பேதுருவின் முதலாம் கடிதம் 5:1-14

5  கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியாக இருக்கிறவனும் வெளிப்படப்போகிற மகிமையில்+ பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், சக மூப்பர் என்ற முறையில் உங்கள் மத்தியில் இருக்கிற மூப்பர்களிடம் கேட்டுக்கொள்வது* இதுதான்:  கண்காணிகளாகச் சேவை செய்து,* உங்களுடைய பொறுப்பில் இருக்கிற கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்.+ கட்டாயத்தால் இல்லாமல் கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும்,+ அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல்+ ஆர்வமாகவும் இதைச் செய்யுங்கள்.  கடவுளுடைய சொத்தாக இருக்கிற மந்தையின் மேல் ஆதிக்கம் செலுத்தாமல்,+ மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்.+  அப்போதுதான், முதன்மை மேய்ப்பர்+ வெளிப்படும்போது, வாடாத கிரீடமான மகிமையின் கிரீடம் உங்களுக்குக் கிடைக்கும்.+  அதேபோல் இளைஞர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு* அடிபணிந்து நடங்கள்.+ எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.* ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.+  அதனால், கடவுளுடைய பலத்த கைக்குள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; அப்போது, சரியான நேரத்தில் கடவுள் உங்களை உயர்த்துவார்.+  அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்.+ அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.+  தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்!+ உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்.*+  நீங்களோ விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனை எதிர்த்து நில்லுங்கள்.+ உலகத்தில் இருக்கிற உங்கள் சகோதரர்கள் எல்லாரும் நீங்கள் அனுபவிப்பது போன்ற துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமே.+ 10  அளவற்ற கருணை நிறைந்த கடவுள், கொஞ்சக் காலம் நீங்கள் கஷ்டம் அனுபவித்த பின்பு உங்களுடைய பயிற்சியை முடிப்பார். உங்களை உறுதிப்படுத்துவார்,+ உங்களைப் பலப்படுத்துவார்,+ உங்களை உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நிற்க வைப்பார். கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற உங்களுக்குத் தன்னுடைய முடிவில்லாத மகிமை+ கிடைக்க வேண்டும் என்பதற்காக உங்களை அழைத்திருக்கிறார். 11  அவருக்கே என்றென்றும் வல்லமை சொந்தம். ஆமென்.* 12  நம்பிக்கைக்குரிய சகோதரனாக நான் கருதுகிற சில்வானு*+ மூலம் இந்தக் கடிதத்தைச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். உங்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், கடவுளுடைய அளவற்ற கருணை உண்மையானது என்பதை உங்களுக்கு ஆணித்தரமாக எடுத்துக்காட்டுவதற்காகவும் இதை எழுதியிருக்கிறேன்; அந்த அளவற்ற கருணையை இழந்துவிடாதீர்கள். 13  பாபிலோனில் இருப்பவளும்,* அதாவது உங்களைப் போலவே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவளும், உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறாள். அப்படியே என் மகன் மாற்குவும்+ வாழ்த்துச் சொல்கிறான். 14  அன்பு முத்தத்தோடு ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற உங்கள் எல்லாருக்கும் சமாதானம் கிடைக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களுக்குச் சொல்லும் அறிவுரை.”
வே.வா., “கவனமாகக் கண்காணித்து.”
வே.வா., “மூப்பர்களுக்கு.”
வே.வா., “மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்.”
வே.வா., “தேடி அலைகிறான்.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
சீலா என்றும் அழைக்கப்படுகிறார்.
இவள், பாபிலோனிலிருந்த சபையைக் குறிக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா