Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

எல்லாரிடமும் சொல்ல வேண்டிய ஒரு ரகசியம்

எல்லாரிடமும் சொல்ல வேண்டிய ஒரு ரகசியம்

யாராவது உன்னிடம் ஏதாவதொரு ரகசியத்தைச் சொல்லியிருக்கிறார்களா?— a இப்போது நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை, ‘பரிசுத்த ரகசியம்’ என்று பைபிள் சொல்கிறது. அது ‘நெடுங்காலமாக மறைபொருளாய் வைக்கப்பட்டிருந்தது,’ அதாவது ரகசியமாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. (ரோமர் 16:25) அந்த ‘பரிசுத்த ரகசியம்’ என்னவென்று ஆரம்பத்தில் கடவுளுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. ஆனால், போகப்போக மற்றவர்களுக்கும் கடவுள் அதைத் தெரியப்படுத்தினார். எப்படித் தெரியப்படுத்தினார் என்று இப்போது பார்ப்போம்.

சரி, “பரிசுத்தம்” என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?— பரிசுத்தம் என்றால்... புனிதமானது, சுத்தமானது, மிக மிக விசேஷமானது என்று அர்த்தம். பரிசுத்தமான கடவுள் அந்த ரகசியத்தைச் சொல்லியிருப்பதால் அது பரிசுத்த ரகசியம் என அழைக்கப்படுகிறது. அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள யார் ரொம்ப ஆசைப்பட்டார்கள் என்று தெரியுமா?— தேவதூதர்கள்! ‘அந்த விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதற்குத் தேவதூதர்கள் ஆவலோடு இருந்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. ஆம், அந்தப் பரிசுத்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள தேவதூதர்கள் ரொம்பவே ஆசைப்பட்டார்கள்.—1 பேதுரு 1:12.

இயேசு பூமிக்கு வந்தபோது அந்தப் பரிசுத்த ரகசியத்தைப் பற்றிப் பேசினார், அது என்னவென்றும் விளக்கினார். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியம் உங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது” என்று சீடர்களிடம் சொன்னார். (மாற்கு 4:11) அப்படியென்றால், அந்தப் பரிசுத்த ரகசியம் எதைப் பற்றியது... என்று இப்போது உனக்குப் புரிகிறதா?— அது... கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியது. இந்த அரசாங்கத்திற்காகத்தான் ஜெபம் செய்யச் சொல்லி இயேசு சொன்னார்.—மத்தேயு 6:9, 10.

அந்த ரகசியம் “நெடுங்காலமாய்” மறைத்துவைக்கப்பட்டது என்று பார்த்தோம்; அதன் அர்த்தம் என்னவென்று இப்போது பார்ப்போம். ஆதாம்-ஏவாள் கடவுளுடைய பேச்சைக் கேட்காமல் போனதால் கடவுள் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்திவிட்டார்; ஆனாலும்... கடவுள் இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுவார் என்ற விஷயத்தைக் கடவுளுடைய ஜனங்கள் அப்புறம் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 1:26-28; 2:8, 9; ஏசாயா 45:18) அதனால்தான்... கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது மக்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்குமென்று அவர்களால் எழுதிவைக்க முடிந்தது.—சங்கீதம் 37:11, 29; ஏசாயா 11:6-9; 25:8; 33:24; 65:21-24.

சரி, கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் யாரென்று இப்போது பார்ப்போம். கடவுள் யாரை அரசராகத் தேர்ந்தெடுத்தார் என்று தெரியுமா?— அவருடைய மகனையே தேர்ந்தெடுத்தார். அவர்தான் “சமாதானப்பிரபு”; ஆம், இயேசு கிறிஸ்து! “ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 9:6, 7, பொது மொழிபெயர்ப்பு) அப்படியானால் நீயும் நானும், “கடவுளுடைய பரிசுத்த ரகசியமாகிய கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவை” அடைய வேண்டும். (கொலோசெயர் 2:2) கடவுள், முதல் முதலில் படைத்த தேவதூதருடைய (பரலோகத்திலிருந்த தம் மகனுடைய) உயிரை எடுத்து அதை மரியாளின் வயிற்றில் வைத்தார். அந்தத் தேவதூதர் மிகவும் பலசாலியாக இருந்தவர்; அவர்தான் பூமிக்கு வந்து நமக்காக உயிரைக் கொடுத்தார். அதனால்தான் எதிர்காலத்தில் நமக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கப்போகிறது.—மத்தேயு 20:28; யோவான் 3:16; 17:3.

கடவுளுடைய அரசாங்கத்தில் இயேசுவே அரசராக இருப்பார் என்று பார்த்தோம். இன்னும் சில விஷயங்களை இப்போது பார்க்கப்போகிறோம். உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவைப் போல் வேறு சில ஆண்களும் பெண்களும்கூட பரலோகத்திற்குப் போவார்கள்; இதுவும் அந்த ரகசியத்தில் அடங்கியிருக்கிறது. அவர்கள் இயேசுவுடன் சேர்ந்து ஆட்சி செய்வார்கள்!—எபேசியர் 1:8-12.

இயேசுவுடன் சேர்ந்து ஆட்சி செய்யப்போகும் சிலருடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன; அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். ‘உங்களுக்காக ஓர் இடத்தைத் தயார்படுத்துவதற்காக நான் போகிறேன்’ என்று தமது உத்தம அப்போஸ்தலர்களிடம் இயேசு சொன்னார். (யோவான் 14:2, 3) கீழே உள்ள வசனங்களில், இயேசுவுடன் சேர்ந்து ஆட்சி செய்யப்போகும் சிலருடைய பெயர்களைப் பார்க்கலாம்.—மத்தேயு 10:2-4; மாற்கு 15:39-41; யோவான் 19:25.

மொத்தம் எத்தனை பேர் இயேசுவுடன் சேர்ந்து ஆட்சி செய்வார்கள் என்று ரொம்ப காலமாக யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது தெரிந்துவிட்டது. எத்தனை பேர் என்று உனக்குத் தெரியுமா?— 1,44,000 பேர் என்று பைபிள் சொல்கிறது. இந்த விஷயமும்கூட பரிசுத்த ரகசியத்தில் அடங்கியிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 14:1, 4.

இப்போது சொல்... “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய [இந்த] பரிசுத்த ரகசியம்,” எல்லாரிடமும் சொல்ல வேண்டிய ஒரு ரகசியம்தானே?— அப்படியானால்... அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு எத்தனை பேரிடம் சொல்ல முடியுமோ அத்தனை பேரிடமும் நாம் சொல்ல வேண்டும். (w10-E 12/01)

a ஒரு பிள்ளையுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்குப் பிள்ளையையே பதில் சொல்லச் சொல்லுங்கள்.