இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

ஆன்-லைன் ஃபோட்டோ ஷேரிங்—நான் என்ன விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்?

ஆன்-லைன் ஃபோட்டோ ஷேரிங்—நான் என்ன விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்?

 லீவில் ஜாலியாக ஊர்சுற்றி என்ஜாய் பண்ணுகிறீர்கள்; அதைப் பற்றி உங்கள் நண்பர்களுக்குச் சொல்ல விரும்புகிறீர்கள். ஆனால் எப்படி?

  1.  (அ) ஒவ்வொருவருக்கும் ஒரு போஸ்ட் கார்டை எழுதி அனுப்புவீர்களா?

  2.  (ஆ) எல்லா நண்பர்களுக்கும் இ-மெயில் அனுப்புவீர்களா?

  3.  (இ) ஃபோட்டோக்களை ஆன்-லைனில் போஸ்ட் செய்வீர்களா?

 உங்கள் தாத்தா பாட்டி உங்கள் வயதில் இருந்தபோது, “அ” மட்டும்தான் ஒரே சாய்ஸாக இருந்திருக்கும்.

 உங்கள் அப்பா அம்மா உங்கள் வயதில் இருந்தபோது, ஒருவேளை “ஆ” ஒரு சாய்ஸாக இருந்திருக்கும்.

 இன்று, ஃபோட்டோக்களை போஸ்ட் செய்ய அனுமதி பெற்ற இளைஞர்கள் நிறைய பேர் “இ” சாய்ஸைதான் விரும்புகிறார்கள். நீங்கள்? உங்களுடைய சாய்ஸும் “இ” என்றால், அதிலுள்ள சில படுகுழிகளைத் தவிர்க்க இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்கு உதவும்.

 பயன்கள் என்ன?

 உடனுக்குடன் அனுப்ப முடிகிறது. “சூப்பரான ட்ரிப்ல இருக்கறப்ப... இல்லன்னா ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா இருக்கறப்ப... எடுத்த ஃபோட்டோஸ எல்லார்க்கும் அப்ப அப்பவே ஷேர் பண்ண முடியுது”—மெலனி.

 ரொம்ப சௌகரியமானது. “இ-மெயில டைப் அடிச்சு, அத அனுப்பி, ஃப்ரெண்ட்ஸ பத்தி தெரிஞ்சுக்கறதவிட, ஆன்லைன்ல அவங்களோட லேட்டஸ்ட் ஃபோட்டோக்கள பாத்து தெரிஞ்சுக்கறது ரொம்ப ஈஸி.”—ஜோர்டன்

 மற்றவர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள உதவுகிறது. “என் ஃப்ரெண்ட்ஸ் சில பேரும், குடும்பத்தில சில பேரும் ரொம்பத் தூரத்தில இருக்காங்க. அவங்க ஃபோட்டோஸ அடிக்கடி ஆன்லைனில் போஸ்ட் செய்வாங்க; அதயெல்லாம் பாக்கும்போது அவங்கள தினமும் பார்க்க மாதிரி இருக்கும்!”—கேரன்.

 ஆபத்துகள் என்ன?

 உங்கள் பாதுகாப்பு பறிபோய்விடலாம். உங்கள் கேமராவில் ஜியோடேகிங் (Geotagging) இருக்கிறதென்றால், நீங்கள் போஸ்ட் செய்கிற ஃபோட்டோக்கள் நீங்கள் வெளிப்படுத்த நினைக்காத நிறைய விஷயங்களை வெளிப்படுத்திவிடலாம். “ஜியோடேகிங் செய்யப்பட்ட ஃபோட்டோக்களையோ வீடியோக்களையோ இன்டர்நெட்டில் போஸ்ட் செய்வது, நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள உதவுகிற ட்ராக்கிங் சாஃப்ட்வேரை பயன்படுத்தும் தவறான எண்ணமுள்ள எத்தனையோ பேருக்கு தீனிபோடுவதுபோல் ஆகிவிடும்” என்கிறது டிஜிட்டல் ட்ரென்ட்ஸ் வெப்சைட்.

 நீங்கள் எந்த இடத்தில் இருக்க மாட்டீர்கள் என்று தெரிந்துகொள்வதில்தான் சில குற்றவாளிகள் குறியாக இருப்பார்கள். ஒருசமயம் மூன்று திருடர்கள், யாருமே இல்லாத 18 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்ததாக டிஜிட்டல் ட்ரென்ட்ஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த வீடுகளில் யாருமே இருக்க மாட்டார்கள் என்று அந்தத் திருடர்களுக்கு எப்படித் தெரிந்திருந்தது? அந்த வீடுகளில் குடியிருப்பவர்களுடைய பயண விவரங்களை சைபர்கேஸிங் (cybercasing) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ட்ராக் செய்து கண்டுபிடித்து, 1,00,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்களை லாவகமாகச் சுருட்டிக்கொண்டுபோய்விட்டார்கள்.

 முகம்சுளிக்க வைக்கிற விஷயங்களை நீங்கள் பார்க்க நேரிடலாம். ஊர் உலகமே பார்க்க வேண்டும் என்பதற்காகச் சிலர் கூச்சமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் போஸ்ட் செய்கிறார்கள். சேரா என்ற டீனேஜ் பெண் இப்படிச் சொல்கிறாள்: “அறிமுகமில்லாத ஆட்களோட அக்கௌண்ட்ட ப்ரௌஸ் (Browse) பண்ணினீங்கன்னா, பிரச்சனைதான்! அது, முன்னபின்ன போகாத ஒரு ஊருக்குள்ள மேப் இல்லாம போற மாதிரி! கடைசியில, போக வேண்டாம்னு நெனக்கற இடத்திலதான் போய் நிப்பீங்க.”

 நேரத்தை உறிஞ்சிவிடலாம். “லேட்டஸ்ட்டா என்னெல்லாம் போஸ்ட் ஆயிருக்கு... யாரு, என்ன கமென்ட் பண்ணியிருக்காங்க...னு பார்க்கறதிலயே நேரமெல்லாம் போயிடும். ஒரு செகண்ட் ஃப்ரீயா இருந்தாகூட, ஃபோனை எடுத்து புதுசா என்ன போஸ்ட் ஆயிருக்குன்னு பார்க்கணும்ங்கற அளவுக்குப் பித்து பிடிச்சுடும்” என்கிறாள் யோலான்டா என்ற இளம் பெண்.

ஃபோட்டோ ஷேரிங் அக்கௌண்ட் வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்குச் சுயக்கட்டுப்பாடு அவசியம்

 சமன்தா என்ற டீனேஜ் பெண்ணும் அதை ஒத்துக்கொள்கிறாள். “ப்ரௌஸ் செய்யறதுக்கு எவ்ளோ நேரம் செலவிடறேன்-ங்கறதில நான் கவனமா இருக்கணும். ஃபோட்டோ ஷேரிங் அக்கௌண்ட் இருந்துச்சுன்னா, சுயக்கட்டுப்பாடு ரொம்பவே அவசியம்” என்கிறாள் அவள்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

  •   ஆட்சேபணைக்குரிய விஷயங்களைத் தவிர்ப்பதற்குத் தீர்மானமாயிருங்கள். “வீணான எதையும் என் கண் முன்னால் வைக்க மாட்டேன்” என்று ஒரு பைபிள் வசனம் சொல்கிறது.​—சங்கீதம் 101:3.

     “தெரிஞ்சவங்களோட போஸ்ட்டிங்ஸ ரெகுலரா பார்ப்பேன்; ஆனா வேண்டாத விஷயங்களயெல்லாம் அவங்க போஸ்ட் செய்யறதா ஃபீல் பண்ணினா அப்பவே அவங்களோட போஸ்ட்டிங்ஸ பாக்கறத நிறுத்திடுவேன்.”​—ஸ்டீவன்.

  •   உங்களுடைய ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிக்காத ஆட்களுடன் சகவாசம் வைத்துக்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்; ஏனென்றால், உங்களுடைய ஒழுக்க சிந்தனைகளை அவர்கள் கெடுத்துவிடலாம். “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கநெறிகளை கெடுத்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது.​—1 கொரிந்தியர் 15:33, அடிக்குறிப்பு.

     “சோஷியல் நெட்வொர்க்குல பிரபலமா இருக்குற ஃபோட்டோக்கள பார்க்கணும்னு நெனக்காதீங்க. ஏன்னா, ஆபாசப் படங்களும், நிர்வாணப் படங்களும், அசிங்கமான எல்லா விஷயங்களும் அதிலதான் அடிக்கடி உங்க கண்ல படும்.”​—ஜெஸிக்கா.

  •   எவ்வளவு நேரம் ப்ரௌஸ் செய்வது... எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை ஃபோட்டோக்களை போஸ்ட் செய்வது... போன்ற விஷயங்களில் உங்களுக்கு நீங்களே ஓர் எல்லைக்கோட்டை வரைந்துகொள்ளுங்கள். “நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், நாட்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன” என்று பைபிள் சொல்கிறது.​—எபேசியர் 5:15, 16.

     “கணக்குவழக்கே இல்லாம ஃபோட்டோக்கள போஸ்ட் செய்யறவங்களோட போஸ்ட்டிங்ஸ பார்க்கறத சுத்தமா நிறுத்திட்டேன். உதாரணத்துக்கு, ஒருத்தர் பீச்சுக்குப் போய் ஒரே சிப்பிய 20 முறை ஃபோட்டோ எடுத்து அத எல்லாத்தையும் போஸ்ட் செஞ்சிருந்தாரு! அந்த மாதிரி எக்கச்சக்கமான ஃபோட்டோக்கள பார்க்கறது நேரத்த அப்படியே உறிஞ்சிடுது!”​—ரெபெக்கா.

  •   நீங்கள் போஸ்ட் செய்கிற ஃபோட்டோக்கள் உங்களைப் பற்றி மட்டுமே சொல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ‘உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல் இருக்க வேண்டும்’ என்று பைபிள் எழுத்தாளரான பவுல் சொன்னார். (ரோமர் 12:3) உங்களுடைய ஃபோட்டோக்களையும் நீங்கள் செய்த காரியங்களையும் பார்த்து உங்கள் நண்பர்கள் அப்படியே அசந்துபோவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்!

     “சிலர் செல்ஃபீ ஃபோட்டோக்கள ஓயாம போஸ்ட் செஞ்சுட்டே இருக்காங்க. ஒருத்தர் ஒருத்தர் பார்க்க எப்படி இருப்பாங்கன்னு ஃப்ரெண்ட்ஸுகளுக்கு நல்லாவே தெரியும்—அப்புறம் எதுக்கு சும்மா ஞாபகப்படுத்திட்டே இருக்கணும்?​—அலீசன்.