Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 35

புகழ்பெற்ற மலைப்பிரசங்கம்

புகழ்பெற்ற மலைப்பிரசங்கம்

மத்தேயு 5:1–7:29 லூக்கா 6:17-49

  • மலைப்பிரசங்கம்

ராத்திரி முழுவதும் ஜெபம் செய்துவிட்டு, காலையில் 12 அப்போஸ்தலர்களை இயேசு தேர்ந்தெடுத்திருந்தார். அவர் ரொம்பக் களைப்பாக இருந்திருப்பார். ஆனாலும், மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையும், அதற்கான தெம்பும் அவருக்கு இருக்கிறது. இப்போது, கலிலேயா மலைப்பகுதியில் கற்பிக்க ஆரம்பிக்கிறார். இந்தப் பகுதி அவருடைய ஊழியத்தின் மைய இடமாக இருக்கிற கப்பர்நகூமுக்குப் பக்கத்தில் இருந்திருக்கலாம்.

மக்கள் ரொம்பத் தூரத்திலிருந்து கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருக்கிறார்கள். சிலர் தெற்கே எருசலேமிலிருந்தும் யூதேயாவின் பல இடங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள். சிலர், வடமேற்கில் இருக்கிற தீரு, சீதோன் ஆகிய கடலோர நகரங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். எதற்காக? “அவருடைய போதனைகளைக் கேட்பதற்கும் நோய்களிலிருந்து குணமாவதற்கும்” வந்திருக்கிறார்கள். இயேசு “எல்லாரையும் குணமாக்குகிறார்.” கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! நோயாளிகள் எல்லாரும் குணமாகிறார்கள்! அதுமட்டுமல்ல, ‘பேய்களின் தொல்லைக்கு ஆளானவர்களையும்,’ அதாவது சாத்தானோடு சேர்ந்துகொண்ட பொல்லாத தூதர்களால் வாட்டி வதைக்கப்பட்டவர்களையும், அவர் குணமாக்குகிறார்.—லூக்கா 6:17-19.

அந்த மலைப்பகுதியில் இருக்கிற ஒரு சமவெளிக்கு இயேசு வருகிறார். மக்களும் அங்கே கூடிவருகிறார்கள். அவருடைய சீஷர்கள், குறிப்பாக அவருடைய 12 அப்போஸ்தலர்கள், அவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கலாம். மிகப் பெரிய அற்புதங்களைச் செய்கிற இந்தப் போதகரிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கிற ஒரு பிரசங்கத்தை இயேசு கொடுக்க ஆரம்பிக்கிறார். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை பலர் அந்தப் பிரசங்கத்தால் பயன் அடைந்திருக்கிறார்கள், நாமும் பயன் அடையலாம். ஏனென்றால், ஆழமான ஆன்மீக விஷயங்களை எளிமையாகவும் தெளிவாகவும் இயேசு கற்றுக்கொடுக்கிறார். அன்றாட வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களையும் மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களையும் வைத்தே பேசுகிறார். அதனால், கடவுள் காட்டுகிற வழியில் நடக்க விரும்புகிற எல்லாராலும் அவருடைய பிரசங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசுவின் இந்த மலைப்பிரசங்கம் ரொம்ப அருமையானது. அதில் என்னென்ன முக்கிய விஷயங்கள் இருக்கின்றன?

யார் உண்மையிலேயே சந்தோஷமானவர்கள்?

எல்லாருமே சந்தோஷமாக இருக்கத்தான் ஆசைப்படுவார்கள். இது இயேசுவுக்கும் தெரியும். அதனால், யார் உண்மையிலேயே சந்தோஷமானவர்கள் என்ற விஷயத்தைப் பற்றி முதலில் பேச ஆரம்பிக்கிறார். மக்களின் ஆர்வத்தை இது சுண்டியிழுக்கிறது. ஆனால், அவர் சொல்கிற சில விஷயங்கள் அவர்களுக்குக் குழப்பமாக இருக்கின்றன.

“ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது. துக்கப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும். . . . நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்களுக்கு நீதி கிடைக்கும். . . . நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது. நீங்கள் என் சீஷர்கள் என்பதற்காக மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும், . . . உங்களைத் துன்புறுத்தும்போதும் சந்தோஷப்படுங்கள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதியுங்கள்” என்றெல்லாம் அவர் சொல்கிறார்.—மத்தேயு 5:3-12.

‘சந்தோஷம்’ என்று இயேசு எதைச் சொல்கிறார்? ஜோக்கடித்து சிரிப்பதையோ, ஜாலியாகப் பொழுதைக் கழிக்கும்போது கிடைக்கிற சந்தோஷத்தையோ பற்றி அவர் சொல்லவில்லை. உண்மையான சந்தோஷம் இவற்றைவிட ஆழமானது. அது வாழ்க்கையில் திருப்தியையும் மனநிறைவையும் தருகிறது.

ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்களும், தங்களுடைய பாவ நிலையை நினைத்து துக்கப்படுகிறவர்களும், கடவுளைப் பற்றிக் கற்றுக்கொண்டு அவருக்குச் சேவை செய்கிறவர்களும் உண்மையிலேயே சந்தோஷமானவர்கள் என்று இயேசு சொல்கிறார். கடவுள் விரும்புகிறபடி நடப்பதால் மற்றவர்கள் அவர்களை வெறுத்தாலும் துன்புறுத்தினாலும்கூட அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏனென்றால், கடவுள் அவர்கள்மேல் பிரியமாக இருக்கிறார் என்றும், முடிவில்லாத வாழ்வைப் பரிசாகத் தருவார் என்றும் அவர்களுக்குத் தெரியும்.

சொத்துகளும் சுகபோகமான வாழ்க்கையும்தான் சந்தோஷத்தைத் தரும் என்று பலர் நினைக்கிறார்கள். இயேசுவோ அதற்கு நேர்மாறான ஒன்றைச் சொல்லி மக்களை யோசிக்க வைக்கிறார். “பணக்காரர்களான உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், நீங்கள் எல்லா சௌகரியங்களையும் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது திருப்தியாக இருக்கிற உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், நீங்கள் பசியால் வாடுவீர்கள். இப்போது சிரித்து மகிழ்கிற உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், நீங்கள் துக்கப்பட்டு அழுவீர்கள். எல்லா மனுஷர்களும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், அவர்களுடைய முன்னோர்களும் போலித் தீர்க்கதரிசிகளுக்கு அப்படித்தான் செய்தார்கள்” என்கிறார்.—லூக்கா 6:24-26.

பணக்காரர்களாக இருந்தால்... சிரித்து மகிழ்ந்தால்... மற்றவர்கள் நம்மைப் புகழ்வதைக் கேட்டு சந்தோஷப்பட்டால்... கேடு வரும் என்று இயேசு ஏன் சொல்கிறார்? இவற்றுக்கே ஒருவர் கவனம் செலுத்தினால், கடவுளுடைய சேவைக்கு முதலிடம் தர மாட்டார். அதனால், அவருக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்காது. அதற்காக, ஒருவர் ஏழையாகவோ பசியாகவோ இருந்தால் அவருக்குச் சந்தோஷம் கிடைத்துவிடும் என்று இயேசு சொல்லவில்லை. ஆனாலும், கஷ்டப்படுகிற மக்கள்தான் பெரும்பாலும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு நடக்கிறார்கள், உண்மையான சந்தோஷத்தைப் பரிசாகப் பெறுகிறார்கள்.

“நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்” என்று இயேசு தன் சீஷர்களிடம் சொல்கிறார். (மத்தேயு 5:13) அவர்கள் நிஜமான உப்பு இல்லை என்பது உண்மைதான். பொதுவாக, ஒரு பொருள் கெட்டுப்போகாதபடி உப்பு பாதுகாக்கும். கடவுளுடைய ஆலயத்திலும்கூட, பலிபீடத்துக்குப் பக்கத்தில் உப்பைக் குவித்து வைத்திருப்பார்கள். அதைப் பலிகளின்மேல் தூவுவார்கள். கெட்டுப்போகாமல் அல்லது அழுகாமல் இருப்பதைக் குறிக்கவும் உப்பு பயன்படுத்தப்படுகிறது. (லேவியராகமம் 2:13; எசேக்கியேல் 43:23, 24) மக்கள் ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் கெட்டுப்போகாமல் இருக்க இயேசுவின் சீஷர்கள் உதவுகிறார்கள். இப்படி மக்களைப் பாதுகாப்பதன் மூலம் அவர்கள் “பூமிக்கு உப்பாக” இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். சீஷர்கள் சொல்கிற செய்தியைக் கேட்டு நடக்கிறவர்கள் தங்களுடைய உயிரைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

“நீங்கள் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள்” என்றும் இயேசு தன் சீஷர்களிடம் சொல்கிறார். மக்கள் விளக்கைக் கொளுத்தி அதைக் கூடையால் மூடி வைக்க மாட்டார்கள், விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்; அப்போதுதான், வீட்டிலிருக்கிற எல்லாருக்கும் அது வெளிச்சம் தரும். அதுபோலவே, “உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்” என்கிறார்.—மத்தேயு 5:14-16.

உயர்ந்த ஒழுக்கநெறிகளைக் கற்றுக்கொடுக்கிறார்

கடவுள் கொடுத்த திருச்சட்டத்தை இயேசு மீறுவதாக யூத மதத் தலைவர்கள் நினைக்கிறார்கள். அதற்காக அவரைக் கொல்லவும் சமீபத்தில் சதித்திட்டம் தீட்டியிருந்தார்கள். அதனால் இயேசு, “திருச்சட்டத்தையோ தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையோ அழிக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; அழிக்க அல்ல, அதையெல்லாம் நிறைவேற்றவே வந்தேன்” என்று வெளிப்படையாகச் சொல்கிறார்.—மத்தேயு 5:17.

கடவுள் தந்த திருச்சட்டத்தை இயேசு உயர்வாக மதிக்கிறார். அதற்கு மதிப்பு கொடுக்கும்படி மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகிறார். சொல்லப்போனால், “திருச்சட்டத்திலுள்ள ஒரு சின்ன கட்டளையைக்கூட ஒருவன் மீறினால், அதுவும் அப்படி மீறும்படி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் அவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெற மாட்டான்” என்று சொல்கிறார். “ஆனால், அதிலுள்ள கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெறுவான்” என்கிறார்.—மத்தேயு 5:19.

திருச்சட்டத்தை மீறுவதற்குத் தூண்டுகிற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும்கூட தவிர்க்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். உதாரணத்துக்கு, “கொலை செய்யக் கூடாது” என்று திருச்சட்டம் சொல்கிறது. அந்தச் சட்டத்தைக் குறிப்பிட்ட பிறகு, “தன்னுடைய சகோதரன்மேல் கடும் கோபமாகவே இருக்கிறவன் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்கிறார். (மத்தேயு 5:21, 22) மற்றவர்கள்மீது கடும் கோபமாகவே இருப்பது ஆபத்தானது; இது கொலையில்கூட முடிவடையலாம். அதனால், சமாதானமாவதற்கு எந்தளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை இயேசு விளக்குகிறார். “பலிபீடத்தில் காணிக்கை செலுத்த நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதோ மனவருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” என்கிறார்.—மத்தேயு 5:23, 24.

அடுத்ததாக, மணத்துணைக்குத் துரோகம் செய்வதைப் பற்றிய கட்டளையை இயேசு விளக்குகிறார். “‘மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன் அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்” என்று சொல்கிறார். (மத்தேயு 5:27, 28) சட்டென வந்துபோகிற ஒழுக்கக்கேடான எண்ணத்தைப் பற்றி இயேசு இங்கே சொல்லவில்லை. ‘பார்த்துக்கொண்டே இருப்பது’ எவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றித்தான் அவர் சொல்கிறார். இப்படிப் பார்த்துக்கொண்டே இருப்பது ஒருவரின் காம உணர்ச்சிகளைத் தூண்டிவிடும். ஒருவேளை, சந்தர்ப்பம் அமைந்தால் பாலியல் முறைகேட்டில்கூட அது முடிவடையலாம். இதைத் தடுக்க, ஒருவர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கலாம். “உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. . . . உன் வலது கை உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 5:29, 30.

சிலருடைய கைகால்கள் கடும் நோயினால் பாதிக்கப்படும்போது, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அவற்றை வெட்டவும் அவர்கள் அனுமதிக்கிறார்கள். அதேபோல, ஒழுக்கக்கேடான எண்ணங்களையும் அவற்றின் பின்விளைவுகளையும் தவிர்ப்பதற்கு ஒருவர் எதை வேண்டுமானாலும் ‘எறிந்துவிட’ தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். நம்முடைய கண்ணைப் போல, கையைப் போல முக்கியமான ஒன்றாக இருந்தாலும் அதை எறிந்துவிட வேண்டும். “உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள் [எருசலேமின் மதில்களுக்கு வெளியே எரிந்துகொண்டிருக்கிற குப்பைக்கூளம்; இது நிரந்தர அழிவைக் குறிக்கிறது] தள்ளப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்” என்கிறார்.

நமக்குக் கெட்டது செய்கிறவர்களிடமும் நம்மைக் காயப்படுத்துகிறவர்களிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் இயேசு சொல்கிறார். “அக்கிரமக்காரனோடு சண்டைக்கு நிற்காதீர்கள்; யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள்” என்று அவர் சொல்கிறார். (மத்தேயு 5:39) அப்படியென்றால், நம்மையும் நம் குடும்பத்தையும் யாராவது தாக்கினால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் ஒன்றுமே செய்யக் கூடாது என்று அர்த்தமா? இல்லை! இயேசு இங்கே கன்னத்தில் அறைவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பொதுவாக, ஒருவரைப் பயங்கரமாகக் காயப்படுத்துவதற்காகவோ கொல்வதற்காகவோ யாரும் கன்னத்தில் அறைய மாட்டார்கள்; அவமானப்படுத்துவதற்காகத்தான் அறைவார்கள். கன்னத்தில் அறைந்தோ, கேவலமாகப் பேசியோ யாராவது நம்மைச் சண்டைக்கு இழுத்தால் நாம் பதிலுக்குச் சண்டை போடக் கூடாது என்றுதான் இயேசு இங்கே சொல்கிறார்.

திருச்சட்டமும்கூட மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தது. அதனால் இயேசு, “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று மக்களிடம் சொல்கிறார். இது ஏன் ரொம்ப முக்கியம்? “இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தகப்பனுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்” என்று சொல்கிறார்.—மத்தேயு 5:44, 45.

கடைசியாக, “உங்கள் பரலோகத் தகப்பன் பரிபூரணராக இருப்பது போலவே நீங்களும் பரிபூரணராக இருக்க வேண்டும்” என்று சொல்லி இயேசு இந்த விஷயத்தை முடிக்கிறார். (மத்தேயு 5:48) நாம் தவறே செய்யாமல் பரிபூரணமாக இருக்க முடியும் என்ற அர்த்தத்தில் இயேசு இதைச் சொல்லவில்லை. கடவுளைப் போல நடக்க முயற்சி செய்தால், எதிரிகளிடம்கூட நம்மால் அன்பு காட்ட முடியும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், “உங்கள் பரலோகத் தகப்பன் இரக்கமுள்ளவராக இருப்பது போலவே நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்” என்றுதான் இயேசு சொல்கிறார்.—லூக்கா 6:36.

ஜெபமும் கடவுள் நம்பிக்கையும்

“மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் முன்னால் நீதியான செயல்களைச் செய்யாதீர்கள்” என்று இயேசு அங்கிருக்கிறவர்களிடம் சொல்கிறார். கடவுள்பக்தியுள்ளவர்கள் போல வெளிவேஷம் போடுவதை இயேசு கண்டிக்கிறார். “நீங்கள் தானதர்மம் செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போலத் தம்பட்டம் அடிக்காதீர்கள்” என்று அவர் சொல்கிறார். (மத்தேயு 6:1, 2) அதனால் உதவி செய்யும்போது, எல்லாரும் பார்க்கும் விதத்தில் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது.

அடுத்ததாக, “நீங்கள் ஜெபம் செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போல் இருக்கக் கூடாது; ஏனென்றால், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஜெபக்கூடங்களிலும் முக்கியமான தெருக்களின் முனைகளிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள். . . . நீங்களோ ஜெபம் செய்யும்போது உங்கள் உள்ளறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, யாராலும் பார்க்க முடியாத உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்யுங்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 6:5, 6) மக்கள் முன்னால் ஜெபம் செய்யவே கூடாது என்று அவர் சொல்லவில்லை. ஏனென்றால், அவரே அப்படி ஜெபம் செய்திருக்கிறார். மற்றவர்கள் நம்மைப் பெருமையாக நினைக்க வேண்டும்... புகழ்ந்து பேச வேண்டும்... என்பதற்காக ஜெபம் செய்வது தவறு என்றுதான் இயேசு சொல்கிறார்.

“நீங்கள் ஜெபம் செய்யும்போது உலகத்தாரைப் போலச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்” என்று அங்கே கூடியிருக்கிற மக்களிடம் இயேசு சொல்கிறார். (மத்தேயு 6:7) ஒரே விஷயத்தைப் பற்றித் திரும்பத் திரும்ப ஜெபம் செய்வது தவறு என்று இயேசு சொல்லவில்லை. மனப்பாடம் செய்த வார்த்தைகளை இயந்திரத்தனமாக, “திரும்பத் திரும்ப” சொல்வதைத்தான் அவர் கண்டிக்கிறார். பிறகு, எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுக்கிறார். அதில் ஏழு விண்ணப்பங்கள் இருக்கின்றன. கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும், அவருடைய அரசாங்கம் வர வேண்டும், அவருடைய விருப்பம் நிறைவேற வேண்டும் ஆகியவை முதல் மூன்று விண்ணப்பங்கள். இவை, ஆட்சி செய்ய கடவுளுக்கு இருக்கிற உரிமையையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிச் சொல்கின்றன. இவற்றுக்குப் பிறகுதான் நம்முடைய தேவைகளைப் பற்றி நாம் ஜெபம் செய்ய வேண்டும். அதாவது, அன்றன்றைக்குத் தேவையான உணவைத் தரும்படியும், பாவங்களை மன்னிக்கும்படியும் ஜெபிக்க வேண்டும். அதோடு, தாங்க முடியாத அளவுக்குச் சோதனைகளை அனுமதிக்கக் கூடாது என்றும், பொல்லாதவனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் ஜெபிக்க வேண்டும்.

சொத்துப்பத்துகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? “பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள். ஏனென்றால், இங்கே பூச்சியும் துருவும் அவற்றை அழித்துவிடும்; திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள்” என்று இயேசு சொல்கிறார். எவ்வளவு ஞானமான ஆலோசனைகள்! பொருள் செல்வங்கள் அழிந்துவிடும். அவற்றைச் சேர்த்து வைப்பதால் கடவுளிடம் நமக்கு நல்ல பெயர் கிடைத்துவிடாது. அதனால்தான், “பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” என்று சொல்கிறார். கடவுளுடைய சேவைக்கு முதலிடம் கொடுக்கும்போது நம்மால் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க முடியும். கடவுளுடன் நமக்கு இருக்கிற பந்தத்தையும் அதற்குப் பரிசாகக் கிடைக்கப்போகிற முடிவில்லாத வாழ்வையும் யாராலும் நம்மிடமிருந்து திருட முடியாது. “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்” என்று இயேசு சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.—மத்தேயு 6:19-21.

இந்த விஷயத்தை வலியுறுத்துவதற்காக, இயேசு ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். “கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்; ஆனால், உங்கள் கண் எல்லாவற்றையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால், உங்கள் முழு உடலும் இருளாக இருக்கும்” என்று சொல்கிறார். (மத்தேயு 6:22, 23) நம்முடைய கண் நன்றாக இருக்கும்போது, அது நமக்கு ஒரு பிரகாசமான விளக்குபோல் இருக்கிறது. நம்முடைய கண் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக இருந்தால்தான், அது நமக்கு விளக்குபோல் இருக்கும். இல்லையென்றால், வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நமக்குத் தெரியாமல் போய்விடும். கடவுளுடைய சேவைக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை, சொத்துப்பத்துகளுக்குக் கொடுப்பது தவறு. அப்படிச் செய்தால், நம் “முழு உடலும் இருளாக இருக்கும்.” அதனால், இருளைப் போன்ற கெட்ட விஷயங்களின் பக்கம் நாம் போய்விடலாம்.

பிறகு, “யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்ற முக்கியமான விஷயத்தை இயேசு சொல்கிறார்.—மத்தேயு 6:24.

இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற சிலர், தங்களுடைய பொருளாதார தேவைகளை நினைத்து கவலையோடு இருந்திருக்கலாம். கடவுளுடைய சேவைக்கு முதலிடம் கொடுத்தால், மற்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று இயேசு உறுதியளிக்கிறார். “வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார்” என்று சொல்கிறார்.—மத்தேயு 6:26.

அந்த மலையில் பூத்திருந்த பூக்களைப் பற்றி என்ன சொல்லலாம்? “செல்வச்சீமானாக இருந்த சாலொமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை” என்று இயேசு சொல்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? “இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும் காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்குக் கொடுக்க மாட்டாரா?” என்று அவர் கேட்கிறார். (மத்தேயு 6:29, 30) அதனால், “‘எதைச் சாப்பிடுவோம்?’ ‘எதைக் குடிப்போம்?’ ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள். . . . இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும். அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 6:31-33.

வாழ்வைப் பெற என்ன செய்ய வேண்டும்?

அப்போஸ்தலர்களும் நல்மனமுள்ள மற்றவர்களும் கடவுளுக்குப் பிரியமாக வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் அப்படி வாழ்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. உதாரணத்துக்கு, பரிசேயர்கள் நிறைய பேர் மற்றவர்கள்மேல் குறை சொல்லிக்கொண்டே இருந்தார்கள், ஈவிரக்கம் இல்லாமல் மற்றவர்களை நியாயந்தீர்த்தார்கள். அதனால்தான், “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள். மற்றவர்களை நீங்கள் எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 7:1, 2.

மற்றவர்களை ஓயாமல் குறை சொல்லிக்கொண்டிருக்கிற பரிசேயர்களைப் பின்பற்றுவது ரொம்ப ஆபத்தானது. “குருடனுக்குக் குருடன் வழிகாட்ட முடியாது, இல்லையா? இரண்டு பேரும் குழியில்தானே விழுவார்கள்?” என்று இயேசு கேட்கிறார். அப்படியானால், மற்றவர்களை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்? அவர்களிடம் என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருப்பது மிகப் பெரிய தவறு. “உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்? உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையைக் கவனிக்காமல் நீங்கள் எப்படி உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற தூசியை எடுக்கட்டுமா?’ என்று கேட்க முடியும்? வெளிவேஷக்காரர்களே! முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்” என்கிறார்.—லூக்கா 6:39-42.

அப்படியானால், யாரைப் பற்றியும் எந்த முடிவையும் சீஷர்கள் எடுக்கக் கூடாது என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால், “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:6) கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற உண்மைகள் விலைமதிக்க முடியாத முத்துக்களைப் போல இருக்கின்றன. விலைமதிக்க முடியாத இந்த உண்மைகளை மதிக்காமல், சிலர் மிருகங்களைப் போல நடந்துகொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை விட்டுவிட்டு, ஆர்வமாகக் கேட்கிற ஆட்களைச் சீஷர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

ஜெபத்தைப் பற்றி மறுபடியும் இயேசு பேசுகிறார். விடாமுயற்சியோடு திரும்பத் திரும்ப ஜெபம் செய்வது முக்கியம். அதனால்தான், “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று இயேசு சொல்கிறார். ஜெபத்துக்குப் பதில் கொடுக்க கடவுள் தயாராக இருக்கிறார் என்ற குறிப்பை வலியுறுத்துவதற்காக, “உங்களில் யாராவது தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பாரா? . . . பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தகப்பன் தன்னிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார்!” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 7:7-11.

பிறகு, “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்” என்று சொல்கிறார். இந்த அறிவுரை ரொம்பப் பிரபலமானது. மற்றவர்களோடு பழகும்போது இதைக் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்! ஆனால், அது சுலபமில்லை. அதனால்தான், “இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்; ஏனென்றால், அழிவுக்குப் போகிற வாசல் அகலமானது, அதன் பாதை விசாலமானது; நிறைய பேர் அதன் வழியாகப் போகிறார்கள். ஆனால், முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற வாசல் இடுக்கமானது, அதன் பாதை குறுகலானது; சிலர்தான் அதைக் கண்டுபிடிக்கிறார்கள்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 7:12-14.

வாழ்வுக்கான பாதையில் போகாதபடி சீஷர்களைச் சிலர் திசைதிருப்புவார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். அதனால், “போலித் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வருவார்கள்; ஆனால், உண்மையில் அவர்கள் பசிவெறிபிடித்த ஓநாய்கள்” என்று சொல்கிறார். (மத்தேயு 7:15) நல்ல மரங்கள் எவை, கெட்ட மரங்கள் எவை என்பதை அவற்றின் பழங்களை வைத்து கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் சொல்கிறார். அதேபோல், போலித் தீர்க்கதரிசிகள் யார் என்பதை அவர்களுடைய போதனைகளையும் செயல்களையும் வைத்தே கண்டுபிடித்துவிடலாம். ஒருவர் பேசுகிற வார்த்தைகளால் மட்டும் அவர் இயேசுவின் சீஷராகிவிட மாட்டார், அவர் செய்கிற செயல்கள்தான் அவரை உண்மையிலேயே இயேசுவின் சீஷராக ஆக்கும். இயேசுதான் தங்கள் கர்த்தர், அதாவது எஜமான், என்று சிலர் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், கடவுள் விரும்புகிறபடி அவர்கள் நடக்கவில்லை என்றால்? “நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று சொல்வேன்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 7:23.

கடைசியாக, “நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:24, 25) இந்த வீடு ஏன் இடிந்து விழவில்லை? ஏனென்றால் அந்த மனுஷன், ‘ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டிருந்தான்.’ (லூக்கா 6:48) இதிலிருந்து, இயேசுவின் வார்த்தைகளை வெறுமனே கேட்டால் மட்டும் போதாது, அவற்றின்படி ‘நடக்க’ நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்கிறோம்.

“இந்த விஷயங்களைக் கேட்டும் அவற்றின்படி நடக்காதவன்” யாரைப் போல இருக்கிறான்? “மணல்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாத மனுஷனைப் போல் இருக்கிறான்.” (மத்தேயு 7:26) மழையும் வெள்ளமும் காற்றும் தாக்கும்போது அந்த வீடு இடிந்து தரைமட்டமாகிவிடும்.

இயேசு பிரசங்கித்த விதத்தைப் பார்த்து எல்லாரும் அசந்துபோகிறார்கள். அவர் மதத் தலைவர்களைப் போலக் கற்பிக்காமல், அதிகாரத்தோடு கற்பிக்கிறார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட நிறைய பேர் அவருடைய சீஷர்களாக ஆகியிருக்கலாம்.