Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 40

மன்னிப்பைப் பற்றிய ஒரு பாடம்

மன்னிப்பைப் பற்றிய ஒரு பாடம்

லூக்கா 7:36-50

  • பாவியான ஒரு பெண் இயேசுவின் பாதத்தில் எண்ணெய் ஊற்றுகிறாள்

  • மன்னிப்பை விளக்க ஓர் உவமை

இயேசு சொல்கிற விஷயங்களை மக்கள் கேட்கிறார்கள், அவர் செய்கிற காரியங்களைப் பார்க்கிறார்கள்; ஆனாலும், அவரவர் மனநிலையைப் பொறுத்து, சிலர் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள், சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த உண்மையை கலிலேயாவில் இருக்கிற ஒருவனின் வீட்டில் நடந்த சம்பவத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். சீமோன் என்ற பரிசேயன் இயேசுவை விருந்து சாப்பிட கூப்பிடுகிறான். ஒருவேளை, பெரிய அற்புதங்களைச் செய்கிற இயேசு எப்படிப்பட்டவர் என்பதைப் பக்கத்தில் இருந்து பார்க்க அவன் ஆசைப்பட்டிருக்கலாம். இயேசுவும் விருந்துக்கு வர ஒத்துக்கொள்கிறார். அங்கே வருகிறவர்களிடம் கடவுளைப் பற்றிப் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். இதற்கு முன்புகூட, வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து அவர் விருந்து சாப்பிட்டிருக்கிறார்.

விருந்தாளிகளுக்கு வழக்கமாகக் கிடைக்கிற வரவேற்பும் கவனிப்பும் சீமோனின் வீட்டில் இயேசுவுக்குக் கிடைக்கவில்லை. பாலஸ்தீனாவின் புழுதியான சாலைகளில் ஒருவர் நடந்து வரும்போது, அவருடைய பாதங்கள் சூடாகிவிடும்; அழுக்காகவும் ஆகிவிடும். அதனால், வீட்டுக்கு விருந்தாளிகள் வந்ததும் அவர்களுடைய பாதங்களைக் குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிடுவது அங்கே வழக்கமாக இருந்தது. ஆனால், இயேசுவுக்கு அப்படிச் செய்யவில்லை. விருந்தாளிக்கு முத்தம் கொடுத்து வரவேற்பதும் அங்கே வழக்கம். ஆனால், இயேசுவை அப்படி வரவேற்கவில்லை. கனிவையும் உபசரிப்பையும் காட்டுவதற்காக, விருந்தாளியின் தலையில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றும் வழக்கமும் அங்கே இருந்தது. இயேசுவை அழைத்தவர் இதையும் செய்யவில்லை. இப்படித்தான் இயேசுவை வரவேற்பதா?

இப்போது, விருந்து ஆரம்பமாகிறது. விருந்தாளிகள் மேஜையில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் சத்தமில்லாமல் உள்ளே வருகிறாள். அவளை யாரும் விருந்துக்கு அழைக்கவில்லை. அவள் ஒரு ‘பாவி’ என்று அந்த நகரத்தில் இருக்கிற எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். (லூக்கா 7:37) அபூரண மனிதர்கள் எல்லாருமே பாவிகள்தான். ஆனால், இந்தப் பெண் ஒழுக்கக்கேடாக வாழ்ந்திருக்கலாம். ஒருவேளை, இவள் ஒரு விபச்சாரியாக இருந்திருக்கலாம். ‘பாரமான சுமையைச் சுமக்கிறவர்கள் தன்னிடம் வந்தால் புத்துணர்ச்சி கொடுப்பதாக’ இயேசு சொன்னதையும் அவருடைய மற்ற போதனைகளையும் அவள் கேட்டிருக்கலாம். (மத்தேயு 11:28, 29) அவருடைய போதனைகளும் செயல்களும் அவளுடைய உள்ளத்தைத் தொட்டதால், இப்போது அவரைத் தேடி வந்திருக்கிறாள்.

இயேசுவின் பின்னால் வந்து நின்று, அவருடைய கால்மாட்டில் மண்டிபோட்டு உட்காருகிறாள். அவளுடைய கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீர் இயேசுவின் பாதங்களை நனைக்கிறது. தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைக்கிறாள். அவருடைய பாதங்களை மென்மையாக முத்தமிடுகிறாள். தான் கொண்டுவந்த வாசனை எண்ணெயை அவருடைய பாதங்களில் ஊற்றுகிறாள். அதைப் பார்த்து சீமோனுக்கு எரிச்சல் வருகிறது. “இவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், தன்னைத் தொடுகிற இவள் யார், எப்படிப்பட்டவள் என்றெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கும்; இவள் ஒரு பாவியாயிற்றே” என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.—லூக்கா 7:39.

சீமோன் என்ன யோசிக்கிறான் என்பதை இயேசு புரிந்துகொள்கிறார். அதனால் அவனிடம், “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்கிறேன்” என்கிறார். அதற்கு அவன், “சொல்லுங்கள், போதகரே!” என்கிறான். அப்போது அவர், “ஒருவரிடம் இரண்டு பேர் கடன் வாங்கியிருந்தார்கள்; ஒருவன் 500 தினாரியு வாங்கியிருந்தான், இன்னொருவன் 50 தினாரியு வாங்கியிருந்தான். அவர்களால் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் போனபோது, அவர்கள் இரண்டு பேரையுமே அவர் தாராளமாக மன்னித்தார். அப்படியானால், அந்த இரண்டு பேரில் யார் அவரிடம் அதிகமாக அன்பு காட்டுவான்?” என்று கேட்கிறார். அதற்கு சீமோன், “எவனுக்கு அதிகக் கடனை மன்னித்தாரோ அவன்தான்” என்று சலிப்புடன் சொல்கிறான்.—லூக்கா 7:40-43.

அவன் சரியான பதிலைச் சொன்னதாக இயேசு சொல்கிறார். பின்பு அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி, சீமோனிடம், “இந்தப் பெண்ணைப் பார்த்தாயா? நான் உன்னுடைய வீட்டுக்கு வந்தேன்; நீ என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை. ஆனால் இவள் என் பாதங்களைக் கண்ணீரால் நனைத்து, தன்னுடைய கூந்தலால் துடைத்தாள். நீ என்னை முத்தமிடவில்லை; ஆனால், இந்தப் பெண் நான் உள்ளே வந்ததுமுதல் என்னுடைய பாதங்களை மென்மையாக முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள். நீ என் தலையில் எண்ணெய் ஊற்றவில்லை; ஆனால், இந்தப் பெண் என் பாதங்களில் வாசனை எண்ணெயை ஊற்றினாள்” என்று சொல்கிறார். ஒழுக்கக்கேடாக வாழ்வதை நினைத்து அவள் உண்மையிலேயே வருத்தப்படுகிறாள் என்பதை அவளுடைய செயல்கள் காட்டின. அதனால், “நான் உனக்குச் சொல்கிறேன், இவள் நிறைய பாவங்கள் செய்திருந்தாலும் அவையெல்லாம் மன்னிக்கப்படுகின்றன, அதனால் இவள் இன்னும் அதிகமாக அன்பு காட்டுகிறாள்; ஆனால், குறைவாக மன்னிக்கப்படுகிறவன் குறைவாகவே அன்பு காட்டுகிறான்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 7:44-47.

ஒழுக்கக்கேடாக வாழ்வதை இயேசு ஆதரிக்கவில்லை. படுமோசமான பாவங்களைச் செய்தவர்கள், அதற்காக வருத்தப்பட்டு, ஆறுதல் தேடி அவரிடம் வரும்போது இயேசு அவர்களைப் புரிந்துகொள்கிறார், அவர்களிடம் கரிசனை காட்டுகிறார். “உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. . . .  உன் விசுவாசம் உனக்கு மீட்பு தந்திருக்கிறது; சமாதானமாகப் போ” என்று இயேசு அந்தப் பெண்ணிடம் சொல்கிறார். அவளுக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும்!—லூக்கா 7:48, 50.