எரேமியா 31:1-40

31  “அந்தச் சமயத்தில் இஸ்ரவேலின் எல்லா குடும்பங்களுக்கும் நான் கடவுளாக இருப்பேன். அவர்கள் என் ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.   யெகோவா சொல்வது இதுதான்: “வாளுக்குத் தப்பியவர்கள் வனாந்தரத்தில் கடவுளுடைய கருணையைப் பெற்றார்கள்.இஸ்ரவேலர்கள் நிம்மதியான இடத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.”   யெகோவா தொலைதூரத்திலிருந்து வந்து என்முன் தோன்றி, “நான் எப்போதுமே உன்மேல் அன்பு காட்டியிருக்கிறேன். என்றுமே மாறாத அன்பினால் உன்னை என் பக்கம் இழுத்திருக்கிறேன்.+   நான் மறுபடியும் உன்னைக் கட்டி எழுப்புவேன், நீயும் கட்டி எழுப்பப்படுவாய்.+ கன்னிப்பெண்ணாகிய இஸ்ரவேலே, நீ மறுபடியும் கஞ்சிராவை எடுத்துக்கொண்டுசந்தோஷமாக* நடனம் ஆடுவாய்.+   நீ மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சைத் தோட்டங்களைப் போடுவாய்.+தோட்டம் போடுகிறவர்கள்தான் அவற்றின் பழங்களை அனுபவிப்பார்கள்.+   காலம் வரும்; அப்போது, எப்பிராயீம் மலைப்பகுதியில் இருக்கிற காவல்காரர்கள் சத்தமாக, ‘எல்லாரும் எழுந்து, சீயோனுக்குப் புறப்படுங்கள்! நம் கடவுளாகிய யெகோவாவிடம் போகலாம்’+ என்று சொல்வார்கள்” என்றார்.   யெகோவா சொல்வது இதுதான்: “யாக்கோபைப் பார்த்து சந்தோஷமாகப் பாடுங்கள். நீங்கள் எல்லா தேசங்களுக்கும் மேலாக இருப்பதை நினைத்துக் கம்பீரமாக முழங்குங்கள்.+ அதை எல்லாருக்கும் அறிவியுங்கள். கடவுளைப் புகழுங்கள்.‘யெகோவாவே, இஸ்ரவேலர்களில் மீதியாக இருக்கும் உங்கள் ஜனங்களைக் காப்பாற்றுங்கள்’+ என்று கெஞ்சுங்கள்.   நான் அவர்களை வடக்கு தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+ பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து கூட்டிச்சேர்ப்பேன்.+ அவர்களில், கண் தெரியாதவர்களும் கைகால் ஊனமானவர்களும்+கர்ப்பிணிகளும் பிரசவ வலியில் இருக்கிற பெண்களும் இருப்பார்கள். அவர்கள் எல்லாரும் ஒரு பெரிய சபையாக இங்கே திரும்பி வருவார்கள்.+   அவர்கள் அழுதுகொண்டே வருவார்கள்.+ என்னுடைய கருணைக்காகக் கெஞ்சுவார்கள்; நான் அவர்களை வழிநடத்துவேன். ஓடைகளின்* பக்கமாக அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+அவர்கள் தடுக்கி விழாதபடி சமமான பாதையில் கூட்டிக்கொண்டு வருவேன். ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தகப்பன். எப்பிராயீம் என்னுடைய மூத்த மகன்.”+ 10  தேசங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்.தொலைதூரத்தில் இருக்கிற தீவுகளில் இதை அறிவியுங்கள்:+ “இஸ்ரவேலர்களைச் சிதறிப்போக வைத்தவர் அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்ப்பார். மேய்ப்பன் மந்தையைக் கவனிப்பதுபோல் அவர்களைக் கவனித்துக்கொள்வார்.+ 11  யெகோவா யாக்கோபை விடுவிப்பார்.+அவனைவிட பலசாலியின் கையிலிருந்து அவனைக் காப்பாற்றுவார்.*+ 12  அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும். தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+ 13  அந்தச் சமயத்தில் கன்னிப் பெண்கள் சந்தோஷமாக நடனம் ஆடுவார்கள்.வாலிபர்களும் வயதானவர்களும்கூட நடனம் ஆடுவார்கள்.+ சோகத்தில் வாடுகிறவர்களை நான் சந்தோஷத்தில் துள்ள வைப்பேன்.+ அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, அவர்களுக்கு ஆறுதலும் ஆனந்தமும் தருவேன்.+ 14  குருமார்களுக்கு வயிறார உணவு கொடுப்பேன்.நான் வாரிவழங்கும் நன்மைகளால் ஜனங்கள் திருப்தி அடைவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார். 15  “யெகோவா சொல்வது இதுதான்: ‘ராமாவில் புலம்பல் சத்தமும் பயங்கரமான அழுகை சத்தமும் கேட்கிறது.+ ராகேல் தன்னுடைய மகன்களுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்.+ அவளுடைய மனம் ஆறுதல் அடையவே இல்லை.ஏனென்றால், அவளுடைய மகன்கள் அவளோடு இல்லை.’”+ 16  யெகோவா சொல்வது இதுதான்: “‘நீ கதறி அழாதே, கண்ணீர் விடாதே.நீ செய்த எல்லாவற்றுக்கும் நான் பலன் கொடுப்பேன். உன் மகன்கள் எதிரிகளின் தேசத்திலிருந்து திரும்பி வருவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார். 17  ‘உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.+ ‘உன் மகன்கள் சொந்த தேசத்துக்கே திரும்பி வருவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.” 18  “எப்பிராயீம் புலம்புவதை என் காதால் கேட்டேன்.அவன் என்னிடம், ‘பழக்குவிக்கப்படாத கன்றைப் போல நான் இருந்தேன்.நீங்கள் என்னைத் திருத்தினீர்கள், நான் பாடம் கற்றுக்கொண்டேன். என்னைத் திரும்பவும் உங்கள் வழிக்கே கொண்டுவாருங்கள், நானும் வந்துவிடுகிறேன்.ஏனென்றால், யெகோவாவாகிய நீங்கள்தான் என் கடவுள். 19  நான் திருந்தினேன், செய்த தவறுகளை நினைத்து வருத்தப்பட்டேன்.+என் குற்றத்தை நீங்கள் புரிய வைத்தபோது வேதனையில் என் தொடையிலே அடித்துக்கொண்டேன். இளவயதில் நான் செய்ததையெல்லாம் நினைத்துஅவமானத்தில் கூனிக்குறுகினேன்’+ என்று சொன்னான்.” 20  யெகோவா சொல்வது இதுதான்: “எப்பிராயீம் என் அருமை மகன்தானே? என் செல்லப் பிள்ளைதானே?+ நான் பல தடவை அவனுக்கு எதிராகப் பேசினாலும் அவனை எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அவனுக்காக என் உள்ளம்* உருகுகிறது.+ அவனுக்குக் கண்டிப்பாக இரக்கம் காட்டுவேன்.+ 21  இஸ்ரவேல் கன்னிப் பெண்ணே, உன் நகரங்களுக்குத் திரும்பி வா.சாலையில் மைல்கல்களையும்,+ திசைகாட்டும் கல்தூண்களையும் உனக்காக நாட்டி வை. நீ போக வேண்டிய நெடுஞ்சாலையின் மேல் கவனம் வை.+ 22  துரோகம் செய்கிற மகளே, நீ எத்தனை காலத்துக்குத்தான் உன் மனதை அலைய விடுவாய்? யெகோவா பூமியில் புதிதாக ஒன்றைச் செய்திருக்கிறார்: மனைவி தன் கணவனை* தேடி ஓடோடி வருவாள்.” 23  இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா இப்படிச் சொல்கிறார்: “சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் திரும்பவும் யூதாவுக்கும் அதன் நகரங்களுக்கும் கூட்டிக்கொண்டு வரும்போது அவர்கள், ‘நீதி குடியிருக்கும் பரிசுத்த மலையே,+ யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று மறுபடியும் சொல்வார்கள். 24  அங்கே யூதா ஜனங்களும், அதன் நகரவாசிகளும், விவசாயிகளும், மேய்ப்பர்களும் ஒற்றுமையாகக் குடியிருப்பார்கள்.+ 25  களைத்துப்போனவர்களுக்கு நான் புத்துணர்ச்சி கொடுப்பேன். பசியில் சோர்ந்துபோன எல்லாருக்கும் தெம்பளிப்பேன்.”+ 26  உடனே நான் கண் விழித்துப் பார்த்தேன். நான் சுகமாகத் தூங்கிவிட்டிருந்தேன். 27  யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் நான் பெருகப் பண்ணுவேன்.”+ 28  யெகோவா சொல்வது இதுதான்: “அவர்களை எப்போது பிடுங்கலாம், இடிக்கலாம், கவிழ்க்கலாம், அழிக்கலாம், நாசமாக்கலாம்+ என்று நான் பார்த்துக்கொண்டு இருந்தது போலவே அவர்களை எப்போது கட்டலாம், நாட்டலாம்+ என்று பார்த்துக்கொண்டு இருப்பேன். 29  அந்த நாட்களில் அவர்கள் யாரும், ‘தகப்பன்கள் புளிப்பான திராட்சைகளைச் சாப்பிட்டார்கள்; ஆனால் பிள்ளைகளின் பற்கள் கூசின’+ என்று சொல்ல மாட்டார்கள். 30  யார் புளிப்பான திராட்சைகளைச் சாப்பிடுகிறார்களோ அவர்களுடைய பற்கள்தான் கூசும். ஒவ்வொருவரும் அவரவர் செய்த பாவத்துக்காகவே சாவார்கள்.” 31  யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் நான் ஒரு புதிய ஒப்பந்தம் செய்வேன்.+ 32  ஆனால், அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது.+ ‘நான் அவர்களுடைய உண்மையான எஜமானாக* இருந்தும் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறினார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.” 33  “அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் ஜனங்களோடு செய்யப்போகிற ஒப்பந்தம் இதுதான். நான் அவர்களுடைய உள்ளத்தில்* என் சட்டங்களை வைப்பேன்.+ அவர்களுடைய இதயத்தில் அவற்றை எழுதுவேன்.+ நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார். 34  “அதுமுதல் அவர்கள் யாரும் தங்களுடைய சகோதரனிடமோ மற்றவர்களிடமோ, ‘யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!’+ என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.+ நான் அவர்களுடைய குற்றத்தை மன்னிப்பேன். அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார். 35  யெகோவா சொல்வது இதுதான்.பகலில் வெளிச்சம் தர சூரியனைப் படைத்து,ராத்திரியில் வெளிச்சம் தர நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் சட்டங்களைக் கொடுத்து,கடலைக் கொந்தளிக்கவும், அலைகளைப் பொங்கியெழவும் வைக்கிறவராகியபரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ளவர்+ சொல்வது இதுதான்: 36  “‘இந்த விதிமுறைகள் எப்படி ஒருநாளும் ஒழிந்துபோகாதோஅப்படியே, இஸ்ரவேல் வம்சமும் என் முன்னால் ஒரு தேசமாக இல்லாதபடி ஒருநாளும் ஒழிந்துபோகாது’+ என்று யெகோவா சொல்கிறார்.” 37  யெகோவா சொல்வது இதுதான்: “‘மேலே இருக்கிற வானத்தை அளக்கவோ, கீழே இருக்கிற பூமியின் அஸ்திவாரத்தைக் கண்டுபிடிக்கவோ ஒருவனால் எப்படி முடியாதோ அப்படித்தான் இஸ்ரவேல் வம்சத்தார் செய்த குற்றங்களுக்காக என்னால் அவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித்தள்ள முடியாது’ என்று யெகோவா சொல்கிறார்.”+ 38  யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இந்த நகரம் அனானெயேல் கோபுரம்முதல்+ ‘மூலை நுழைவாசல்’வரை+ யெகோவாவுக்காகக் கட்டப்படும்.+ 39  அதன் எல்லை+ காரேப் குன்றுவரை நேராகப் போய், கோவாத்தின் திசையில் திரும்பும். 40  பிணங்களும் சாம்பலும்* நிறைந்த பள்ளத்தாக்கும், கீதரோன் பள்ளத்தாக்கு+ வரையிலான எல்லா நிலங்களும், அதாவது கிழக்கே இருக்கிற ‘குதிரை நுழைவாசலின்’+ மூலைவரை இருக்கிற எல்லா நிலங்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும்.+ அது இனி ஒருபோதும் பிடுங்கப்படாது, இடிக்கப்படாது.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “சிரித்து மகிழ்கிறவர்களோடு.”
வே.வா., “காட்டாற்றுப் பள்ளத்தாக்குகளின்.”
வே.வா., “மீட்பார்.”
வே.வா., “அவருடைய நல்மனதால்.”
நே.மொ., “குடல்கள்.”
நே.மொ., “ஒரு பெண் ஒரு ஆணை.”
அல்லது, “கணவராக.”
வே.வா., “அவர்களுக்குள்ளே.”
வே.வா., “பலிகளின் கொழுப்பு கலந்த சாம்பலும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா