Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்

யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்

“விசுவாசம் என்பது . . . பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்.”—எபி. 11:1.

பாடல்கள்: 54125

1. நமக்கு விசுவாசம் இருப்பதைப் பற்றி நாம் எப்படி உணர வேண்டும்?

கிறிஸ்தவ விசுவாசம் என்பது விலைமதிக்க முடியாத ஒன்று! அது எல்லாரிடமும் இருப்பதில்லை. (2 தெ. 3:2) தன்னை வணங்குகிற எல்லாருக்கும் யெகோவா விசுவாசத்தைத் தருகிறார். (ரோ. 12:3; கலா. 5:22) அதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!

2, 3. (அ) விசுவாசம் இருப்பதால் நமக்கு என்ன நன்மை? (ஆ) என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்?

2 எல்லா மக்களும் இயேசுமீது விசுவாசம் வைக்கவும், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படவும் யெகோவா தன்னுடைய அன்பு மகனைக் கொடுத்தார். அப்படிக் கொடுத்ததால்தான், மக்களால் யெகோவாவுடைய நண்பர்களாக ஆக முடிகிறது. அதோடு, முடிவில்லாமல் வாழ்வதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. (யோவா. 6:44, 65; ரோ. 6:23) நாம் பாவிகளாக இருப்பதால் மரணம்தான் நமக்குக் கூலியாகக் கிடைக்க வேண்டும்! ஆனால், நம்மால் நல்ல விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை யெகோவா பார்த்திருக்கிறார். யெகோவா எவ்வளவு தயவானவர்! (சங். 103:10) இயேசுவைப் பற்றியும் அவருடைய பலியைப் பற்றியும் கற்றுக்கொள்ள அவர் நமக்கு உதவியிருக்கிறார். அதனால், முடிவில்லாத வாழ்க்கை வாழ முடியும் என்ற எதிர்பார்ப்போடு நாம் இயேசுமீது விசுவாசம் வைக்க ஆரம்பித்தோம்.1 யோவான் 4:9, 10-ஐ வாசியுங்கள்.

3 விசுவாசத்தைப் பற்றி நாம் இன்னும் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுள் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்றும், எதிர்காலத்தில் என்ன செய்வார் என்றும் தெரிந்திருந்தால் மட்டும் விசுவாசம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? விசுவாசத்தை என்னென்ன வழிகளில் காட்டலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

‘உங்களுடைய இருதயத்தில் விசுவாசம் வையுங்கள்’

4. விசுவாசம் இருந்தால் நாம் என்ன செய்வோம்?

4 யெகோவா மீதும் இயேசு மீதும் நமக்கு விசுவாசம் இருந்தால் அவர்கள் நமக்காக என்ன செய்திருக்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்ள மாட்டோம். அவர்கள் சொல்லிக்கொடுத்ததைப் போல வாழ அதிகமாக ஆசைப்படுவோம். அதோடு, அவர்களைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவும் ஆசைப்படுவோம். “‘இந்தச் செய்தியை உங்களுடைய வாயினால்’ அறிவித்து, அதாவது இயேசுவே எஜமானர் என்று அறிவித்து, அவரைக் கடவுள் உயிர்த்தெழுப்பினார் என நீங்கள் உங்களுடைய இருதயத்தில் விசுவாசித்தால் மீட்புப் பெறுவீர்கள். ஒருவன் இருதயத்தில் விசுவாசிக்கும்போது கடவுளுக்குமுன் நீதிமானாகிறான்; என்றாலும், வாயினால் அறிவிக்கும்போது மீட்புப் பெறுகிறான்” என்று அப்போஸ்தலர் பவுல் சொன்னார்.—ரோ. 10:9, 10; 2 கொ. 4:13.

5. விசுவாசம் ஏன் ரொம்ப முக்கியம், அதை எப்படிப் பலமாக வைத்துக்கொள்ள முடியும்? உதாரணம் கொடுங்கள்.

5 கடவுளுடைய புதிய உலகத்தில் முடிவில்லாமல் வாழ வேண்டுமென்றால், நமக்கு விசுவாசம் தேவை. அதோடு, அந்த விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வதும் முக்கியம். விசுவாசம் ஒரு செடியைப் போல இருக்கிறது. செடி வாடாமல் நன்றாக வளர, தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றவில்லை என்றால், அது காய்ந்துபோய் செத்துவிடும். அதே போல, நம்முடைய விசுவாசம் ‘உறுதியாக’ இருக்கவும், ‘அதிகதிகமாக வளரவும்’ நாம் கடினமாக உழைக்க வேண்டும்.—தீத். 2:2; 2 தெ. 1:3; லூக். 22:32; எபி. 3:12.

விசுவாசத்தைப் பற்றி பைபிள் தரும் விளக்கம்

6. விசுவாசத்தைப் பற்றி எபிரெயர் 11:1 தரும் இரண்டு விளக்கங்கள் என்ன?

6 விசுவாசம் என்றால் என்ன என்பதைப் பற்றி எபிரெயர் 11:1 விளக்குகிறது. (வாசியுங்கள்.) (1) விசுவாசம் என்பது “எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்.” இங்கே சொல்லப்பட்டிருக்கும் எதிர்பார்க்கிற காரியங்கள் என்பது எதிர்காலத்தைப் பற்றி கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை உட்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, அநியாயமும் அக்கிரமமும் ஒழிந்த பிறகு புதிய உலகம் வரும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். (2) விசுவாசம் என்பது “பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை” அல்லது நம்பகமான ஆதாரத்தைக் காண்பதாகும். யெகோவாவையும், இயேசு கிறிஸ்துவையும், தேவதூதர்களையும் நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறோம். பரலோகத்தில் இருக்கிற கடவுளுடைய அரசாங்கத்தை நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும் அதையும் நம்புகிறோம். (எபி. 11:3) கடவுளுடைய வாக்குறுதிகள் மீதும், நம்மால் பார்க்க முடியாத விஷயங்கள் மீதும், நமக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்? நாம் வாழும் விதத்திலும், பேசும் விதத்திலும், நடந்துகொள்ளும் விதத்திலும் அதைக் காட்டலாம்.

7. விசுவாசம் வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றி புரிந்துகொள்ள நோவாவின் உதாரணம் எப்படி உதவும்? (ஆரம்பப் படம்)

7 விசுவாசத்தைப் பற்றி நோவாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? “காணப்படாதவற்றைக் குறித்துத் தெய்வீக எச்சரிப்பைப் பெற்றபோது, தேவபயத்தைக் காண்பித்து, தன் குடும்பத்தைக் காப்பாற்ற [நோவா] ஒரு பேழையைக் கட்டினார்” என்று அப்போஸ்தலர் பவுல் நோவாவைப் பற்றி சொன்னார். (எபி. 11:7) யெகோவா சொன்ன விஷயத்தின்மீது நோவாவுக்கு விசுவாசம் இருந்ததால் அவர் பிரம்மாண்டமான ஒரு பேழையைக் கட்டினார். அவர் ஏன் பேழையைக் கட்டுகிறார் என்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கேட்டிருக்கலாம். அதற்கு நோவா பதில் சொல்லாமல் இருந்திருக்க மாட்டார் என்று நமக்குத் தெரியும். ஏனென்றால், நோவா ‘நீதியைப் பிரசங்கித்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (2 பே. 2:5) கெட்டவர்களை அழிக்க கடவுள் ஒரு பெரிய வெள்ளத்தைக் கொண்டு வரப்போகிறார் என்று அவர் மக்களிடம் தைரியமாகச் சொன்னார். “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன் . . . வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்” என்று யெகோவா நோவாவிடம் சொல்லியிருந்தார். யெகோவா சொன்னதை அவர் அப்படியே மக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். அந்த வெள்ளத்திலிருந்து தப்பிக்க மக்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதையும் நோவா அவர்களிடம் நிச்சயம் சொல்லியிருக்க வேண்டும்; “பேழைக்குள் பிரவேசியுங்கள்” என்று யெகோவா நோவாவுக்குக் கட்டளை கொடுத்திருந்தார்.—ஆதி. 6:13, 17, 18.

8. விசுவாசத்தைப் பற்றி யாக்கோபு என்ன எழுதினார்?

8 அப்போஸ்தலர் பவுல் எபிரெயர்களுக்குக் கடிதம் எழுதிய கொஞ்ச காலத்திலேயே யாக்கோபும் விசுவாசத்தைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். “உன்னுடைய விசுவாசத்தை எனக்குக் காட்டு, நான் என் விசுவாசத்தைச் செயல்கள் மூலம் உனக்குக் காட்டுகிறேன்” என்று அவர் எழுதினார். (யாக். 2:18) ஒரு விஷயத்தை வெறுமென நம்புவதற்கும் அதன்மீது விசுவாசத்தைக் காட்டுவதற்கும் இருக்கிற வித்தியாசத்தைப் பற்றி யாக்கோபு விளக்கினார். கடவுள் இருக்கிறார் என்று பேய்களும் நம்புகின்றன; ஆனால், அவற்றுக்கு யெகோவாமீது விசுவாசம் இல்லை. அதற்குப் பதிலாக, அவை யெகோவாவையே எதிர்க்கின்றன. (யாக். 2:19, 20) விசுவாசம் இருக்கிற ஒருவர், நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் கடவுளைப் பிரியப்படுத்துவார். ஆபிரகாம் அதைத்தான் செய்தார். “நம் தகப்பனான ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின் மீது கிடத்தியபோது, செயல்களினால்தானே நீதிமானாக அங்கீகரிக்கப்பட்டார்? நீ அறிந்திருக்கிறபடி, அவருடைய விசுவாசமும் அவருடைய செயல்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டன, அவருடைய செயல்களினால் அவருடைய விசுவாசம் பரிபூரணமானது” என்று ஆபிரகாமைப் பற்றி யாக்கோபு எழுதினார். விசுவாசம் இருந்தும் அதற்கேற்ற செயல்கள் இல்லை என்றால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை விளக்குவதற்காக, “உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பதுபோல், செயல்கள் இல்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” என்றும் எழுதினார்.—யாக். 2:21-23, 26.

9, 10. மகன்மீது விசுவாசம் வைப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?

9 முப்பது வருடங்களுக்குப் பிறகு, யோவான் தன்னுடைய சுவிசேஷத்தையும் மூன்று கடிதங்களையும் எழுதினார். மற்ற பைபிள் எழுத்தாளர்களைப் போல, விசுவாசம் என்றால் என்ன என்று யோவானும் புரிந்துவைத்திருந்தார். “விசுவாசம் வையுங்கள்” என்ற அர்த்தத்தைத் தரும் கிரேக்க வினைச்சொல்லை யோவான் தன்னுடைய பதிவுகளில் அடிக்கடி பயன்படுத்தினார்.

10 உதாரணத்துக்கு, “மகன்மீது விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லா வாழ்வு இருக்கிறது; மகனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவனுக்கோ முடிவில்லா வாழ்வு இல்லை, கடவுளுடைய கடுங்கோபத்திற்கே அவன் ஆளாவான்” என்று யோவான் எழுதினார். (யோவா. 3:36) நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்தால், நமக்கு விசுவாசம் இருக்கிறது என்று அர்த்தம். முடிவில்லாத வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்றால், தன் மீதும் தன்னுடைய அப்பா மீதும் நாம் விசுவாசம் வைக்க வேண்டும் என்று இயேசு அடிக்கடி சொன்னதை யோவானுடைய பதிவுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.—யோவா. 3:16; 6:29, 40; 11:25, 26; 14:1, 12.

11. உண்மைகளைத் தெரிந்து வைத்திருப்பதற்காக நாம் எப்படி யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கலாம்?

11 யெகோவாவையும் அவருடைய மகனையும் பற்றிய உண்மைகளை நாம் புரிந்துகொண்டு அவர்கள்மீது விசுவாசம் வைக்க வேண்டும் என்பதற்காக யெகோவா அவருடைய சக்தியைப் பயன்படுத்தினார். (லூக்கா 10:21-ஐ வாசியுங்கள்.) யெகோவா நமக்குச் செய்திருக்கும் எல்லாவற்றுக்கும் நாம் நன்றியோடு இருக்க வேண்டும். “விசுவாசத்தின் அதிபதியாக இருப்பவரும் விசுவாசத்தைப் பரிபூரணமாக்குபவருமான” இயேசுவின் மூலம் தன்னோடு நட்பு வைத்துக்கொள்ள யெகோவா நமக்கு உதவியிருக்கிறார். அதனால், அவருக்கு நன்றி சொல்வதை நாம் நிறுத்திவிடவே கூடாது. (எபி. 12:2) யெகோவாவிடம் ஜெபம் செய்வதன் மூலமும் அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.—எபே. 6:18; 1 பே. 2:2.

உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நற்செய்தியைச் சொல்வதன் மூலம் விசுவாசத்தைக் காட்டுங்கள் (பாரா 12)

12. என்னென்ன வழிகளில் நாம் விசுவாசத்தைக் காட்ட வேண்டும்?

12 யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது நமக்குப் பலமான விசுவாசம் இருக்கிறது என்பதை நாம் தொடர்ந்து நம்முடைய செயல்களில் காட்ட வேண்டும். உதாரணத்துக்கு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி தொடர்ந்து மக்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் இயேசுவின் சீடர்களாக ஆவதற்கு நாம் உதவ வேண்டும். அதோடு, ‘எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும், முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய வேண்டும்.’ (கலா. 6:10) ‘பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட’ கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், யெகோவாவோடு நமக்கு இருக்கிற நட்பைக் கெடுத்துக்கொள்வதற்கு நாம் எதையும் அனுமதிக்க விரும்புவது இல்லை.—கொலோ. 3:5, 8-10.

கடவுள்மீதுள்ள விசுவாசம் நம் அஸ்திவாரத்தின் ஓர் அம்சம்

13. ‘கடவுள்மீதுள்ள விசுவாசம்’ எந்தளவு முக்கியம்? அதைப் பற்றி பைபிள் எப்படி விளக்குகிறது, ஏன்?

13 “விசுவாசமில்லாமல் ஒருவனும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது; ஏனென்றால், கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார் என்றும் நம்ப வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 11:6) ‘கடவுள்மீதுள்ள விசுவாசம்’ நம்முடைய ‘அஸ்திவாரமாக’ இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், ஒருவர் உண்மை கிறிஸ்தவராக ஆகவும், தொடர்ந்து நிலைத்திருக்கவும் விசுவாசம் ரொம்ப முக்கியம். (எபி. 6:1, 2) யெகோவாவோடு நட்பு வைத்துக்கொள்ளவும் அதைக் காத்துக்கொள்ளவும் விசுவாசத்தைத் தவிர மற்ற குணங்களும் அவசியம்.2 பேதுரு 1:5-7-ஐ வாசியுங்கள்; யூ. 20, 21.

14, 15. நமக்கு வெறும் விசுவாசம் மட்டுமே இல்லாமல், அன்பு இருப்பதும் ஏன் முக்கியம்?

14 விசுவாசத்தைப் பற்றி நூற்றுக்கணக்கான தடவை குறிப்பிடுவதன் மூலம் அது எந்தளவு முக்கியம் என்று பைபிள் எழுத்தாளர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். வேறு எந்தக் குணங்களும் இவ்வளவு அடிக்கடி பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால், விசுவாசம்தான் கிறிஸ்தவ குணங்களில் மிக முக்கியமான குணம் என்று அர்த்தமா?

15 அன்பை விசுவாசத்தோடு ஒப்பிட்டுப் பவுல் இப்படி எழுதினார்: “மலைகளை இடம்பெயரச் செய்யுமளவு விசுவாசமிக்கவனாக இருந்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை.” (1 கொ. 13:2) கடவுள்மீது அன்பு காட்டுவதுதான் “தலைசிறந்த கட்டளை” என்று இயேசு சொன்னார். (மத். 22:35-40) கடவுளைப் பிரியப்படுத்துவதற்குத் தேவையான மற்ற குணங்களை வளர்த்துக்கொள்ள அன்பு நமக்கு உதவும். உதாரணத்துக்கு, அன்பு “எல்லாவற்றையும் விசுவாசிக்கும்” என்று பைபிள் சொல்கிறது. அதனால், பைபிளில் கடவுள் சொல்லியிருக்கிற எல்லாவற்றையும் நம்ப அல்லது அதன்மீது விசுவாசம் வைக்க அன்பு நமக்கு உதவும்.—1 கொ. 13:4, 7.

16, 17. விசுவாசத்தைப் பற்றியும் அன்பைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது? இவற்றில் எது தலைசிறந்தது, ஏன்?

16 விசுவாசம், அன்பு ஆகிய இரண்டுமே மிக முக்கியமான குணங்கள்தான். அதனால்தான், பைபிள் எழுத்தாளர்கள் அடிக்கடி இவை இரண்டையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார்கள். “விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாக” போட்டுக்கொள்ளும்படி பவுல் தன் சகோதரர்களை உற்சாகப்படுத்தினார். (1 தெ. 5:8) “நீங்கள் [இயேசுவை] பார்த்ததே இல்லை என்றாலும், அவர்மீது அன்பு காட்டுகிறீர்கள். இப்போது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தாலும், அவர்மீது விசுவாசம் வைக்கிறீர்கள்” என்று பேதுரு எழுதினார். (1 பே. 1:8) “இந்த உலகத்தில் ஏழைகளாக இருப்பவர்களை, விசுவாசத்தில் செல்வந்தர்களாகவும் தம்மீது அன்பு காட்டுகிறவர்களுக்குத் தாம் வாக்குறுதி அளித்த அரசாங்கத்தின் வாரிசுகளாகவும் இருப்பதற்குக் கடவுள் தேர்ந்தெடுத்தார், அல்லவா?” என்று பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களிடம் யாக்கோபு கேட்டார். (யாக். 2:5) “இதுவே அவருடைய கட்டளை: அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் நாம் விசுவாசம் வைத்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடியே ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்” என்று யோவான் எழுதினார்.—1 யோ. 3:23.

17 “விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றும் நிலைத்திருக்கும்; இவற்றில் அன்பே தலைசிறந்தது” என்று பவுலும் எழுதினார். (1 கொ. 13:13) எதிர்காலத்தில், புதிய உலகத்தைப் பற்றி கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்மீது நாம் விசுவாசம் வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால், அவருடைய வாக்குறுதிகள் எல்லாம் ஏற்கெனவே நிறைவேறியிருக்கும். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் அருமையான வாழ்க்கையை அப்போது நாம் சந்தோஷமாக அனுபவிப்போம். ஆனால், கடவுள் மீதும் மக்கள் மீதும் அன்பு காட்டுவது எப்போதுமே ஒழியாது. சொல்லப்போனால், கடவுள் மீதும் மக்கள் மீதும் உள்ள அன்பு என்றென்றும் அதிகமாகிக்கொண்டே இருக்கும்.

நம் விசுவாசத்தை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார்

18, 19. இன்று விசுவாசம் காட்டுவதால் கடவுளுடைய மக்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கிறது?

18 இன்று கடவுளுடைய மக்கள் அவருடைய அரசாங்கத்தின்மீது விசுவாசம் வைக்கிறார்கள், அதை ஆதரிக்கவும் செய்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். இதன் மூலம், கடவுளுடைய சக்தி தங்கள் வாழ்க்கையை வழிநடத்த அவர்கள் அனுமதிக்கிறார்கள். (கலா. 5:22, 23) அதனால், உலகம் முழுவதும் இருக்கிற 80 லட்சத்துக்கும் அதிகமான சகோதர சகோதரிகள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள். விசுவாசமும் அன்பும் எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது, இல்லையா?

19 யெகோவாவின் மக்கள் மத்தியில் இருக்கிற ஒற்றுமைக்குக் காரணம் கடவுள்தான், இதற்கான புகழ் அவருக்கே சேர வேண்டும்! (ஏசா. 55:13) ‘விசுவாசத்தின் மூலம் மீட்புப் பெற’ அவர் நமக்கு உதவியிருக்கிறார். இதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! (எபே. 2:8) இன்னும் நிறைய பேர் தன்மீது விசுவாசம் வைக்க யெகோவா தொடர்ந்து உதவுவார். கடைசியில், இந்த முழு பூமியும் பரிபூரணமான, நீதியுள்ள, என்றென்றும் யெகோவாவைப் புகழ்கிற சந்தோஷமான மக்களால் நிறைந்திருக்கும்!