அப்போஸ்தலரின் செயல்கள் 23:1-35

23  நியாயசங்கத்தாரை பவுல் உற்றுப் பார்த்து, “சகோதரர்களே, இந்த நாள்வரை கடவுளுக்கு முன்னால் முற்றிலும் சுத்தமான மனசாட்சியோடு நடந்து வந்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.  அப்போது தலைமைக் குருவான அனனியா, பவுலின் வாயில் அடிக்கச் சொல்லி தன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் கட்டளையிட்டார்.  பவுல் அவரிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, கடவுள் உன்னை அடிக்கப்போகிறார். சட்டப்படி என்னை நியாயம் விசாரிக்க உட்கார்ந்திருக்கிற நீயே சட்டத்தை மீறி என்னை அடிக்கச் சொல்லிக் கட்டளை கொடுக்கிறாயா?” என்று கேட்டார்.  அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள், “கடவுளுக்குச் சேவை செய்யும் தலைமைக் குருவையே அவமதிக்கிறாயா?” என்று கேட்டார்கள்.  அதற்கு பவுல், “சகோதரர்களே, அவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது. ‘உங்கள் மக்களின் தலைவரை நீங்கள் மரியாதையில்லாமல் பேசக் கூடாது’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.  நியாயசங்கத்தாரில் ஒரு பகுதியினர் சதுசேயர்கள், மற்றொரு பகுதியினர் பரிசேயர்கள் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்ததால், “சகோதரர்களே, நான் ஒரு பரிசேயன்.+ ஆம், பரிசேயர்களுடைய மகன். இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று நான் நம்புவதால்தான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்” என்று சத்தமாகச் சொன்னார்.  அவர் இப்படிச் சொன்னதால், பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்களுக்குள் பிரிவினை உண்டானது.  ஏனென்றால் உயிர்த்தெழுதலும் இல்லை, தேவதூதர்களும் இல்லை, பரலோக ஜீவிகளும் இல்லை என்று சதுசேயர்கள் சொல்லி வந்தார்கள், பரிசேயர்களோ அவையெல்லாம் இருப்பதாக நம்பினார்கள்.*+  அதனால், அங்கே பயங்கர கூச்சல் உண்டானது. பரிசேயப் பிரிவைச் சேர்ந்த வேத அறிஞர்களில் சிலர் எழுந்து, “இந்த மனுஷன் எந்தக் குற்றமும் செய்திருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு பேயோ தேவதூதரோ அவனிடம் பேசியிருந்தால்,+——” என்று காரசாரமாக வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். 10  வாக்குவாதம் முற்றியபோது, பவுலை அவர்கள் பிய்த்து விடுவார்களோ என்று படைத் தளபதி பயந்தார். அதனால் படைவீரர்களைக் கீழே அனுப்பி, அவர்கள் மத்தியிலிருந்து அவரை இழுத்து படைவீரர்களுடைய குடியிருப்புக்குள் கொண்டுவரச் சொல்லிக் கட்டளை கொடுத்தார். 11  ஆனால், அன்று ராத்திரி பவுலுக்குப் பக்கத்தில் எஜமான் வந்து நின்று, “தைரியமாயிரு!+ எருசலேமில் நீ என்னைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுத்துவந்திருப்பது போலவே, ரோமிலும் சாட்சி கொடுக்க வேண்டும்”+ என்று சொன்னார். 12  பொழுது விடிந்ததும் யூதர்கள் சதித்திட்டம் போட்டார்கள். ‘பவுலைக் கொலை செய்யும்வரை சாப்பிடவோ குடிக்கவோ மாட்டோம்’ என்று சொல்லி, சபதமும்* செய்தார்கள். 13  இப்படிச் சபதம் செய்த சதிகாரர்களின் எண்ணிக்கை 40-க்கும் அதிகம். 14  அவர்கள் முதன்மை குருமார்களிடமும் பெரியோர்களிடமும்* போய், “பவுலைக் கொலை செய்யும்வரை நாங்கள் ஒரு வாய்கூட சாப்பிடப் போவதில்லை என்று சபதம் செய்திருக்கிறோம். 15  அதனால், இப்போது நீங்களும் நியாயசங்கத்தாரும், பவுலுடைய வழக்கை இன்னும் நன்றாக விசாரிக்க விரும்புவதுபோல் நடித்து, அவனை உங்களிடம் கூட்டிக்கொண்டு வரும்படி படைத் தளபதிக்குச் செய்தி அனுப்புங்கள். வழியிலேயே அவனைத் தீர்த்துக்கட்ட நாங்கள் தயாராக இருப்போம்” என்று சொன்னார்கள். 16  இந்தச் சதித்திட்டத்தைப் பற்றி பவுலுடைய சகோதரியின் மகன் கேள்விப்பட்டதும், படைவீரர்களுடைய குடியிருப்புக்குள் போய் பவுலிடம் சொன்னான். 17  அதனால் படை அதிகாரிகளில் ஒருவரை பவுல் கூப்பிட்டு, “இந்த இளைஞனைப் படைத் தளபதியிடம் கூட்டிக்கொண்டு போங்கள், அவரிடம் ஏதோ சொல்ல வேண்டுமாம்” என்றார். 18  அதனால், அவனைப் படைத் தளபதியிடம் அவர் கூட்டிக்கொண்டுபோய், “பவுல் என்ற கைதி என்னைக் கூப்பிட்டு, இந்த இளைஞனை உங்களிடம் கூட்டிக்கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டார், உங்களிடம் இவன் ஏதோ சொல்ல வேண்டுமாம்” என்றார். 19  படைத் தளபதி அவன் கையைப் பிடித்து தனியாகக் கூட்டிக்கொண்டு போய், “என்னிடம் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டார். 20  அதற்கு அவன், “யூதர்கள் பவுலுடைய வழக்கை இன்னும் நன்றாக விசாரிக்க விரும்புவதுபோல் நடித்து, அவரை நாளைக்கு நியாயசங்கத்தாரிடம் கொண்டுவரும்படி உங்களைக் கேட்டுக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறார்கள்.+ 21  இதற்கு நீங்கள் சம்மதிக்காதீர்கள். ஏனென்றால், அவர்களுடைய ஆட்களில் 40 பேருக்கும் அதிகமானவர்கள் அவரைக் கொலை செய்யக் காத்திருக்கிறார்கள். அப்படிக் கொலை செய்யும்வரை சாப்பிடவோ குடிக்கவோ போவதில்லை என்று சபதம் செய்திருக்கிறார்கள்.+ தங்களுடைய வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்போடு இப்போது தயாராக இருக்கிறார்கள்” என்று சொன்னான். 22  அப்போது அந்தப் படைத் தளபதி, “இதையெல்லாம் நீ என்னிடம் சொன்னதாக யாரிடமும் சொல்லிவிடாதே” என்று கட்டளை கொடுத்து அவனை அனுப்பிவிட்டார். 23  பின்பு, அவர் படை அதிகாரிகளில் இரண்டு பேரை அழைத்து, “ராத்திரி மூன்றாம் மணிநேரத்தில்* செசரியாவுக்குப் போக 200 காலாட்படை வீரர்களையும் 70 குதிரை வீரர்களையும் 200 ஈட்டி வீரர்களையும் ஏற்பாடு செய்யுங்கள். 24  பவுலை ஏற்றிக்கொண்டு போக குதிரைகளைக் கொடுங்கள். அவரை ஆளுநர் பேலிக்சிடம் பத்திரமாகக் கொண்டுபோக வேண்டும்” என்று சொன்னார். 25  அதோடு, பேலிக்சுக்கு இந்தக் கடிதத்தையும் எழுதினார்: 26  “மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு, கிலவுதியு லீசியா எழுதுவதாவது: உங்களுக்கு வாழ்த்துக்கள்! 27  இந்த மனுஷரை யூதர்கள் பிடித்துக் கொலை செய்யவிருந்தார்கள். அவர் ஒரு ரோமக் குடிமகன்+ என்பதை நான் தெரிந்துகொண்டதால், உடனே படைவீரர்களோடு போய் அவரைக் காப்பாற்றினேன்.+ 28  அவர்மேல் ஏன் குற்றம்சாட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களுடைய நியாயசங்கத்தாரிடம் அவரைக் கொண்டுபோனேன்.+ 29  அப்போது, அவர்களுடைய சட்டம் சம்பந்தமான கருத்து வேறுபாடுகளால்தான்+ அவர் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். மரண தண்டனையோ சிறைத் தண்டனையோ கொடுக்கும் அளவுக்கு அவர் எந்தக் குற்றமும் செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 30  ஆனால் இவருக்கு எதிராகச் சதித்திட்டம் போடப்பட்டிருப்பதைப் பற்றி எனக்குத் தெரியவந்தது,+ அதனால் இவரை உடனே உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். உங்கள் முன்னால் வந்து வழக்காடும்படி இவர்மேல் குற்றம்சாட்டியவர்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறேன்.” 31  படைவீரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே ராத்திரி நேரத்தில் பவுலைக் கூட்டிக்கொண்டு+ அந்திப்பத்திரி நகரத்துக்குப் போனார்கள். 32  அடுத்த நாள் குதிரைவீரர்களை அவரோடு அனுப்பிவிட்டு, தங்களுடைய குடியிருப்புக்குத் திரும்பி வந்தார்கள். 33  குதிரைவீரர்கள் செசரியாவுக்குப் போய், அந்தக் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து, பவுலை அவர் முன்னால் நிறுத்தினார்கள். 34  ஆளுநர் அதைப் படித்துவிட்டு, பவுல் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டார்; அவர் சிலிசியாவைச் சேர்ந்தவர்+ என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு, 35  “உன்மேல் குற்றம்சாட்டுகிறவர்கள் இங்கே வந்தவுடன்+ உன்னைத் தீர விசாரிப்பேன்” என்று சொன்னார். பின்பு, ஏரோதுவின் மாளிகையில் அவரைக் காவல் வைக்கும்படி கட்டளை கொடுத்தார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அறிவித்துவந்தார்கள்.”
இந்தச் சபதத்தை நிறைவேற்றாவிட்டால் தங்களுக்குச் சாபம் வருமென்று அவர்கள் நம்பினார்கள்.
வே.வா., “மூப்பர்களிடமும்.”
அதாவது, “ராத்திரி சுமார் 9 மணிக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா