Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்று யெகோவாவின் மக்கள்

இன்று யெகோவாவின் மக்கள்

முன்பு நீங்கள் கடவுளுடைய மக்களாக இருக்கவில்லை, இப்போதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்.”—1 பே. 2:10.

1, 2. கி.பி 33 பெந்தெகொஸ்தே நாளில் என்ன நடந்தது, முதல்முதலில் கடவுளுடைய புதிய தேசத்தில் யார் சேர்க்கப்பட்டார்கள்? (ஆரம்பப் படம்.)

கி.பி 33-வது வருஷம் பெந்தெகொஸ்தே நாள், யெகோவாவின் மக்களுடைய சரித்திரத்தில் ஒரு முக்கியமான நாளாக இருந்தது. அன்றுதான் யெகோவா இஸ்ரவேல் தேசத்துக்குப் பதிலாக ஒரு புதிய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை, “கடவுளுடைய இஸ்ரவேலர்” என்று பைபிள் சொல்கிறது. (கலா. 6:16) ஆபிரகாமின் வம்சத்தார் செய்ததுபோல அவர்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லை. அதனால்தான் அவர்களுடைய “விருத்தசேதனம் . . . கடவுளுடைய சக்தியினால் இருதயத்தில் செய்யப்படுகிறது” என்று பவுல் சொன்னார்.—ரோ. 2:29.

2 பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமிலிருந்த ஒரு மாடி வீட்டில் இயேசுவின் 120 சீடர்கள் கூடி வந்தார்கள். (அப். 1:12-15) அப்போது கடவுள் அவருடைய சக்தியை அந்த சீடர்களுக்கு கொடுத்தார். அதனால், அவர்கள் யெகோவாவுடைய மகன்களாக ஆனார்கள். (ரோ. 8:15, 16; 2 கொ. 1:21) இயேசுவுடைய பலியை யெகோவா ஏற்றுக்கொண்டார் என்பதை இது காட்டியது. அதோடு, அவர்கள் புதிய ஒப்பந்தத்திற்குள் வந்துவிட்டதையும் காட்டியது. (லூக். 22:20; எபிரெயர் 9:15-ஐ வாசியுங்கள்.) அவர்கள்தான் கடவுளுடைய புதிய தேசத்தில் முதல்முதலில் சேர்க்கப்பட்டார்கள். கடவுளுடைய சக்தி கிடைத்ததால் அவர்கள் நிறைய மொழிகளில் பேசினார்கள். மற்ற தேசத்து மக்கள் பேசிய மொழிகளையும் புரிந்துகொண்டார்கள். “கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி” மக்களுக்கு சொல்லியும் கொடுத்தார்கள்.—அப். 2:1-11.

 கடவுளுடைய புதிய தேசம்

3-5. (அ) பெந்தெகொஸ்தே நாளில் யூதர்களிடம் பேதுரு என்ன சொன்னார்? (ஆ) கடவுளுடைய புதிய தேசத்துக்குள் யாரெல்லாம் சேர்க்கப்பட்டார்கள், எப்படி?

3 முதலாவதாக, அப்போஸ்தலன் பேதுருவைப் பயன்படுத்தி யூதர்களையும் யூத மதத்துக்கு மாறியவர்களையும் யெகோவா தேர்ந்தெடுத்தார். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு தைரியமாக இயேசுவை பற்றி பேசினார். இயேசுவை கொலை செய்த யூதர்களிடமே, ‘இயேசுவை எஜமானராகவும் கிறிஸ்துவாகவும்’ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். செய்த தப்பை அவர்கள் உணர்ந்ததால் பேதுருவிடம், “நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு பேதுரு, “மனந்திரும்புங்கள், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறுங்கள், அப்போது கடவுளுடைய சக்தியை அன்பளிப்பாகப் பெறுவீர்கள்” என்று சொன்னார். (அப். 2:22, 23, 36-38) அவர் சொன்னதை கேட்டு, கிட்டத்தட்ட 3,000 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அவர்களுக்கு கடவுளுடைய சக்தியும் கிடைத்தது. (அப். 2:41) அப்போஸ்தலர்கள் சுறுசுறுப்பாக ஊழியம் செய்ததால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வந்தது. (அப். 6:7) இப்படி, கடவுளுடைய புதிய தேசத்துக்குள் நிறைய பேர் சேர்க்கப்பட்டார்கள்.

4 இரண்டாவதாக, இயேசுவின் சீடர்கள் சமாரியர்களிடம் நற்செய்தியைச் சொன்னார்கள். அதை கேட்ட நிறைய பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். ஆனால், அவர்களுக்கு இன்னும் கடவுளுடைய சக்தி கிடைக்கவில்லை. அதனால் எருசலேமில் இருந்த ஆளும் குழு, பேதுருவையும் யோவானையும் சமாரியாவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் சமாரியாவில் இருந்த சகோதர சகோதரிகள் மீது கைகளை வைத்தபோது, “கடவுளுடைய சக்தியை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.” (அப். 8:5, 6, 14-17) இப்படி, சமாரியர்களும் கடவுளுடைய புதிய தேசத்துக்குள் சேர்க்கப்பட்டார்கள்.

கொர்நேலியுவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் பேதுரு நற்செய்தியை சொன்னார் (பாரா 5)

5 மூன்றாவதாக, மற்ற நாட்டில் இருந்த மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்பட்டது. கி.பி. 36-வது வருஷம், ரோம அதிகாரியான கொர்நேலியுவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பேதுரு நற்செய்தியை சொன்னார். (அப். 10:22, 24, 34, 35) அவர் “பேசிக்கொண்டிருந்தபோதே அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அனைவர்மீதும் கடவுளுடைய சக்தி பொழியப்பட்டது. கடவுளுடைய அன்பளிப்பாகிய அவருடைய சக்தி [மற்ற நாட்டு மக்கள்மீதும்] பொழியப்பட்டதை பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனம் செய்யப்பட்ட விசுவாசிகள் கண்டு மலைத்துப்போனார்கள்.” (அப். 10:44, 45) இப்படி, மற்ற நாட்டில் இருந்த மக்களும் கடவுளுடைய புதிய தேசத்துக்குள் சேர்க்கப்பட்டார்கள்.

யெகோவாவுடைய “பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதி”

6, 7. புதிய தேசத்தில் சேர்க்கப்பட்ட மக்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது, அவர்கள் என்ன செய்தார்கள்?

6 கி.பி. 49-வது வருஷம் இயேசுவின் சீடரான யாக்கோபு ஆளும் குழுவிடம் இப்படி சொன்னார்: “கடவுள் முதல் தடவையாக [மற்ற நாட்டு மக்கள்மீது] தம் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தம்முடைய பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதியைப் பிரித்தெடுத்த விதத்தைப் பற்றி சிமியோன் [பேதுரு] நன்றாக விவரித்துச் சொன்னார்.” (அப். 15:14) ‘இந்த மக்கள் தொகுதியில்’ யூதர்களும் மற்ற நாட்டு மக்களும் சேர்க்கப்பட்டார்கள். (ரோ. 11:25, 26அ) அவர்களைப் பற்றி பேதுரு இப்படி சொன்னார்: “முன்பு  நீங்கள் கடவுளுடைய மக்களாக இருக்கவில்லை, இப்போதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்.” கடவுள் ஏன் இந்த மக்களை தேர்ந்தெடுத்தார்? அவருடைய “மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருடைய விசேஷ சொத்தாகவும்” இருப்பதற்காக அவர்களை தேர்ந்தெடுத்தார் என்று பேதுரு சொன்னார். (1 பே. 2:9, 10) யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள், அவருக்கு மட்டும்தான் ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதை எல்லாருக்கும் இவர்கள் தைரியமாக சொல்ல வேண்டியிருந்தது.

7 இஸ்ரவேலர்களுக்கு பதிலாக இந்த புதிய தேசத்தை யெகோவா தேர்ந்தெடுத்தார். அதனால்தான், ‘இந்த மக்களை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் புகழை சொல்லிவருவார்கள்’ என்று சொன்னார். (ஏசா. 43:21) யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள், மற்ற எல்லாமே பொய் கடவுள்கள் என்று இவர்கள் தைரியமாக சொன்னார்கள். (1 தெ. 1:9) “எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைமுனைவரையிலும்” யெகோவாவை பற்றியும் இயேசுவைப் பற்றியும் அவர்கள் சொன்னார்கள்.—அப். 1:8; கொலோ. 1:23.

8. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பவுல் ஏன் சொன்னார்?

8 யெகோவாவைப் பற்றி தைரியமாக பேசினவர்களில் பவுலும் ஒருவர். பொய் மதத் தலைவர்களிடம்கூட யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள் என்பதை அவர் பயமில்லாமல் பேசினார். ‘எல்லாவற்றையும் படைத்தது’ யெகோவாதான். அதனால் அவர்தான் உண்மையான கடவுளாக இருக்க முடியும் என்பதை அவர்களுக்கு விளக்கி சொன்னார். (அப். 17:18, 23-25) சபையில் இருந்த சகோதர சகோதரிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். “நான் போன பின்பு உங்களிடையே கொடிய ஓநாய் போன்ற ஆட்கள் நுழைவார்கள் என்று அறிந்திருக்கிறேன்; கடவுளுடைய மந்தையை அவர்கள் மென்மையாக நடத்த மாட்டார்கள்; அதோடு, உங்கள் மத்தியிலிருந்தே சிலர் தோன்றி சீடர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்” என்று எச்சரித்தார். (அப். 20:29, 30) அப்போஸ்தலர்கள் உயிரோடு இருந்தபோதே சிலர் விசுவாசதுரோகிகளாக மாறினார்கள். அதாவது, சபையில் இருந்த சிலர் பைபிளில் இல்லாத விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.—1 யோ. 2:18, 19.

9. அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு என்ன ஆனது?

9 அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு சபைகளில் நிறைய பேர் விசுவாசதுரோகிகளாக மாறினார்கள். கிறிஸ்தவ சபையிலிருந்து பிரிந்து பல இடங்களில் சர்ச்சுகளை ஆரம்பித்தார்கள். அதுமட்டுமில்லாமல் யெகோவாவுடைய பெயரையே பைபிளிலிருந்து எடுத்துவிட்டார்கள். இன்னும் நிறைய விதங்களில் கடவுளுக்கு பிடிக்காததை செய்தார்கள். பைபிளில் இல்லாத விஷயங்களையும் பொய் மத பழக்கங்களையும் மக்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள், கடவுளுடைய பெயரை சொல்லி போர் செய்தார்கள், மக்களை ஏமாற்றினார்கள், மோசமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். கொஞ்சம் பேர் மட்டும்தான் யெகோவாவை உண்மையாக வணங்கினார்கள். ஆனால், யெகோவாவுடைய “பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதி” இல்லாமல் போனது.

கடைசி நாட்களில் கடவுளுடைய மக்கள்

10, 11. (அ) கோதுமை-களைகளை பற்றிய உதாரணத்தில் இயேசு என்ன சொன்னார் (ஆ) இயேசு சொன்னது 1914-க்கு பிறகு எப்படி நடந்தது?

10 நிறைய பேர் விசுவாசதுரோகிகளாக மாறுவார்கள், அதனால் உண்மை மதத்திற்கும் பொய் மதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் என்று இயேசு சொன்னார். இந்த முக்கியமான விஷயத்தை புரியவைக்க கோதுமை-களைகள் பற்றிய உதாரணத்தை சொன்னார். அந்த உதாரணத்தில் ஒருவர் [இயேசு] கோதுமை விதைகளை விதைக்கிறார். ஆனால், ராத்திரியில் “எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது” அவருடைய எதிரி [சாத்தான்] கோதுமைகளுக்கு நடுவில் களைகளை விதைத்தான். “நல்ல விதை கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள் (பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்); களைகளோ பொல்லாதவனின் பிள்ளைகள் (விசுவாசதுரோகிகள்).” கோதுமையும் களைகளும் கடைசி நாட்கள் வரைக்கும் ஒன்றாக வளர வேண்டும் என்று இயேசு சொன்னார். அதற்கு பிறகு கோதுமையையும் களைகளையும் பிரிப்பதற்கு தேவதூதர்களை இயேசு அனுப்புவார். அவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளை தனியாகப் பிரித்தெடுப்பார்கள்.  (மத். 13:24-30, 36-43) இதெல்லாம் எப்போது நடந்தது? யெகோவா அவருடைய பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதியை மறுபடியும் எப்போது ஒன்று சேர்த்தார்?

11 கடைசி நாட்கள் 1914-ல் ஆரம்பித்தது. அப்போது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் 5,000 பேர்தான் இருந்தார்கள். உண்மை மதத்திற்கும் பொய் மதத்திற்கும் இருந்த வித்தியாசம் அந்த சமயத்தில் தெரியவில்லை. ஆனால், 1919-ல் இந்த வித்தியாசம் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. களைகளிலிருந்து கோதுமைகளை பிரிப்பதுபோல் யெகோவா அவருடைய மக்களை தனியாகப் பிரித்தார். அப்போது அவர்கள் யெகோவாவுடைய ஆசீர்வாதத்தைப் பெற்ற ஒரு தேசத்தை போல் ஆனார்கள். இதைப் பற்றி ஏசாயா இப்படி சொன்னார்: ‘ஒரே நாளில் நாடு ஒன்று உருவாகுமா? ஒரு நொடிப்பொழுதில் மக்களினம் ஒன்று பிறக்குமா? ஆனால் [பிரசவ] வேதனை ஏற்பட்டவுடனே சீயோன் தன் பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள்.’ (ஏசா. 66:8, பொது மொழிபெயர்ப்பு) இந்த வசனத்தில் “சீயோன்” என்பது பரலோகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த தேவதூதர்களையும் அர்த்தப்படுத்துகிறது. சீயோன் ‘தன் பிள்ளைகளை பெற்றெடுத்தாள்’ என்பது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை யெகோவா தனியாகப் பிரித்து எடுத்ததை அர்த்தப்படுத்துகிறது.

12. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி மற்ற மக்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள்?

12 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை போலவே இன்று இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் யெகோவாதான் உண்மையான கடவுள் என்று எல்லாருக்கும் சொல்கிறார்கள். (ஏசாயா 43:1, 10, 11-ஐ வாசியுங்கள்.) இவர்கள் மற்ற மக்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள். எப்படி? யெகோவாவுக்கு பிரியமாக வாழ்கிறார்கள். அதோடு, ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் பிரசங்கிக்கிறார்கள்.’ (மத். 24:14; பிலி. 2:15) இப்படி செய்வதன் மூலம், ‘அநேகரை நீதிக்குட்படுத்தியிருக்கிறார்கள்.’ அதாவது, லட்சக் கணக்கான மக்கள் யெகோவாவை வணங்கவும் அவருடைய மக்களாக ஆகவும் உதவியிருக்கிறார்கள்.தானியேல் 12:3-ஐ வாசியுங்கள்.

“உங்களோடேகூடப் போவோம்”

13, 14. யெகோவாவை வணங்க ஆசைப்படுகிறவர்கள் என்ன செய்ய வேண்டும், ஏசாயாவும் சகரியாவும் இதை பற்றி என்ன சொன்னார்கள்?

13 மற்ற நாட்டு மக்கள் யெகோவாவை வணங்க ஆசைப்பட்டபோது அவர்களை யெகோவா ஏற்றுக்கொண்டார் என்று நாம் போன கட்டுரையில் பார்த்தோம். அதற்கு அவர்கள் பொய் மதத்தைவிட்டு  இஸ்ரவேலர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார். (1 இரா. 8:41-43) இன்றும் யெகோவாவை வணங்க ஆசைப்படும் மக்கள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும்.

14 கடைசி நாட்களில் நிறைய பேர் யெகோவாவை வணங்க அவருடைய மக்களோடு சேர்ந்துகொள்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. “திரளான ஜனங்கள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்” என்று ஏசாயா சொன்னார். (ஏசா. 2:2, 3) சகரியா இப்படி சொன்னார்: “அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள். அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய [மற்ற நாட்டு மக்களில்] பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”—சக. 8:20-23.

15. கடவுளுடைய இஸ்ரவேலர்களோடு சேர்ந்து ‘வேறே ஆடுகள்’ என்ன வேலை செய்கிறார்கள்?

15 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு சேர்ந்து “வேறே ஆடுகளும்,” [அதாவது பூமியில் வாழும் நம்பிகையுள்ளவர்களும்] நற்செய்தியை எல்லாருக்கும் சொல்கிறார்கள். (மாற். 13:10) அவர்கள் கடவுளுடைய மக்களாக ஆகிறார்கள். அவர்கள் ‘ஒரே மேய்ப்பரான’ இயேசு கிறிஸ்துவின் ‘ஒரே மந்தையாக’ இருக்கிறார்கள்.யோவான் 10:14-16-ஐ வாசியுங்கள்.

யெகோவாவின் மக்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்

16. சாத்தானுடைய மனதில் எப்படிப்பட்ட எண்ணம் வரும்படி யெகோவா செய்வார்?

16 சீக்கிரத்தில் பொய் மதங்கள் எல்லாம் அழியப்போகிறது. அப்போது யெகோவாவுடைய மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க கோகு அதாவது, சாத்தான் முயற்சி செய்வான். கடவுளுடைய மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாதது போல் தெரியும். இதுதான் அவர்களை அழிப்பதற்கு சரியான நேரம் என்ற எண்ணம் சாத்தானுடைய மனதில் வரும்படி யெகோவா செய்வார். (எசே. 38:2-4, 10-12) சாத்தான் அவர்களை அழிக்க வரும்போது யெகோவா அவனோடு போர் செய்து அவருடைய மக்களை காப்பாற்றுவார். இந்த போரைத்தான் பைபிள் அர்மகெதோன் என்று சொல்கிறது. இது ‘மிகுந்த உபத்திரவத்தின்’ கடைசியில் நடக்கும். (மத். 24:21) அந்த சமயத்தில் யெகோவாதான் உண்மையான கடவுள் என்பதை எல்லாரும் தெரிந்துகொள்வார்கள். அப்போது யெகோவா இப்படி சொல்வார்: “இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் [யெகோவா] என்று அறிந்துகொள்வார்கள்.” (எசே. 38:18-23) எனவே, நாம் காப்பாற்றபட வேண்டும் என்றால் யெகோவாவுடைய மக்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும்.

‘மிகுந்த உபத்திரவத்தில்’ காப்பாற்றபட வேண்டும் என்றால் உங்கள் சபையில் இருப்பவர்களோடு சேர்ந்து இருங்கள் (பாராக்கள் 16-18)

17, 18. (அ) சாத்தான் நம்மை அழிக்க வரும்போது யெகோவா என்ன செய்வார்? (ஆ) யெகோவா நம்மை பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

17 சாத்தான் அழிக்க வரும்போது யெகோவா அவருடைய மக்களிடம், “எனது ஜனங்களே! உங்கள் அறைக்குள் போங்கள். உங்கள் கதவுகளை மூடுங்கள். கொஞ்ச காலத்திற்கு உங்கள் அறைகளில் ஒளிந்திருங்கள். தேவனுடைய கோபம் முடியும்வரை ஒளிந்திருங்கள்” என்று சொல்வார். (ஏசா. 26:20, ஈஸி டு ரீட் வர்ஷன்) இங்கு ‘அறைகள்’ என்பது நம்முடைய சபைகளோடு ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம். நாம் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா அந்த சமயத்தில் நமக்கு சொல்வார்.

18 யெகோவாவுக்கென்று மக்கள் இன்றும் பூமியில் இருக்கிறார்கள். யெகோவா கொடுக்கும் ஆலோசனைகளை கேட்பதற்காக சபை கூட்டங்களுக்கு போகிறார்கள். மிகுந்த உபத்திரவத்தில் நாம் காப்பாற்றபட வேண்டும் என்றால் அந்த மக்களோடு நாம் சேர்ந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டங்களுக்கு தவறாமல் போக வேண்டும். அப்படி செய்தால் தாவீதைப் போல் நாமும் இப்படி சொல்வோம்: “இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.”—சங். 3:8.