Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 80

நல்ல மேய்ப்பனும் தொழுவங்களும்

நல்ல மேய்ப்பனும் தொழுவங்களும்

யோவான் 10:1-21

  • நல்ல மேய்ப்பனையும் தொழுவங்களையும் பற்றி இயேசு கற்பிக்கிறார்

இயேசு இன்னமும் யூதேயாவில்தான் கற்பித்துக்கொண்டிருக்கிறார். இப்போது அவர்களிடம் ஆடுகளையும் தொழுவங்களையும் பற்றிச் சொல்கிறார். இவையெல்லாம் அந்த மக்களுக்கு ரொம்பப் பழக்கப்பட்ட விஷயங்கள். ஆனால், நிஜமான ஆடுகளையும் தொழுவங்களையும் பற்றி இயேசு பேசவில்லை; அவற்றை ஒரு உதாரணமாகப் பயன்படுத்துகிறார். “யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார். எனக்கு ஒரு குறையும் வராது. பசுமையான புல்வெளிகளில் அவர் என்னைப் படுத்துக்கொள்ள வைக்கிறார்” என்று தாவீது சொன்னது அந்த யூதர்களுக்கு ஞாபகம் வந்திருக்கலாம். (சங்கீதம் 23:1, 2) வேறொரு சங்கீதத்தில், “நம்மைப் படைத்த யெகோவாவுக்குமுன் மண்டிபோடுவோம். ஏனென்றால், அவர்தான் நம் கடவுள். நாம் அவருடைய ஜனங்களாகவும், அவர் அக்கறையோடு மேய்க்கிற ஆடுகளாகவும் இருக்கிறோம்” என்று இஸ்ரவேல் மக்களிடம் தாவீது சொன்னார். (சங்கீதம் 95:6, 7) திருச்சட்டத்தின்கீழ் இருந்த இஸ்ரவேலர்கள் ரொம்பக் காலமாகவே ஆட்டு மந்தைக்கு ஒப்பிடப்பட்டார்கள்.

மோசேயின் திருச்சட்ட ஒப்பந்தத்தின்கீழ் பிறந்ததால், இந்த “ஆடுகள்” ஏற்கெனவே ஒரு “தொழுவத்தில்” இருந்தார்கள். திருச்சட்டம் இவர்களுக்கு ஒரு வேலி போல இருந்தது. திருச்சட்டத்தின்கீழ் இல்லாத மக்களின் மோசமான பழக்கவழக்கங்களிலிருந்து இவர்களைப் பாதுகாத்தது. ஆனால், இஸ்ரவேலர்கள் சிலர் கடவுளுடைய மந்தையை மோசமாக நடத்தினார்கள். அதனால் இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத்தொழுவத்தின் கதவு வழியாக வராமல் வேறு வழியாக ஏறி வருகிறவன் திருடனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருக்கிறான். ஆனால், கதவு வழியாக வருகிறவர் ஆடுகளின் மேய்ப்பராக இருக்கிறார்” என்று சொல்கிறார்.—யோவான் 10:1, 2.

அதைக் கேட்டதும், தங்களை மேசியா, அதாவது கிறிஸ்து, என்று சொல்லிக்கொண்ட சில ஆட்களைப் பற்றி மக்கள் யோசித்திருக்கலாம். இவர்கள் திருடர்களைப் போலவும், கொள்ளைக்காரர்களைப் போலவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மோசடிக்காரர்களை மக்கள் பின்பற்றக் கூடாது. அதற்குப் பதிலாக, ‘ஆடுகளின் மேய்ப்பரை’ அவர்கள் பின்பற்ற வேண்டும்.

ஆடுகளின் மேய்ப்பரைப் பற்றி இயேசு இப்படிச் சொல்கிறார்: “காவல்காரன் அவருக்குத்தான் கதவைத் திறந்துவிடுகிறான்; ஆடுகளும் அவருடைய குரலைக் கேட்கின்றன; அவர் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போகிறார். அவர் தன்னுடைய ஆடுகள் எல்லாவற்றையும் வெளியே கொண்டுவந்த பின்பு, அவற்றுக்கு முன்னால் போகிறார்; அந்த ஆடுகள் அவருடைய குரலைத் தெரிந்து வைத்திருப்பதால் அவருக்குப் பின்னால் போகின்றன. அன்னியர்களுடைய குரல் அவற்றுக்குத் தெரியாது; அதனால், அவை அன்னியன் பின்னால் போகவே போகாது, அவனைவிட்டு ஓடிவிடும்.”—யோவான் 10:3-5.

யோவான் ஸ்நானகர் ஒரு காவல்காரனைப் போல இருந்தார். திருச்சட்டத்தின்கீழ் இருந்த ஆடுகள் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார். கலிலேயாவில் இருக்கிற சில ஆடுகளும், யூதேயாவில் இருக்கிற சில ஆடுகளும் இயேசுவின் குரலை அடையாளம் கண்டுகொண்டன. இயேசு அவற்றை எங்கே ‘நடத்திக்கொண்டு போவார்,’ அவரைப் பின்பற்றினால் என்ன கிடைக்கும் என்றெல்லாம் இந்த உதாரணத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிற சிலர் யோசிக்கிறார்கள். ஏனென்றால், “அவர் சொன்ன இந்த ஒப்புமையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.”—யோவான் 10:6.

அப்போது இயேசு அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நான்தான் ஆட்டுத்தொழுவத்தின் கதவு. என் பெயரில் போலியாக வந்த எல்லாரும் திருடர்கள், கொள்ளைக்காரர்கள்; அவர்களுடைய குரலுக்கு ஆடுகள் காதுகொடுக்கவில்லை. நான்தான் கதவு; என் வழியாக நுழைகிற எவரும் மீட்புப் பெறுவார்; அவர் உள்ளே போவார், வெளியே வருவார், மேய்ச்சல் நிலத்தைக் கண்டுபிடிப்பார்” என்று சொல்கிறார்.—யோவான் 10:7-9.

இயேசு புதிதாக ஒன்றை இப்போது அறிமுகப்படுத்துகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. திருச்சட்ட ஒப்பந்தம் பல நூற்றாண்டுகளாக அமலில் இருந்ததால், இயேசு அதன் கதவாக இருக்க முடியாது என்பது அங்கிருக்கிறவர்களுக்குத் தெரியும். அதனால், தன்னுடைய ஆடுகளை வேறொரு புதிய தொழுவத்துக்கு அவர் ‘நடத்திக்கொண்டு போவார்’ என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இந்த ஆடுகளுக்கு என்ன பலன் கிடைக்கும்?

ஒரு மேய்ப்பனாகத் தன்னுடைய பொறுப்பைப் பற்றி இயேசு இன்னும் சில தகவல்களைக் கொடுக்கிறார். “நானோ, அவற்றுக்கு வாழ்வு கிடைப்பதற்காக, அதுவும் முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்காக, வந்திருக்கிறேன். நான்தான் நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான்” என்று சொல்கிறார். (யோவான் 10:10, 11) இயேசு ஏற்கெனவே தன்னுடைய சீஷர்களிடம், “பயப்படாதே சிறுமந்தையே, உங்களிடம் தன் அரசாங்கத்தைக் கொடுக்க உங்கள் தகப்பன் பிரியமாக இருக்கிறார்” என்று சொல்லி உற்சாகப்படுத்தியிருந்தார். (லூக்கா 12:32) இந்த ‘சிறுமந்தையை’ சேர்ந்த ஆடுகளைத்தான் ஒரு புதிய தொழுவத்துக்குள் இயேசு கூட்டிக்கொண்டு போவார். அப்போது அவர்களுக்கு ‘வாழ்வு கிடைக்கும், அதுவும் முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.’ அந்த மந்தையின் ஆடுகளாக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!

ஆனால், இயேசு இந்த விஷயத்தை இதோடு முடித்துக்கொள்ளவில்லை. “இந்தத் தொழுவத்தைச் சேராத வேறே ஆடுகளும் எனக்கு இருக்கின்றன. அவற்றையும் நான் கொண்டுவர வேண்டும், அவை என்னுடைய குரலைக் கேட்கும். அப்போது, அவை ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாகும்” என்று அவர் சொல்கிறார். (யோவான் 10:16) ‘வேறே ஆடுகள் இந்தத் தொழுவத்தைச் சேர்ந்தவை கிடையாது.’ அப்படியென்றால், அரசாங்கத்தைப் பெறப்போகிற ‘சிறுமந்தை’ ஒரு தொழுவத்திலும், ‘வேறே ஆடுகள்’ இன்னொரு தொழுவத்திலும் இருக்கும் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்த இரண்டு தொழுவத்தைச் சேர்ந்த ஆடுகளுக்கும் வெவ்வேறு பரிசுகள் கிடைக்கும். ஆனால், இரண்டு தொழுவத்தைச் சேர்ந்த ஆடுகளும் இயேசுவினால் பலன் பெறுகின்றன. “நான் என் உயிரைக் கொடுப்பதால் என் தகப்பன் என்மேல் அன்பு காட்டுகிறார்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 10:17.

அதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் இருக்கிற பலர், “இவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது. இவன் ஒரு பைத்தியம்” என்று சொல்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் இயேசு சொல்வதை ஆர்வத்தோடு கேட்கிறார்கள். நல்ல மேய்ப்பரான இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால், “பேய் பிடித்தவன் இப்படியா பேசுவான்? குருடர்களுக்குப் பேயால் பார்வை தர முடியுமா?” என்று அவர்கள் கேட்கிறார்கள். (யோவான் 10:20, 21) முன்பு, பிறந்ததிலிருந்தே கண் தெரியாத ஒருவனை இயேசு குணமாக்கியிருந்தார். ஒருவேளை, அதை மனதில் வைத்து அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம்.