மத்தேயு எழுதியது 13:1-58

13  அதே நாளில் இயேசு வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக உட்கார்ந்திருந்தார்.  மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே திரண்டு வந்ததால், அவர் ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; அந்த மக்கள் எல்லாரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தார்கள்.+  அப்போது, உவமைகள் மூலம் அவர்களுக்கு நிறைய விஷயங்களைச் சொன்னார்.+ “இதோ! விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் போனான்.+  அவன் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன.+  வேறு சில விதைகள் மண் அதிகமாக இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன; அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் வேர்பிடிக்கவில்லை.+  அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கி காய்ந்துபோயின.  இன்னும் சில விதைகள் முட்செடிகள் இருக்கிற நிலத்தில் விழுந்தன; அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன.+  மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தர ஆரம்பித்தன; அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன.+  காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”+ என்று சொன்னார். 10  சீஷர்கள் அவரிடம் வந்து, “ஏன் அவர்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.+ 11  அதற்கு அவர், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப்+ புரிந்துகொள்ளும் பாக்கியம்* உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. 12  இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றுக்கொள்வான்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.+ 13  அவர்கள் பார்த்தும் பார்க்காதவர்களாகவும், கேட்டும் கேட்காதவர்களாகவும், புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள்.+ அதனால்தான், நான் அவர்களிடம் உவமைகளின் மூலம் பேசுகிறேன். 14  ஏசாயா சொன்ன இந்தத் தீர்க்கதரிசனம் அவர்களிடம் நிறைவேறுகிறது: ‘காதால் கேட்டாலும் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்; கண்ணால் பார்த்தாலும் ஒருபோதும் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.+ 15  இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும் காதுகளால் கேட்காமலும் இதயத்தால் உணராமலும் என்னிடம் திரும்பி வராமலும் நான் அவர்களைக் குணப்படுத்தாமலும் இருக்கும்படி, அவர்களுடைய இதயம் இறுகிப்போயிருக்கிறது;* இவர்கள் தங்கள் காதால் மந்தமாய்* கேட்கிறார்கள், தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.’+ 16  ஆனால், உங்களுடைய கண்கள் பார்ப்பதாலும் உங்களுடைய காதுகள் கேட்பதாலும் நீங்கள் சந்தோஷமானவர்கள்.+ 17  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நிறைய தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் பார்க்கிறவற்றைப் பார்க்க ஆசைப்பட்டும் பார்க்கவில்லை;+ நீங்கள் கேட்கிறவற்றைக் கேட்க ஆசைப்பட்டும் கேட்கவில்லை. 18  இப்போது, விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் அர்த்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்.+ 19  பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோக அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டும் அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை; பொல்லாதவன்+ வந்து அவருடைய இதயத்தில் விதைக்கப்பட்டதைக் கொத்திக்கொண்டு போய்விடுகிறான்.+ 20  பாறை நிலத்தைப் போல் இருப்பவர் அந்தச் செய்தியைக் கேட்டு, அதை உடனே சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.+ 21  ஆனால், அது அவருக்குள் வேர்விடுவதில்லை; அதனால், அவர் கொஞ்சக் காலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கிறார்; அந்தச் செய்தியின் காரணமாக உபத்திரவமோ துன்புறுத்தலோ வந்தவுடன் விசுவாசத்தை விட்டுவிடுகிறார். 22  முட்செடிகள் இருக்கிற நிலத்தைப் போல் இருப்பவர் அந்தச் செய்தியைக் கேட்கிறார், ஆனால் இந்த உலகத்தின் கவலையும்+ செல்வத்தின் வஞ்சக சக்தியும்* அந்தச் செய்தியை நெருக்கிப் போடுவதால் அது* பலன் கொடுப்பதில்லை.+ 23  நல்ல நிலத்தைப் போல் இருப்பவரோ அந்தச் செய்தியைக் கேட்டு அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பலன் தருகிறார்; அவர் 100 மடங்காகவும், இன்னொருவர் 60 மடங்காகவும், வேறொருவர் 30 மடங்காகவும் பலன் தருகிறார்கள்”+ என்று சொன்னார். 24  பின்பு, அவர் வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: “பரலோக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒரு மனுஷரைப் போல் இருக்கிறதென்று சொல்லலாம்.+ 25  ஆட்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய எதிரி வந்து கோதுமைப் பயிர்களுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். 26  பயிர்கள் வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் வளர்ந்திருந்தன. 27  அதனால், அந்த மனுஷருடைய வேலைக்காரர்கள் அவரிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் வயலில் நல்ல விதையைத்தானே விதைத்தீர்கள்? அப்படியிருக்கும்போது, களைகள் எப்படி வளர்ந்தன?’ என்று கேட்டார்கள். 28  ‘இது எதிரியின் வேலை’+ என்று அவர் சொன்னார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடலாமா?’ என்று கேட்டார்கள். 29  அப்போது அவர், ‘வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்; களைகளைப் பிடுங்கும்போது தெரியாமல் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கிவிடுவீர்கள். 30  அதனால் அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்; அறுவடைக் காலம் வந்ததும் அறுவடை செய்கிறவர்களிடம், “முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை எரித்துப்போடுவதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள், அதன் பின்பு கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்”+ என்று சொல்வேன்’ என்றார்.” 31  பின்பு, அவர் மற்றொரு உவமையை அவர்களிடம் சொன்னார்; “பரலோக அரசாங்கம் கடுகு விதையைப் போல் இருக்கிறது; ஒருவன் அதை எடுத்து தன்னுடைய வயலில் விதைத்தான்.+ 32  அது எல்லா விதைகளையும்விட மிகச் சிறிய விதை; ஆனால், அது வளர்ந்த பின்பு எல்லா செடிகளையும்விட பெரிதாகி, வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கும் அளவுக்கு ஒரு மரமாகிறது” என்றார். 33  பின்பு, அவர் வேறொரு உவமையையும் அவர்களுக்குச் சொன்னார்; “பரலோக அரசாங்கம் புளித்த மாவைப் போல் இருக்கிறது; ஒரு பெண் அதை மூன்று பெரிய படி மாவில் கலந்து வைத்தாள்; அந்த மாவு முழுவதும் புளித்துப்போனது”+ என்றார். 34  திரண்டு வந்திருந்த மக்களிடம் உவமைகள் மூலமாகவே இவை எல்லாவற்றையும் இயேசு சொன்னார். சொல்லப்போனால், உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர்களிடம் அவர் பேசியதே இல்லை;+ 35  “நான் வாய் திறந்து உவமைகளாகவே பேசுவேன்; ஆரம்பத்திலிருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களை நான் அறிவிப்பேன்” என்று தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது+ நிறைவேறும்படியே அப்படி நடந்தது. 36  பின்பு, அந்தக் கூட்டத்தாரை அவர் அனுப்பிவிட்டு வீட்டுக்குள் போனார். அப்போது, சீஷர்கள் அவரிடம் வந்து, “வயலில் விதைக்கப்பட்ட களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்குங்கள்” என்று கேட்டார்கள். 37  அதற்கு அவர், “நல்ல விதையை விதைக்கிறவர், மனிதகுமாரன்; 38  வயல், இந்த உலகம்;+ நல்ல விதை, கடவுளுடைய அரசாங்கத்தின் மகன்கள்; களைகளோ, பொல்லாதவனின் மகன்கள்;+ 39  அவற்றை விதைத்த எதிரி, பிசாசு; அறுவடை, இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்; அறுவடை செய்கிறவர்கள், தேவதூதர்கள். 40  அதனால், களைகளெல்லாம் ஒன்றுசேர்க்கப்பட்டு நெருப்பில் போடப்படுவதுபோல் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்திலும் நடக்கும்.+ 41  மனிதகுமாரன் தன்னுடைய தூதர்களை அனுப்புவார்; மற்றவர்களைப் பாவம் செய்ய வைக்கிற எல்லாரையும்* அக்கிரமம் செய்கிற எல்லாரையும் அவருடைய அரசாங்கத்திலிருந்து அவர்கள் பிரித்தெடுத்து, 42  கொழுந்துவிட்டு எரியும் சூளையில் வீசிவிடுவார்கள்.+ அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள். 43  அந்தச் சமயத்தில், நீதிமான்கள் தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்.+ காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும். 44  பரலோக அரசாங்கம் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தைப் போல் இருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டுபிடித்து, மறுபடியும் அங்கே மறைத்து வைக்கிறான்; பின்பு சந்தோஷத்தோடு போய், தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.+ 45  பரலோக அரசாங்கம் அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் போல் இருக்கிறது. 46  விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடித்ததும், அவன் போய்த் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் உடனடியாக விற்று அதை வாங்கிக்கொண்டான்.+ 47  அதோடு, பரலோக அரசாங்கம், கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொள்கிற இழுவலையைப் போல் இருக்கிறது. 48  வலை நிறைந்ததும் மீனவர்கள் அதைக் கடற்கரைக்கு இழுத்துக்கொண்டுவந்து, அங்கே உட்கார்ந்து நல்ல மீன்களைக்+ கூடைகளில் சேகரிப்பார்கள், ஆகாதவற்றையோ+ தூக்கியெறிவார்கள். 49  அப்படியே இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்திலும் நடக்கும்.+ தேவதூதர்கள் புறப்பட்டுப் போய் நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைத் தனியாகப் பிரித்து, 50  கொழுந்துவிட்டு எரியும் சூளையில் அவர்களை வீசிவிடுவார்கள். அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்”* என்று சொன்னார். 51  பின்பு, “இவை எல்லாவற்றின் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொண்டீர்களா?” என்று கேட்டார். அவர்கள், “புரிந்துகொண்டோம்” என்று சொன்னார்கள். 52  அதற்கு அவர், “அப்படியானால் பரலோக அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டு* அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிற ஒவ்வொருவரும், தன்னுடைய பொக்கிஷத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளியே எடுக்கிற வீட்டு எஜமானைப் போல் இருக்கிறார்கள்” என்று சொன்னார். 53  இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்த பின்பு அந்த இடத்தைவிட்டுப் போனார். 54  தன்னுடைய சொந்த ஊருக்கு+ வந்த பின்பு அங்கிருந்த ஜெபக்கூடத்தில் மக்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார்; அப்போது அவர்கள் பிரமித்துப்போய், “இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது? இவனால் எப்படி இந்த அற்புதங்களைச் செய்ய முடிகிறது?+ 55  இவன் தச்சனுடைய மகன்தானே?+ இவனுடைய அம்மா மரியாள்தானே? இவனுடைய சகோதரர்கள் யாக்கோபு, யோசே, சீமோன், யூதாஸ்தானே?+ 56  இவனுடைய சகோதரிகளும் நம்முடைய ஊரில்தானே இருக்கிறார்கள்? அப்படியிருக்கும்போது, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது?”+ என்று சொல்லி, 57  அவர்மேல் விசுவாசம் வைக்க மறுத்தார்கள்.+ இயேசு அவர்களிடம், “ஒரு தீர்க்கதரிசிக்கு அவருடைய ஊரிலும் வீட்டிலும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மதிப்புக் கிடைக்கிறது” என்று சொன்னார்.+ 58  அவர்கள் விசுவாசம் வைக்காததால், அங்கே நிறைய அற்புதங்களை அவர் செய்யவில்லை.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

உட்கார்ந்தார்: உட்கார்ந்து கற்பிப்பது யூதப் போதகர்களின் வழக்கமாக இருந்தது.—மத் 5:1, 2.

கடற்கரையில்: கப்பர்நகூமுக்குப் பக்கத்தில், கலிலேயா கரையோரத்தில், திறந்தவெளி அரங்கம்போல் இயற்கையாக அமைந்த ஒரு பகுதி இருக்கிறது. ஒலி நன்றாகக் கேட்கும் விதத்தில் அந்தப் பகுதி அமைந்திருக்கிறது; அதனால், இயேசு ஒரு படகில் உட்கார்ந்தபடி பேசியதை அங்கு திரண்டுவந்திருந்த மக்கள் கூட்டத்தால் நன்றாகக் கேட்க முடிந்திருக்கும்.

உவமைகள்: வே.வா., “நீதிக் கதைகள்; உருவகக் கதைகள்.” இதற்கான கிரேக்க வார்த்தை, பாராபோலே. இதன் நேரடி அர்த்தம், “ஒன்றுக்குப் பக்கத்தில் (ஒன்றோடு சேர்த்து) வைப்பது.” இது ஒரு உருவகக் கதையாக, ஒரு பழமொழியாக, அல்லது ஒரு உதாரணமாக இருக்கலாம். இயேசு, அடிக்கடி ஒரு விஷயத்தை அதேபோன்ற இன்னொரு விஷயத்துக்குப் ‘பக்கத்தில் வைத்து,’ அதாவது இன்னொரு விஷயத்தோடு ஒப்பிட்டு, பேசினார். (மாற் 4:30) இயேசு சுருக்கமான உவமைகளைப் பயன்படுத்தினார். அவை பொதுவாக, ஏதோவொரு ஒழுக்க அல்லது ஆன்மீக நெறியை உணர்த்தும் கற்பனைக் கதைகளாக இருந்தன.

இதோ!: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பாறை நிலத்தில்: ஆங்காங்கே பாறைகள் இருக்கும் நிலத்தை இது குறிப்பதில்லை. ஆனால் நிலத்துக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்கைக் குறிக்கிறது. அங்கே அதிக மண் இருக்காது. இப்படிப்பட்ட நிலத்தில் விதைகள் ஆழமாக வேர்பிடிக்காது; ஏனென்றால், அவற்றுக்குத் தேவையான ஈரப்பதம் அங்கே இருக்காது.

முட்செடிகள் இருக்கிற நிலத்தில்: அநேகமாக, அடர்த்தியான முட்புதர்களை அல்ல, ஆனால் உழப்பட்ட நிலத்திலிருந்து நீக்கப்படாத களைகளைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். அந்தக் களைகள் வளர்ந்து, புதிதாக விதைக்கப்பட்ட விதைகளை வளரவிடாமல் செய்துவிடும்.

இந்த உலகத்தின்: உலகம் என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஏயோன். இதன் அடிப்படை அர்த்தம், “சகாப்தம்.” இது, ஒரு குறிப்பிட்ட காலத்தை, காலகட்டத்தை, அல்லது சகாப்தத்தை மற்ற காலப்பகுதிகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிற நிலைமைகளை அல்லது அம்சங்களைக் குறிக்கலாம். இந்த உலக வாழ்க்கையில் வரும் கவலைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக இந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.​—சொல் பட்டியலில் “சகாப்தம் (சகாப்தங்கள்)” என்ற தலைப்பைப் பாருங்கள்.

களைகளை விதைத்துவிட்டு: இதுபோல் வெறுப்பைக் காட்டுவது பழங்கால மத்தியக் கிழக்கு நாடுகளில் சகஜமாக இருந்தது.

களைகளை: இங்கே களைகள் என்பது புல் குடும்பத்தைச் சேர்ந்த டார்னல் (லோலியம் டெமுலேன்ட்டம்) என்ற விஷச் செடிகளாக இருக்கலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆரம்பப் பருவத்தில், அதாவது முற்றுவதற்கு முன்பு, கோதுமைப் பயிர் பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தச் செடிகளும் இருக்கும்.

தெரியாமல் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கிவிடுவீர்கள்: கோதுமைப் பயிர்களின் வேர்களும் களைகளின் வேர்களும் பின்னிப்பிணைந்திருக்கும். அதனால், களைகளைக் கண்டுபிடிக்க முடிந்தாலும், அவற்றைப் பிடுங்கினால் கோதுமைப் பயிர்களும் கையோடு வந்துவிடும்.

களைகளைப் பிடுங்கி: டார்னல் செடிகள் (மத் 13:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) நன்றாக வளர்ந்த பிறகு, அவற்றுக்கும் கோதுமைப் பயிர்களுக்கும் வித்தியாசம் தெளிவாகத் தெரியும்.

கடுகு விதையை: பல வகையான கடுகுச் செடிகள் இஸ்ரவேலின் காட்டுப்பகுதிகளில் வளருகின்றன. பொதுவாக, கருங்கடுகு (பிராஸிக்கா நிக்ரா) அதிகமாகப் பயிர் செய்யப்பட்டது. இந்தச் சின்னஞ்சிறு விதையின் விட்டம் 1-1.6 மி.மீ. (0.039-0.063 அங்.), அதன் எடை 1 மி.கி. ஆனால், இந்த விதையிலிருந்து வளரும் செடி மரம்போல் பெரிதாக இருக்கும். சில வகையான கடுகுச் செடிகள் 4.5 மீ. (15 அடி) உயரத்துக்குக்கூட வளருகின்றன.

எல்லா விதைகளையும்விட மிகச் சிறிய விதை: பழங்கால யூதப் பதிவுகள், மிகச் சிறிய அளவைக் குறிப்பதற்காகக் கடுகு விதையை அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகின்றன. அதைவிடச் சின்ன விதைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உண்மைதான்; ஆனால், இயேசுவின் காலத்தில் கலிலேயாவைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த அல்லது விதைத்த விதைகளிலேயே அநேகமாகக் கடுகு விதைதான் சின்னதாக இருந்தது.

புளித்த மாவை: புளித்த மாவு என்பது ஏற்கெனவே புளித்துப்போயிருக்கும் மாவிலிருந்து எடுக்கப்பட்ட சிறிதளவு மாவைக் குறித்தது; புதிய மாவைப் புளிக்க வைப்பதற்காக அதனோடு இது சேர்க்கப்பட்டது. ரொட்டி செய்யப்பட்ட முறையைப் பற்றித்தான் இயேசு இங்கே பேசிக்கொண்டிருந்தார். பைபிள், புளித்த மாவைப் பாவத்துக்கும் முறைகேட்டுக்கும் அடையாளமாக அடிக்கடி பயன்படுத்தினாலும் (மத் 16:6-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்), அது எப்போதுமே கெட்ட விஷயங்களைக் குறிப்பதில்லை (லேவி 7:11-15). இந்த வசனத்தில், ஏதோவொரு நல்ல விஷயம் பரவுவதை அது அநேகமாகக் குறிக்கிறது.

பெரிய படி: நே.மொ., “சியா அளவு.” ஒரு சியா என்பது 7.33 லி.​—சொல் பட்டியலில் “சியா” என்ற தலைப்பையும், இணைப்பு B14-ஐயும் பாருங்கள்.

ஆரம்பத்திலிருந்து: அல்லது, “உலகம் உண்டானதுமுதல்; உலகத்தின் ஆரம்பத்திலிருந்து.” சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் “உலகம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கிறது. (மத் 25:34-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.) ஆனால், மற்ற பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் வெறுமனே “ஆரம்பத்திலிருந்து” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே: இந்த வசனம் சங் 78:2-ஐ மேற்கோள் காட்டுகிறது. அந்த சங்கீதத்தை எழுதியவர் (இங்கே “தீர்க்கதரிசி” என்று சொல்லப்படுபவர்), இஸ்ரவேல் தேசத்துக்காகக் கடவுள் என்னவெல்லாம் செய்தார் என்பதைப் பற்றி விவரிப்பதற்கு சொல்லோவியங்களைப் பயன்படுத்தினார். அதேபோல் இயேசு, தன் சீஷர்களுக்கும் தன்னைப் பின்பற்றி வந்த மக்களுக்கும் கற்றுக்கொடுத்த நிறைய உவமைகளில் சொல்லோவியங்களைப் பயன்படுத்தினார்.​—மத் 1:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

உலகம்: உலக மக்களைக் குறிக்கிறது.

சகாப்தத்தின்: வே.வா., “உலகத்தின்.”​—மத் 13:22; 24:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், சொல் பட்டியலில் “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்”; “சகாப்தம் (சகாப்தங்கள்)” என்ற தலைப்புகளையும் பாருங்கள்.

கடைசிக் கட்டம்: இதற்கான கிரேக்க வார்த்தை சின்டீலீயா. இது மத் 13:40, 49; 24:3; 28:20; எபி 9:26 ஆகிய வசனங்களிலும் வருகிறது.​—மத் 24:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” என்ற தலைப்பையும் பாருங்கள்.

அழுது அங்கலாய்ப்பார்கள்: மத் 8:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

எல்லாவற்றையும்: இதற்கான கிரேக்க வார்த்தை பான்ட்டா. இந்த வார்த்தை ஒரு பழங்காலக் கையெழுத்துப் பிரதியில் இல்லை என்றாலும், அதற்கு முன்பும் பின்பும் எழுதப்பட்ட மற்ற பல கையெழுத்துப் பிரதிகளில் இருக்கிறது.

முத்தை: பைபிள் காலங்களில், செங்கடல், பெர்சிய வளைகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய கடல் பகுதிகளிலிருந்துதான் விலை உயர்ந்த முத்துக்கள் எடுக்கப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு முத்தைத் தேடி ஒரு வியாபாரி பயணம் செய்ய வேண்டியிருந்ததாகவும், அதைக் கண்டுபிடிக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாகவும் இயேசு ஏன் சொன்னார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

ஆகாதவற்றையோ: ஒருவேளை, திருச்சட்டத்தின்படி சாப்பிடக் கூடாத அசுத்தமான மீன்களை, அதாவது துடுப்புகளும் செதில்களும் இல்லாத மீன்களை, குறித்திருக்கலாம். அல்லது, சாப்பிடுவதற்குத் தகுந்ததாக இல்லாத மற்ற மீன்களைக் குறித்திருக்கலாம்.—லேவி 11:9-12; உபா 14:9, 10.

இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்திலும்: மத் 13:39; 24:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், சொல் பட்டியலில் “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்”; “சகாப்தம் (சகாப்தங்கள்)” என்ற தலைப்புகளையும் பாருங்கள்.

மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிற: வே.வா., “அறிஞர்.” இதற்கான கிரேக்க வார்த்தை ஃக்ராம்மாட்டியஸ். திருச்சட்டத்தில் புலமைபெற்ற யூதப் போதகர்களைக் குறிக்கும்போது இது “வேத அறிஞர்கள்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் இந்த வசனத்தில், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியைப் பெற்றிருந்த இயேசுவின் சீஷர்களைக் குறிக்கிறது.

தன்னுடைய சொந்த ஊருக்கு: நே.மொ., “தன்னுடைய அப்பாவின் இடத்துக்கு.” இது, அவருடைய குடும்பத்தாரின் ஊராகிய நாசரேத்தைக் குறிக்கிறது.

தச்சனுடைய மகன்தானே: ‘தச்சன்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை டீக்டான். இது, எந்தவொரு கைத்தொழிலாளியையோ கட்டிடக் கலைஞரையோ குறிக்கும் பொதுவான வார்த்தை. மரவேலை செய்யும் ஒருவரைக் குறிக்கும்போது, கட்டிடத் தொழில் செய்கிற, அல்லது நாற்காலிகளையும் மேஜைகளையும் மற்ற மரச் சாமான்களையும் செய்கிற ஒருவரை அர்த்தப்படுத்துகிறது. இயேசு “மனிதர்களோடு இருந்தபோது, கலப்பைகளையும் நுகத்தடிகளையும் செய்த தச்சராக இருந்தார்” என்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜஸ்டின் மார்ட்டர் எழுதினார். பழங்கால மொழிகளில் இருந்த ஆரம்பகால பைபிள் மொழிபெயர்ப்புகளும், அவர் மரவேலை செய்தவர் என்றே குறிப்பிடுகின்றன. இயேசு “தச்சனுடைய மகன்” என்றும், “தச்சன்” என்றும் அழைக்கப்பட்டார். (மாற் 6:3) அநேகமாக, இயேசு தன்னுடைய வளர்ப்புத் தந்தையான யோசேப்பிடமிருந்து தச்சு வேலையைக் கற்றிருப்பார். பொதுவாக, அன்று பிள்ளைகளுக்குச் சுமார் 12-15 வயதில் ஆரம்பித்து நிறைய வருஷங்களுக்கு இப்படிப்பட்ட தொழில் கற்றுத்தரப்பட்டது.

சகோதரர்கள்: சகோதரர் என்பதற்கான கிரேக்க வார்த்தை, அடெல்ஃபோஸ். பைபிளில் இந்த வார்த்தை ஆன்மீகச் சகோதரரைக் குறிக்கலாம். ஆனால், இந்த வசனத்தில் இது இயேசுவுடைய தாயின் வயிற்றில் பிறந்தவர்களைக் குறிக்கிறது; அதாவது, யோசேப்பு மற்றும் மரியாளின் இளைய மகன்களைக் குறிக்கிறது. இயேசு பிறந்த பிறகும் மரியாள் கன்னியாகவே இருந்ததாக நம்புகிற சிலர், இங்கே அடெல்ஃபோஸ் என்ற வார்த்தை ஒன்றுவிட்ட சகோதரர்களை (பெற்றோரின் உடன் பிறந்தவர்களுடைய பிள்ளைகளை) குறிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ‘ஒன்றுவிட்ட சகோதரரை’ குறிப்பதற்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் வேறொரு வார்த்தையை (கிரேக்கில், அனேப்சியோஸ்; கொலோ 4:10) பயன்படுத்துகிறது; ‘பவுலுடைய சகோதரியின் மகனை’ குறிப்பதற்கும் இன்னொரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (அப் 23:16). அதோடு, லூ 21:16-ல் அடெல்ஃபோஸ், சீஜ்ஜீனேஸ் என்ற கிரேக்க வார்த்தைகள் பன்மையில் கொடுக்கப்பட்டுள்ளன (“சகோதரர்களும் சொந்தக்காரர்களும்” என்று அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன). இந்த உதாரணங்கள் காட்டுகிறபடி, குடும்ப உறவுகளைக் குறிக்கும் வார்த்தைகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் ஏனோதானோவென்று பயன்படுத்தப்படாமல், திட்டவட்டமாகவும் கவனமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

யாக்கோபு: இவர் இயேசுவின் தாயான மரியாளுக்கும் யோசேப்புக்கும் பிறந்தவர். அப் 12:17-லிலும் கலா 1:19-லிலும் சொல்லப்பட்டிருக்கிற யாக்கோபும், பைபிளிலுள்ள யாக்கோபு புத்தகத்தை எழுதியவரும் அநேகமாக இவர்தான்.—யாக் 1:1.

யூதாஸ்தானே: இந்த யூதாஸ் இயேசுவின் தாயான மரியாளுக்கும் யோசேப்புக்கும் பிறந்தவர். பைபிளிலுள்ள யூதா புத்தகத்தை எழுதிய யூதா (கிரேக்கில், இயூதாஸ்) அநேகமாக இவர்தான்.—யூ 1.

மீடியா

கப்பர்நகூமுக்குப் பக்கத்தில் இருந்த கலிலேயா கடல் பகுதி
கப்பர்நகூமுக்குப் பக்கத்தில் இருந்த கலிலேயா கடல் பகுதி

இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதால், அன்று இருந்த கலிலேயா கடலின் நீர்மட்டமும் இயற்கை அமைப்பும் இப்போது மாறிவிட்டன. ஆனால், இயேசு ஒரு படகில் உட்கார்ந்தபடி மக்களிடம் பேசியது இந்தப் பகுதியாக இருந்திருக்கலாம். இயேசுவின் குரல் அந்தத் தண்ணீரின் மேற்பரப்பில் பட்டு எதிரொலித்ததால் எல்லாருக்கும் கேட்டிருக்கும்.

விதை விதைப்பது
விதை விதைப்பது

பைபிள் காலங்களில், பல விதங்களில் விதைகள் விதைக்கப்பட்டன. விதைப்பவர்கள் சிலர் ஒரு பையில் விதைகளை நிரப்பி, அதைத் தங்கள் தோளில் மாட்டிக்கொண்டு, இடுப்பிலும் கட்டியிருப்பார்கள்; மற்றவர்கள் தங்களுடைய மேலங்கியின் ஒரு பகுதியில் மடிப்புபோல் செய்து அதில் விதைகளைப் போட்டுக்கொள்வார்கள். பிறகு, விதைகளை அள்ளி வீசுவார்கள். வயல்களில் இருந்த வரப்புகளில் மண் இறுகிப்போயிருந்ததால், விதைப்பவர்கள் நல்ல மண்ணில் மட்டும் விதைகளைக் கவனமாகத் தூவ வேண்டியிருந்தது. விதைகளைப் பறவைகள் தின்றுவிடாதபடி அவற்றை உடனடியாக மண்ணினால் மூட வேண்டியிருந்தது.

மசாடாவில் இருக்கிற பழங்காலக் களஞ்சியங்களின் இடிபாடுகள்
மசாடாவில் இருக்கிற பழங்காலக் களஞ்சியங்களின் இடிபாடுகள்

இஸ்ரவேலின் எல்லா பகுதிகளிலும் களஞ்சியங்கள் இருந்தன. போரடிக்கப்பட்ட தானியங்கள் அவற்றில் சேமித்து வைக்கப்பட்டன. சில களஞ்சியங்களில் எண்ணெயும், திராட்சமதுவும் சேமித்து வைக்கப்பட்டன; விலை உயர்ந்த உலோகங்கள் அல்லது கற்கள்கூட சேமித்து வைக்கப்பட்டன.

அறுவடை செய்கிறவர்கள்
அறுவடை செய்கிறவர்கள்

பைபிள் காலங்களில், அறுவடை செய்தவர்கள் சிலசமயங்களில் தானியப் பயிர்களை நிலத்திலிருந்து வெறுமனே பிடுங்கினார்கள். ஆனால், பெரும்பாலான சமயங்களில் அவற்றை அரிவாளால் அறுத்தெடுத்தார்கள். (மாற் 4:29) வயலில் இருந்த முற்றிய கதிர்களை அறுவடை செய்தவர்கள் தொகுதி தொகுதியாக சேர்ந்துதான் வேலை செய்தார்கள். (ரூ 2:3; 2ரா 4:18) சாலொமோன் ராஜா, ஓசியா தீர்க்கதரிசி, அப்போஸ்தலன் பவுல் போன்ற பைபிள் எழுத்தாளர்கள் பலர், முக்கியமான உண்மைகளைப் புரியவைப்பதற்கு அறுவடை வேலையை உவமையாகப் பயன்படுத்தினார்கள். (நீதி 22:8; ஓசி 8:7; கலா 6:7-9) எல்லாருக்கும் தெரிந்த இந்த வேலையை இயேசுவும் உவமையாகப் பயன்படுத்தினார்; சீஷராக்கும் வேலையில் தேவதூதர்களுக்கும் தன் சீஷர்களுக்கும் பங்கு இருக்கும் என்பதை அந்த உவமையில் எடுத்துக்காட்டினார்.—மத் 13:24-30, 39; யோவா 4:35-38.

கடுகு விதை
கடுகு விதை

கலிலேயாவைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த அல்லது விதைத்த விதைகளிலேயே அநேகமாகக் கடுகு விதைதான் சின்னதாக இருந்தது. பழங்கால யூதப் பதிவுகள், மிகச் சிறிய அளவைக் குறிப்பதற்காகக் கடுகு விதையை அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகின்றன.

மீனவர்கள் பயன்படுத்தும் இழுவலை
மீனவர்கள் பயன்படுத்தும் இழுவலை

இயேசுவின் காலத்தில், ஆளிவிதைச் செடியின் நார்களிலிருந்து இழுவலைகள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சில பதிவுகளின்படி, ஒரு இழுவலை 300 மீ. (சுமார் 1,000 அடி) நீளத்தில் இருந்திருக்கலாம். அதன் அடிப்பகுதியில் கனமான பொருள்களும், மேல்பகுதியில் மிதவைகளும் இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இழுவலையைத் தண்ணீருக்குள் போடுவதற்கு மீனவர்கள் ஒரு படகைப் பயன்படுத்தினார்கள். சிலசமயங்களில், வலையின் முனைகளில் இணைக்கப்பட்டிருந்த நீளமான கயிறுகளைக் கரைக்கு எடுத்துவந்தார்கள். அந்த ஒவ்வொரு கயிற்றையும் நிறைய ஆட்கள் ஒன்றுசேர்ந்து மெதுமெதுவாகக் கரைக்கு இழுத்தார்கள். அந்த வலை எல்லாவற்றையும் வாரிக்கொண்டு வந்தது.