின்றன. பைபிள், விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் பழக்கங்களையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் ஆகிய இரண்டுக்குமே அடையாளமாக அவற்றைக் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, மரணப்படுக்கையில் இருந்தபோது யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தில், வேட்டையாடுகிற ஓநாயை (கானஸ் லூபுஸ்) போல பென்யமீன் கோத்திரத்தார் இருப்பார்கள் என்று அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி 49:27) ஆனால், பெரும்பாலான மற்ற வசனங்களில், மூர்க்கம், பேராசை, கொடூரம், தந்திரம் போன்ற கெட்ட குணங்களுக்குத்தான் ஓநாய்கள் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. போலித் தீர்க்கதரிசிகள் (மத் 7:15), கிறிஸ்தவ ஊழியத்தைக் கொடூரமாக எதிர்க்கிறவர்கள் (மத் 10:16; லூ 10:3), கிறிஸ்தவ சபைக்குள்ளிருந்தே எழும்பும் ஆபத்தான பொய்ப் போதகர்கள் (அப் 20:29, 30) போன்ற ஆட்கள் ஓநாய்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். ஓநாய்கள் எந்தளவு ஆபத்தானவை என்று மேய்ப்பர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. “கூலிக்கு மேய்ப்பவன்,” “ஓநாய் வருவதைப் பார்த்ததுமே ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்” என்று இயேசு சொன்னார். கூலிக்கு மேய்ப்பவனுக்கு ‘ஆடுகள்மேல் அக்கறையில்லை’ என்றும் சொன்னார். ஆனால் இயேசு, ‘ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிற’ ‘நல்ல மேய்ப்பராக’ இருக்கிறார்.—யோவா 10:11-13.

சாட்டை
சாட்டை

சாட்டையடி கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மிகப் பயங்கரமான கருவி ஃப்ளஜெல்லம் என்று அழைக்கப்பட்டது. இந்தச் சாட்டையில், நிறைய கயிறுகளோ பின்னப்பட்ட தோல் வார்களோ ஒரு கைப்பிடியுடன் இணைக்கப்பட்டிருந்தன. வலியைக் கூட்டுவதற்காக அந்தத் தோல் வார்களில் கூர்மையான எலும்புகளோ உலோகப் பொருள்களோ இணைக்கப்பட்டிருந்தன.

மொட்டைமாடிகளைக் கொண்ட வீடுகள்
மொட்டைமாடிகளைக் கொண்ட வீடுகள்

ஒரு வீட்டின் மொட்டைமாடி முக்கியமான நிறைய விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. உதாரணத்துக்கு, ஒரு அப்பா தன் குடும்பத்தார் எல்லாரையும் அங்கே ஒன்றுகூட்டி யெகோவாவைப் பற்றிப் பேசினார். சேகரிப்புப் பண்டிகையின்போது மொட்டைமாடிகளில் கூடாரங்கள் போடப்பட்டன. (லேவி 23:41, 42; உபா 16:13-15) ஆளிவிதைச் செடியின் தட்டைகளைக் காய வைப்பது போன்ற வேலைகள் அங்கே செய்யப்பட்டன. (யோசு 2:6) சிலசமயங்களில், வீட்டில் இருந்தவர்கள் அங்கே படுத்துத் தூங்கினார்கள். (1சா 9:25, 26) மொட்டைமாடியில் செய்யப்பட்ட எல்லாவற்றையும் மற்றவர்களால் சுலபமாகப் பார்க்க முடிந்தது. (2சா 16:22) அங்கிருந்து ஏதாவது அறிவிப்பு செய்யப்பட்டபோது, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களாலும் தெருவில் போய்க்கொண்டிருந்த ஆட்களாலும் அதை உடனடியாகக் கேட்க முடிந்தது.

இன்னோம் பள்ளத்தாக்கு (கெஹென்னா)
இன்னோம் பள்ளத்தாக்கு (கெஹென்னா)

கிரேக்கில் கெஹென்னா என்று அழைக்கப்பட்ட இன்னோம் பள்ளத்தாக்கு, பழங்கால எருசலேமின் தெற்கிலும் தென்மேற்கிலும் இருந்த ஒரு பள்ளத்தாக்கு. இயேசுவின் காலத்தில் அது குப்பைகூளங்களை எரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதனால், முழுமையான அழிவுக்குப் பொருத்தமான அடையாளமாக இருக்கிறது.

சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி

உணவுக்காக விற்கப்பட்ட பறவைகளிலேயே சிட்டுக்குருவிகள்தான் விலை குறைவாக இருந்தன. 45 நிமிட வேலைக்குக் கிடைத்த கூலியை வைத்து இரண்டு சிட்டுக்குருவிகளை வாங்க முடிந்தது. இதற்கான கிரேக்க வார்த்தை, பல வகையான சின்னஞ்சிறு பறவைகளைக் குறிக்கலாம். இன்றும் இஸ்ரவேலில் அதிகமாகக் காணப்படும் சாதாரண வீட்டுச் சிட்டுக்குருவியையும் (பாஸர் டொமெஸ்ட்டிகஸ் பிப்ளிகஸ்), ஸ்பானிஷ் குருவியையும்கூட (பாஸர் ஹிஸ்பானியோலென்சிஸ்) அந்த வார்த்தை குறிக்கலாம்.