Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் சொல்லோவியங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

பைபிளில் சொல்லோவியங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

பைபிளில் சொல்லோவியங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

ஒரே ஓவியம் ஓராயிரம் வார்த்தைகள் பேசும்; அதே சமயத்தில் ஓரிரு வார்த்தைகள்கூட ஒரு சொல்லோவியத்தைத் தீட்டிவிடும். சொல்லோவியங்கள், அதாவது வாசகரின் மனதில் ஓவியத்தைத் தீட்டும் வார்த்தைகள், பைபிள் முழுவதிலும் ஏராளமாய் காணப்படுகின்றன. a ஓர் ஆய்வின்படி, மலைப்பிரசங்கம் என்றழைக்கப்படும் சொற்பொழிவில் மட்டுமே இயேசு 50-க்கும் அதிகமான சொல்லோவியங்களைப் பயன்படுத்தினார்.

நீங்கள் ஏன் சொல்லோவியங்களில் ஆர்வம் காட்ட வேண்டும்? அவற்றைப் புரிந்துகொண்டால், பைபிள் வாசிப்பு சுவாரஸ்யமானதாகவும் மனதுக்கு இதமளிப்பதாகவும் இருக்கும்; பைபிள்மீது உங்களுக்குள்ள மதிப்பும் அதிகரிக்கும். அதோடு, சொல்லோவியங்களை நீங்கள் சரிவரப் புரிந்துகொண்டால் பைபிளின் செய்தியையும் நன்கு புரிந்துகொள்வீர்கள். ஆனால், அவற்றைச் சரிவரப் புரிந்துகொள்ளாவிட்டால், நீங்கள் குழம்பிப்போகலாம்; சொல்லப்போனால், அர்த்தத்தையும் தவறாகப் புரிந்துகொள்ளலாம்.

சொல்லோவியங்களைப் புரிந்துகொள்ளுதல்

சொல்லோவியம் ஒரு கருத்தை மற்றொன்றுடன் ஒப்பிடுகிறது. எது ஒப்பிடப்படுகிறதோ அது உவமேயம் என்று அழைக்கப்படுகிறது; எதனுடன் ஒப்பிடப்படுகிறதோ அது உவமானம் என்று அழைக்கப்படுகிறது. ஒப்பிடப்படும் இரண்டு கருத்துகளுக்கு இடையில் ஓர் ஒற்றுமை இருக்கும். எனவே, இந்த மூன்று அம்சங்களையும் சரியாகக் கண்டுபிடித்துப் புரிந்துகொண்டால்தான் சொல்லோவியத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சில சமயங்களில், உவமேயத்தையும் உவமானத்தையும் நாம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அவற்றிற்கு இடையில் பல ஒற்றுமைகள் இருப்பதாகத் தெரியலாம். சரியான ஒற்றுமையைக் கண்டுபிடிக்க எது உங்களுக்கு உதவும்? பெரும்பாலும் அதன் சூழமைவு, அதாவது முந்தைய பிந்தைய வசனங்கள், உங்களுக்கு உதவும். b

உதாரணத்திற்கு, “நீ விழித்துக்கொள்ளாவிட்டால் நான் ஒரு திருடனைப் போல் வருவேன்” என்று சர்தை நகரிலிருந்த சபையிடம் இயேசு சொன்னார். தாம் வரவிருப்பதை (உவமேயம்) திருடன் வருவதற்கு (உவமானம்) அவர் ஒப்பிட்டார். இந்த இரண்டுக்கும் இடையே இருந்த ஒற்றுமை என்ன? சூழமைவு இதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. “எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பது உனக்குத் தெரியப்போவதில்லை” என்று இயேசு அதற்குப்பின் சொன்னார். (வெளிப்படுத்துதல் 3:3) ஆகவே, எதற்காக அவர் வரவிருந்தார் என்பதை அந்த ஒப்புமை சுட்டிக்காட்டவில்லை. அவர் எதிர்பாராத வேளையில், திடுதிப்பென வரவிருந்ததையே அது அர்த்தப்படுத்தியது. எதையோ திருடுவதற்கு அவர் வரவிருந்ததை அது அர்த்தப்படுத்தவில்லை.

சில சமயங்களில், பைபிளின் ஒரு பகுதியிலுள்ள சொல்லோவியம் அதன் மற்றொரு பகுதியில் காணப்படும் அதே போன்ற சொல்லோவியத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவலாம். உதாரணத்திற்கு, இயேசு பயன்படுத்திய அதே சொல்லோவியத்தை அப்போஸ்தலன் பவுலும் பயன்படுத்தி, “இரவில் திருடன் வருகிற விதமாக யெகோவாவின் நாள் வருமென்று நீங்களே நன்கு அறிந்திருக்கிறீர்கள்” என எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 5:2) பவுலுடைய வார்த்தைகளின் சூழமைவு அதன் ஒற்றுமையைத் தெளிவாகக் காட்டுவதில்லை. ஆனால், வெளிப்படுத்துதல் 3:3-ல் இயேசு பயன்படுத்திய சொல்லோவியத்துடன் இந்தச் சொல்லோவியத்தை ஒப்பிட்டால், அதன் ஒற்றுமையை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். இந்தச் சொல்லோவியம், உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை பசுமரத்தாணிபோல் மனதில் பதியவைக்கிறது, அல்லவா?

கடவுளைப் பற்றிக் கற்பிக்கும் சொல்லோவியங்கள்

சர்வவல்லமையுள்ள கடவுளின் ஆளுமையையும் வல்லமையையும் எந்த மனிதனாலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. பூர்வ காலத்தில் வாழ்ந்த தாவீது ராஜா, யெகோவாவின் ‘மகத்துவம் ஆராய முடியாதது’ என்று எழுதினார். (சங்கீதம் 145:3) கடவுளுடைய படைப்புகள் சிலவற்றைச் சிந்தித்துப் பார்த்த யோபு, “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக் குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றார் வியப்புடன்.—யோபு 26:14.

ஆனாலும், பரலோகத்திலுள்ள நம் கடவுளுடைய அற்புத குணங்களை ஓரளவு புரிந்துகொள்ள நமக்கு உதவுவதற்காக, பைபிள் சொல்லோவியங்களைப் பயன்படுத்துகிறது. யெகோவாவை ராஜாவாக, சட்டங்களை இயற்றுபவராக, நீதிபதியாக, போர்வீரராக அது சித்தரிக்கிறது; இது, நம் மரியாதைக்கு அவர் பாத்திரர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவரை மேய்ப்பராகவும், ஆலோசகராகவும், போதகராகவும், தகப்பனாகவும், குணப்படுத்துபவராகவும், மீட்பராகவும்கூட பைபிள் வர்ணிக்கிறது; இது, நம் அன்புக்கு அவர் பாத்திரர் என்பதைக் காட்டுகிறது. (சங்கீதம் 16:7; 23:1; 32:8; 71:17; 89:26; 103:3; 106:22; ஏசாயா 33:22; 42:13; யோவான் 6:45) இந்த எளிய வர்ணனைகள் ஒவ்வொன்றும், பல்வேறு ஒற்றுமைகளைச் சிறப்பித்துக் காட்டும் மனங்கவரும் உவமானங்களை நம் கண்முன் நிறுத்துகிறது. ஏராளமான வார்த்தைகள் சொல்லும் செய்தியைவிட, இத்தகைய சொல்லோவியங்கள் சொல்லும் செய்தி மிக அதிகம்.

யெகோவாவை பைபிள் உயிரற்ற பொருள்களுடனும் ஒப்பிடுகிறது. அது அவரை “இஸ்ரவேலின் கன்மலை [அதாவது, கற்பாறை],” “கோட்டை,” ‘துருகம்’ என்றெல்லாம் வர்ணிக்கிறது. (2 சாமுவேல் 23:3; சங்கீதம் 18:2; உபாகமம் 32:4) இந்த ஒப்புமைகளிலுள்ள ஒற்றுமை என்ன? பெரிய கற்பாறை எப்படி அசைக்க முடியாதபடி உறுதியாய் இருக்கிறதோ அப்படியே யெகோவா தேவனும் அசைக்க முடியாதவராக இருப்பதால் உங்களுக்குப் பலத்த பாதுகாப்பாய் விளங்குவார்.

பைபிளிலுள்ள சங்கீதப் புத்தகம், யெகோவாவுடைய ஆளுமையின் பல்வேறு அம்சங்களை வர்ணிக்கும் சொல்லோவியங்களால் நிறைந்திருக்கிறது. உதாரணத்திற்கு, யெகோவா “சூரியனும் கேடகமுமானவர்” என்று சங்கீதம் 84:11 குறிப்பிடுகிறது; ஏனென்றால், அவர் ஒளி, உயிர், ஆற்றல், பாதுகாப்பு ஆகியவற்றின் உறைவிடமாய் இருக்கிறார். மறுபட்சத்தில், ‘யெகோவா உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்’ என்று சங்கீதம் 121:5 சொல்கிறது. நிழலான இடம் எப்படிச் சூரிய வெப்பத்திடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறதோ அப்படியே வேதனையின் வெப்பத்திலிருந்து யெகோவா தம் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்; அவர்களுக்குத் தம்முடைய “கரத்தின்” அல்லது “செட்டைகளின்” நிழலிலே பாதுகாப்பு அளிக்கிறார்.—ஏசாயா 51:16; சங்கீதம் 17:9; 36:7.

இயேசுவை வர்ணிக்கும் சொல்லோவியங்கள்

இயேசுவைக் ‘கடவுளுடைய மகன்’ என்று பைபிள் திரும்பத் திரும்பக் குறிப்பிடுகிறது. (யோவான் 1:34; 3:16-18) கிறிஸ்தவர்கள் தவிர பிற மதத்தவருக்கு இதைப் புரிந்துகொள்வது கடினமாய் இருக்கிறது; ஏனென்றால், கடவுளுக்கென்று ஒரு மனைவி உண்மையில் இல்லை, அவர் மனித இயல்புள்ளவராகவும் இல்லை. நிஜம்தான், மனிதர்கள் பிள்ளையைப் பெற்றெடுப்பதுபோல் கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுக்கவில்லை. எனவே, இந்த வார்த்தைகள் ஒரு சொல்லோவியமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள பந்தம், ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே உள்ள பந்தத்தைப் போன்றது என்பதை எடுத்துக்காட்ட இந்தச் சொல்லோவியம் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசுவைப் படைத்தவரும் அவருக்கு உயிர் கொடுத்தவரும் யெகோவாதான் என்பதையும் இந்தச் சொல்லோவியம் சித்தரிக்கிறது. அதேபோல், முதல் மனிதனான ஆதாமும் “கடவுளின் மகன்” என்று அழைக்கப்படுகிறான்.—லூக்கா 3:38.

கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்ற தாம் எப்படியெல்லாம் செயல்படுகிறார் என்பதை விளக்குவதற்கு இயேசு சொல்லோவியங்களைப் பயன்படுத்தினார். உதாரணத்திற்கு, “நானே உண்மையான திராட்சைக் கொடி, என் தகப்பனே திராட்சைத் தோட்டக்காரர்” என்று அவர் சொன்னார். பிறகு, தம்முடைய சீடர்களைத் திராட்சைக் கொடியின் கிளைகளுக்கு அவர் ஒப்பிட்டுப் பேசினார். (யோவான் 15:1, 4) இந்தச் சொல்லோவியம் என்ன முக்கியக் குறிப்புகளைச் சுட்டிக்காட்டுகிறது? ஒரு திராட்சைக் கொடியின் கிளைகள், பட்டுப்போகாமல் தொடர்ந்து கனிகொடுப்பதற்கு அந்தக் கொடியில் நிலைத்திருக்க வேண்டும். அதேபோல், கிறிஸ்துவின் சீடர்கள் அவருடன் நிலைத்திருக்க வேண்டும். “என்னுடன் இல்லாவிட்டால் உங்களால் எதையுமே செய்ய முடியாது” என்று இயேசு சொன்னார். (யோவான் 15:5) திராட்சைக் கொடி கனி தர வேண்டுமெனத் தோட்டக்காரர் எதிர்பார்ப்பதுபோல் கிறிஸ்துவுடன் நிலைத்திருப்பவர்கள் ஆன்மீகக் கனி தர வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்.—யோவான் 15:8.

ஒற்றுமையைச் சரியாகப் புரிந்துகொள்ளுதல்

சொல்லோவியத்தை நாம் மேலோட்டமாக வாசித்துவிட்டு அதிலுள்ள ஒற்றுமையைச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் போனால் அதன் அர்த்தத்தையே தவறாகப் புரிந்துகொள்வோம். உதாரணத்திற்கு, ரோமர் 12:20-ஐ எடுத்துக்கொள்வோம். “உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; இப்படிச் செய்யும்போது நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பீர்கள்” என்று அது சொல்கிறது. ஒருவனுடைய தலைமேல் நெருப்புத் தணலைக் குவிப்பது பழிவாங்குவதை அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, இதில் காணப்படும் ஒற்றுமையைத் தெரிந்துகொண்டால் அது புரியும். பூர்வ காலங்களில் உலோகத்தை உருக்கியெடுக்கப் பயன்படுத்தப்பட்ட முறையை இந்தச் சொல்லோவியம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அன்று, நெருப்புத் தணல்மீது தாதுக்கள் உருக்கப்பட்டன; அப்போது தாதுக்களின் மேலேயும் நெருப்புத் தணல் குவிக்கப்பட்டது. இந்த முறையில், தாதுக்களிலிருந்து கசடுகள் நீக்கப்பட்டு, சுத்தமான உலோகம் பிரித்தெடுக்கப்பட்டது. அதேபோல், நாம் கனிவோடு நடந்துகொள்ளும்போது ஒருவருடைய மனம் இளகும், அவரிடமுள்ள நல்ல குணங்கள் வெளிப்படும்.

சொல்லோவியங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளும்போது நாம் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்வதோடு உள்ளம் நெகிழ்ந்து போகிறோம். பாவம் என்பது ஒரு கடனுக்கு ஒப்பிடப்படுவதை வாசிக்கும்போது நாம் பாவச் சுமையை உணருகிறோம். (லூக்கா 11:4, அடிக்குறிப்பு) யெகோவா நம்மை மன்னித்து, நம் கடனை ரத்து செய்துவிடும்போது எப்பேர்ப்பட்ட நிம்மதி நமக்குக் கிடைக்கிறது! அவர் நம்முடைய பாவங்களை ‘மூடிவிடுவதாகவும்,’ ஸ்லேட்டில் எழுதப்பட்டதைச் சுத்தமாகத் துடைப்பதுபோல் நம் பாவங்களைத் ‘துடைத்தழித்துவிடுவதாகவும்’ சொல்லப்படுவது, எதிர்காலத்தில் அந்தப் பாவங்களுக்காக நம்மைத் தண்டிக்க மாட்டார் என்ற உறுதியை அளிக்கிறது. (சங்கீதம் 32:1, 2; அப்போஸ்தலர் 3:19) நம் பாவங்கள் செக்கச் செவேலென்றிருந்தாலும் அவற்றைப் பனிபோல் யெகோவா வெண்மையாக்குவார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது!—ஏசாயா 1:18.

கடவுளுடைய புத்தகமான பைபிளில் காணப்படும் நூற்றுக்கணக்கான சொல்லோவியங்களில் இவை ஒருசில மட்டுமே. எனவே, நீங்கள் பைபிளை வாசிக்கும்போது சொல்லோவியங்களுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். அவற்றில் காணப்படும் ஒற்றுமையைச் சரியாகப் புரிந்துகொண்டு தியானிக்க நேரத்தை ஒதுக்குங்கள். அப்படிச் செய்தால் பைபிளை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும், அதன்மீது உங்களுக்குள்ள மதிப்பும் கூடும். (w09 5/1)

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில், “சொல்லோவியம்” என்பது எல்லா அணி நடைகளையும் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது; இது, உருவகங்களை, ஒப்புமைகளை, அல்லது இலக்கியம் சார்ந்த வேறு அணி நடைகளை உட்படுத்துகிறது.

b யெகோவாவின் சாட்சிகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட, வேதாகமங்களின் பேரில் உட்பார்வை என்ற பைபிள் கலைக்களஞ்சியத்தின் இரண்டு தொகுதிகள் விலாவாரியான பின்னணித் தகவலைத் தருகின்றன; இவை சரியான ஒற்றுமையைக் கண்டுபிடிக்க உதவுகின்றன.

[பக்கம் 19-ன் பெட்டி]

சொல்லோவியங்களின் பயன்

சொல்லோவியங்கள் பல விதங்களில் நமக்குப் பயனளிக்கின்றன. புரிந்துகொள்ளக் கடினமான ஒரு குறிப்பானது, எளிதில் புரிந்துகொள்ள முடிந்த ஒன்றுடன் ஒப்பிடப்படலாம். ஒரு குறிப்பின் பல்வேறு அம்சங்களைத் தெளிவுபடுத்துவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சொல்லோவியங்கள் பயன்படுத்தப்படலாம். சொல்லோவியங்கள் முக்கியமான குறிப்புகளை வலியுறுத்தலாம் அல்லது அவற்றைச் சுவாரஸ்யமாக்கலாம்.

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

பல்வேறு அம்சங்களை அடையாளம் காணுதல்

சொல்லோவியம்: “நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்.” (மத்தேயு 5:13)

உவமேயம்: நீங்கள் (இயேசுவின் சீடர்கள்)

உவமானம்: உப்பு

இந்தச் சூழமைவில், ஒற்றுமை: பாதுகாக்கும் தன்மை

பாடம்: பலருடைய உயிரைப் பாதுகாக்கும் செய்தி சீடர்களிடம் இருந்தது

[பக்கம் 21-ன் சிறுகுறிப்பு]

“யெகோவா என் மேய்ப்பர், எனக்கு ஒன்றும் குறைவில்லை.”சங்கீதம் 23:1, திருத்திய மொழிபெயர்ப்பு