Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 15

இயேசுவின் கடைசி வார்த்தைகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

இயேசுவின் கடைசி வார்த்தைகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

“இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்; இவர் சொல்வதைக் கேளுங்கள்.”—மத். 17:5.

பாட்டு 84 ‘எனக்கு மனமுண்டு’

இந்தக் கட்டுரையில்... *

1-2. எந்தச் சூழ்நிலையில் இயேசு தன்னுடைய கடைசி வார்த்தைகளைப் பேசினார்?

அது கி.பி. 33, நிசான் 14-ம் தேதி, பகல் நேரம். செய்யாத ஒரு குற்றத்துக்காக இயேசுவின் மீது பழி சுமத்தியிருக்கிறார்கள்... அவரை கேலி பண்ணுகிறார்கள்... கொடுமைப்படுத்துகிறார்கள். கடைசியில் சித்திரவதைக் கம்பத்தில் வைத்து ஆணி அடிக்கிறார்கள். அந்த ஆணிகள் அவருடைய கைகளையும் கால்களையும் துளைத்துக்கொண்டுபோகிறது. அவர் கஷ்டப்பட்டு மூச்சுவிடுகிறார். அவரால் பேசக்கூட முடியவில்லை. அவ்வளவு வலி! அவ்வளவு வேதனை! இருந்தாலும் அவர் பேசியே ஆக வேண்டும். ஏனென்றால், சில முக்கியமான விஷயங்களை அவர் சொல்ல வேண்டியிருக்கிறது.

2 சித்திரவதைக் கம்பத்தில் இயேசு துடிதுடித்துக் கொண்டிருந்தபோது சொன்ன சில வார்த்தைகளையும், அதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் இப்போது பார்க்கலாம். இப்படிச் செய்யும்போது, நாம் இயேசு ‘சொன்னதை கேட்க’ முடியும்.—மத். 17:5.

“தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள்”

3. “தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள்“ என்று இயேசு சொன்னபோது, யாரை மனதில் வைத்து சொல்லியிருக்கலாம்?

3 இயேசு ஏன் அப்படிச் சொன்னார்? “தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள்“ என்று யெகோவாவிடம் இயேசு கேட்டுக்கொண்டார். யாரை மன்னிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டார்? அவர் சொன்ன அடுத்த வார்த்தையிலிருந்தே நாம் பதில் தெரிந்துகொள்ளலாம். “இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை” என்று சொன்னார். (லூக். 23:33, 34) அவருடைய கையிலும் காலிலும் ஆணி அடித்த ரோம படைவீரர்களை மனதில் வைத்து அவர் சொல்லியிருக்கலாம். ஏனென்றால், அவர் உண்மையில் யாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அதோடு, கூட்டத்தில் இருந்த சிலரை மனதில் வைத்தும் அவர் சொல்லியிருக்கலாம். அவருக்கு மரண தண்டனை கொடுக்கச் சொல்லி அவர்கள் கட்டாயப்படுத்தியிருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களும் சீஷர்களாக ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். (அப். 2:36-38) அவருக்கு அநியாயமாக தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக யார்மீதும் அவர் கோபப்படவில்லை. மனதுக்குள் வன்மத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. (1 பே. 2:23) அதற்குப் பதிலாக, அவர்களை மன்னிக்கச் சொல்லி யெகோவாவிடம் கேட்டார்.

4. தனக்கு கெடுதல் செய்தவர்களை இயேசு மன்னித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

4 இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இயேசு மாதிரியே நாமும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். (கொலோ. 3:13) நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி அல்லது நாம் வாழ்கிற விதத்தைப் பற்றி சொந்தக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் புரியாமலிருக்கலாம். அதனால், அவர்கள் நம்மைக் கஷ்டப்படுத்தலாம்... நம்மைப் பற்றி பொய்களைச் சொல்லலாம்... மற்றவர்களுக்கு முன்னால் நம்மை அவமானப்படுத்தலாம்... நம்மிடம் இருக்கிற பிரசுரங்களை கிழித்துவிடலாம் அல்லது எரித்துவிடலாம். நம்மை அடித்து உதைக்கப்போவதாக சொல்லி மிரட்டலாம். இதையெல்லாம் நினைத்து அவர்கள்மேல் வன்மத்தை வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, என்றைக்காவது ஒருநாள் அவர்களும் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு உதவச் சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். (மத். 5:44, 45) நம்மை யாராவது ரொம்ப மோசமாக நடத்தினால் அவர்களை மன்னிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அந்த மாதிரி சமயங்களில் நாம் கோபமாகவே இருந்தால் நமக்குத்தான் ஆபத்து. ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “நாம ஒருத்தர மன்னிக்கிறோம்னா அவங்க தப்பே செய்யலனு அர்த்தம் கிடையாது. அதே மாதிரி அவங்க நம்மள எப்படி வேணும்னாலும் நடத்தறதுக்கு நாம இடம் கொடுக்கிறோம்னும் அர்த்தம் கிடையாது. இத நான் புரிஞ்சுகிட்டேன். மத்தவங்கள மன்னிக்கிறப்போ அவங்க மேல இருக்கிற கோபத்த நாம விட்டுடறோம்னு அர்த்தம்.“ (சங். 37:8) இதிலிருந்து என்ன தெரிகிறது? மற்றவர்களை மன்னிக்கும்போது, அவர்கள் செய்ததையே நினைத்துக்கொண்டிருக்காமல் நம் மனதிலிருக்கிற கோபத்தை விட்டுவிடுகிறோம் என்று அர்த்தம்.—எபே. 4:31, 32.

“நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்”

5. குற்றவாளிக்கு இயேசு என்ன வாக்கு கொடுத்தார், ஏன் கொடுத்தார்?

5 இயேசு ஏன் அப்படிச் சொன்னார்? இயேசுவுக்குப் பக்கத்தில் இரண்டு குற்றவாளிகளையும் சித்திரவதைக் கம்பத்தில் தொங்கவிட்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் இரண்டு பேருமே இயேசுவைக் கேலி செய்தார்கள். (மத். 27:44) ஆனால், கொஞ்ச நேரத்துக்குப் பின்பு அதில் ஒருவன் மனம் மாறி, இயேசு “எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்ற முடிவுக்கு வந்தான். (லூக். 23:40, 41) எல்லாவற்றுக்கும் மேல், இயேசுவை கடவுள் உயிரோடு எழுப்புவார் என்றும் இயேசு ஒருநாள் ராஜாவாக ஆவார் என்றும் அவன் நம்பினான். அதனால்தான், “இயேசுவே, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னான். (லூக். 23:42) அவனுக்கு எவ்வளவு விசுவாசம் பார்த்தீர்களா! அவனைப் பார்த்து, “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று இயேசு சொன்னார். (லூக். 23:43) இந்த வசனத்தில், “உனக்கு,” “நீ,” “என்னோடு,” என்ற வார்த்தைகளை இயேசு பயன்படுத்தியதிலிருந்து இந்த வாக்குறுதியை பொதுவாகச் சொல்லாமல் அவனுக்காகவே சொன்னார் என்பது தெரிகிறது. யெகோவா கருணை உள்ளம் படைத்தவர் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்ததால், சாகப்போகிற அந்தக் குற்றவாளிக்கு இந்த அருமையான வாக்குறுதியைக் கொடுத்தார்.—சங். 103:8.

6. குற்றவாளியிடம் இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

6 இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இயேசு, யெகோவா மாதிரியே நடந்துகொள்கிறார். (எபி. 1:3) அப்படியென்றால், யெகோவா எப்படி நடந்துகொள்கிறார்? தப்பு செய்கிறவர்கள் மனம் வருந்தும்போதும், இயேசுவின் மீட்புப் பலியின் அடிப்படையில் மன்னிப்பு கிடைக்கும் என்று நம்பும்போதும், யெகோவா தாராளமாக மன்னிக்கிறார். அவர்களுக்குக் கருணை காட்டுகிறார். (1 யோ. 1:7) ஆனால், தங்களுடைய தவறுகளை யெகோவா மன்னிக்கவே மாட்டார் என்று சிலர் நினைக்கிறார்கள். நீங்களும் அப்படி நினைக்கிறீர்களா? இதை யோசித்துப் பாருங்கள்: கடைசி நேரத்தில் விசுவாசம் வைத்த குற்றவாளிக்கே இயேசு கருணை காட்டினார்! அப்படியென்றால், தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தன்னை உண்மையாக வணங்குபவர்களுக்கு யெகோவா எவ்வளவு கருணை காட்டுவார்!—சங். 51:1; 1 யோ. 2:1, 2.

“இதோ! உங்கள் மகன்! . . . இதோ! உன் அம்மா!”

7. யோவான் 19:26, 27 சொல்வதுபோல் மரியாளிடமும் யோவானிடமும் இயேசு என்ன சொன்னார், ஏன் சொன்னார்?

7 இயேசு ஏன் அப்படிச் சொன்னார்? (யோவான் 19:26, 27-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய அம்மா மரியாள்மேல் அவருக்கு அக்கறை இருந்தது. அந்தச் சமயத்தில் அவள் ஒருவேளை விதவையாக இருந்திருக்கலாம். அவரோடு பிறந்தவர்கள் அவளுக்குத் தேவையானதைக் கொடுக்கலாம். ஆனால், யெகோவாவுடன் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள அவளுக்கு யார் உதவி செய்வார்கள்? அவரோடு பிறந்தவர்கள் யாருமே அதுவரை சீஷராகவில்லையே! ஆனால், யோவான் உண்மையுள்ள அப்போஸ்தலனாகவும் அவருடைய நண்பராகவும் இருந்தார். யெகோவாவை வணங்குபவர்கள் எல்லாரையும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான் இயேசு பார்த்தார். (மத். 12:46-50) அதனால், மரியாளை கவனித்துக்கொள்கிற பொறுப்பை யோவானிடம் ஒப்படைத்தார். யெகோவாவுடன் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு மரியாளுக்கு யோவான் உதவுவார் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால் மரியாளைப் பார்த்து, “இதோ! உங்கள் மகன்!” என்று சொன்னார். யோவானைப் பார்த்து, “இதோ! உன் அம்மா!” என்று சொன்னார். அன்றுமுதல், தன்னைப் பெற்றெடுத்த தாய் மாதிரி மரியாளை யோவான் பார்த்துக்கொண்டார். இயேசு குழந்தையாக இருந்தபோது அவரைச் சீராட்டி பாராட்டி வளர்த்த அந்தத் தாய், இப்போது அவர் சாகிறபோதும் அங்கு நின்றுகொண்டிருந்தார். அந்தத் தாய்மேல் இயேசு எவ்வளவு அன்பு காட்டியிருக்கிறார், பார்த்தீர்களா!

8. மரியாளிடமும் யோவானிடமும் இயேசு சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

8 இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்​கொள்ளலாம்? நமக்கும் நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் இருக்கிற பாசப் பிணைப்பைவிட சகோதர சகோதரிகளிடம் நமக்கு இருக்கிற பிணைப்பு அதிகமாக இருக்கும். ஒருவேளை, நம் குடும்பத்தில் இருப்பவர்களோ சொந்தக்காரர்களோ நம்மை எதிர்க்கலாம். இல்லையென்றால், நம்மை ஒதுக்கித்தள்ளிவிடலாம். ஆனால், யெகோவாவிடமும் அவருடைய அமைப்பிடமும் நாம் நெருங்கியிருந்தால், இயேசு சொன்ன மாதிரி, நாம் இழந்ததைவிட “100 மடங்கு அதிகமாக” நமக்குக் கிடைக்கும். நிறைய மகன்கள், மகள்கள், அப்பாக்கள், அம்மாக்கள் நமக்குக் கிடைப்பார்கள். (மாற். 10:29, 30) இவர்கள் எல்லாரும் யெகோவாமேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்கள். ஒருவர்மேல் ஒருவரும் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்கள். விசுவாசத்தாலும் அன்பாலும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் இருப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?—கொலோ. 3:14; 1 பே. 2:17.

“என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?”

9. மத்தேயு 27:46-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

9 இயேசு ஏன் அப்படிச் சொன்னார்? உயிர்விடுவதற்கு கொஞ்சம் முன்பு, “என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?” என்று இயேசு கேட்டார். (மத். 27:46) அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கு பைபிளில் எந்த விளக்கமும் இல்லை. ஒருவேளை, சங்கீதம் 22:1-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். * அதோடு, அவர் இப்படிச் சொன்னதிலிருந்து, அவரைச் “சுற்றி வேலி போட்டு” யெகோவா பாதுகாக்கவில்லை என்பது தெரிகிறது. (யோபு 1:10) அதுவரைக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் வராத மிகப் பெரிய சோதனையை சந்திப்பதற்காக எதிரிகளுடைய கையில் யெகோவா தன்னை விட்டுவிட்டார் என்பதும் இயேசுவுக்குப் புரிந்திருந்தது. அதுமட்டுமல்ல, மரண தண்டனை கிடைக்கிற அளவுக்கு அவர் எந்தத் தப்பும் செய்யவில்லை என்பதையும் இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

10. யெகோவாவிடம் இயேசு சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

10 இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? முதல் பாடம், எல்லா சோதனைகளிலிருந்தும் யெகோவா நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இயேசு மாதிரியே நமக்கும் சோதனை வரலாம். தேவைப்பட்டால், சாவைச் சந்திப்பதற்கு அவர் மாதிரியே நாமும் தயாராக இருக்க வேண்டும். (மத். 16:24, 25) ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்! தாங்க முடியாதளவுக்கு நாம் சோதிக்கப்படுவதற்கு யெகோவா விடவே மாட்டார். (1 கொ. 10:13) இரண்டாவது பாடம், இயேசு மாதிரியே சில சமயங்களில் நாமும் அநியாயமாக கஷ்டப்பட வேண்டியிருக்கலாம். (1 பே. 2:19, 20) நாம் ஏதோ தப்பு செய்ததால் அல்ல, உலகத்தின் பாகமாக இல்லாததாலும், பைபிள் சொல்வதுபோல் நாம் வாழ்வதாலும்தான் நம்மைக் கஷ்டப்படுத்துகிறார்கள். (யோவா. 17:14; 1 பே. 4:15, 16) கஷ்டப்படுவதற்கு யெகோவா ஏன் விட்டுவிட்டார் என்பதை இயேசுவால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், யெகோவாவுடைய ஊழியர்கள் சிலரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால், ‘நான் கஷ்டப்படுறதுக்கு யெகோவா ஏன் விட்டுட்டாரு?’ என்று அவர்கள் கேட்டார்கள். (ஆப. 1:3) அதற்காக அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்று யெகோவா முடிவுகட்டிவிடவில்லை. தன்னால் மட்டும்தான் அவர்களுக்கு ஆறுதல் தர முடியும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு எவ்வளவு இரக்கம்! எவ்வளவு பொறுமை!—2 கொ. 1:3, 4.

“எனக்குத் தாகமாக இருக்கிறது”

11. யோவான் 19:28-ல் இருக்கிற வார்த்தைகளை இயேசு ஏன் சொன்னார்?

11 இயேசு ஏன் அப்படிச் சொன்னார்? (யோவான் 19:28-ஐ வாசியுங்கள்.) “வேதவசனம் நிறைவேறும்படி” அவர் அப்படிச் சொன்னார்! அதாவது, சங்கீதம் 22:15-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக அவர் அப்படிச் சொன்னார். “என்னுடைய சக்தியெல்லாம் போய்விட்டது, உடைந்துபோன ஓடுபோல் ஆகிவிட்டேன். என் நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது” என்று அந்த வசனம் சொல்கிறது. இன்னொரு காரணம், அவர் சித்திரவதைக் கம்பத்தில் வலியையும் வேதனையையும் அனுபவித்துக்கொண்டிருந்ததால் அவர் ரொம்ப தாகமாக இருந்திருக்கலாம். அவருடைய தாகத்தைத் தீர்ப்பதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது.

12. “எனக்குத் தாகமாக இருக்கிறது” என்று இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

12 இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்​கொள்ளலாம்? தன்னுடைய பிரச்சினையைச் சொன்னால் மற்றவர்கள் தன்னை மட்டமாக நினைத்துக்கொள்வார்களோ என்று இயேசு நினைக்கவில்லை. நாமும் அப்படி நினைக்கக் கூடாது. சில சமயங்களில், ‘நம்மளோட தேவைகள நாமே பார்த்துக்கலாம், எதுக்கு மத்தவங்ககிட்ட கேட்டுகிட்டு’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், நமக்கு உதவி தேவைப்படுகிற ஒரு கட்டம் வருகிறபோது அதைக் கேட்பதற்குத் தயங்கக் கூடாது. உதாரணத்துக்கு, நமக்கு வயதாகிவிடலாம் அல்லது உடம்பு முடியாமல் போய்விடலாம். அந்த மாதிரி சமயத்தில், கடைக்குப் போவதற்கோ டாக்டரிடம் போவதற்கோ மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டியிருக்கலாம். அல்லது, சில சமயங்களில் நாம் மனம் உடைந்துபோய்விடலாம். அப்போது, ஒரு மூப்பரிடமோ முதிர்ச்சியுள்ள ஒரு நண்பரிடமோ உதவி கேட்க வேண்டியிருக்கலாம். அப்படிக் கேட்கும்போது, நாம் சொல்வதை அவர்கள் கவனமாகக் கேட்பார்கள். நம்மைப் பலப்படுத்துகிற ‘நல்ல வார்த்தைகளை’ சொல்வார்கள். (நீதி. 12:25) சகோதர சகோதரிகள் நம்மை நேசிக்கிறார்கள், கஷ்ட காலங்களில் உதவுவதற்கு ஆசைப்படுகிறார்கள். (நீதி. 17:17) ஆனால், நம் மனதுக்குள்ளே என்ன இருக்கிறது என்பதை அவர்களால் பார்க்க முடியாது. அதனால், நமக்கு உதவி தேவை என்பதை அவர்களாகவே புரிந்துகொள்ள முடியாது, நாம் சொன்னால்தான் தெரியும்.

“முடித்துவிட்டேன்”

13. சாகும்வரையில் உண்மையாக இருந்து இயேசு எதையெல்லாம் சாதித்தார்?

13 இயேசு ஏன் அப்படிச் சொன்னார்? நிசான் 14 அன்று கிட்டத்தட்ட மத்தியானம் மூன்று மணி ஆனபோது, “முடித்துவிட்டேன்” என்று இயேசு சத்தமாக சொன்னார். (யோவா. 19:30) தன்னுடைய உயிர் பிரிவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு, யெகோவா சொன்ன எல்லாவற்றையும் அந்தச் சமயத்தில் அவர் செய்து முடித்திருந்தார். சாகும்வரையில் உண்மையாக இருந்து நிறைய விஷயங்களைச் சாதித்தார். முதலாவதாக, சாத்தான் ஒரு பொய்யன் என்பதை நிரூபித்தார். சாத்தான் என்னதான் திட்டம் போட்டாலும் ஒரு பரிபூரண மனிதனால் எல்லா சமயத்திலும் உண்மையாக இருக்க முடியும் என்பதைக் காட்டினார். இரண்டாவதாக, தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்தார். அதனால், பாவ இயல்புள்ள மனிதர்களால் யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. என்றென்றும் வாழும் ஒரு நம்பிக்கையும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. மூன்றாவதாக, யெகோவாதான் நீதியான ஆட்சியாளர் என்பதை நிரூபித்தார். யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கினார்.

14. ஒவ்வொரு நாளையும் நாம் எப்படி நினைக்க வேண்டும்? விளக்குங்கள்.

14 இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்​கொள்ளலாம்? ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். கிலியட் பள்ளியில் போதகராக சேவை செய்த சகோதரர் மேக்ஸ்வெல் பிரெண்ட், உண்மையாக இருப்பதைப் பற்றி ஒரு சர்வதேச மாநாட்டில் பேச்சு கொடுத்தபோது இப்படிச் சொன்னார்: “இன்னைக்கு உங்களால என்ன முடியுமோ அத இன்னைக்கே பண்ணிடுங்க. நாளைக்குனு தள்ளி போடாதீங்க. நாளைக்கு நாம உயிரோட இருப்போங்குறது என்ன நிச்சயம்? முடிவில்லாத வாழ்வுங்கிற பரிச யெகோவாகிட்ட இருந்து வாங்கிக்கிறதுக்கு இன்னைக்குதான் கடைசி நாள்னா நீங்க எப்படி வாழ்வீங்க? அந்த மாதிரி ஒவ்வொரு நாளும் வாழுங்க!” அவர் சொன்னது எவ்வளவு உண்மை! அதனால், ஒவ்வொரு நாளையும், யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான கடைசி நாளாகப் பாருங்கள். இப்படி வாழ்ந்தால், சாவை சந்திக்க வேண்டியிருந்தாலும் உங்களால் இப்படிச் சொல்ல முடியும்: ‘யெகோவாவே, உங்களுக்கு உண்மையா இருக்கிறதுக்கும் சாத்தான் ஒரு பொய்யன்னு நிரூபிக்கிறதுக்கும் உங்களோட பேர பரிசுத்தப்படுத்துறதுக்கும் உங்களோட உன்னத அரசாட்சிய ஆதரிக்கிறதுக்கும் என்னால முடிஞ்ச எல்லாத்தையும் நான் செஞ்சிருக்கிறேன்.’

“என் உயிரை உங்களுடைய கைகளில் ஒப்படைக்கிறேன்”

15. லூக்கா 23:46 சொல்வதுபோல், இயேசுவுக்கு என்ன நம்பிக்கை இருந்தது?

15 இயேசு ஏன் அப்படிச் சொன்னார்? (லூக்கா 23:46-ஐ வாசியுங்கள்.) இயேசு முழு நம்பிக்கையோடு, “தகப்பனே, என் உயிரை உங்களுடைய கைகளில் ஒப்படைக்கிறேன்” என்று சொன்னார். தன்னுடைய எதிர்காலம் யெகோவாவுடைய கையில் இருக்கிறது என்பதும் அவர் நிச்சயம் தன்னை உயிரோடு எழுப்புவார் என்பதும் இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

16. ஜாஷுவாவிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

16 இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? உங்கள் வாழ்க்கையை யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடுங்கள். அப்படிச் செய்வதற்கு, ‘யெகோவாவை முழு இதயத்தோடு நம்ப’ வேண்டும். (நீதி. 3:5) பதினைந்து வயதான ஜாஷுவா என்ற சகோதரர் உயிருக்கு ஆபத்தான ஒரு நோயுடன் போராடிக்கொண்டிருந்தார். ஆனாலும், கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். அவர் சாவதற்கு கொஞ்சம் முன்பு, அவருடைய அம்மாவிடம் இப்படிச் சொன்னார்: “அம்மா, நான் யெகோவாவோட கையில இருக்கறேன். . . . அவர் கண்டிப்பா என்னை மறுபடியும் உயிரோட கொண்டு வருவாரு. என் மனசில என்ன இருக்குங்கறது அவருக்குத் தெரியும். நான் அவர ரொம்ப நேசிக்கிறேன்.” * நாம் ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘எனக்கு எப்படிப்பட்ட சோதனை வந்தாலும், உயிரே போற சூழ்நிலைமை இருந்தாலும், என் வாழ்க்கைய யெகோவாவோட கையில ஒப்படைப்பனா? அவர் என்னை மறக்காம மறுபடியும் உயிரோடு கொண்டு வருவாருன்னு நம்புவனா?’

17-18. இதுவரைக்கும் நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டோம்? (“ இயேசுவின் கடைசி வார்த்தைகளிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

17 இயேசுவுடைய கடைசி வார்த்தைகளிலிருந்து இதுவரைக்கும் நாம் என்ன அருமையான பாடங்களைக் கற்றுக்கொண்டோம்? மற்றவர்களை நாம் மன்னிக்க வேண்டும், நம்மையும் யெகோவா மன்னிப்பார் என்று நம்ப வேண்டும். நமக்கு ஏராளமான சகோதர சகோதரிகளை யெகோவா கொடுத்திருக்கிறார். அவர்கள் நமக்கு ஒரு குடும்பம் மாதிரி இருக்கிறார்கள், நமக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால், நமக்கு உதவி தேவைப்படும்போது நாம்தான் அவர்களிடம் கேட்க வேண்டும். நமக்கு எப்பேர்ப்பட்ட சோதனை வந்தாலும் அதைச் சமாளிப்பதற்கு யெகோவா உதவுவார். நாம் இறந்துவிட்டாலும் யெகோவா நம்மை மறுபடியும் உயிரோடு கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு, ஒவ்வொரு நாளையும், யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான கடைசி நாளாகப் பாருங்கள்!

18 சித்திரவதைக் கம்பத்தில் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோது இயேசு சொன்ன கடைசி வார்த்தைகள் உண்மையிலேயே அர்த்தமுள்ள வார்த்தைகள்! இதுவரைக்கும் நாம் என்ன கற்றுக்கொண்டோமோ அதன்படி நடந்துகொண்டால், “இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று யெகோவா சொன்ன அந்த வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதைக் காட்ட முடியும்.—மத். 17:5.

பாட்டு 43 உறுதியுடன் விழிப்பாய் இருப்போமே!

^ பாரா. 5 தன்னுடைய மகனுடைய பேச்சை நாம் கேட்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். இதைத்தான் மத்தேயு 17:5 சொல்கிறது. சித்திரவதைக் கம்பத்தில் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த கடைசிக் கட்டத்தில் இயேசு சில வார்த்தைகளைச் சொன்னார். அதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

^ பாரா. 9 சங்கீதம் 22:1-ல் இருக்கிற வார்த்தைகளை இயேசு ஏன் சொல்லியிருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, இந்தக் கட்டுரையில் இருக்கிற “வாசகர்கள் கேட்கும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.

^ பாரா. 16 ஜனவரி 22, 1995 விழித்தெழு! பத்திரிகையில், “ஜாஷுவாவின் விசுவாசம், பிள்ளைகளின் உரிமைகளுக்கான வெற்றி” என்ற கட்டுரையைப் பாருங்கள்.