Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 77

சொத்து சேர்ப்பதைப் பற்றிய ஆலோசனை

சொத்து சேர்ப்பதைப் பற்றிய ஆலோசனை

லூக்கா 12:1-34

  • பணக்காரனைப் பற்றிய உவமை

  • காகங்களையும் காட்டுப் பூக்களையும் பற்றி இயேசு சொல்கிறார்

  • கடவுளுடைய அரசாங்கத்தில் “சிறு மந்தை”

இயேசு அந்தப் பரிசேயனின் வீட்டில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காகக் காத்திருக்கிறார்கள். கலிலேயாவில்கூட இப்படித்தான் மக்கள் அவரைத் தேடிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வருவார்கள். (மாற்கு 1:33; 2:2; 3:9) இப்போது யூதேயாவிலும் நிறைய பேர் அவரைப் பார்க்கவும் அவர் சொல்வதைக் கேட்கவும் ஆசைப்படுகிறார்கள். விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிற பரிசேயர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்!

இயேசு தன் சீஷர்களிடம், “பரிசேயர்களின் புளித்த மாவைக் குறித்து, அதாவது அவர்களுடைய வெளிவேஷத்தைக் குறித்து, எச்சரிக்கையாக இருங்கள்” என்ற முக்கியமான விஷயத்தை முதலில் சொல்கிறார். இதைப் பற்றி இயேசு அவர்களை ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார். ஆனால், அதன்படி நடப்பது இப்போது ரொம்ப அவசியம் என்பதை விருந்தில் அவர் கவனித்த விஷயங்கள் காட்டுகின்றன. (லூக்கா 12:1; மாற்கு 8:15) பரிசேயர்கள் பக்திமான்களைப் போல வெளிவேஷம் போட்டுக்கொண்டு, தாங்கள் செய்கிற அநியாயங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் ஆபத்தானவர்கள் என்பதைக் கண்டிப்பாக வெட்டவெளிச்சமாக்க வேண்டும். “மறைத்து வைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, ரகசியமாக வைக்கப்படுகிற எதுவும் வெட்டவெளிச்சமாகாமல் போகாது” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 12:2.

ஒருவேளை, இப்போது இயேசுவைப் பார்ப்பதற்காகத் திரண்டு வந்திருக்கிற மக்களில் பலர் யூதேயாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். கலிலேயாவில் அவர் கற்பித்த விஷயங்களை இவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். அதனால், முன்பு கற்றுக்கொடுத்த முக்கியமான விஷயங்களை இயேசு மறுபடியும் கற்றுக்கொடுக்கிறார். “உடலைக் கொல்ல முடிந்தாலும் அதற்குமேல் எதுவும் செய்ய முடியாதவர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள்” என்று அங்கிருக்கிற மக்களிடம் சொல்கிறார். (லூக்கா 12:4) கடவுள் தங்களைக் கவனித்துக்கொள்வார் என்று நம்பிக்கையோடு இருக்கும்படி சீஷர்களிடம் மறுபடியும் வலியுறுத்துகிறார். மனிதகுமாரனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கடவுளால் தங்களுக்கு உதவி செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்.—மத்தேயு 10:19, 20, 26-33; 12:31, 32.

அப்போது அந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒருவன், “போதகரே, சொத்தை எனக்குப் பிரித்துக் கொடுக்கும்படி என் சகோதரனுக்குச் சொல்லுங்கள்” என்று தன் பிரச்சினையை இயேசுவிடம் சொல்கிறான். (லூக்கா 12:13) மூத்த மகனுக்குச் சொத்தில் இரண்டு பங்கு கொடுக்க வேண்டும் என்று திருச்சட்டம் தெளிவாகச் சொல்லியிருந்தது. அதனால், இந்த விஷயத்தில் பிரச்சினை வர வாய்ப்பே இல்லை. (உபாகமம் 21:17) இவன் தனக்குக் கிடைக்க வேண்டிய பங்கைவிட அதிகமாகக் கேட்டிருக்கலாம். இயேசு ஞானமாக இந்தப் பிரச்சினையில் தலையிட மறுத்துவிடுகிறார். அவனைப் பார்த்து, “மனுஷனே, என்னை உங்கள் நடுவராகவோ உங்களுக்குப் பாகம் பிரித்துக் கொடுப்பவராகவோ நியமித்தது யார்?” என்று கேட்கிறார்.—லூக்கா 12:14.

பிறகு, “விழித்திருங்கள், எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது” என்று அங்கிருக்கிற எல்லாரிடமும் சொல்கிறார். (லூக்கா 12:15) ஒருவனுக்கு எவ்வளவு சொத்து இருந்தாலும், அவன் என்றைக்காவது ஒருநாள் சாகத்தானே போகிறான்? சாகும்போது, எல்லாவற்றையும் விட்டுவிட்டுத்தானே போவான்? இதை வலியுறுத்துவதற்காக இயேசு ஒரு அருமையான உவமையைச் சொல்கிறார். கடவுளிடம் நல்ல பெயரெடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அதில் குறிப்பிடுகிறார்.

“பணக்காரன் ஒருவனுடைய நிலம் அமோக விளைச்சலைத் தந்தது. அதனால் அவன், ‘என் விளைச்சலைச் சேர்த்து வைப்பதற்கு இடமில்லையே, இப்போது என்ன செய்வேன்?’ என்று யோசிக்க ஆரம்பித்தான். ‘ஒன்று செய்வேன்: என் களஞ்சியங்களை இடித்துவிட்டு இன்னும் பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன்; அவற்றில் என்னுடைய எல்லா தானியங்களையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். அதன் பிறகு என்னிடம் நானே, “பல வருஷங்களுக்குத் தேவையான நல்ல நல்ல பொருள்களை உனக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்; அதனால் நீ ஓய்வெடு, சாப்பிட்டுக் குடித்துச் சந்தோஷமாக இரு” என்று சொல்வேன்’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’ என்று கேட்டார். கடவுளுடைய பார்வையில் பணக்காரனாக இல்லாமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவனுக்கு இப்படித்தான் நடக்கும்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 12:16-21.

இயேசுவின் சீஷர்களுக்கும் அங்கிருக்கிற மற்றவர்களுக்கும் சொத்துகளைக் குவிக்க வேண்டும் என்ற ஆசை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. யெகோவாவுக்குச் சேவை செய்ய விடாமல் அன்றாட கவலைகள் அவர்களைத் திசை திருப்பிவிடலாம். அதனால், கிட்டத்தட்ட ஒன்றரை வருஷங்களுக்கு முன்பு மலைப்பிரசங்கத்தில் கொடுத்த அருமையான ஆலோசனையை இயேசு மறுபடியும் கொடுக்கிறார்.

“எதைச் சாப்பிடுவது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். . . . அண்டங்காக்கைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, அவற்றுக்குச் சேமிப்புக் கிடங்கும் இல்லை, களஞ்சியமும் இல்லை; ஆனாலும், கடவுள் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா? . . . காட்டுப் பூக்கள் வளருவதைப் பாருங்கள். அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த சாலொமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை. . . . அதனால், எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம் என்று யோசித்துக்கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள், என்ன ஆகுமோ என்று அநாவசியமாகக் கவலைப்படுவதையும் விட்டுவிடுங்கள். . . . இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும். அதனால், எப்போதுமே அவருடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றை அவர் உங்களுக்குக் கொடுப்பார்” என்று சொல்கிறார்.—லூக்கா 12:22-31; மத்தேயு 6:25-33.

கடவுளுடைய அரசாங்கத்துக்கு யார் முதலிடம் கொடுப்பார்கள்? ஒரு “சிறுமந்தை,” அதாவது கடவுளுக்கு உண்மையுள்ள சிலர், அதற்கு முதலிடம் கொடுப்பார்கள் என்று இயேசு சொல்கிறார். அவர்கள் வெறுமனே 1,44,000 பேர்தான் என்ற விஷயம் பிறகு வெளிப்படுத்தப்படும். அவர்களுக்கு என்ன பரிசு கிடைக்கும்? “உங்களிடம் தன் அரசாங்கத்தைக் கொடுக்க உங்கள் தகப்பன் பிரியமாக இருக்கிறார்” என்று இயேசு வாக்குக் கொடுக்கிறார். இந்தப் பூமியில் சொத்துகளைச் சேர்ப்பதில் அவர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள். ஏனென்றால், திருடர்கள் இவற்றைத் திருடிக்கொண்டு போய்விடலாம். சிறுமந்தையைச் சேர்ந்தவர்களின் கவனமெல்லாம் ‘பரலோகத்தில் ஒருபோதும் குறையாத பொக்கிஷத்தின்மீதே’ இருக்கும். அங்குதான் அவர்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்வார்கள்.—லூக்கா 12:32-34.