விரக்தியை விரட்டியடிக்க...
விரக்தியை விரட்டியடிக்க...
வாழ்க்கையில் விரக்தி உங்களை வாட்டியெடுக்கிறதா? சொல்லப்போனால், எல்லார் வாழ்விலும் விரக்தி எட்டிப் பார்ப்பதுண்டு. பொருளாதார நெருக்கடி... பரவிவரும் வன்முறை... கரைபுரண்டோடும் அநீதி... நம் நாளில் தலைவிரித்தாடுகின்றன. அதனால், எத்தனையோ பேர் சோகத்தில் மூழ்கிவிடுகிறார்கள், குற்றவுணர்வால் கூனிக் குறுகுகிறார்கள், எதற்குமே லாயக்கற்றவர்கள் என நினைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட உணர்ச்சிகள் ஆபத்தானவை. இவை நம் தன்னம்பிக்கையைத் தகர்த்தெறிந்துவிடுகின்றன, சிந்திக்கும் திறனைச் சிதைத்துவிடுகின்றன, சந்தோஷத்தைச் சாகடித்துவிடுகின்றன. “துன்பக் காலத்தில் நீ தைரியமிழந்து போவாயானால், உண்மையிலேயே நீ பலவீனன் ஆவாய்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 24:10, ஈஸி டு ரீட் வர்ஷன்.) கொந்தளிப்பான இவ்வுலகில் வாழ்க்கைப் படகை ஓட்ட பலம் தேவை. அப்படியானால், விரக்தியைக் கட்டுப்படுத்துவது ரொம்ப ரொம்ப முக்கியம். a
விரக்தியை வெல்ல பைபிள் வலிமைமிக்க ஆயுதமாக இருக்கிறது. உயிர்களைப் படைத்தவரும் காப்பவருமான யெகோவா, நம்பிக்கையின்மை எனும் புதைகுழியில் நீங்கள் புதைந்துவிட விரும்புவதில்லை. (சங்கீதம் 36:9) விரக்தியை விரட்டியடிக்க அவருடைய வார்த்தை காட்டும் மூன்று வழிகளை இப்போது பார்க்கலாம்.
கடவுள் உங்கள்மீது அக்கறையுள்ளவர் என்பதை மறந்துவிடாதீர்கள்
‘நம் ஒவ்வொருவருடைய உணர்ச்சிகளையும் யோசித்துப் பார்க்க கடவுளுக்கு நேரமேது?’ என்று சிலர் நினைக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? உண்மை என்னவென்றால், படைப்பாளர் நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார் என்று பைபிள் உறுதி அளிக்கிறது. “உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் [யெகோவா] இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 34:18, பொது மொழிபெயர்ப்பு.) நாம் வேதனையில் வெதும்பிக் கொண்டிருக்கும்போது சர்வ வல்லவர் நம் பக்கத்தில் இருக்கிறார் என்பது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
கடவுள் அக்கறையற்றவரோ தூரமாய் விலகியிருப்பவரோ அல்ல. “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) மக்களை அவர் நேசிக்கிறார், துயரத்தில் இருப்பவர்களைப் புரிந்துகொள்கிறார். உதாரணமாக, சுமார் 3,500 ஆண்டுகளுக்கும் முன்பு இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது கடவுள் இப்படிச் சொன்னார்: ‘எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் [நன்கு] அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்க . . . இறங்கினேன்.’—யாத்திராகமம் 3:7, 8.
ஆம், கடவுள் நம் உணர்வுகளை நன்கு அறிந்திருக்கிறார். ஏனென்றால், “நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்.” (சங்கீதம் 100:3) எனவே, சக மனிதர்கள் நம்மைப் புரிந்துகொள்ளாதபோதும்கூட கடவுள் நம்மை நிச்சயம் புரிந்துகொள்கிறார். ‘மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்’ என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (1 சாமுவேல் 16:7) நம் ஆழ்மனதில் புதைந்துகிடக்கும் உணர்ச்சிகளையும்கூட கடவுளால் பார்க்க முடியும்.
நம் தவறுகளையும் குறைபாடுகளையும் யெகோவா அறிந்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், நம் அன்புள்ள படைப்பாளர் மன்னிக்கிறவர் என்பதை நினைத்து நாம் சந்தோஷப்படலாம். ‘தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்’ என்று பைபிள் எழுத்தாளர் தாவீது சொன்னார். (சங்கீதம் 103:13, 14) நம்முடைய குறைகளை மட்டுமே நாம் பார்க்கிறோம், ஆனால், கடவுள் நம்மைப் பார்க்கிற விதமே வேறு. பாவங்களை விட்டு நாம் மனந்திரும்பும்போது நம்மிடமுள்ள நல்ல குணங்களையே பார்க்கிறார், கெட்டதை அல்ல.—சங்கீதம் 139:1-3, 23, 24.
ஆகவே, ‘நான் எதற்குமே லாயக்கில்லை’ என்ற உணர்வு நம்மை அலைக்கழிக்கும்போது அதைத் தீவிரமாக எதிர்த்துப் போராட வேண்டும். கடவுள் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!—கடவுளுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
கடவுள் நம்மைப் பார்க்கும் விதமாக நாமும் நம்மைப் பார்ப்பதால் என்ன பயன்? விரக்தியை விரட்ட உதவும் அடுத்த படியை எடுப்பது, அதாவது கடவுளோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்வது, நமக்குச் சுலபமாகிவிடும். ஆனால், இது சாத்தியமா?
யெகோவா நம் அன்புள்ள தகப்பனாக இருப்பதால், நாம் அவருடன் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள உதவுவதற்கு ஆவலாய் இருக்கிறார். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (யாக்கோபு 4:8) இந்த அற்புதமான உண்மையைக் கவனியுங்கள்: நாம் பலவீனரும் பாவிகளுமாக இருக்கிறபோதிலும், இந்த அண்டசராசரத்தையே படைத்தவருடன் நெருங்கிய நட்புறவை வளர்த்துக்கொள்ள முடியும்.
கடவுளை நிஜமான ஒரு நபராகப் பார்ப்பதற்கும் அவரைப் பற்றி அறிந்துகொள்வதற்குமே பைபிளில் தம்மைப் பற்றி அவர் தெரியப்படுத்தியிருக்கிறார். தினமும் பைபிளைப் படிப்பதன்மூலம் கடவுளின் இனிய குணங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். b இவற்றையெல்லாம் தியானிக்கும்போது யெகோவா நம் பக்கத்திலேயே இருப்பதுபோல் உணருவோம். அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்வோம்; ஆம், அன்பையும் பாசத்தையும் பொழிகிற ஓர் அப்பா என்பதைப் புரிந்துகொள்வோம்.
பைபிளில் வாசிக்கும் விஷயங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்கும்போது இன்னும் அதிக நன்மைகளைப் பெறுவோம். நம் பரலோக தகப்பனின் எண்ணங்களை மனதிலும் இருதயத்திலும் பதிய வைத்து, அவை நம்மைத் திருத்தவும், தேற்றவும், வழிகாட்டவும் அனுமதிக்கும்போது அவருடன் அதிகமாக நெருங்கி வருவோம். முக்கியமாக, நம் எண்ணங்களும் உணர்ச்சிகளும் நம்மை அலைக்கழிக்கும்போது அல்லது மன அமைதியைக் குலைக்கும்போது இப்படிச் செய்வது அவசியம். “கவலைகளினால் நான் பாரமடையும்போது நீர் என்னை ஆறுதல்படுத்தினீர், பாதுகாப்பாய் உணரச் செய்தீர்” என்று சங்கீதக்காரன் சொன்னார். (சங்கீதம் 94:19, கன்டம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்.) கடவுளின் வார்த்தை நம் நெஞ்சத்தை வருடிக்கொடுக்கும் மயிலிறகாய் இருக்கும். அந்தச் சத்திய வார்த்தையை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளும்போது, நம் மனதில் உள்ள விரக்தியெல்லாம் படிப்படியாய் பறந்தோடிவிடும், அதற்குப் பதிலாக கடவுள் மட்டுமே அருளும் ஆறுதலும் சமாதானமும் குடிகொள்ளும். வலியில் துடிக்கிற அல்லது சோகத்தில் வாடுகிற பிள்ளையை ஆசுவாசப்படுத்தும் அன்பான அப்பாவைப் போல யெகோவா நம்மை ஆறுதல்படுத்துகிறார்.
யெகோவாவுடன் நட்புறவு கொள்ள இன்னொரு வழி அவருடன் தினமும் பேசுவதாகும். “கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” என்று பைபிள் உறுதியளிக்கிறது. (1 யோவான் 5:14) பயமோ கவலையோ எதுவாக இருந்தாலும் சரி, தயங்காமல் கடவுளிடம் நாம் உதவிகேட்டு ஜெபிக்கலாம். நம் மனதில் உள்ளதையெல்லாம் கடவுளிடம் கொட்டிவிட்டோமென்றால் மனசமாதானம் பனித்துளியாய் நமக்குள் வந்திறங்கும். “எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—பிலிப்பியர் 4:6, 7.
பைபிள் வாசிப்பதை... தியானிப்பதை... ஜெபிப்பதை... பழக்கமாக்கிக்கொண்டால், பரலோக தகப்பனுடன் உங்கள் உறவு நங்கூரம்போல் உறுதிப்படும். இப்படிப்பட்ட உறவே விரக்தியை விரட்டியடிக்க உதவும் வலிமைமிக்க ஆயுதம். வேறு என்ன உதவி இருக்கிறது?
உறுதியான எதிர்கால நம்பிக்கையை கண்முன் நிறுத்துங்கள்
நெருப்பில் விழுந்த புழுவாய் துயரத்தில் துடிக்கும்போதுகூட நம்பிக்கையூட்டும் விஷயங்களை மனதில் அசைபோடலாம். எப்படி? ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கையை கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த அற்புதமான நம்பிக்கையை அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு வார்த்தைகளில் வடிக்கிறார்: “[கடவுளுடைய] வாக்குறுதியின்படியே நீதி குடிகொண்டுள்ள புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) இதற்கு அர்த்தம் என்ன?
“புதிய வானம்” என்பது ஓர் அரசாங்கத்தை, அதாவது இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் பரலோக அரசாங்கத்தை, குறிக்கிறது. “புதிய பூமி” என்பது புதிய மனித சமுதாயத்தை, அதாவது பூமியில் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்ற மக்களை, குறிக்கிறது. இந்த ஆட்சியில், விரக்திக்குக் காரணமான எல்லாவற்றிலிருந்தும் புதிய மனித சமுதாயம் விடுதலை பெற்றிருக்கும். அப்போது அங்கு வாழும் நல்மனமுள்ள மக்களின் “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும் என்று சொல்வதைக் கேட்டேன்” என்று பைபிள் உறுதியளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:4.
இவையெல்லாம் மனதுக்கு இதமாக, இனிமையாக இருக்கிறது, அல்லவா! அதனால்தான், உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு கடவுள் அளிக்கும் இந்த எதிர்கால நம்பிக்கையை ஓர் “மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு” என்று பைபிள் வர்ணிக்கிறது. (தீத்து 2:13) மனிதகுலத்திற்கு கடவுள் தந்திருக்கும் வாக்குறுதிகளை நம் கண்முன் நிறுத்தும்போது... இவை நம்பகமானவை, நிஜமானவை என்பதற்கான காரணங்களை நெஞ்சில் பதிக்கும்போது... நம் விரக்தியை எல்லாம் ஓரங்கட்டி விடுவோம்.—பிலிப்பியர் 4:8.
மீட்புக்கான நம்பிக்கையைத் தலைக்கவசத்திற்கு பைபிள் ஒப்பிடுகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:8) பண்டைக் காலங்களில், ஒரு போர்வீரன் தலைக்கவசம் இல்லாமல் போர்க்களத்திற்குத் துணிந்து செல்ல மாட்டான். இது எதிரிகளிடமிருந்து வரும் தாக்குதல்களைத் தடுக்கிறது, பாய்ந்து வரும் நெருப்புக் கணைகளைச் சிதறடிக்கிறது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். தலைக்கவசம் தலையைப் பாதுகாப்பது போல், நம்பிக்கை நம் மனதைப் பாதுகாக்கிறது. நம்பிக்கையூட்டும் விஷயங்களை மனதில் அசைபோடும்போது விரக்தியை... பயத்தை... நம்பிக்கையற்ற மனநிலையை... அகற்ற முடியும்.
ஆம், விரக்தியை விரட்டியடிக்க முடியும், உங்களால் முடியும்! கடவுள் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள், அவரிடம் நெருங்கி செல்லுங்கள், எதிர்கால நம்பிக்கையைக் கண்முன் நிறுத்துங்கள். அப்போது, விரக்தி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் நாள் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை உங்களுக்குப் பிறக்கும்!—சங்கீதம் 37:29. (w10-E 10/01)
[அடிக்குறிப்புகள்]
a தீராத மனஉளைச்சலால் பாதிக்கப்படுவோர் ஒரு நல்ல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.—மத்தேயு 9:12.
b ஜனவரி-மார்ச், 2010 காவற்கோபுர இதழில் பைபிள் வாசிப்பதற்கு உதவும் பயனுள்ள ஓர் அட்டவணை இருக்கிறது.
[பக்கம் 9-ன் சிறுகுறிப்பு]
‘அவர்கள் படுகிற வேதனைகளை நன்கு அறிந்திருக்கிறேன்.’ யாத்திராகமம் 3:7, 8
[பக்கம் 10-ன் சிறுகுறிப்பு]
“கவலைகளினால் நான் பாரமடையும்போது நீர் என்னை ஆறுதல்படுத்தினீர், பாதுகாப்பாய் உணரச் செய்தீர்.” சங்கீதம் 94:19, கன்டம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்
[பக்கம் 11-ன் சிறுகுறிப்பு]
“எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் . . . காத்துக்கொள்ளும்.” பிலிப்பியர் 4:7
[பக்கம் 10, 11-ன் பெட்டி/படம்]
ஆறுதலான வசனங்கள்
‘யெகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம்கொள்ள மாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக்கைக்குரியவர்.’—யாத்திராகமம் 34:6, ERV.
“தம்மை முழு மனதுடன் நம்பும் அனைவருக்காகவும் தம் வல்லமையைக் காட்ட யெகோவாவுடைய கண்கள் பூமியெங்கும் பார்க்கின்றன.”—2 நாளாகமம் 16:9, NW.
“உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் [யெகோவா] இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.”—சங்கீதம் 34:18, பொ.மொ.
‘யெகோவாவே, நீர் நல்லவர், மன்னிக்கிறதற்கு தயாராய் இருக்கிறீர்.’—சங்கீதம் 86:5, NW.
“கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர். தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.”—சங்கீதம் 145:9, ERV.
“உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.”—ஏசாயா 41:13.
“இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.”—2 கொரிந்தியர் 1:3, BSI.
“எந்தக் காரணத்திற்காவது நம்முடைய இருதயம் நம்மைக் கண்டனம் செய்யும்போது, கடவுள் நம்மைக் கண்டனம் செய்வதில்லை என்று நம் இருதயத்திற்கு உறுதியளித்துக்கொள்ளலாம்; ஏனென்றால், கடவுள் நம் இருதயத்தைவிட உயர்ந்தவராகவும், எல்லாவற்றையும் அறிந்தவராகவும் இருக்கிறார்.”—1 யோவான் 3:20.
[பக்கம் 12-ன் பெட்டி/படங்கள்]
விரக்தியை விரட்டி வெற்றி கண்டவர்கள்
“என் அப்பா சரியான குடிகாரர்; அவர் எனக்குக் கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால், ‘நான் எதற்குமே லாயக்கற்றவள்’ என்ற எண்ணம் ரொம்ப வருஷமாகவே என்னை வாட்டி எடுத்தது. ஆனால், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, பூமியில் என்றென்றும் வாழப்போகும் வாக்குறுதியைப் பற்றித் தெரிந்துகொண்டேன். இது என் மனதுக்கும் இதயத்துக்கும் சந்தோஷத்தைத் தந்தது. அதன்பிறகு நான் எப்போதும் பைபிளும் கையுமாகத்தான் இருந்தேன். மனசு உடைந்து போகும்போதெல்லாம் பைபிளைத் திறந்து மனசை தேற்றும் வசனங்களை வாசிப்பேன். கடவுளுடைய அருமையான குணங்களைப் பற்றி படிக்கும்போது, அவர் என்மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறேன்.”—கேத்தியா, 33 வயது பெண்மணி. c
“மது... மாரிஹூவானா... கொக்கேயின்... க்ராக் கொக்கேயின்... இதெற்கெல்லாம் நான் அடிமையானேன்; போதையூட்டும் வச்சிரப் பசையையும் முகர்ந்தேன். என்னிடம் இருந்த காசு பணம் எல்லாத்தையும் இழந்து, ஒரு பிச்சைக்காரனாக நடுத் தெருவில் நின்றேன். ஆனால், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு, நான் அடியோடு மாறிவிட்டேன். கடவுளிடம் நான் ரொம்ப நெருக்கமாகி விட்டேன். இப்போதும் சில நேரங்களில் குற்ற உணர்வும், லாயக்கற்றவன் என்ற உணர்வும் என்னை வாட்டி எடுக்கிறது; அந்தச் சமயங்களில் கடவுளின் அன்பு, கருணை, இரக்கம் போன்ற குணங்களின் மேல் நம்பிக்கை வைக்கக் கற்றுக்கொண்டேன். என்னுடைய சோர்வைச் சமாளிக்க கடவுள் எப்போதுமே உதவுவார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. பைபிளைப் பற்றித் தெரிந்துகொண்டதுதான் வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்.”—ரெனாட்டோ, 37 வயது.
“நான் சின்ன வயசிலிருந்தே அண்ணனோடு என்னை ஒப்பிட்டுப் பார்ப்பேன். எப்போதும் அண்ணனைவிட என்னைத் தாழ்வாகவே நினைத்துக்கொள்வேன். இன்று வரைக்கும் எனக்குத் துளிகூட என்மேல் நம்பிக்கையே இல்லை, நான் செய்வதெல்லாம் சரிதானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கும். ஆனால், இப்படிப்பட்ட எண்ணத்திலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். விடாமல் யெகோவாவிடம் ஜெபம் செய்தேன்; என் தாழ்வு மனப்பான்மையைச் சமாளிக்க அவர் உதவி செய்தார். கடவுள் என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார், என்மீது எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது என் மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.”—ரோபர்ட்டா, 45 வயது பெண்மணி.
[அடிக்குறிப்பு]
c சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.