யாத்திராகமம் 19:1-25
19 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு மூன்றாம் மாதத்தில் சீனாய் வனாந்தரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
2 அவர்கள் ரெவிதீமிலிருந்து புறப்பட்ட+ அதே நாளில் சீனாய் வனாந்தரத்துக்கு வந்து, அங்கிருந்த மலையின்+ எதிரில் முகாம்போட்டார்கள்.
3 பின்பு, உண்மைக் கடவுள்முன் நிற்பதற்காக மோசே அந்த மலைமேல்+ ஏறிப்போனார். மலையிலிருந்து யெகோவா அவரைக் கூப்பிட்டு, “நீ யாக்கோபின் வம்சத்தாராகிய இஸ்ரவேலர்களிடம் போய் என் செய்தியைச் சொல். அவர்களிடம்,
4 ‘கழுகு தன்னுடைய குஞ்சுகளைச் சிறகுகளில் சுமந்துகொண்டு வருவது போல நான் உங்களை என்னிடம் சுமந்துகொண்டு வருவதற்காக+ எகிப்தியர்களைத் தண்டித்தேன்; அதை உங்கள் கண்ணாலேயே பார்த்தீர்கள்.+
5 நீங்கள் என் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து என் ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால், மற்ற எல்லா ஜனங்களிலும் நீங்கள் எனக்கு விசேஷ சொத்தாக+ இருப்பீர்கள். ஏனென்றால், இந்த முழு பூமியும் எனக்குத்தான் சொந்தம்.+
6 நீங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்கிற குருமார்களாகவும் என்னுடைய பரிசுத்த ஜனமாகவும் இருப்பீர்கள்’+ என்று சொல். இந்த எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேலர்களிடம் சொல்” என்றார்.
7 அதனால், மோசே போய் இஸ்ரவேலின் பெரியோர்களை* கூப்பிட்டு, யெகோவா கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் அவர்களிடம் சொன்னார்.+
8 அப்போது ஜனங்கள் எல்லாரும், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்”+ என்று ஒருமனதாகச் சொன்னார்கள். உடனடியாக மோசே அதை யெகோவாவிடம் சொன்னார்.
9 அப்போது யெகோவா மோசேயிடம், “நான் உன்னிடம் பேசுவதை ஜனங்கள் கேட்டு, உன்மேலும் எப்போதும் நம்பிக்கை வைப்பதற்காக நான் உன்னிடம் கார்மேகத்தில் வருவேன்” என்றார். ஜனங்கள் சொன்னதை மோசே யெகோவாவிடம் சொன்னார்.
10 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ ஜனங்களிடம் போய் இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் புனிதப்படுத்து. அவர்கள் தங்களுடைய துணிமணிகளைத் துவைக்க வேண்டும்.
11 மூன்றாம் நாளுக்காக அவர்கள் தயாராக வேண்டும். ஏனென்றால், மூன்றாம் நாளில் யெகோவாவாகிய நான் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக சீனாய் மலைமேல் இறங்குவேன்.
12 ஜனங்கள் தாண்டி வராதபடி மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்துவை. அதன்பின் நீ அவர்களிடம், ‘யாரும் இந்த மலைமேல் ஏறாதபடி ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் அதன்மேல் கால் வைக்கவும் கூடாது. அப்படி யாராவது கால் வைத்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்படுவான்.
13 அவனை யாரும் தொடக் கூடாது, கல்லையோ ஆயுதத்தையோ* எறிந்துதான் கொல்ல வேண்டும். மலையைத் தொடுவது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, கொல்லப்பட வேண்டும்’+ என்று சொல். ஆனால், ஊதுகொம்பின்* சத்தம் கேட்கும்போது+ எல்லாரும் மலைக்குப் பக்கத்தில் வரலாம்” என்றார்.
14 பின்பு, மோசே மலையிலிருந்து இறங்கி ஜனங்களிடம் போய் அவர்களைப் புனிதப்படுத்தினார். அவர்கள் தங்களுடைய துணிமணிகளைத் துவைத்தார்கள்.+
15 அவர் அவர்களிடம், “மூன்றாம் நாளுக்காகத் தயாராகுங்கள். உங்கள் மனைவியோடு உடலுறவு கொள்ளாதீர்கள்” என்றார்.
16 மூன்றாம் நாள் காலையில் இடி இடித்தது, மின்னல் வெட்டியது. மலைமேல் கார்மேகம் சூழ்ந்தது,+ ஊதுகொம்பின் சத்தம் பலமாக முழங்கியது. முகாமில் இருந்த எல்லாரும் நடுநடுங்கினார்கள்.+
17 அப்போது, உண்மைக் கடவுளைச் சந்திப்பதற்காக முகாமிலிருந்த ஜனங்களை மோசே கூட்டிக்கொண்டு வந்தார். அவர்கள் மலை அடிவாரத்தில் நின்றார்கள்.
18 அப்போது, யெகோவா சீனாய் மலைமேல் தீ ஜுவாலையுடன் இறங்கினார்.+ அதனால் அது புகைமண்டலமாக ஆனது. சூளையிலிருந்து புகை எழும்புவது போல மலையிலிருந்து புகை எழும்பியது. அந்த மலையே பயங்கரமாக அதிர்ந்தது.+
19 ஊதுகொம்பின் சத்தம் பலமாகிக்கொண்டே போனது. அப்போது மோசே பேசினார், உண்மைக் கடவுள் அவருக்குப் பதில் சொன்னார்.*
20 யெகோவா சீனாய் மலையின் உச்சியில் இறங்கினார். பின்பு, யெகோவா மோசேயை மலை உச்சிக்குக் கூப்பிட்டார், அதனால் மோசே அங்கே போனார்.+
21 அப்போது யெகோவா மோசேயிடம், “ஜனங்கள் யெகோவாவாகிய என்னைப் பார்ப்பதற்காக எல்லையைக் கடந்து வரக் கூடாதென்று நீ கீழே போய் அவர்களுக்கு எச்சரிக்கை கொடு. இல்லாவிட்டால், அவர்களில் நிறைய பேர் அழிந்துபோவார்கள்.
22 யெகோவாவாகிய என் பக்கத்தில் வழக்கமாக வருகிற குருமார்கள் தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், யெகோவாவாகிய நான் அவர்களைத் தண்டிக்க மாட்டேன்”+ என்றார்.
23 அதற்கு மோசே யெகோவாவிடம், “சீனாய் மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து அதைப் புனிதமாக்கும்படி+ நீங்கள் ஏற்கெனவே எங்களை எச்சரித்ததால் ஜனங்கள் யாரும் அதன் பக்கத்தில் வர மாட்டார்கள்” என்றார்.
24 இருந்தாலும் யெகோவா அவரிடம், “நீ கீழே போய் ஆரோனைக் கூட்டிக்கொண்டு வா. ஆனால், குருமார்களையும் ஜனங்களையும் என்னிடம் வர விடாதே. மீறி வந்தால் யெகோவாவாகிய நான் அவர்களைத் தண்டிப்பேன்”+ என்றார்.
25 அதனால், மோசே இறங்கிப்போய் ஜனங்களிடம் இதைச் சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “மூப்பர்களை.”
^ அதாவது, “செம்மறியாட்டுக் கடாவின் கொம்பினால் செய்யப்பட்ட ஊதுகொம்பின்.”
^ ஒருவேளை, “அம்பையோ.”
^ நே.மொ., “உண்மைக் கடவுளின் குரல் அவருக்குப் பதில் தந்தது.”