Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

உயிர்த்தெழுந்து வருபவர்கள் “பெண் எடுப்பதும் இல்லை, பெண் கொடுப்பதும் இல்லை” என்று சதுசேயர்களிடம் இயேசு சொன்னார். (லூக். 20:34-36) அவர் பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் நபர்களைப் பற்றிச் சொன்னாரா?

கணவன் அல்லது மனைவியை மரணத்தில் இழந்த ஒருவர் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கலாம். உயிர்த்தெழுந்து வரும் துணையோடு, பூஞ்சோலை பூமியில் மீண்டும் சேர்ந்து வாழ அவர் ஆசைப்படலாம். மனைவியை இழந்த ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: ‘எங்களோட திருமண வாழ்க்கை இப்படி திடீர்னு முடிஞ்சிடும்னு நான் கொஞ்சங்கூட நினைக்கலை. நானும் என் மனைவியும் சேர்ந்து காலமெல்லாம் யெகோவாவை சேவிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம். என் மனைவி உயிர்த்தெழுந்து வரும்போது அவளோடு சேர்ந்து வாழணும்னு நான் ஆசைப்படுறேன்.’ பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் நபர்கள் திருமணம் செய்ய முடியுமா? அது நமக்குத் தெரியாது.

பூமியில் உயிர்த்தெழுந்து வருபவர்கள் திருமணம் செய்ய முடியாது என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்தோம். ஏனென்றால், லூக்கா 20:34-36-ல் பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் நபர்களைப் பற்றிதான் இயேசு சொன்னார் என்று நினைத்தோம். (மத். 22:29, 30; மாற். 12:24, 25; லூக். 20:34-36) ஆனால், இயேசு பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொல்லியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

லூக்கா 20:27-33-ஐ வாசியுங்கள். உயிர்த்தெழுதலை நம்பாத சதுசேயர்கள், இயேசுவைக் கேள்வி கேட்டு மடக்க நினைத்தார்கள். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, இறந்துபோன ஏழு சகோதரர்களைப் பற்றிக் கேள்வி கேட்டார்கள். ‘அவர்கள் உயிர்த்தெழுந்து வந்தால் அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்?’ என்று இயேசுவிடம் கேட்டார்கள். * அதற்கு இயேசு, “இக்காலத்தில் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள்; ஆனால், வரப்போகும் காலத்தில் வாழ்வு பெறுவதற்கும் உயிர்த்தெழுப்பப்படுவதற்கும் தகுதியானவர்களாக எண்ணப்படுகிறவர்கள் பெண் எடுப்பதும் இல்லை, பெண் கொடுப்பதும் இல்லை. சொல்லப்போனால், இனி அவர்கள் இறந்துபோக மாட்டார்கள், அவர்கள் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்; அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதால் கடவுளுடைய பிள்ளைகளாக இருப்பார்கள்” என்று பதிலளித்தார்.—லூக். 20:34-36.

இந்த வசனத்தில் பூமியில் நடக்கும் உயிர்த்தெழுதலைப் பற்றிதான் இயேசு சொன்னார் என்று நாம் ஏன் பல வருடங்களாக நம்பிக்கொண்டிருந்தோம்? அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, சதுசேயர்கள் பூமியில் நடக்கும் உயிர்த்தெழுதலை மனதில் வைத்துதான் அந்தக் கேள்வியைக் கேட்டார்கள். இரண்டாவதாக, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு பற்றியும் அந்த வசனத்தின் முடிவில் சொன்னார். இவர்களெல்லாம் பூமியில் உயிர்த்தெழுந்து வரப்போகிறவர்கள்.—லூக். 20:37, 38.

ஆனால், இயேசு பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொல்லியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது எப்படி நமக்குத் தெரியும்? அந்த வசனத்தில் இயேசு சொன்ன இரண்டு விஷயங்களைக் கவனியுங்கள்.

‘உயிர்த்தெழுப்பப்படுவதற்கு தகுதியானவர்களாக எண்ணப்படுகிறவர்கள்’ என்று இயேசு சொன்னார். “கடவுளுடைய அரசாங்கத்திற்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுவீர்கள்” என்று பரலோக நம்பிக்கையுள்ளவர்களைத்தான் பற்றி பவுல் சொன்னார். (2 தெ. 1:5, 11) இயேசுவின் மீட்பு பலியின் மூலம் இவர்கள் ‘நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.’ அதனால், இவர்கள் பாவமுள்ளவர்களாக இறப்பதில்லை. (ரோ. 5:1, 18; 8:1) இவர்கள் “சந்தோஷமானவர்கள், பரிசுத்தமானவர்கள்,” இயேசுவோடு ஆட்சி செய்யத் தகுதியுள்ளவர்கள் என்று  பைபிள் சொல்கிறது. (வெளி. 20:5, 6) ஆனால், பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் ஆட்களில் “அநீதிமான்களும்” இருப்பார்கள். (அப். 24:15) அநீதிமான்களை, ‘உயிர்த்தெழுப்பப்படுவதற்கு தகுதியானவர்களாக எண்ணப்படுகிறவர்கள்’ என்று சொல்ல முடியாதே!

“அவர்கள் இறந்துபோக மாட்டார்கள்” என்றும் இயேசு சொன்னார். மற்ற பைபிள்களில், “அவர்களால் சாக முடியாது,” “அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்” என்று இந்த வாக்கியம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகள் பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்குதான் பொருந்தும். ஏனென்றால், அவர்கள் ‘அழியாத’ உடலைப் பெறுவார்கள். அவர்களுக்கு ‘சாவே’ கிடையாது. (1 கொ. 15:53, 54) ஆனால், பூமியில் உயிர்த்தெழுந்து வருகிறவர்கள் முடிவில்லாத வாழ்க்கையைப் பெறுவார்கள்; அழியாத உடலைப் பெற மாட்டார்கள்.

நாம் இதுவரைச் சிந்தித்த விஷயங்களிலிருந்து இயேசு பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றி பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. இதிலிருந்து, உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குப் போகிறவர்களைப் பற்றி நாம் மூன்று விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம்: (1) அவர்களுக்குத் திருமணம் கிடையாது, (2) அவர்களுக்குச் சாவு கிடையாது, (3) அவர்கள் ஒரு விதத்தில் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். ஆனால், இயேசு பரலோக நம்பிக்கையுள்ளவர்களைப் பற்றி பேசினார் என்றால் சில கேள்விகள் எழும்புகின்றன.

பூமியில் நடைபெறும் உயிர்த்தெழுதலை மனதில் வைத்துதான் சதுசேயர்கள் கேள்வி கேட்டார்கள். அப்படியென்றால், இயேசு எப்படி பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசியிருக்க முடியும்? இயேசுவை எதிர்த்தவர்கள் கேள்வி கேட்டபோது, அவர் எப்போதுமே அவர்கள் மனதில் இருந்த விஷயத்திற்கு ஏற்ப பதில் சொல்லவில்லை. உதாரணத்திற்கு, யூதர்கள் ஒரு அடையாளத்தைக் கேட்டபோது, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று இயேசு சொன்னார். எருசலேம் ஆலயத்தைப் பற்றி இயேசு சொல்வதாக அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். “ஆனால், அவர் தமது உடலாகிய ஆலயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.” (யோவா. 2:18-21) அதேபோல், அவரைக் கேள்வி கேட்டு மடக்க நினைத்த சதுசேயர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்று இயேசு நினைத்திருக்கலாம். ஏனென்றால், உயிர்த்தெழுதலையோ தேவதூதர்களையோ சதுசேயர்கள் நம்பவில்லை. (நீதி. 23:9; மத். 7:6; அப். 23:8) அவருடைய சீடர்கள், பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் அப்படிப் பதிலளித்திருக்கலாம். ஏனென்றால், அவர்கள் இறந்த பிறகு உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குப் போவார்கள்.

இயேசு பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசினார் என்றால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபைப் பற்றி ஏன் சொன்னார்? (மத்தேயு 22:31, 32-ஐ வாசியுங்கள்.) “இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொல்லியிருப்பதை நீங்கள் வாசித்ததில்லையா?” என்று சொன்ன பிறகுதான் இவர்களைப் பற்றிச் சொன்னார். பரலோக உயிர்த்தெழுதலையும் பூமியில் நடக்கும் உயிர்த்தெழுதலையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம். சதுசேயர்கள் உயிர்த்தெழுதலை நம்பவில்லை, ஆனால் மோசே எழுதிய வார்த்தைகளை நம்பினார்கள். அதனால், பூமியில் உயிர்த்தெழுதல் நடக்கும் என சதுசேயர்களை நம்ப வைப்பதற்காக, மோசேயிடம் யெகோவா சொன்ன வார்த்தைகளை இயேசு குறிப்பிட்டார்.—யாத். 3:1-6.

லூக்கா 20:34-36-ல், இயேசு பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றிதான் பேசினார் என்றால், பூமியில் உயிர்த்தெழுந்து வருகிறவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியுமா? இதற்கு நேரடியான பதில் பைபிளில் இல்லை. பூமியில் உயிர்த்தெழுந்து வருகிறவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியுமா முடியாதா என்று இயேசு எதுவுமே சொல்லவில்லை.

ஒருவர் இறந்துபோகும்போது அவருடைய திருமண பந்தம் முறிந்துவிடுகிறது என்று பைபிள் சொல்கிறது. எனவே, மணத்துணை இறந்தபிறகு ஒருவர் மறுமணம் செய்துகொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அது அவரவருடைய சொந்தத் தீர்மானம்; மற்றவர்கள் அவரைக் குறை சொல்லக் கூடாது.—ரோ. 7:2, 3; 1 கொ. 7:39.

பூஞ்சோலை பூமியில் நம்முடைய வாழ்க்கையைப் பற்றி நமக்கு நிறைய கேள்விகள் இருக்கலாம். அதையெல்லாம் யோசித்துக்கொண்டு நம் நேரத்தை வீணாக்காமல், பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம், கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழும் மக்கள் பூஞ்சோலையில் சந்தோஷமாக வாழ்வார்கள்; அவர்களுடைய நியாயமான தேவைகளையும் ஆசைகளையும் யெகோவா நிச்சயம் நிறைவேற்றுவார்.—சங். 145:16.

^ பாரா. 5 வாரிசு இல்லாமல் ஒருவன் இறந்துவிட்டால் அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்கு வாரிசை ஏற்படுத்துவது பைபிள் காலங்களில் வழக்கமாக இருந்தது.—ஆதி. 38:8; உபா. 25:5, 6.