யாத்திராகமம் 18:1-27

18  யெகோவா மோசேக்கும் தன்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கும் எப்படியெல்லாம் உதவினார் என்றும், அவர்களை எகிப்திலிருந்து எப்படிக் கூட்டிக்கொண்டு வந்தார் என்றும் எத்திரோ கேள்விப்பட்டார்.+ இவர் மீதியான் தேசத்தைச் சேர்ந்த குரு, மோசேயின் மாமனார்.+  இவரிடம்தான் மோசே முன்பு தன்னுடைய மனைவி சிப்போராளையும் இரண்டு மகன்களையும்+ அனுப்பி வைத்திருந்தார். எத்திரோ அவர்களைக் கவனித்துக்கொண்டார்.  மோசேயின் ஒரு மகனுடைய பெயர் கெர்சோம்.*+ “நான் வேறு தேசத்தில் அன்னியனாகக் குடியிருக்கிறேன்” என்று சொல்லி மோசே அவனுக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார்.  அவருடைய இன்னொரு மகனின் பெயர் எலியேசர்.* “பார்வோனின் வாளிலிருந்து+ என்னைக் காப்பாற்றிய என்னுடைய முன்னோர்களின் கடவுள்தான் எனக்குத் துணை” என்று சொல்லி மோசே அவனுக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார்.  வனாந்தரத்தில் உண்மைக் கடவுளின் மலைக்குப் பக்கத்தில்+ மோசே முகாம்போட்டிருந்தபோது, அவருடைய மனைவியையும் மகன்களையும் மோசேயின் மாமனார் எத்திரோ கூட்டிக்கொண்டு வந்தார்.  அவர் மோசேயிடம் ஆள் அனுப்பி, “உன் மாமனார் எத்திரோ+ வந்துகொண்டிருக்கிறேன், உன் மனைவியையும் இரண்டு மகன்களையும் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லச் சொன்னார்.  உடனே மோசே தன்னுடைய மாமனாரைப் பார்க்கப் போனார். அவருக்கு முன்னால் தலைவணங்கி, அவருக்கு முத்தம் கொடுத்தார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துவிட்டு, கூடாரத்துக்குள் போனார்கள்.  யெகோவா இஸ்ரவேல் ஜனங்களுக்காக பார்வோனையும் எகிப்தையும் எப்படியெல்லாம் தண்டித்தார்+ என்றும், வழியில் இஸ்ரவேலர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள்+ என்றும், யெகோவா அவர்களை எப்படியெல்லாம் காப்பாற்றினார் என்றும் மோசே தன்னுடைய மாமனாருக்கு விவரமாகச் சொன்னார்.  யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்து பல விதங்களில் ஆசீர்வதித்ததைப் பற்றி எத்திரோ கேட்டபோது மிகவும் சந்தோஷப்பட்டார். 10  பின்பு எத்திரோ, “உங்களை எகிப்தின் பிடியிலிருந்தும் பார்வோனின் பிடியிலிருந்தும் விடுதலை செய்த யெகோவா புகழப்படட்டும்! 11  அவருடைய ஜனங்களை ஆணவத்தோடு அடக்கி ஒடுக்கியவர்களை அவர் அழித்துவிட்டார்! யெகோவாதான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்+ என்பதை இப்போது தெரிந்துகொண்டேன்” என்றார். 12  மோசேயின் மாமனார் எத்திரோ, கடவுளுக்குத் தகன பலியையும் மற்ற பலிகளையும் கொண்டுவந்தார். ஆரோனும் இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் உண்மைக் கடவுளின் முன்னிலையில் எத்திரோவுடன் சேர்ந்து சாப்பிட அங்கே வந்தார்கள். 13  அடுத்த நாள், மோசே வழக்கம்போல் ஜனங்களுக்குத் தீர்ப்பு சொல்வதற்காக உட்கார்ந்தார். காலையிலிருந்து சாயங்காலம்வரை ஜனங்கள் அவர் முன்னால் வந்து நின்றார்கள். 14  ஜனங்களுக்காக மோசே செய்த எல்லாவற்றையும் அவருடைய மாமனார் பார்த்தார். அதனால் அவர் மோசேயிடம், “ஜனங்கள் காலையிலிருந்து சாயங்காலம்வரை உன் முன்னால் வந்து நிற்கிறார்களே. அவர்களுக்காக நீ ஏன் தனியாளாய் எல்லாவற்றையும் செய்கிறாய்?” என்றார். 15  அதற்கு மோசே, “கடவுளிடம் விசாரிக்கச் சொல்லித்தான் ஜனங்கள் என்னிடம் வந்துகொண்டே இருக்கிறார்கள். 16  ஏதாவது வழக்கு இருந்தால், அதை என்னிடம் கொண்டுவருவார்கள். நான் விசாரணை செய்து, உண்மைக் கடவுளுடைய தீர்மானங்களையும் சட்டங்களையும் அவர்களுக்குச் சொல்வேன்”+ என்றார். 17  அப்போது அவருடைய மாமனார், “நீ இப்படிச் செய்வது சரியல்ல. 18  இது ரொம்பவும் பெரிய பொறுப்பு. நீ ஒருவனே இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நீயும் களைத்துப்போவாய், இந்த ஜனங்களும் களைத்துப்போவார்கள். 19  அதனால், உனக்கு ஒரு ஆலோசனை சொல்கிறேன். தயவுசெய்து அதைக் கேள். கடவுள் உன்னோடு இருப்பார்.+ நீ ஜனங்களுடைய சார்பாக உண்மைக் கடவுளிடம் பேசு,+ அவர்களுடைய வழக்குகளை அவரிடம் சொல்.+ 20  கடவுளுடைய விதிமுறைகளையும் சட்டங்களையும் அவர்களுக்குப் புரியவை.+ அவர்கள் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடு. 21  அதேசமயத்தில், திறமையான ஆண்களை ஜனங்களிலிருந்து தேர்ந்தெடு.+ அவர்கள் கடவுளுக்குப் பயந்து நடக்கிறவர்களாகவும், ஆதாயத்துக்கு ஆசைப்படாத நம்பகமான ஆட்களாகவும் இருக்க வேண்டும்.+ அவர்களை 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும் நியமனம் செய்.+ 22  அவர்கள் ஜனங்களுடைய வழக்குகளை விசாரித்து அவர்களுக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டும். சிக்கலான வழக்குகளுக்கு மட்டும் நீயே தீர்ப்பு சொல்.+ சின்னச் சின்ன வழக்குகளுக்கு அவர்கள் தீர்ப்பு சொல்லட்டும். இப்படி, உன்னுடைய சுமையை அவர்களுடன் பகிர்ந்துகொள், உன்னுடைய பாரம் குறையும்.+ 23  நீ இப்படிச் செய்தால், அதோடு கடவுளும் இப்படிச் செய்யச் சொல்லி உனக்குக் கட்டளை கொடுத்தால், இந்தச் சுமையை உன்னால் சுமக்க முடியும். ஜனங்களும் திருப்தியோடு திரும்பிப் போவார்கள்” என்றார். 24  மோசே தன்னுடைய மாமனார் சொன்ன எல்லாவற்றையும் உடனடியாகச் செய்தார். 25  இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து திறமையான ஆண்களைத் தேர்ந்தெடுத்து 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும் நியமித்தார். 26  அவர்கள் ஜனங்களுடைய வழக்குகளை விசாரித்து அவர்களுக்குத் தீர்ப்பு சொன்னார்கள். சிக்கலான வழக்குகளை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்,+ சின்னச் சின்ன வழக்குகளுக்கு அவர்களே தீர்ப்பு சொன்னார்கள். 27  அதன்பின், மோசே தன்னுடைய மாமனாரை வழியனுப்பி வைத்தார்,+ அவரும் தன்னுடைய தேசத்துக்குத் திரும்பிப் போனார்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “அங்கே ஓர் அன்னியன்.”
அர்த்தம், “என் கடவுள்தான் எனக்குத் துணை.”
வே.வா., “மூப்பர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா