யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 7:1-17

7  இதற்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தேவதூதர்கள் நின்றுகொண்டு, பூமியின் மீதோ கடலின் மீதோ எந்தவொரு மரத்தின் மீதோ காற்று வீசாதபடி பூமியின் நான்கு காற்றுகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.  வேறொரு தேவதூதர் சூரியன் உதிக்கும்* திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன். உயிருள்ள கடவுளின் முத்திரையை அவர் வைத்திருந்தார். பூமியையும் கடலையும் நாசப்படுத்துவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த நான்கு தேவதூதர்களிடம்,  “நம் கடவுளுடைய ஊழியர்களின் நெற்றிகளில்+ நாங்கள் முத்திரை போட்டு+ முடிக்கும்வரை பூமியையோ கடலையோ மரங்களையோ நாசப்படுத்தாதீர்கள்” என்று உரத்த குரலில் சொன்னார்.  பின்பு, முத்திரை போடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதைக் கேட்டேன். இஸ்ரவேல் வம்சத்தின் எல்லா கோத்திரங்களிலும்+ முத்திரை போடப்பட்டவர்கள் 1,44,000 பேர்:+  யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் 12,000 பேர்;ரூபன் கோத்திரத்தில் 12,000 பேர்;காத் கோத்திரத்தில் 12,000 பேர்;  ஆசேர் கோத்திரத்தில் 12,000 பேர்;நப்தலி கோத்திரத்தில் 12,000 பேர்;மனாசே+ கோத்திரத்தில் 12,000 பேர்;  சிமியோன் கோத்திரத்தில் 12,000 பேர்;லேவி கோத்திரத்தில் 12,000 பேர்;இசக்கார் கோத்திரத்தில் 12,000 பேர்;  செபுலோன் கோத்திரத்தில் 12,000 பேர்;யோசேப்பு கோத்திரத்தில் 12,000 பேர்;பென்யமீன் கோத்திரத்தில் 12,000 பேர்.  இதற்குப் பின்பு, எந்த மனிதனாலும் எண்ண முடியாதளவுக்குத் திரள் கூட்டமான மக்கள் சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்னால் நிற்பதைப் பார்த்தேன்; அவர்கள் எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள்.+ அவர்கள் வெள்ளை உடைகளைப் போட்டுக்கொண்டு,+ கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.+ 10  அவர்கள் உரத்த குரலில், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற+ எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். 11  தேவதூதர்கள் எல்லாரும் சிம்மாசனத்தையும் மூப்பர்களையும்+ நான்கு ஜீவன்களையும் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் சிம்மாசனத்துக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கடவுளை வணங்கி, 12  “ஆமென்!* புகழும் மகிமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் பலமும் என்றென்றும் எங்கள் கடவுளுக்கே சொந்தம்.+ ஆமென்” என்று சொன்னார்கள். 13  அப்போது, மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை உடைகள் போட்டிருக்கிற+ இவர்கள் யார், எங்கிருந்து வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டார். 14  உடனடியாக நான், “எஜமானே, அது உங்களுக்குத்தான் தெரியும்” என்று சொன்னேன். அப்போது அவர், “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து+ தப்பித்தவர்கள். தங்களுடைய உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியவர்கள்.+ 15  அதனால்தான், கடவுளுடைய சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிறார்கள். இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவருக்குப் பரிசுத்த சேவை செய்கிறார்கள். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்+ இவர்களைப் பாதுகாப்பார்.*+ 16  இனி இவர்களுக்குப் பசியும் எடுக்காது, தாகமும் எடுக்காது. வெயிலோ உஷ்ணமோ இவர்களைத் தாக்காது.+ 17  ஏனென்றால், சிம்மாசனத்தின் பக்கத்தில்* இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே+ இவர்களை மேய்ப்பார்,+ வாழ்வு தரும் நீரூற்றுகளிடம் வழிநடத்துவார்.+ கடவுள் இவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கிழக்கு.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்!”
நே.மொ., “இவர்கள்மேல் தன்னுடைய கூடாரத்தை விரிப்பார்.”
வே.வா., “நடுவில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா