Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

ஞானஸ்நானத்துக்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?​—பகுதி 2: கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இருங்கள்

ஞானஸ்நானத்துக்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?​—பகுதி 2: கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இருங்கள்

 “உத்தமமாக நடக்கிறவர்களுக்கு யெகோவா ஒரு குறையும் வைக்க மாட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 84:11) உண்மையாக, அல்லது ‘உத்தமமாக நடப்பது’ என்றால் என்ன? யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்தபோது அவருக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு இசைவாக வாழ்வதை குறிக்கிறது. (பிரசங்கி 5:​4, 5) நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த பின்பும் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக நடக்கலாம்?

இந்தக் கட்டுரையில்

 பிரச்சினைகளை சகித்துக்கொண்டே இருங்கள்

 முக்கிய வசனம்: “கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்.“​—அப்போஸ்தலர் 14:22.

 அர்த்தம்: கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே வாழ்க்கையில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். சிலருக்கு கிறிஸ்தவர்களாக இருக்கிற ஒரே காரணத்தால் எதிர்ப்பு வரலாம், கேலி கிண்டல் செய்யப்படலாம். இன்னும் சிலருக்கு, எல்லா மனிதர்களுக்கும் வருகிற மாதிரி பணப் பிரச்சினைகளோ நோயோ வரலாம்.

 எதார்த்தம்: சில சமயங்களில், வாழ்க்கையில் உங்களுடைய சூழ்நிலைமைகள் மாறலாம். அது உங்களுக்கு பிடிக்காமலும் இருக்கலாம். நாம் கிறிஸ்தவர்களாக இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும்சரி கெட்ட விஷயங்கள் எல்லாருக்குமே நடக்கலாம் என்று பைபிள் சொல்கிறது.​—பிரசங்கி 9:11.

 நீங்கள் என்ன செய்யலாம்: உங்களுக்குப் பிரச்சினைகள் வரும் என்று தெரிந்திருப்பதால் அதைச் சமாளிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு வருகிற பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் யெகோவாமேல் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கும் அவரை அதிகமாக சார்ந்திருப்பதற்கும் கிடைத்த வாய்ப்பாகப் பாருங்கள். (யாக்கோபு 1:​2, 3) அப்படி நீங்கள் செய்தால் கொஞ்ச நாட்களுக்குப் பின்பு அப்போஸ்தலன் பவுலைப் போல், “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்று உங்களாலும் சொல்ல முடியும்.​—பிலிப்பியர் 4:13.

 உண்மை சம்பவம். நான் ஞானஸ்நானம் எடுத்து கொஞ்ச நாட்களிலேயே என்னுடைய அண்ணன்கள் சத்தியத்தை விட்டுப் போய்விட்டார்கள். என்னுடைய அப்பா-அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, எனக்கும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. நானும் கிட்டத்தட்ட சத்தியத்தை விட்டு போய்விடுவேன் என்ற நிலைமைக்கே வந்துவிட்டேன். யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்தபோது அவருக்கு நான் கொடுத்த வாக்குறுதி, அதாவது அவருடைய வணக்கத்துக்குத்தான் என்னுடைய வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பேன், என்று சொன்னதையெல்லாம் மறப்பது ரொம்ப ஈஸியாக இருந்தது. இருந்தாலும் யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்ததுதான் இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சமாளிப்பதற்கு எனக்கு உதவி செய்தது.”​—கேரன்.

 டிப்ஸ்: யோசேப்பைப் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள். அவருடைய வாழ்க்கையைப் பற்றி ஆதியாகமம் அதிகாரங்கள் 37 மற்றும் 39-41 வரை வாசித்துப் பாருங்கள். இப்படி யோசித்துப் பாருங்கள்: அவருக்கு திடீரென்று என்ன பிரச்சினைகள் வந்தன? அதை அவர் எப்படி சமாளித்தார்? யோசேப்புக்கு யெகோவா எப்படி உதவி செய்தார்?

 அதிகம் தெரிந்துகொள்ள...

 தொடர்ந்து கெட்ட ஆசையை எதிர்த்துப் போராடுங்கள்

 முக்கிய வசனம்: “ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான்.”​—யாக்கோபு 1:14.

 அர்த்தம்: நம் எல்லாருக்குமே தப்பு செய்ய வேண்டும் என்ற ஆசைகள் வரலாம். அதைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டோம் என்றால் அந்தத் தப்பை நாம் செய்துவிடுவோம்.

 எதார்த்தம்: ஞானஸ்நானம் எடுத்த பின்பும் ‘பாவ ஆசைகள்’ உங்களுக்கு வரத்தான் செய்யும். (2 பேதுரு 2:18) கல்யாணத்துக்கு முன்பாகவே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட உங்களுக்கு வரலாம்.

 நீங்கள் என்ன செய்யலாம்: தப்பு பண்ண வேண்டும் என்ற ஆசை வருவதற்கு முன்பாகவே, உங்கள் மனதுக்குள் ஒரு முடிவு எடுங்கள். அப்போதுதான் கெட்ட ஆசைகள் சொல்வதைக் கேட்டு நீங்கள் தப்பு பண்ணாமல் இருக்க முடியும். “யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது” என்று இயேசு சொன்னதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (மத்தேயு 6:24) நீங்கள் எந்த எஜமானுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது யெகோவாவாக இருந்தால் உங்களுக்குத்தான் நல்லது! கெட்டது செய்ய வேண்டும் என்ற ஆசை எவ்வளவு பலமாக இருந்தாலும் கூட, தப்பு பண்ணாமல் உங்களால் இருக்க முடியும்.​—கலாத்தியர் 5:16.

 டிப்ஸ்: உங்களுடைய பலங்களையும் பலவீனங்களையும் நன்றாகத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கிற நல்ல குணங்களை வெளியே கொண்டு வருகிறவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். கெட்ட ஆசையைத் தூண்டுகிற நபர்களையும் இடங்களையும் சூழ்நிலைகளையும் தவிர்த்துவிடுங்கள்.​—சங்கீதம் 26:​4, 5.

 அதிகம் தெரிந்துகொள்ள...

 அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையை பலப்படுத்திக்கொண்டே இருங்கள்

 முக்கிய வசனம்: ‘கடைசிவரை . . . சுறுசுறுப்பாகச் சேவை செய்ய வேண்டும். அதனால், மந்தமானவர்களாக ஆகிவிடாதீர்கள்.’​—எபிரெயர் 6:​11, 12.

 அர்த்தம்: வேலையில் முழு கவனம் இல்லையென்றால் அதை ஏனோதானோ என்று செய்ய ஆரம்பித்துவிடுவோம், மந்தமானவர்களாகவும் ஆகிவிடுவோம்.

 எதார்த்தம்: ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில் உங்களுக்குள்ளே ஆர்வமும் துடிப்பும் அதிகமாக இருந்திருக்கும். யெகோவாமேல் உங்களுக்கு அன்பு பொங்கி வழிந்திருக்கும். ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பின்பு எல்லா விஷயங்களிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதனால் நீங்கள் சோர்ந்து போய்விடலாம், உங்களுடைய ஆர்வமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடலாம்.​—கலாத்தியர் 5:7.

 நீங்கள் என்ன செய்யலாம்: சரியானதை தொடர்ந்து செய்துகொண்டே இருங்கள், உங்களுக்கு ஆர்வம் இல்லையென்றாலும் கூட. (1 கொரிந்தியர் 9:27) அதேசமயத்தில், யெகோவா அப்பாவைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்வதன் மூலமாகவும் அவரிடம் அடிக்கடி ஜெபம் செய்வதன் மூலமாகவும் அவரிடம் நெருங்கி வாருங்கள். அதுமட்டுமல்ல, அவருக்கு ஆசை ஆசையாக சேவை செய்கிறவர்களிடமும் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்.

 டிப்ஸ்: யெகோவா உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார். அதனால் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ‘முன்பு இருந்த ஆர்வம் எனக்கு இப்போது இல்லை. அதனால் யெகோவா என்மேல் கோபமாக இருப்பார்’ என்று முடிவுக்கு வந்துவிடாதீர்கள். ஏனென்றால், பைபிள் இப்படிச் சொல்கிறது: “சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார். தெம்பு இல்லாதவர்களுக்கு எல்லா பலமும் கொடுக்கிறார்.” (ஏசாயா 40:29) உங்களுடைய ஆர்வத்தை இன்னும் அதிகமாக்குவதற்கு நீங்கள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் யெகோவா ஆசீர்வதிப்பார்.

 அதிகம் தெரிந்துகொள்ள...

 சுருக்கமாக சொன்னால்: நீங்கள் கடவுளுக்கு உண்மையாக நடந்தால், யெகோவாவுடைய மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். (நீதிமொழிகள் 27:11) நீங்கள் யெகோவா பக்கம் நிற்க வேண்டும் என்று முடிவு எடுத்ததால் அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். சாத்தானை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான எல்லாவற்றையுமே அவர் உங்களுக்கு தருவார்.