Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘ராஜாக்களாகவும் குருமார்களாகவும்’ இருப்பீர்கள்

‘ராஜாக்களாகவும் குருமார்களாகவும்’ இருப்பீர்கள்

“எனக்கு நீங்கள் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும் பரிசுத்த தேசமாகவும் ஆவீர்கள்.”—யாத். 19:6, NW.

1, 2. ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட பெண்ணின் வாரிசு ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

கடவுளுடைய விருப்பம் கண்டிப்பாக நிறைவேறும் என்பதை பைபிளின் முதல் தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்துகிறது. “உனக்கும் ஸ்திரீக்கும், உன் [வாரிசுக்கும்] அவள் [வாரிசுக்கும்] பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று ஏதேனில் யெகோவா சொன்னார். (ஆதி. 3:15) சாத்தானுக்கும் அந்தப் பெண்ணிற்கும் கடுமையான பகை வரும் என்பதை இந்த வசனம் காட்டுகிறது. அந்தப் பெண்ணின் வாரிசை எப்படியாவது அழித்துவிட சாத்தான் திட்டமிடுவான்.

2 அதனால்தான் சங்கீதக்காரனான ஆசாப் கடவுளிடம் இப்படி மன்றாடினார்: “உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள். உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும். உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டங்களை வகுக்கிறார்கள். நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள். பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: ‘வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம்.’” (சங். 83:2-4, ஈஸி டு ரீட் வர்ஷன்) சாத்தான் கடவுளுடைய மக்களை அழிக்க எப்போதுமே முயற்சி செய்கிறான். முக்கியமாக, ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட வாரிசை அழிக்க முயற்சி செய்தான். அதனால் அந்த வாரிசின் வம்சாவளி பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது; கலங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த வாரிசைப் பாதுகாத்து, பூமிக்கான தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, கடவுள் சில ஒப்பந்தங்களைச் செய்தார்.

 திருச்சட்ட ஒப்பந்தம்

3, 4. (அ) திருச்சட்ட ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வந்தது, இஸ்ரவேலர்கள் என்ன செய்ய ஒத்துக்கொண்டார்கள்? (ஆ) எதற்காக திருச்சட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது?

3 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் வம்சத்தில் வந்த மக்கள் ஒரு பெரிய தேசமாக ஆனார்கள். அவர்களை யெகோவா தம்முடைய சொந்த ஜனமாகத் தேர்ந்தெடுத்தார். அவர்கள்தான் இஸ்ரவேலர்கள். மோசேயின் மூலமாக இஸ்ரவேலர்களோடு யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்தார். இஸ்ரவேலர்களும் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்கள்; அந்த ஒப்பந்தத்தின்படி, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதாக ஒத்துக்கொண்டார்கள். ‘[மோசே] உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தார்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். அப்பொழுது மோசே [பலிசெலுத்திய காளைகளின்] இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றார்.”—யாத். 24:3-8.

4 சீனாய் மலையில், இஸ்ரவேலர்களோடு யெகோவா செய்த ஒப்பந்தத்தைதான் திருச்சட்ட ஒப்பந்தம் என்று சொல்கிறோம். இந்த ஒப்பந்தம் கி.மு. 1513-ல் அமலுக்கு வந்தது. அப்போதிருந்து, இஸ்ரவேல் ஜனங்கள் கடவுளுடைய சொந்த ஜனங்களாக ஆனார்கள். யெகோவா அவர்களுடைய ‘நியாயாதிபதியாக, நியாயப்பிரமாணிகராக [அதாவது, சட்டம் இயற்றுபவராக], ராஜாவாக’ ஆனார். (ஏசா. 33:22) யெகோவாவுடைய கட்டளைகளை இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்தபோது ஆசீர்வதிக்கப்பட்டார்கள்; கடைப்பிடிக்காதபோது கஷ்டப்பட்டார்கள். ஆனால், மேசியாவின் வம்சாவளியைத் திருச்சட்டம் எப்படிப் பாதுகாத்தது? பொய் தெய்வங்களை இஸ்ரவேலர்கள் வணங்கக்கூடாது என்றும் யெகோவாவை வணங்காத ஆட்களைத் திருமணம் செய்யக்கூடாது என்றும் திருச்சட்டத்தில் யெகோவா கட்டளையிட்டிருந்தார். இதன் மூலம், வாரிசின் வம்சாவளிக்கு எந்தக் களங்கமும் ஏற்படாமல் பாதுகாத்தார்.—யாத். 20:4-6; 34:12-16.

5. (அ) திருச்சட்டத்தின் மூலம் யெகோவா என்ன ஏற்பாடு செய்திருந்தார்? (ஆ) இஸ்ரவேலர்களை யெகோவா ஏன் நிராகரித்தார்?

5 திருச்சட்டத்தின் மூலம் சிலர் குருமார்களாக இருப்பதற்கு யெகோவா ஏற்பாடு செய்திருந்தார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களுக்கு இது ஓர் அடையாளமாக இருந்தது. (எபி. 7:11; 10:1) அந்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் “ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாக” இருக்கும் அருமையான வாய்ப்பு கிடைக்கும். (யாத்திராகமம் 19:5, 6-ஐ வாசியுங்கள். *) ஆனால், இஸ்ரவேலர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்; இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை; அதனால், யெகோவாவும் இஸ்ரவேலர்களை நிராகரித்தார்.

இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் போனார்கள் என்பதற்காக திருச்சட்டம் சரியில்லை என்று அர்த்தமா? (பாராக்கள் 3-6)

6. திருச்சட்டம் எதற்காகக் கொடுக்கப்பட்டது?

6 திருச்சட்ட ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரவேலர்கள் “ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாக” ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர்கள்  கீழ்ப்படியாததால் அந்த வாய்ப்பை இழந்தார்கள். அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பதற்காக திருச்சட்டம் சரியில்லை என்று அர்த்தமா? இல்லவே இல்லை. ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட பெண்ணின் வாரிசைப் பாதுகாக்கவும் மேசியாவை அடையாளம் காட்டவும் திருச்சட்டம் உதவியது. இயேசு பூமிக்கு வந்தபோது இது நிறைவேறியது. அதனால்தான், “கிறிஸ்து திருச்சட்டத்தின் முடிவாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 10:4) அப்படியென்றால், யார் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருப்பார்கள்? ஒரு புதிய தேசத்தோடு யெகோவா செய்த ஒப்பந்தம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்.

புதிய ஒப்பந்தம்

7. எரேமியா மூலம் யெகோவா என்ன சொல்லியிருந்தார்?

7 திருச்சட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே, யெகோவா ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பற்றி எரேமியா மூலம் சொல்லியிருந்தார். (எரேமியா 31:31-33-ஐ வாசியுங்கள்.) திருச்சட்ட ஒப்பந்தத்தில் பாவ மன்னிப்பிற்காக மிருக பலிகள் செலுத்தப்பட்டன. ஆனால், புதிய ஒப்பந்தத்தின் மூலம் மிருக பலிகள் இல்லாமலேயே பாவங்களை மன்னிப்பதற்கான ஏற்பாட்டை யெகோவா செய்தார்.

8, 9. (அ) இயேசுவின் இரத்தம் எதற்கு உதவியது? (ஆ) புதிய ஒப்பந்தத்தில் இருப்பவர்களுக்கு என்ன வாய்ப்பு கிடைத்தது? (ஆரம்பப் படம்.)

8 பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 33 நிசான் 14-ல் இயேசுவின் கடைசி இரவு விருந்து நடந்தது. அப்போது, தம்முடைய 11 அப்போஸ்தலர்களோடு உணவு சாப்பிட்ட பின்பு கிண்ணத்தை கொடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது” என்றார். (லூக். 22:20) இதே பதிவு மத்தேயுவிலும் இருக்கிறது. “[இந்தக் கிண்ணம்], ‘ஒப்பந்தத்திற்குரிய என் இரத்தத்தைக்’ குறிக்கிறது; என் இரத்தம், பாவ மன்னிப்புக்கென்று அநேகருக்காகச் சிந்தப்படப்போகிறது” என்று இயேசு சொன்னார்.—மத். 26:27, 28.

9 இந்த ஒப்பந்தம் இயேசுவுக்காகச் செய்யப்படவில்லை. ஏனென்றால், மற்ற மனிதர்களைப் போல் இயேசு பாவமுள்ள மனிதர் அல்ல; அவருக்கு பாவ மன்னிப்பும் தேவையில்லை. ஆனால், ஆதாமின் சந்ததியில் வந்தவர்கள் பாவிகளாக இருக்கிறார்கள். அதனால், அவர்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க இயேசு சிந்திய இரத்தத்தை யெகோவா பயன்படுத்தினார். எல்லா மனிதர்களுடைய பாவத்தையும் போக்குவதற்கு ஒரேமுறையாக இயேசு இரத்தம் சிந்தினார். இயேசு சிந்திய இரத்தம் புதிய ஒப்பந்தத்தைச் செல்லுபடி ஆக்கியது. எப்படி? சில மனிதர்களுக்கு யெகோவா தம் சக்தியை அளித்து, “மகன்களாக” தேர்ந்தெடுக்க உதவியது. (ரோமர் 8:14-17-ஐ வாசியுங்கள்.) இதன்மூலம், இவர்கள் பாவத்திலிருந்து விடுதலை அடைந்து இயேசுவைப் போல பாவமற்றவர்களாக, கடவுளுடைய மகன்களாக ஆவார்கள். கடவுளுடைய சக்தியைப் பெற்ற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் “கிறிஸ்துவின் சக வாரிசுகளாக” ஆவார்கள். இப்படி, இஸ்ரவேலர்கள் இழந்த வாய்ப்பை இவர்கள் பெறுவார்கள்; “ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாக” ஆகும் வாய்ப்பையும் பெறுவார்கள். இவர்களைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு இப்படிச் சொன்னார்: “நீங்களோ இருளிலிருந்து தமது அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய ‘மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருடைய விசேஷ சொத்தாகவும்’ இருக்கிறீர்கள்.” (1 பே. 2:9) புதிய ஒப்பந்தத்தின் மூலம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் ஆபிரகாமின் வாரிசின் பாகமாக ஆகிறார்கள்.

புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

10. புதிய ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வந்தது? அதற்கு முன்பு என்ன சம்பவங்கள் நடக்க வேண்டியிருந்தது?

10 இயேசு பூமியிலிருந்த கடைசி இரவன்று புதிய ஒப்பந்தத்தைப் பற்றி சொன்னார். ஆனால், அந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு சில விஷயங்கள் நடக்க வேண்டியிருந்தது. இயேசு இரத்தம் சிந்தி, அதன் மதிப்பை பரலோகத்தில் யெகோவாவிடம் கொடுக்க வேண்டியிருந்தது. அதோடு, “கிறிஸ்துவின் சக வாரிசுகளாக” இருப்பவர்கள்மீது கடவுள் தமது சக்தியைப் பொழிய வேண்டியிருந்தது. எனவே, கி.பி. 33 பெந்தெகோஸ்தே நாளன்று இயேசுவின் சீடர்கள் கடவுளுடைய சக்தியைப் பெற்ற பிறகுதான் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

11. யூதர்களும் மற்ற தேசத்து மக்களும் ‘கடவுளுடைய இஸ்ரவேலராக’ ஆவதற்கு புதிய ஒப்பந்தம் எப்படி உதவியது? புதிய ஒப்பந்தம் எத்தனை பேரோடு செய்யப்படுகிறது?

11 எரேமியா மூலம் புதிய ஒப்பந்தத்தைப் பற்றி  யெகோவா சொன்னபோது திருச்சட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை. புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகுதான் திருச்சட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. (எபி. 8:13) இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், யூதர்களுக்கு மட்டுமல்ல, விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களுக்கும் இயேசுவோடு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால், “விருத்தசேதனம், [அவர்களுக்கு] எழுதப்பட்ட சட்டத்தினால் செய்யப்படுவதில்லை, கடவுளுடைய சக்தியினால் இருதயத்தில் செய்யப்படுகிறது.” (ரோ. 2:29) “என்னுடைய சட்டங்களை நான் அவர்களுடைய மனதில் வைப்பேன், அவர்களுடைய இருதயங்களில் அவற்றை எழுதுவேன்” என்று யெகோவா சொன்னார். (எபி. 8:10) இந்தப் புதிய ஒப்பந்தத்தை 1,44,000 பேரோடு யெகோவா செய்கிறார். இவர்கள் “கடவுளுடைய இஸ்ரவேலர்” என்று அழைக்கப்படுகிறார்கள்.—கலா. 6:16; வெளி. 14:1, 4.

12. திருச்சட்ட ஒப்பந்தத்திற்கும் புதிய ஒப்பந்தத்திற்கும் என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?

12 திருச்சட்ட ஒப்பந்தத்திற்கும் புதிய ஒப்பந்தத்திற்கும் என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன? திருச்சட்ட ஒப்பந்தத்தை யெகோவா இஸ்ரவேலரோடு செய்தார். புதிய ஒப்பந்தத்தை ‘கடவுளுடைய இஸ்ரவேலரோடு,’ அதாவது 1,44,000 பேரோடு, செய்தார். திருச்சட்ட ஒப்பந்தத்தை மோசேயின் மூலம் செய்தார். புதிய ஒப்பந்தத்தை இயேசுவின் மூலம் செய்தார். திருச்சட்ட ஒப்பந்தத்தை மிருகங்களின் இரத்தம் செல்லுபடியாக்கியது. புதிய ஒப்பந்தத்தை இயேசுவின் இரத்தம் செல்லுபடியாக்கியது. மோசேயின் மூலம் இஸ்ரவேல் ஜனங்களை யெகோவா வழிநடத்தினார். ‘கடவுளுடைய இஸ்ரவேலரை’ சபையின் தலைவரான இயேசுவின் மூலம் வழிநடத்துகிறார்.—எபே. 1:22.

13, 14. (அ) புதிய ஒப்பந்தம் கடவுளுடைய அரசாங்கத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? (ஆ) “கடவுளுடைய இஸ்ரவேலர்” இயேசுவோடு ஆட்சி செய்வதற்கு என்ன தேவை?

13 புதிய ஒப்பந்தம் கடவுளுடைய அரசாங்கத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? புதிய ஒப்பந்தத்தின் மூலம் ‘கடவுளுடைய இஸ்ரவேலர்கள்’ ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இப்படி இயேசுவின் சக வாரிசுகளாக, அதாவது ஆபிரகாமின் வாரிசுகளாக, ஆகிறார்கள். (கலா. 3:29) ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்பதை புதிய ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.

14 புதிய ஒப்பந்தத்தின் மூலம் “கடவுளுடைய இஸ்ரவேலர்,” “கிறிஸ்துவின் சக வாரிசுகளாக” ஆக முடியும். ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தில் அவர்கள் இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் ஆட்சி செய்வதற்கு சட்டப்பூர்வ உரிமை தேவைப்படுகிறது. அதற்காக, இன்னொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அரசாங்கத்திற்கான ஒப்பந்தம்

15. அப்போஸ்தலர்களோடு இயேசு என்ன ஒப்பந்தம் செய்தார்?

15 இயேசு புதிய ஒப்பந்தத்தைப் பற்றிச் சொன்ன பிறகு, அப்போஸ்தலர்களோடு அவர் வேறொரு ஒப்பந்தம் செய்தார். அதுதான் அரசாங்கத்திற்கான ஒப்பந்தம். (லூக்கா 22:28-30-ஐ வாசியுங்கள்.) இதுவரை நாம் பார்த்த ஒப்பந்தங்களை யெகோவா செய்தார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை இயேசு தம்மோடு ஆட்சி செய்யப் போகிறவர்களோடு செய்தார். “என் தகப்பன் என்னோடு ஒப்பந்தம் செய்திருப்பது போலவே நானும் உங்களோடு ஓர் ஒப்பந்தம் செய்கிறேன்” என்று அவர்களிடம் இயேசு சொன்னார். “மெல்கிசேதேக்கைப் போலவே நீ என்றென்றும் தலைமைக் குருவாக இருக்கிறாய்” என்று யெகோவா இயேசுவோடு செய்த ஒப்பந்தத்தைதான் ‘தகப்பன் என்னோடு செய்த ஒப்பந்தம்’ என்று இயேசு குறிப்பிட்டார்.—எபி. 5:5, 6.

16. அரசாங்கத்திற்கான ஒப்பந்தம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன வாய்ப்பளிக்கிறது?

16 இயேசுவின் 11 அப்போஸ்தலர்களும் ‘சோதனைகளில் அவரோடு நிலைத்திருந்தார்கள்.’ இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருப்பார்கள் என்று அரசாங்கத்திற்கான ஒப்பந்தம் அவர்களுக்கு உறுதிப்படுத்தியது. ஆனால், இந்த அருமையான வாய்ப்பு அந்த 11 பேருக்கு மட்டுமல்ல இன்னும் நிறைய பேருக்கும் கிடைத்தது. இயேசு பரலோகத்திற்குப் போன பிறகு அப்போஸ்தலன் யோவானிடம் இப்படிச் சொன்னார்: “நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு அமர்ந்ததுபோல், ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு என் சிம்மாசனத்தில் என்னோடு அமரும்படி அருள்செய்வேன்.” (வெளி. 3:21) அப்படியென்றால், அரசாங்கத்திற்கான ஒப்பந்தம் பரலோக நம்பிக்கையுடைய 1,44,000 பேரோடு செய்யப்பட்டது.  (வெளி. 5:9, 10; 7:4) இந்த ஒப்பந்தத்தின் மூலம், இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வதற்கு அவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை கிடைக்கும். அரச குடும்பத்தில் வந்த பெண் ஒரு நாட்டின் ராஜாவைத் திருமணம் செய்த பிறகு, அவரோடு சேர்ந்து அந்த நாட்டை ஆளும் உரிமை பெறுவதைப் போல் இவர்களும் உரிமை பெறுகிறார்கள். அதனால்தான், பரலோக நம்பிக்கையுடையவர்களை ‘மணமகள்’ என்றும் “கற்புள்ள கன்னிகை” என்றும் பைபிள் சொல்கிறது. அவர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் அடையாள அர்த்தத்தில் திருமணம் நடக்கப்போவதாகவும் சொல்கிறது.—வெளி. 19:7, 8; 21:9; 2 கொ. 11:2.

உறுதியாக நம்புகிறீர்களா?

17, 18. (அ) ஆறு ஒப்பந்தங்களையும் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள். (ஆ) கடவுளுடைய அரசாங்கத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைக்க என்ன காரணங்கள் இருக்கின்றன?

17 இந்த இரண்டு கட்டுரைகளிலும் நாம் சில ஒப்பந்தங்களைப் பற்றி பார்த்தோம். ஒவ்வொன்றும் கடவுளுடைய அரசாங்கத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று சிந்தித்தோம். (“ஒப்பந்தங்கள்” என்ற பெட்டியை பக்கம் 12-ல் பாருங்கள்.) கடவுளுடைய அரசாங்கம் சட்டப்பூர்வமானது என்பதை இந்த ஒப்பந்தங்கள் காட்டுகின்றன. பூமியையும் மனிதர்களையும் கடவுள் எதற்காக படைத்தாரோ அந்த விருப்பத்தை நிறைவேற்றுவார்; அதற்கு, மேசியா ஆட்சி செய்யும் அரசாங்கத்தைப் பயன்படுத்துவார். இதை நாம் உறுதியாக நம்பலாம்.—வெளி. 11:15.

பூமியை கடவுள் எதற்காகப் படைத்தாரோ அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மேசியா ஆட்சி செய்யும் அரசாங்கத்தைப் பயன்படுத்துவார் (பாராக்கள் 15-18)

18 கடவுளுடைய அரசாங்கம் பொழியும் ஆசீர்வாதங்களை நாம் என்றென்றும் அனுபவிப்போம். மனிதர்களுடைய பிரச்சினைகளைக் கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே சரிசெய்யும். இதை நாம் உறுதியான நம்பிக்கையோடு மற்றவர்களுக்குச் சொல்லலாம். ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தியை’ வைராக்கியமாக அறிவிப்பீர்களா?—மத். 24:14.

^ பாரா. 5 யாத்திராகமம் 19:5, 6, NW: “‘நீங்கள் என் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து என் ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால், மற்றெல்லா மக்களிலும் நீங்கள் எனக்கு விசேஷ சொத்தாக ஆவீர்கள்; ஏனென்றால், இந்த முழு பூமியும் எனக்கே சொந்தம். எனக்கு நீங்கள் ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும் பரிசுத்த தேசமாகவும் ஆவீர்கள்.’ இதையெல்லாம் நீ இஸ்ரவேலரிடம் சொல்ல வேண்டும் என்றார்.”