ரோமர் 2:1-29

2  அதனால் சகோதரர்களே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி,+ மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று நியாயந்தீர்த்துவிட்டு, சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. மற்றவர்களை நீங்கள் நியாயந்தீர்க்கும்போது, உங்களுக்கு நீங்களே தண்டனைத் தீர்ப்பு கொடுத்துக்கொள்கிறீர்கள். ஏனென்றால், அந்தச் செயல்களையே நீங்களும் செய்துவருகிறீர்கள்.+  அப்படிப்பட்ட செயல்களைச் செய்துவருகிறவர்களுக்குக் கடவுள் கொடுக்கிற நியாயத்தீர்ப்பு சத்தியத்தின் அடிப்படையில் இருக்கும் என்று நமக்குத் தெரியும்.  சகோதரர்களே, அப்படிப்பட்ட செயல்களைச் செய்துவருகிறவர்களை நியாயந்தீர்க்கிற நீங்களே அவற்றைச் செய்யும்போது, கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று எப்படி நினைக்கிறீர்கள்?  கடவுள் தன்னுடைய கருணையால் உங்களை மனம் திருந்தத் தூண்டுகிறார் என்று தெரியாமல்,+ அவருடைய மகா கருணையையும்+ சகிப்புத்தன்மையையும்+ பொறுமையையும்+ அலட்சியம் செய்கிறீர்களா?  நீங்கள் பிடிவாதக்காரர்களாகவும் மனம் திருந்தாதவர்களாகவும் இருப்பதால், கடவுளுடைய கடும் கோபத்தைச் சம்பாதித்துக்கொள்கிறீர்கள். அவர் தன்னுடைய நீதியான தீர்ப்பை வழங்கும் நாளில் அந்தக் கோபத்தை வெளிக்காட்டுவார்.+  அப்போது, அவனவனுடைய செயல்களுக்குத் தக்க பலனை அவனவனுக்குத் தருவார்:+  சோர்ந்துவிடாமல் நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் மகிமையையும் மதிப்பையும் அழியாமையையும்+ தேடுகிறவர்களுக்கு முடிவில்லாத வாழ்வைத் தருவார்.  ஆனால், சண்டைக்காரர்கள்மேலும் சத்தியத்துக்குக் கீழ்ப்படியாமல் அநீதிக்குக் கீழ்ப்படிகிறவர்கள்மேலும் அவர் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டுவார்.+  கெட்ட செயல்களைச் செய்கிற ஒவ்வொருவனுக்கும் உபத்திரவத்தையும் மிகுந்த வேதனையையும் கொடுப்பார். முதலில் யூதர்களுக்கும் பின்பு கிரேக்கர்களுக்கும் அப்படிக் கொடுப்பார். 10  ஆனால், நல்ல செயல்களைச் செய்கிற ஒவ்வொருவனுக்கும் மகிமையையும் மதிப்பையும் சமாதானத்தையும் கொடுப்பார். முதலில் யூதர்களுக்கும்+ பின்பு கிரேக்கர்களுக்கும்+ அப்படிக் கொடுப்பார். 11  ஏனென்றால், கடவுள் பாரபட்சம் காட்டாதவர்.+ 12  உதாரணத்துக்கு, திருச்சட்டம் இல்லாமல் பாவம் செய்த எல்லாரும் திருச்சட்டம் இல்லாமல் அழிந்துபோவார்கள்.+ ஆனால், திருச்சட்டத்தின்கீழ் பாவம் செய்த எல்லாரும் திருச்சட்டத்தால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.+ 13  திருச்சட்டத்தை வெறுமனே கேட்கிறவர்கள் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். திருச்சட்டத்தின்படி நடக்கிறவர்கள்தான் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.+ 14  திருச்சட்டம் இல்லாத மற்ற தேசத்து மக்கள் இயல்பாகவே திருச்சட்டத்தின்படி நடக்கும்போதெல்லாம், அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாதபோதிலும்,+ தங்களுக்குத் தாங்களே திருச்சட்டமாக இருக்கிறார்கள். 15  திருச்சட்டத்திலுள்ள விஷயங்கள் தங்களுடைய இதயத்தில் எழுதப்பட்டிருப்பதைச் செயலில் காட்டுகிறார்கள். தங்களுடைய மனசாட்சி சொல்கிற சாட்சியை யோசித்துப் பார்த்து, தாங்கள் குற்றமுள்ளவர்களா குற்றமில்லாதவர்களா என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள். 16  நான் அறிவிக்கிற நல்ல செய்தியின்படி மனிதர்களுடைய ரகசியமான காரியங்களைக் கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் நியாயந்தீர்க்கப்போகிறார்,+ அப்படி நியாயந்தீர்க்கிற நாளில் இதெல்லாம் நடக்கும். 17  நீங்கள் உங்களை யூதர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்,+ திருச்சட்டத்தைச் சார்ந்திருக்கிறீர்கள், கடவுளோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறீர்கள். 18  திருச்சட்டம் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதால்* கடவுளுடைய விருப்பம்* என்ன என்பதைத் தெரிந்திருக்கிறீர்கள்,+ மதிப்புமிக்க காரியங்களைப் பகுத்தறிந்துகொள்கிறீர்கள். 19  பார்வை இல்லாதவர்களுக்கு வழிகாட்டியாகவும், இருட்டில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சமாகவும், 20  புத்தி இல்லாதவர்களுக்குப் புத்திசொல்கிறவர்களாகவும், முதிர்ச்சி இல்லாதவர்களுக்கு ஆசிரியர்களாகவும் இருப்பதாக நம்புகிறீர்கள். அதோடு, கடவுளைப் பற்றிய அடிப்படை அறிவையும் உண்மையையும் திருச்சட்டத்திலிருந்து தெரிந்துவைத்திருப்பதாகவும் நம்புகிறீர்கள். 21  அப்படியிருந்தும், மற்றவர்களுக்குக் கற்பிக்கிற நீங்களே உங்களுக்குக் கற்பிக்காமல் இருக்கலாமா?+ “திருடாதே”+ என்று பிரசங்கிக்கிற நீங்களே திருடலாமா? 22  “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது”+ என்று சொல்கிற நீங்களே மணத்துணைக்குத் துரோகம் செய்யலாமா? சிலைகளை அருவருக்கிற நீங்களே கோயில்களைக் கொள்ளையடிக்கலாமா? 23  திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்கிற நீங்களே அந்தச் சட்டத்தை மீறி கடவுளை அவமதிக்கலாமா? 24  ஏனென்றால் எழுதப்பட்டுள்ளபடியே, “உங்களால் மற்ற தேசத்து மக்கள் மத்தியில் கடவுளுடைய பெயர் நிந்திக்கப்படுகிறது.”+ 25  உண்மையில், நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் மட்டும்தான்+ விருத்தசேதனத்தால்+ பயன் பெறுவீர்கள். திருச்சட்டத்தை மீறினால், விருத்தசேதனம் செய்திருந்தும் விருத்தசேதனம் செய்யாதவர்கள் போலத்தான் இருப்பீர்கள். 26  அதனால், விருத்தசேதனம் செய்யாதவன்+ திருச்சட்டத்திலுள்ள நீதியான விதிமுறைகளைக் கடைப்பிடித்தால், அவன் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் விருத்தசேதனம் செய்தவனாகவே கருதப்படுவான், இல்லையா?+ 27  உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுகிற ஒருவன் திருச்சட்டத்தை மீறுகிற உங்களைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்கிறான். ஏனென்றால், எழுதப்பட்ட அந்தச் சட்டத்தை வைத்திருந்தும், விருத்தசேதனம் செய்திருந்தும் நீங்கள் அந்தச் சட்டத்தை மீறுகிறீர்கள். 28  வெளிப்புறத்தில் யூதனாக இருக்கிறவன் யூதன் அல்ல;+ அவனுடைய உடலில் செய்யப்படுகிற விருத்தசேதனமும் விருத்தசேதனம் அல்ல.+ 29  ஆனால், உள்ளத்தில் யூதனாக இருக்கிறவன்தான் யூதன்.+ அவனுடைய விருத்தசேதனம் கடவுளுடைய சக்தியால் இதயத்தில் செய்யப்படுகிறது,+ எழுதப்பட்ட சட்டத்தால் செய்யப்படுவதில்லை.+ அப்படிப்பட்டவன் மனிதர்களால் அல்ல, கடவுளால் புகழப்படுகிறான்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “வாய்மொழியாகக் கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதால்.”
வே.வா., “சித்தம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா