Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

பவுலுடைய சகோதரியின் மகன்—மாமாவின் உயிரைக் காப்பாற்றினான்

பவுலுடைய சகோதரியின் மகன்—மாமாவின் உயிரைக் காப்பாற்றினான்

அப்போஸ்தலன் பவுலின் சொந்தக்காரர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள் என்பது உனக்குத் தெரியுமா? a— அவருடைய ஒரு சகோதரியும் அந்தச் சகோதரியின் மகனும் இயேசுவைப் பின்பற்றியதாகத் தெரிகிறது. அந்தச் சகோதரியின் மகன்தான் பவுலின் உயிரைக் காப்பாற்றினான்! அவனுடைய பெயரையோ அவனுடைய அம்மாவின் பெயரையோ பைபிள் குறிப்பிடுவதில்லை; ஆனால், அவன் என்ன செய்தான் என்பதைக் குறிப்பிடுகிறது. அதைத் தெரிந்துகொள்ள உனக்கு ஆசையா?—

பவுல் அப்போதுதான் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தை முடித்துவிட்டு திரும்பியிருந்தார்; அந்தச் சமயத்தில் அவர் எருசலேமில் இருந்தார். அது பொ.ச. 56-வது வருடமாக இருந்திருக்கலாம். பவுல் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காகக் காத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் விசாரணை செய்யப்படுவதை அவருடைய எதிரிகள் விரும்பவில்லை. அவரைக் கொலை செய்யவே விரும்பினார்கள்! எனவே, நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்படும்போது சுமார் 40 பேர் வழியிலேயே பதுங்கியிருந்து அவரைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் போட்டார்கள்.

இந்தத் திட்டம் எப்படியோ பவுலுடைய சகோதரி மகனுக்குத் தெரியவந்தது. அவன் என்ன செய்தான் தெரியுமா?— பவுலிடம் போய் அதைப் பற்றிச் சொன்னான். உடனடியாகப் பவுல் படை அதிகாரிகளில் ஒருவரிடம், “இந்த இளைஞனைப் படைத் தளபதியிடம் அழைத்துச் செல்லுங்கள், அவரிடம் ஏதோ சொல்ல வேண்டுமாம்” என்றார். அந்த அதிகாரி அவனைக் கிலவுதியு லீசியா என்ற படைத் தளபதியிடம் அழைத்துச் சென்று, ஏதோ முக்கியமான விஷயத்தை அவன் சொல்ல வந்திருப்பதாகத் தெரிவித்தார். பவுலுடைய சகோதரி மகனை கிலவுதியு தனியாக அழைத்துச் சென்றார்; அவன் எல்லா விவரங்களையும் அவரிடம் தெரிவித்தான்.

“இதையெல்லாம் நீ என்னிடம் சொன்னதாக யாரிடமும் உளறிவிடாதே” என்று கிலவுதியு அவனிடம் எச்சரித்தார். பிறகு அவர் இரண்டு படை அதிகாரிகளை அழைத்து, 200 காலாட்படை வீரர்களையும் 70 குதிரை வீரர்களையும் 200 ஈட்டி வீரர்களையும் செசரியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி சொன்னார். அன்றிரவு ஒன்பது மணிக்கு அந்த 470 பேரும் புறப்பட்டார்கள்; செசரியாவிலிருந்த ரோம ஆளுநரான பேலிக்ஸிடம் பவுலைப் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். பேலிக்ஸுக்குக் கிலவுதியு ஒரு கடிதம் எழுதினார்; அதில், பவுலைக் கொலை செய்வதற்குத் தீட்டப்பட்டிருந்த சதித்திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

ஆகவே, பவுலுக்கு எதிராகக் குற்றம் சாட்ட செசரியாவிலிருந்த நீதிமன்றம்வரை போக வேண்டிய கட்டாயம் யூதர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், பவுல் குற்றம் செய்ததாக நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. என்றாலும், பவுல் இரண்டு வருடங்கள் அநியாயமாகச் சிறையில் வைக்கப்பட்டார். எனவே, தன்னை ரோமில் விசாரணை செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டார்; அதன்படி அவர் ரோமுக்கு அனுப்பப்பட்டார்.—அப்போஸ்தலர் 23:16–24:27; 25:8-12.

பவுலுடைய சகோதரி மகனைப் பற்றிய இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?— தெரிந்த உண்மையை மறைக்காமல் சொல்ல தைரியம் தேவைப்படுகிறது; அப்படிச் சொல்வது உயிரையே காப்பாற்றலாம். இயேசுவும் எதிரிகள் தம்மைக் ‘கொலை செய்வதற்கு வழிதேடிக்கொண்டிருந்ததை’ அறிந்திருந்தபோதிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மக்களிடம் தொடர்ந்து பேசிவந்தார். அதையே நாமும் செய்ய வேண்டுமென அவர் சொன்னார். நாம் அப்படிச் செய்வோமா? பவுலுடைய சகோதரி மகனுக்கு இருந்த தைரியம் நமக்கிருந்தால் நாமும் அப்படிச் செய்வோம்.—யோவான் 7:1; 15:13; மத்தேயு 24:14; 28:18-20.

பவுல் தன் இளம் நண்பன் தீமோத்தேயுவிடம், ‘உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து. இவற்றிலேயே நிலைத்திரு; இப்படிச் செய்யும்போது நீயும் மீட்படைவாய், உன் போதனைக்குச் செவிகொடுப்பவர்களையும் மீட்படையச் செய்வாய்’ என்று சொன்னார். (1 தீமோத்தேயு 4:16) பவுலுடைய சகோதரி மகன், தன் மாமா கொடுத்த இதுபோன்ற அறிவுரைகளின்படி நடந்தான் என்பதில் சந்தேகமே இல்லை. நீயும் அப்படி நடப்பாயா? (w09 6/1)

a நீங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு உங்கள் பிள்ளையையே பதில் சொல்லச் சொல்லுங்கள்.