Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 6

வாக்குக் கொடுக்கப்பட்ட பிள்ளை

வாக்குக் கொடுக்கப்பட்ட பிள்ளை

லூக்கா 2:21-39

  • இயேசு விருத்தசேதனம் செய்யப்பட்டு, ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிறார்

யோசேப்பும் மரியாளும் நாசரேத்துக்குத் திரும்பிப் போகாமல் பெத்லகேமிலேயே தங்கிவிடுகிறார்கள். திருச்சட்டத்தில் சொல்லியிருக்கிறபடியே, இயேசு பிறந்து எட்டாவது நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்கிறார்கள். (லேவியராகமம் 12:2, 3) பொதுவாக, ஆண் குழந்தைக்கு அதே நாளில் பெயர் வைப்பது வழக்கம். யோசேப்பும் மரியாளும் காபிரியேல் தூதர் சொன்னபடியே, தங்கள் மகனுக்கு இயேசு என்று பெயர் வைக்கிறார்கள்.

நாட்கள் உருண்டோடுகின்றன. இயேசு இப்போது 40 நாள் குழந்தை. அவருடைய அப்பாவும் அம்மாவும் அவரை எங்கே கொண்டுபோகிறார்கள் தெரியுமா? அவர்கள் தங்கியிருக்கிற இடத்திலிருந்து ஒருசில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற எருசலேம் ஆலயத்துக்கு அவரைக் கொண்டுபோகிறார்கள். ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தால், 40 நாட்களுக்குப் பிறகு, அவள் ஆலயத்துக்குப் போய் சுத்திகரிப்பு பலிகளைக் கொடுக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொல்லியிருந்தது.—லேவியராகமம் 12:4-8.

மரியாள் அதைத்தான் செய்கிறாள். அவள் பலி கொடுப்பதற்காக இரண்டு சிறிய பறவைகளைக் கொண்டுவருகிறாள். இதிலிருந்து, யோசேப்பு மற்றும் மரியாளின் பொருளாதார நிலையைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், திருச்சட்டத்தின்படி செம்மறியாட்டுக் கடாக் குட்டியையும் புறாக் குஞ்சையும் பலி கொடுக்க வேண்டும். ஆனால், செம்மறியாட்டுக் கடாவைக் கொடுக்கும் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு வசதி இல்லையென்றால், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொடுத்தால் போதும். மரியாளுக்கு வசதி இல்லாததால் இரண்டு சிறிய பறவைகளைக் கொண்டுவருகிறாள்.

யோசேப்பும் மரியாளும் ஆலயத்தில் இருக்கும்போது, வயதான ஒருவர் அவர்களிடம் வருகிறார். அவர் பெயர் சிமியோன். கடவுளால் வாக்குக் கொடுக்கப்பட்ட கிறிஸ்துவை, அதாவது மேசியாவை, பார்ப்பதற்கு முன் அவர் சாக மாட்டார் என்று கடவுள் அவரிடம் சொல்லியிருந்தார். அன்று ஆலயத்துக்குப் போகும்படி கடவுளுடைய சக்தி அவரைத் தூண்டுகிறது. அங்கே யோசேப்பையும் மரியாளையும் அவர்களுடைய குழந்தையையும் அவர் பார்க்கிறார். உடனே, அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொள்கிறார்.

அப்போது சிமியோன், “உன்னதப் பேரரசரே, உங்களுடைய வார்த்தையின்படியே, உங்கள் ஊழியன் நிம்மதியாகக் கண்மூடுவதற்கு வழிசெய்துவிட்டீர்கள். ஏனென்றால், எல்லா மக்களும் பார்க்கும்படி நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற மீட்பரை இப்போது என் கண்களால் பார்த்துவிட்டேன். இவரே மற்ற தேசத்தாரை மூடியிருக்கிற இருளைப் போக்கும் ஒளியாகவும், உங்கள் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மகிமையாகவும் இருப்பார்” என்று கடவுளிடம் நன்றி பொங்க சொல்கிறார்.—லூக்கா 2:29-32.

அதைக் கேட்டு யோசேப்பும் மரியாளும் ரொம்ப ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களை சிமியோன் ஆசீர்வதிக்கிறார்; பின்பு மரியாளிடம், அவளுடைய மகன் “இஸ்ரவேலர்களில் பலருடைய வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருப்பார்” என்று சொல்கிறார். அதோடு, அவளுக்கு வரப்போகிற வேதனை நீண்ட வாள் போல அவளை ஊடுருவிச் செல்லும் என்றும் சொல்கிறார்.—லூக்கா 2:34.

அந்தச் சமயத்தில், அன்னாள் என்ற 84 வயது பெண் தீர்க்கதரிசியும் ஆலயத்தில் இருக்கிறார். அவர் ஆலயத்துக்கு வராமல் இருந்ததே இல்லை. அவரும் அந்த நேரத்தில் யோசேப்பையும் மரியாளையும் அவர்களுடைய குழந்தையையும் பார்ப்பதற்கு வருகிறார். சந்தோஷத்தில் கடவுளுக்கு நன்றி சொல்கிறார். அதோடு, ஆர்வமாகக் கேட்கிற எல்லாரிடமும் இயேசுவைப் பற்றிப் பேசுகிறார்.

ஆலயத்தில் நடந்த இந்தச் சம்பவங்களை நினைத்து யோசேப்பும் மரியாளும் ரொம்பச் சந்தோஷப்படுகிறார்கள். அவர்களுடைய மகன்தான் கடவுளால் வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதை நம்புவதற்கு இவையெல்லாம் ஆணித்தரமான ஆதாரங்களாக இருக்கின்றன.