மத்தேயு எழுதியது 17:1-27

17  ஆறு நாட்களுக்குப் பின்பு, பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் மட்டும் கூட்டிக்கொண்டு உயரமான ஒரு மலைக்கு இயேசு போனார்.+  அங்கே அவர்கள் முன்னால் அவருடைய தோற்றம் மாறியது; அவருடைய முகம் சூரியனைப் போல் பிரகாசித்தது, அவருடைய மேலங்கி ஒளியைப் போல் பளிச்சிட்டது.*+  அப்போது, மோசேயும் எலியாவும் தோன்றி அவரோடு பேசிக்கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள்.  உடனே பேதுரு, “எஜமானே, இங்கே இருப்பது எங்கள் பாக்கியம். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களைப் போடுகிறேன்” என்று இயேசுவிடம் சொன்னார்.  அவர் பேசிக்கொண்டிருந்தபோதே பிரகாசமான ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது; அப்போது, “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்;+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.+  இதைக் கேட்டதும் சீஷர்கள் மிகவும் பயந்துபோய் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.  இயேசு அவர்கள் பக்கத்தில் வந்து, அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், பயப்படாதீர்கள்” என்று சொன்னார்.  அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு யாரையும் காணவில்லை.  மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்த்த இந்தத் தரிசனத்தை மனிதகுமாரன் உயிர்த்தெழுப்பப்படும்வரை யாரிடமும் சொல்லக் கூடாது” என்று கட்டளையிட்டார்.+ 10  அப்போது சீஷர்கள் அவரிடம், “அப்படியானால், எலியா முதலில் வர வேண்டும் என்று வேத அறிஞர்கள் ஏன் சொல்கிறார்கள்?”+ என்று கேட்டார்கள். 11  அதற்கு அவர், “எலியா வந்து எல்லாவற்றையும் சரிப்படுத்துவார்+ என்பது உண்மைதான். 12  இருந்தாலும், நான் உங்களுக்குச் சொல்கிறேன், எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; ஆனால், அவரை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய இஷ்டப்படியெல்லாம் நடத்தினார்கள்.+ இப்படித்தான் மனிதகுமாரனும் அவர்கள் கையில் பாடுகளை அனுபவிப்பார்”+ என்று சொன்னார். 13  யோவான் ஸ்நானகரை பற்றித்தான் அவர் சொல்கிறார் என்பதைச் சீஷர்கள் அப்போது புரிந்துகொண்டார்கள். 14  கூட்டத்தாரை+ நோக்கி அவர்கள் போனபோது, ஒருவன் அவர் முன்னால் வந்து மண்டிபோட்டு, 15  “ஐயா, என் மகனுக்கு இரக்கம் காட்டுங்கள்; அவன் காக்காய்வலிப்பினால் அவதிப்படுகிறான்; அவனுடைய நிலைமை மோசமாக இருக்கிறது; அடிக்கடி தண்ணீரிலும் நெருப்பிலும் விழுந்துவிடுகிறான்;+ 16  நான் அவனை உங்கள் சீஷர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தேன், ஆனால் அவர்களால் குணமாக்க முடியவில்லை” என்று சொன்னான். 17  அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட* தலைமுறையே,+ நான் இன்னும் எத்தனை காலம்தான் உங்களோடு இருக்க வேண்டுமோ? எத்தனை காலம்தான் உங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமோ?” என்று சொல்லிவிட்டு, “அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். 18  பின்பு, அந்தப் பையனைப் பிடித்திருந்த பேயை இயேசு அதட்டினார், அது அவனைவிட்டுப் போனது, அந்த நொடியே அவன் குணமானான்.+ 19  அதன் பின்பு சீஷர்கள் இயேசுவிடம் தனியாக வந்து, “எங்களால் ஏன் அந்தப் பேயை விரட்ட முடியவில்லை?” என்று கேட்டார்கள். 20  அதற்கு அவர், “உங்கள் விசுவாசம் குறைவாக இருப்பதுதான் அதற்குக் காரணம்; உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து அங்கே போ’ என்று சொன்னால், அது பெயர்ந்துபோகும்; உங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்காது”+ என்று சொன்னார். 21  —— 22  அவர்கள் கலிலேயாவில் கூடியிருந்தபோது இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்பட்டு, மக்களுடைய கையில் ஒப்படைக்கப்படுவார்.+ 23  அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள், ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் துக்கப்பட்டார்கள். 24  அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்துசேர்ந்ததும், இரண்டு திராக்மா வரியை வசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரி கட்டுகிறாரா?”+ என்று கேட்டார்கள். 25  அதற்கு அவர், “ஆமாம்” என்று சொன்னார். ஆனாலும், வீட்டுக்குள் போனபோது அவர் பேசுவதற்கு முன்பே இயேசு அவரிடம், “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? இந்த உலகத்தில் இருக்கிற ராஜாக்கள் சுங்கவரியை அல்லது தலைவரியை* யாரிடம் வசூலிக்கிறார்கள்? அவர்களுடைய மகன்களிடமா, மற்றவர்களிடமா?” என்று கேட்டார். 26  அதற்கு பேதுரு, “மற்றவர்களிடம்” என்று சொன்னார்; அப்போது இயேசு, “அப்படியானால், மகன்கள் வரி கட்ட வேண்டியதில்லையே. 27  ஆனால், அவர்கள் நம்மேல் குற்றம் சொல்லாமல் இருப்பதற்காக,+ நீ கடலுக்குப் போய்த் தூண்டில் போட்டு, முதலில் சிக்கும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்; அதில் ஒரு வெள்ளிக் காசு இருக்கும். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடுத்துவிடு” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

உயரமான ஒரு மலைக்கு: ஒருவேளை, எர்மோன் மலையைக் குறிக்கலாம். அது பிலிப்புச் செசரியாவுக்குப் பக்கத்தில் இருந்தது. (மத் 16:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) அது கடல் மட்டத்திலிருந்து 2,814 மீ. (9,232 அடி) உயரத்தில் இருந்தது. எர்மோன் மலையின் சிகரங்கள் ஒன்றில் இயேசு தோற்றம் மாறியிருக்கலாம்.​—இணைப்பு B10-ஐப் பாருங்கள்.

அவருடைய தோற்றம் மாறியது: இதற்கான கிரேக்க வினைச்சொல்தான் (மெட்டமார்ஃபோ) ரோ 12:2-லும் கொடுக்கப்பட்டுள்ளது.

நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்: வே.வா., “அங்கீகரிக்கிறேன்; இவர்மேல் மிகவும் பிரியமாக இருக்கிறேன்.”​—மத் 3:17; 12:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

ஒரு குரல்: சுவிசேஷப் புத்தகங்களில், யெகோவா மனிதர்களிடம் பேசியதைப் பற்றிக் குறிப்பிடுகிற மூன்று பதிவுகளில் இது இரண்டாவது பதிவு.​—மத் 3:17; யோவா 12:28-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மண்டிபோட்டு: மரியாதை காட்டுவதற்காக மண்டிபோடுவது பழங்கால மத்தியக் கிழக்கு நாடுகளில் வழக்கமாக இருந்தது; முக்கியமாக, மேலதிகாரிகளிடம் எதையாவது கேட்கும்போது மக்கள் மண்டிபோட்டார்கள்.

காக்காய்வலிப்பினால் அவதிப்படுகிறான்: மத் 4:24-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

உங்கள் விசுவாசம் குறைவாக இருப்பதுதான்: இதற்கான கிரேக்க வார்த்தைகள், ‘விசுவாசத்தில் குறைவுபட்டவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. (மத் 6:30; 8:26; 14:31; 16:8; லூ 12:28) சீஷர்களுக்குக் கொஞ்சம்கூட விசுவாசம் இல்லை என்று இயேசு சொல்லவில்லை; அவர்களுக்கு இன்னும் நிறைய விசுவாசம் தேவைப்பட்டது என்றுதான் சொன்னார்.​—மத் 6:30; 8:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கடுகளவு: வே.வா., “கடுகு விதையைப் போல மிகச் சிறிய அளவு.”​—மத் 13:31, 32-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

“ஆனாலும், இந்த வகையான பிசாசை ஜெபத்தினாலும் விரதத்தினாலும் தவிர மற்றபடி விரட்ட முடியாது” என்ற வார்த்தைகள் சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. (மாற் 9:29-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், மிகவும் பழமையான மற்றும் நம்பகமான பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இல்லை. அநேகமாக, இவை கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வேதாகமத்தின் பாகமாக இருந்திருக்காது.​—இணைப்பு A3-ஐப் பாருங்கள்.

கப்பர்நகூமுக்கு: மத் 4:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

இரண்டு திராக்மா வரியை: நே.மொ., “இரட்டை திராக்மா வரியை.” (இணைப்பு B14-ஐப் பாருங்கள்.) மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரி வெவ்வேறு ஆலய வேலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. (யாத் 30:12-16) இயேசுவின் காலத்தில், ஒவ்வொரு யூத ஆணும் (20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள ஒவ்வொரு ஆணும்) வருடாந்தர ஆலய வரியாக ஒரு குறிப்பிட்ட தொகையைக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது.

மகன்கள் வரி கட்ட வேண்டியதில்லையே: இயேசுவின் காலத்தில், ராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தூண்டில்: இதற்கான கிரேக்க வார்த்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இங்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது; அநேகமாக, கயிற்றின் நுனியில் உள்ள கொக்கியில் இரை வைக்கப்பட்டு, தண்ணீருக்குள் போடப்பட்டது. மீன்பிடிப்பதைப் பற்றிய மற்ற எல்லா பதிவுகளிலும் (கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பதிவுகளில்), வலைகளைப் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கிறது.

வெள்ளிக் காசு: நே.மொ., “ஸ்தாத்தேர்.” இது டெட்ரா-திராக்மா என்று கருதப்படுகிறது. (இணைப்பு B14-ஐப் பாருங்கள்.) இது நான்கு திராக்மாவுக்கும் ஒரு சேக்கலுக்கும் சமமாக இருந்தது. இதுதான், இரண்டு பேர் ஆலய வரி செலுத்துவதற்குத் தேவைப்பட்ட தொகையாக இருந்தது.—யாத் 30:13.

மீடியா

எர்மோன் மலை
எர்மோன் மலை

பிலிப்புச் செசரியாவுக்குப் பக்கத்தில் அமைந்திருந்த எர்மோன் மலையின் உயரம் 2,814 மீ. (9,232 அடி); இஸ்ரவேலின் சுற்றுவட்டாரத்திலேயே அதுதான் மிக உயரமான மலையாக இருந்தது. பனி போர்த்திய அதன் சிகரங்களில் நீராவி நீர்த்துளிகளாக, அதாவது பனித்துளிகளாக, மாறுகின்றன. இப்படி உருவாகும் ஏராளமான பனித்துளிகளால், வறண்ட காலம் முழுவதும் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. (சங் 133:3) எர்மோன் மலையிலிருந்து உருகிவரும் பனிதான் யோர்தான் ஆற்றுக்கு மூலாதாரம். இயேசு தோற்றம் மாறியது ஒருவேளை எர்மோன் மலையாக இருந்திருக்கலாம்.—மத் 17:2.

ஹூலா பள்ளத்தாக்கின் சரணாலயத்திலிருந்து எர்மோன் மலையின் காட்சி
ஹூலா பள்ளத்தாக்கின் சரணாலயத்திலிருந்து எர்மோன் மலையின் காட்சி

வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் வட எல்லைப் பகுதியில் எர்மோன் மலை அமைந்திருக்கிறது. அதற்கு நிறைய சிகரங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பெரிய சிகரம், கடல் மட்டத்திலிருந்து 2,814 மீ. (9,232 அடி) உயரத்தில் அமைந்திருக்கிறது. எர்மோன் மலையின் சிகரங்கள்தான், கிழக்கு லீபனோன் மலைத்தொடரின் தெற்குப் பகுதியாக இருக்கின்றன. இயேசு தோற்றம் மாறிய இடம் ஒருவேளை எர்மோன் மலையாக இருந்திருக்கலாம்.