மத்தேயு எழுதியது 12:1-50

12  ஓய்வுநாளில் இயேசு தன்னுடைய சீஷர்களோடு வயல் வழியாக நடந்துபோனார். அப்போது, அவருடைய சீஷர்களுக்குப் பசியெடுத்தது, அதனால் கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.+  பரிசேயர்கள் அதைப் பார்த்ததும், “ஓய்வுநாளில் செய்யக்கூடாத காரியத்தை உன்னுடைய சீஷர்கள் செய்கிறார்கள்!”+ என்று அவரிடம் சொன்னார்கள்.  அதற்கு அவர், “தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் பசியெடுத்தபோது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசிக்கவில்லையா?+  அவர் கடவுளுடைய வீட்டுக்குள்* போய், குருமார்களைத் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளை+ தன் ஆட்களோடு சேர்ந்து சாப்பிட்டாரே?+  அதுமட்டுமல்ல, ஆலயத்தில் இருக்கிற குருமார்கள் ஓய்வுநாட்களில் வேலை செய்தாலும் குற்றமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் பற்றித் திருச்சட்டத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா?+  ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிட மேலானவர் இங்கே இருக்கிறார்.+  ‘பலியை அல்ல,+ இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’+ என்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்திருந்தால், குற்றமற்றவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள்.  ஏனென்றால், மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கு எஜமானாக இருக்கிறார்”+ என்று சொன்னார்.  பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு அவர்களுடைய ஜெபக்கூடத்துக்குள் போனார். 10  சூம்பிய* கையுடைய ஒருவன்+ அங்கே இருந்தான். அங்கிருந்தவர்கள் அவர்மேல் குற்றம் சுமத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு, “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா?” என்று கேட்டார்கள்.+ 11  அதற்கு அவர், “உங்களில் யாருக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டால், அதை வெளியே தூக்கிவிடாமல் இருப்பீர்களா?+ 12  அப்படியானால், ஆட்டைவிட மனுஷன் எவ்வளவு மதிப்புள்ளவன்! அதனால், ஓய்வுநாளில் நல்ல காரியத்தைச் செய்வது சரிதான்” என்று சொன்னார். 13  பின்பு, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்று சொன்னார். அவன் நீட்டினான், அந்தக் கை குணமாகி, அவனுடைய இன்னொரு கையைப் போல் ஆனது. 14  ஆனால், அந்தப் பரிசேயர்கள் வெளியே போய், அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் போட்டார்கள். 15  இயேசு இதைத் தெரிந்துகொண்டு அந்த இடத்தைவிட்டுப் போனார். நிறைய பேர் அவர் பின்னால் போனார்கள்,+ அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். 16  ஆனால், தன்னைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாதென்று கண்டிப்புடன் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.+ 17  ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படி நடந்தது: 18   “இதோ! இவர்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிற என்னுடைய அன்பு ஊழியர்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.+ என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன்.+ எது நியாயம் என்பதை எல்லா தேசத்து மக்களுக்கும் இவர் தெளிவாகக் காட்டுவார். 19  இவர் வாக்குவாதம் செய்ய மாட்டார்,+ குரலை உயர்த்திப் பேச மாட்டார்; முக்கியத் தெருக்களில் இவருடைய குரலை யாரும் கேட்க மாட்டார்கள். 20  நியாயத்தை நிலைநாட்டும்வரை, நசுங்கிய எந்த நாணலையும் இவர் ஒடிக்க மாட்டார்; மங்கியெரிகிற எந்தத் திரியையும் அணைக்க மாட்டார்.+ 21  உண்மையில், எல்லா மக்களும் இவருடைய பெயரில் நம்பிக்கையோடு இருப்பார்கள்.”+ 22  பின்பு, பேய் பிடித்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவனால் பார்க்கவோ பேசவோ முடியவில்லை; அவனை அவர் குணமாக்கியவுடன் அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. 23  அப்போது மக்கள் எல்லாரும் பிரமித்துப்போய், “ஒருவேளை இவர்தான் தாவீதின் மகனோ?” என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 24  அதைக் கேட்ட பரிசேயர்கள், “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொன்னார்கள். 25  அவர்களுடைய யோசனைகளை அவர் தெரிந்துகொண்டு, “ஒரு ராஜ்யத்துக்குள் பிரிவினைகள் இருந்தால் அந்த ராஜ்யம் நிலைக்காது. ஒரு ஊருக்குள் அல்லது வீட்டுக்குள் பிரிவினைகள் இருந்தால் அதுவும் நிலைக்காது. 26  அதேபோல், சாத்தானைச் சாத்தானே விரட்டினால், அவன் தனக்கு விரோதமாகவே பிரிவினைகள் உண்டாக்குகிறான் என்று அர்த்தம்; அப்படியானால், அவனுடைய ராஜ்யம் எப்படி நிலைக்கும்? 27  நான் பெயல்செபூப் உதவியால் பேய்களை விரட்டுகிறேன் என்றால், உங்களுடைய சீஷர்கள்* யாருடைய உதவியால் அவற்றை விரட்டுகிறார்கள்? அதனால், உங்களுடைய சீஷர்களே நீங்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்கிறார்கள். 28  நான் கடவுளுடைய சக்தியால்தான் பேய்களை விரட்டுகிறேன் என்றால், கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை* என்றுதான் அர்த்தம்.+ 29  ஒரு பலசாலியை முதலில் கட்டிப்போடவில்லை என்றால், ஒருவன் எப்படி அவனுடைய வீட்டுக்குள் புகுந்து பொருள்களைக் கொள்ளையடிக்க முடியும்? அவனைக் கட்டிப்போட்ட பின்புதான் வீட்டைக் கொள்ளையடிக்க முடியும். 30  என் பக்கம் இல்லாதவன் எனக்கு விரோதமாக இருக்கிறான், என்னோடு சேர்ந்து மக்களைக் கூட்டிச்சேர்க்காதவன் அவர்களைச் சிதறிப்போக வைக்கிறான்.+ 31  அதனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், எல்லா விதமான பாவமும் நிந்தனையும் மனுஷர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமான நிந்தனை மன்னிக்கப்படாது.+ 32  உதாரணமாக, மனிதகுமாரனுக்கு விரோதமாக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படும்;+ ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக யாராவது பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படாது; இந்தக் காலத்திலும் சரி, இனிவரும் காலத்திலும் சரி, மன்னிக்கப்படாது.+ 33  நீங்கள் நல்ல மரமாக இருந்தால் நல்ல கனியைக் கொடுப்பீர்கள்; கெட்ட மரமாக இருந்தால் கெட்ட கனியைக் கொடுப்பீர்கள்; ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனியை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.+ 34  விரியன் பாம்புக் குட்டிகளே,+ பொல்லாதவர்களான உங்களால் எப்படி நல்ல விஷயங்களைப் பேச முடியும்? இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது.+ 35  நல்ல மனுஷன் தன் இதயத்தில் நிறைந்திருக்கிற நல்ல விஷயங்களையே பேசுகிறான்; கெட்ட மனுஷனோ தன் இதயத்தில் நிறைந்திருக்கிற கெட்ட விஷயங்களையே பேசுகிறான்.+ 36  நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்கள் தாங்கள் பேசுகிற ஒவ்வொரு வீணான* வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்;+ 37  ஏனென்றால், உங்களுடைய வார்த்தைகளை வைத்தே நீங்கள் நீதிமான்களா குற்றவாளிகளா என்பதைக் கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்று சொன்னார். 38  அதற்கு வேத அறிஞர்களிலும் பரிசேயர்களிலும் சிலர், “போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள்.+ 39  அப்போது அவர், “விசுவாசதுரோகம் செய்கிற பொல்லாத தலைமுறையினர் ஒரு அடையாளத்தை* எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்; ஆனால், யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் அவர்களுக்குக் கொடுக்கப்படாது.+ 40  ராத்திரி பகலாக மூன்று நாட்களுக்கு யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருந்தது போலவே+ மனிதகுமாரனும் ராத்திரி பகலாக மூன்று நாட்களுக்குக் கல்லறைக்குள் இருப்பார்.+ 41  நியாயத்தீர்ப்பின்போது நினிவே மக்கள் இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்; ஏனென்றால், யோனா பிரசங்கித்த விஷயங்களைக் கேட்டு அவர்கள் மனம் திருந்தினார்கள்.+ ஆனால் இதோ! யோனாவைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.+ 42  நியாயத்தீர்ப்பின்போது தென்தேசத்து ராணி இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வாள்; ஏனென்றால், அவள் சாலொமோனின் ஞானத்தைக் கேட்க பூமியின் தொலைதூரப் பகுதியிலிருந்து வந்தாள்;+ ஆனால், இதோ! சாலொமோனைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.+ 43  ஒரு பேய் ஒரு மனுஷனைவிட்டுப் போகும்போது, ஓய்வெடுக்க இடம் தேடி வறண்ட இடங்கள் வழியாக அலைந்து திரிகிறது; ஆனால் எந்த இடமும் கிடைக்காமல்,+ 44  ‘நான் விட்டுவந்த என் வீட்டுக்கே திரும்பிப் போவேன்’ என்று சொல்கிறது; அது திரும்பிப் போகும்போது அந்த வீடு காலியாகவும் நன்றாகப் பெருக்கி அலங்கரிக்கப்பட்டும் இருப்பதைப் பார்க்கிறது. 45  பின்பு, மறுபடியும் போய், தன்னைவிடப் பொல்லாத ஏழு பேய்களைக் கூட்டிக்கொண்டு வருகிறது. அந்தப் பேய்கள் உள்ளே புகுந்து அங்கேயே குடியிருக்கின்றன; அந்த மனுஷனுடைய நிலைமை முதலில் இருந்ததைவிட இன்னும் மோசமாகிறது.+ இப்படித்தான், இந்தப் பொல்லாத தலைமுறையினருக்கும் நடக்கும்” என்று சொன்னார். 46  கூட்டத்தாரிடம் அவர் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவருடைய அம்மாவும் சகோதரர்களும்+ அவரோடு பேசுவதற்காக வெளியே நின்றுகொண்டிருந்தார்கள்.+ 47  அப்போது ஒருவர் அவரிடம், “உங்கள் அம்மாவும் உங்கள் சகோதரர்களும் உங்களோடு பேசுவதற்காக வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார். 48  இயேசு அவரைப் பார்த்து, “யார் என்னுடைய அம்மா, யார் என்னுடைய சகோதரர்கள்?” என்று கேட்டார்; 49  பின்பு தன்னுடைய சீஷர்கள் பக்கமாகக் கையை நீட்டி, “இதோ! என் அம்மாவும் சகோதரர்களும் இவர்கள்தான்!+ 50  என்னுடைய பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி* நடக்கிறவர்தான் என் சகோதரர், என் சகோதரி, என் அம்மா”+ என்று சொன்னார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

ஓய்வுநாளில்: சொல் பட்டியலில் “ஓய்வுநாள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

வயல் வழியாக: ஒருவேளை, ஒரு நிலத்துக்கும் இன்னொரு நிலத்துக்கும் இடையில் இருந்த வரப்பு வழியாக, அதாவது நடைபாதை வழியாக, இயேசு நடந்துபோயிருக்கலாம்.

செய்யக்கூடாத காரியத்தை: இஸ்ரவேலர்கள் ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யக் கூடாதென்று யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். (யாத் 20:8-10) ஆனால், எதையெல்லாம் வேலை என்று சொல்லலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கு இருந்ததாக யூத மதத் தலைவர்கள் சொல்லிக்கொண்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இயேசுவின் சீஷர்கள் கதிர்களைப் பறித்து தங்களுடைய கைகளில் தேய்த்தது குற்றமாக இருந்தது; அது கதிர்களை அறுத்து போரடித்ததற்குச் சமமாக இருந்ததென்று அவர்கள் சொன்னார்கள். (லூ 6:1, 2) ஆனால், அவர்கள் இப்படியெல்லாம் சொன்னது யெகோவாவின் சட்டத்தை மீறுவதாக இருந்தது.

கடவுளுடைய வீட்டுக்குள்: மாற் 2:​26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

படையல் ரொட்டிகளை: இதற்கான எபிரெய வார்த்தைகளின் நேரடி அர்த்தம், “முகத்தின் ரொட்டி.” ‘முகம்’ என்ற வார்த்தை சிலசமயங்களில் “சன்னிதியில்” அல்லது “முன்னிலையில்” இருப்பதைக் குறிக்கிறது. படையல் ரொட்டிகள் யெகோவாவுக்குக் காணிக்கையாக அவருடைய முகத்துக்கு முன்பு எப்போதும் வைக்கப்பட்டிருந்தன.​—யாத் 25:30; சொல் பட்டியலில் “படையல் ரொட்டி” என்ற தலைப்பையும், இணைப்பு B5-ஐயும் பாருங்கள்.

ஓய்வுநாட்களில் வேலை செய்தாலும்: வே.வா., “ஓய்வுநாட்களை மீறினாலும்.” ஓய்வுநாட்களை மற்ற எல்லா நாட்களையும் போலவே அவர்கள் கருதியதை இது குறிக்கிறது. ஓய்வுநாட்களில், பலி செலுத்தப்படும் விலங்குகளை அவர்கள் வெட்டினார்கள், பலி செலுத்துவது சம்பந்தமான மற்ற வேலைகளையும் செய்தார்கள்.—எண் 28:9, 10.

பலியை அல்ல, இரக்கத்தைத்தான்: ஓசி 6:6-ல் உள்ள இந்த வார்த்தைகளை இயேசு இரண்டு தடவை (இங்கும் மத் 12:7-லிலும்) மேற்கோள் காட்டினார். சுவிசேஷ எழுத்தாளர்களில் மத்தேயு மட்டும்தான் இந்த மேற்கோளையும், இரக்கம் காட்டாத அடிமையைப் பற்றிய உவமையையும் பதிவு செய்திருக்கிறார்; இவர் மக்களால் இழிவாகக் கருதப்பட்ட வரி வசூலிப்பவர், பிற்பாடு இயேசுவின் நெருங்கிய நண்பராக ஆனவர். (மத் 18:21-25) பலி மட்டுமல்ல, இரக்கமும் அவசியம் என்று இயேசு திரும்பத் திரும்ப வலியுறுத்தியதை மத்தேயுவின் சுவிசேஷம் சிறப்பித்துக் காட்டுகிறது.

குறிக்கிறது: கிரேக்கில், ஈஸ்ட்டீன். இந்த வசனத்தில் இதன் அர்த்தம், “சுட்டிக்காட்டுகிறது; அடையாளப்படுத்துகிறது; பிரதிநிதித்துவம் செய்கிறது.” இந்த அர்த்தம் அப்போஸ்தலர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பத்தில் இயேசுவின் பரிபூரண உடல் அவர்களுடைய கண்ணெதிரிலேயே இருந்தது; அவர்கள் சாப்பிடவிருந்த புளிப்பில்லாத ரொட்டியும் அவர்களுடைய கண் முன்னால் இருந்தது. அதனால், அந்த ரொட்டி இயேசுவின் நிஜமான உடலாக இருந்திருக்க முடியாது. இதே கிரேக்க வார்த்தை மத் 12:7-லும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. “கருத்து,” “பொருள்” என்றெல்லாம் சில பைபிள்களில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பலியை அல்ல, இரக்கத்தையே: மத் 9:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அர்த்தத்தை: கிரேக்கில், ஈஸ்ட்டீன். “சுட்டிக்காட்டுவதை; குறிப்பதை” என்றும் இதை மொழிபெயர்க்கலாம்.​—மத் 26:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மனிதகுமாரனுக்கு: வே.வா., “ஒரு மனிதனின் மகனுக்கு.” இந்த வார்த்தை சுவிசேஷப் புத்தகங்களில் கிட்டத்தட்ட 80 தடவை வருகிறது. இயேசு தன்னைப் பற்றிச் சொல்லும்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்; அநேகமாக, தான் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த உண்மையான மனிதர் என்பதை வலியுறுத்தினார். அதோடு, ஆதாமுக்குச் சரிசமமான ஒரு மனிதராக இருந்ததையும், மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இருந்ததையும் வலியுறுத்தினார். (ரோ 5:12, 14, 15) இதே வார்த்தை இயேசுவை மேசியாவாகவும், அதாவது கிறிஸ்துவாகவும்கூட, அடையாளம் காட்டியது.—தானி 7:13, 14; சொல் பட்டியலைப் பாருங்கள்.

மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

ஓய்வுநாளுக்கு எஜமானாக: இயேசு தன்னையே இப்படி அழைத்தார். (மாற் 2:28; லூ 6:5) தன்னுடைய பரலோகத் தகப்பன் கொடுத்திருந்த வேலையைச் செய்ய ஓய்வுநாளைக்கூடப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரம் தனக்கு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். (ஒப்பிடுங்கள்: யோவா 5:19; 10:37, 38) அற்புதங்களிலேயே பெரிய அற்புதங்களை ஓய்வுநாள் சமயங்களில் இயேசு செய்தார்; உதாரணத்துக்கு, நோயாளிகளைக் குணப்படுத்தினார். (லூ 13:10-13; யோவா 5:5-9; 9:1-14) அவர் அப்படிச் செய்தது, ஓய்வுநாளைப் போன்ற அவருடைய ஆட்சியில் எப்படிப்பட்ட நிம்மதியைக் கொடுப்பார் என்பதைக் காட்டியதாகத் தெரிகிறது.—எபி 10:1.

கையுடைய: ‘கை’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஒருவருடைய மேல் கை, கீழ்க் கை, உள்ளங்கை, விரல்கள் என எதையும் குறிக்கலாம்.​—மத் 12:13-ஐயும் பாருங்கள்.

இன்னும் எந்தளவுக்கு: இயேசு அடிக்கடி இதுபோல் நியாயங்காட்டிப் பேசினார். முதலில், எல்லாருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உண்மையைச் சொன்னார்; பிறகு, அந்த உண்மையின் அடிப்படையில் அதைவிட முக்கியமான ஒரு உண்மையை எடுத்துக் காட்டினார். இப்படி, ஒரு எளிமையான விஷயத்தைச் சொல்லி மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தினார்.—மத் 10:25; 12:11, 12; லூ 11:13; 12:28.

ஆட்டைவிட . . . எவ்வளவு மதிப்புள்ளவன்: மத் 7:11-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில், “இன்னும் எந்தளவுக்கு” என்ற தலைப்பைப் பாருங்கள்.

யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசியின் மூலம் சொன்னது நிறைவேற வேண்டும் என்பதற்காகவே: இந்த வார்த்தைகளையும் இதுபோன்ற வார்த்தைகளையும் மத்தேயு தன் சுவிசேஷத்தில் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை யூதர்களுக்கு வலியுறுத்துவதற்காக அவர் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியிருக்கலாம்.—மத் 2:15, 23; 4:16; 8:17; 12:17; 13:35; 21:5; 26:56; 27:10.

ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் நிறைவேறும்படியே: மத் 1:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

இதோ!: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்: வே.வா., “இவரை நான் அங்கீகரிக்கிறேன்; இவர்மேல் மிகவும் பிரியமாக இருக்கிறேன்.”​—மத் 3:17-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்: வே.வா., “நான் இவரை அங்கீகரிக்கிறேன்; இவர்மேல் மிகவும் பிரியமாக இருக்கிறேன்; இவரைக் குறித்துப் பூரிப்படைகிறேன்.” இதே வார்த்தைகளைத்தான் மத் 12:18-லும் வாசிக்கிறோம்; வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியாவை அல்லது கிறிஸ்துவைப் பற்றி ஏசா 42:1-ல் சொல்லப்பட்டிருந்ததை அது மேற்கோள் காட்டுகிறது. கடவுளுடைய சக்தி இயேசுமேல் பொழியப்பட்டதும், அவரைத் தன் மகனாகக் கடவுள் அறிவித்ததும், இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதற்குத் தெளிவான அடையாளங்களாக இருந்தன.—மத் 12:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

இதோ!: இதற்கான கிரேக்க வார்த்தை இடோ. அடுத்து சொல்லப்படும் விஷயத்துக்குக் கவனத்தைத் திருப்புவதற்கு இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது; காட்சியைக் கற்பனை செய்துபார்க்கும்படியோ ஒரு விவரத்தைக் கவனிக்கும்படியோ தூண்டுவதற்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்கோ, புதிய அல்லது ஆச்சரியமான ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்துவதற்கோகூட அது பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்களிலும், வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிரேக்க வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை எபிரெய வேதாகமத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிலைநாட்டும்வரை: வே.வா., “வெற்றிபெற வைக்கும்வரை.” இதற்கான கிரேக்க வார்த்தை நீக்காஸ். 1கொ 15:55, 57-ல் இது “வெற்றி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மங்கியெரிகிற எந்தத் திரியையும்: அன்று வீடுகளில் பொதுவாக, சின்ன களிமண் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுக்கு ஒலிவ எண்ணெயும் நாரிழைத் திரியும் பயன்படுத்தப்பட்டன. ‘மங்கியெரிகிற திரி’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, நெருப்பு மங்கியெரியும்போது அல்லது அணைக்கப்பட்டிருக்கும்போது புகைந்துகொண்டிருக்கும் கரிந்துபோன திரியைக் குறிக்கலாம். ஏசா 42:3-ல் உள்ள தீர்க்கதரிசனம் இயேசுவின் கரிசனையைப் பற்றிச் சொன்னது. அடக்கி ஒடுக்கப்படுகிற தாழ்மையான மக்களின் மனதில் மங்கியெரிகிற நம்பிக்கைச் சுடரை அவர் ஒருபோதும் அணைக்க மாட்டார்.

பெயல்செபூப்: ஒருவேளை, பாகால்-செபூப் என்ற பெயரின் மாற்று வடிவமாக இது இருக்கலாம். பாகால்-செபூப் என்பது எக்ரோனில் இருந்த பெலிஸ்தியர்களால் வணங்கப்பட்ட பாகால் தெய்வம். பாகால்-செபூப் என்பதன் அர்த்தம், “ஈக்களின் சொந்தக்காரன் (எஜமான்).” (2ரா 1:3) சில கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில், பெயல்செபோல் அல்லது பெயசெபோல் என்ற மாற்று வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன; ஒருவேளை இவற்றின் அர்த்தம், “உன்னதமான குடியிருப்பின் சொந்தக்காரன் (எஜமான்).” பைபிளில் பயன்படுத்தப்படாத செவெல் (சாணி) என்ற எபிரெய வார்த்தை இங்கே சொல்வித்தையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இதன் அர்த்தம் “சாணியின் சொந்தக்காரன் (எஜமான்).” மத் 12:24 காட்டுகிறபடி, பெயல்செபூப் என்பது பேய்களின் தலைவனான சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்.

பெயல்செபூப்: சாத்தானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பட்டப்பெயர்.​—மத் 10:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

வீட்டுக்குள்: அதாவது, “குடும்பத்துக்குள்.” ‘வீடு’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஒரு குடும்பத்தை மட்டும் அர்த்தப்படுத்தலாம், அல்லது சொந்தபந்தங்களையும் சேர்த்து அர்த்தப்படுத்தலாம். ராஜாக்களின் அரண்மனைகளில் இருந்தவர்களையும் அது குறிக்கலாம். (அப் 7:10; பிலி 4:22) ஏரோது, சீஸர் போன்ற அரசப் பரம்பரைகளைக் குறிக்கவும் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அந்தப் பரம்பரைகளில் உட்பூசல் சகஜமாக இருந்தது, அவற்றின் அழிவுக்கே காரணமாகவும் இருந்தது. மத்தேயு எழுதிய இந்தப் பதிவில், ‘வீடு’ என்பது ‘ஊருக்கு’ இணையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சாத்தானே: ‘சாத்தான்’ என்ற வார்த்தை, சாத்தன் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. இதன் அர்த்தம், “எதிர்ப்பவன்.”

நீங்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்கிறார்கள்: நே.மொ., “உங்கள் நீதிபதிகளாக இருப்பார்கள்.” அதாவது, பரிசேயர்களுடைய சீஷர்கள் செய்த செயலே பரிசேயர்களின் வாதத்தை முறியடித்து.

நிந்தனையும்: நிந்தனை என்பது கடவுளுக்கு அல்லது பரிசுத்தமான காரியங்களுக்கு எதிராகப் பேசப்படும் தவறான பேச்சை, மோசமான பேச்சை, அல்லது பழிப்பேச்சைக் குறிக்கிறது. ‘கடவுளுடைய சக்தி’ கடவுளிடமிருந்தே வருவதால், அது செயல்படுவதை வேண்டுமென்றே எதிர்ப்பதோ மறுப்பதோ கடவுளுக்கு எதிரான நிந்தனையாக இருந்தது. மத் 12:24, 28 காட்டுகிறபடி, இயேசு அற்புதங்களைச் செய்தபோது கடவுளுடைய சக்தி அவரிடம் செயல்பட்டதை யூத மதத் தலைவர்கள் பார்த்தார்கள்; ஆனாலும், பிசாசாகிய சாத்தானுடைய சக்தியால்தான் அவர் அற்புதங்கள் செய்ததாகச் சொன்னார்கள்.

இந்தக் காலத்திலும்: இங்கே காலம் என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஏயோன். இதன் அடிப்படை அர்த்தம், “சகாப்தம்.” இது ஒரு குறிப்பிட்ட காலத்தையோ காலகட்டத்தையோ சகாப்தத்தையோ மற்ற காலப்பகுதிகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிற நிலைமைகளை அல்லது அம்சங்களைக் குறிக்கலாம். சாத்தானுடைய ஆட்சி நடக்கிற இந்தப் பொல்லாத காலத்திலும் சரி (2கொ 4:4; தீத் 2:12; அடிக்குறிப்புகள்), கடவுளுடைய ஆட்சி நடக்கப்போகும் காலத்திலும் சரி, அதாவது ‘முடிவில்லாத வாழ்வு’ கிடைக்கப்போகும் காலத்திலும் சரி (லூ 18:29, 30), கடவுளுடைய சக்திக்கு எதிரான நிந்தனை மன்னிக்கப்படாது என்று இயேசு சொல்கிறார்.​—சொல் பட்டியலில் “சகாப்தம் (சகாப்தங்கள்)” என்ற தலைப்பைப் பாருங்கள்.

பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே: “பழைய பாம்பாகிய” (வெளி 12:9) சாத்தான், அடையாள அர்த்தத்தில், உண்மை வணக்கத்தை எதிர்ப்பவர்களின் மூதாதையாக இருக்கிறான். அதனால், இயேசு இந்த மதத் தலைவர்களை, “பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே” என்று சொன்னதில் நியாயம் இருக்கிறது. (யோவா 8:44; 1யோ 3:12) அவர்களுடைய அக்கிரமத்தினாலும் ஆன்மீக ரீதியில் அவர்கள் செய்த பயங்கரமான கெடுதலினாலும் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். யோவான் ஸ்நாகரும் அவர்களை “விரியன் பாம்புக் குட்டிகளே” என்று அழைத்தார்.—மத் 3:7.

விரியன் பாம்புக் குட்டிகளே: மத் 23:33-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

விசுவாசதுரோகம் செய்கிற: கடவுளுக்குத் துரோகம் செய்வதை, அதாவது அவருக்கு உண்மையில்லாமல் நடந்துகொள்வதை, குறிக்கிறது.​—மாற் 8:​38-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தை: கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு மீனின் வயிற்றிலிருந்து தான் காப்பாற்றப்பட்டது, கல்லறையிலிருந்து விடுவிக்கப்பட்டதுபோல் இருந்ததாக யோனா குறிப்பிட்டார். (யோனா 1:17–2:2) யோனா மீனின் வயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டது எந்தளவுக்கு நிஜமானதாக இருந்ததோ அந்தளவுக்கு நிஜமாகவே இயேசு கல்லறையிலிருந்து உயிரோடு எழுப்பப்படவிருந்தார். ஆனால், இறந்து கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு இயேசு உயிரோடு எழுப்பப்பட்டபோதும், வீம்புபிடித்த அவருடைய எதிரிகள் அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை.

ராத்திரி பகலாக மூன்று நாட்களுக்கு: மற்ற பைபிள் பதிவுகள் காட்டுகிறபடி, இது மூன்று நாட்களை முழுமையாகக் குறிப்பதில்லை; ஒரு நாளின் ஒரு பகுதியைக்கூட ஒரு முழு நாளாகக் கருத முடியும்.—ஆதி 42:17, 18; மத் 27:62-66; 28:1-6.

இதோ!: இதற்கான கிரேக்க வார்த்தை இடோ. அடுத்து சொல்லப்படும் விஷயத்துக்குக் கவனத்தைத் திருப்புவதற்கு இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது; காட்சியைக் கற்பனை செய்துபார்க்கும்படியோ ஒரு விவரத்தைக் கவனிக்கும்படியோ தூண்டுவதற்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்கோ, புதிய அல்லது ஆச்சரியமான ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்துவதற்கோகூட அது பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்களிலும், வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிரேக்க வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை எபிரெய வேதாகமத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தென்தேசத்து ராணி: அதாவது, “சேபா தேசத்து ராணி.” அவள் அரபியாவின் தென்மேற்கு பகுதியை ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது.—1ரா 10:1.

சகோதரர்களும்: மரியாளுக்கும் யோசேப்புக்கும் பிறந்த மகன்களைப் பற்றி இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய பெயர்கள் மத் 13:55-லும் மாற் 6:3-லும் கொடுக்கப்பட்டுள்ளன.​—“சகோதரர்கள்” என்ற வார்த்தையின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள மத் 13:55-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

சகோதரர்கள்: சகோதரர் என்பதற்கான கிரேக்க வார்த்தை, அடெல்ஃபோஸ். பைபிளில் இந்த வார்த்தை ஆன்மீகச் சகோதரரைக் குறிக்கலாம். ஆனால், இந்த வசனத்தில் இது இயேசுவுடைய தாயின் வயிற்றில் பிறந்தவர்களைக் குறிக்கிறது; அதாவது, யோசேப்பு மற்றும் மரியாளின் இளைய மகன்களைக் குறிக்கிறது. இயேசு பிறந்த பிறகும் மரியாள் கன்னியாகவே இருந்ததாக நம்புகிற சிலர், இங்கே அடெல்ஃபோஸ் என்ற வார்த்தை ஒன்றுவிட்ட சகோதரர்களை (பெற்றோரின் உடன் பிறந்தவர்களுடைய பிள்ளைகளை) குறிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ‘ஒன்றுவிட்ட சகோதரரை’ குறிப்பதற்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் வேறொரு வார்த்தையை (கிரேக்கில், அனேப்சியோஸ்; கொலோ 4:10) பயன்படுத்துகிறது; ‘பவுலுடைய சகோதரியின் மகனை’ குறிப்பதற்கும் இன்னொரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (அப் 23:16). அதோடு, லூ 21:16-ல் அடெல்ஃபோஸ், சீஜ்ஜீனேஸ் என்ற கிரேக்க வார்த்தைகள் பன்மையில் கொடுக்கப்பட்டுள்ளன (“சகோதரர்களும் சொந்தக்காரர்களும்” என்று அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன). இந்த உதாரணங்கள் காட்டுகிறபடி, குடும்ப உறவுகளைக் குறிக்கும் வார்த்தைகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் ஏனோதானோவென்று பயன்படுத்தப்படாமல், திட்டவட்டமாகவும் கவனமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அப்போது ஒருவர் . . . என்று சொன்னார்: சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் இல்லை.

இதோ! என் அம்மாவும் சகோதரர்களும் இவர்கள்தான்!: தன் தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்களையும் (அநேகமாக, அவர்களில் சிலர் இயேசுமேல் விசுவாசம் வைக்கவில்லை [யோவா 7:5]), தன் சீஷர்களாகிய ஆன்மீகச் சகோதரர்களையும் இயேசு இங்கே வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார். தன் குடும்பத்தாரோடு இருக்கும் பாசப்பிணைப்பைவிட தன் “பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி” நடக்கிறவர்களோடு இருக்கும் பாசப்பிணைப்பை அவர் உயர்வாக மதிப்பதைக் காட்டினார்.—மத் 12:50.

மீடியா

தானிய மணிகள்
தானிய மணிகள்

இயேசுவின் சீஷர்கள் பறித்துச் சாப்பிட்ட கதிர்கள், இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற கோதுமை மணிகளாக இருந்திருக்கலாம்.

முதல் நூற்றாண்டு ஜெபக்கூடம்
முதல் நூற்றாண்டு ஜெபக்கூடம்

கலிலேயா கடலின் வடகிழக்கே சுமார் 10 கி.மீ. (6 மைல்) தூரத்தில் இருக்கும் காம்லா என்ற இடத்தில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெபக்கூடம் இருக்கிறது. அதில் காணப்படும் சில அம்சங்களை இந்தப் படம் சித்தரிக்கிறது. இது, பழங்காலத்தில் ஒரு ஜெபக்கூடம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்ய உதவுகிறது.

கொம்பு விரியன்
கொம்பு விரியன்

யோவான் ஸ்நானகரும் சரி, இயேசுவும் சரி, வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் “விரியன் பாம்புக் குட்டிகளே” என்று அழைத்தார்கள். ஏனென்றால், ஆன்மீக ரீதியில் அவர்கள் செய்த கெடுதல், அப்பாவி மக்களுக்குக் கொடிய விஷம்போல் இருந்தது. (மத் 3:7; 12:34) படத்தில் காட்டப்பட்டிருப்பது கொம்பு விரியன். அதனுடைய இரண்டு கண்களுக்கும் மேலே கூர்மையான ஒரு சின்ன கொம்பு இருப்பது அதன் விசேஷம். இஸ்ரவேலில் பொதுவாகக் காணப்படும் மற்ற கொடிய விரியன்கள் இவைதான்: யோர்தான் பள்ளத்தாக்கில் இருக்கும் மணல் விரியன் (வைப்பெரா அம்மோடைட்டிஸ்); பாலஸ்தீனிய விரியன் (வைப்பெரா பாலஸ்ட்டீனா).