லூக்கா எழுதியது 20:1-47

20  ஒருநாள் அவர், ஆலயத்தில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டும் நல்ல செய்தியை அறிவித்துக்கொண்டும் இருந்தார். அப்போது, முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பெரியோர்களும்* அவர் பக்கத்தில் வந்து,  “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்? உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?”+ என்று கேட்டார்கள்.  அதற்கு அவர், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், நீங்கள் பதில் சொல்லுங்கள்.  ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக் கொடுத்தது கடவுளா* மனுஷர்களா?” என்று கேட்டார்.  அப்போது அவர்கள், “‘கடவுள்’* என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’ என்று கேட்பான்.  ‘மனுஷர்கள்’ என்று சொன்னால், ஜனங்கள் எல்லாரும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் நம்புகிறார்களே”+ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு,  ‘அதைக் கொடுத்தது யாரென்று எங்களுக்குத் தெரியாது’ என்று சொன்னார்கள்.  அதற்கு இயேசு, “அப்படியானால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.  பின்பு, மக்களிடம் ஒரு உவமையை அவர் சொல்ல ஆரம்பித்தார்; “ஒருவர் திராட்சைத் தோட்டம் போட்டு,+ அதைத் தோட்டக்காரர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு, பல காலமாகத் தூர தேசத்துக்குப் போயிருந்தார்.+ 10  அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கி வரச் சொல்லி ஒரு அடிமையை அந்தத் தோட்டக்காரர்களிடம் அனுப்பினார். ஆனால், அந்தத் தோட்டக்காரர்கள் அவனை அடித்து, வெறுங்கையோடு அனுப்பிவிட்டார்கள்.+ 11  மறுபடியும் அவர் வேறொரு அடிமையை அவர்களிடம் அனுப்பினார். அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுங்கையோடு அனுப்பிவிட்டார்கள். 12  மறுபடியும் அவர் மூன்றாவது அடிமையை அனுப்பினார். அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள். 13  அப்போது அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர், ‘இப்போது என்ன செய்வது? என் அன்பு மகனை+ அனுப்புவேன். ஒருவேளை அவனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லிக்கொண்டார். 14  அந்தத் தோட்டக்காரர்கள் அவருடைய மகனைப் பார்த்ததும், ‘இவன்தான் வாரிசு. வாருங்கள், இவனைத் தீர்த்துக்கட்டிவிட்டு, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளலாம்’ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். 15  அதன்படியே, அவனைத் திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தள்ளி கொலை செய்தார்கள்.+ அப்படியானால், திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வார்? 16  அவர் வந்து அவர்களைக் கொன்றுபோட்டு, திராட்சைத் தோட்டத்தை மற்றவர்களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “ஒருபோதும் அப்படி நடக்கக் கூடாது!” என்று சொன்னார்கள். 17  ஆனால், இயேசு நேராக அவர்களைப் பார்த்து, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது’+ என்று எழுதப்பட்ட வேதவசனத்தின் அர்த்தம் என்ன? 18  இந்தக் கல்லின் மேல் விழுகிற எவனும் சின்னாபின்னமாவான்.+ இது யார்மேல் விழுகிறதோ அவனை நசுக்கிப்போடும்” என்று சொன்னார். 19  வேத அறிஞர்களும் முதன்மை குருமார்களும் இந்த உவமையைக் கேட்டபோது, தங்களை மனதில் வைத்துதான் அதை அவர் சொன்னார் என்று புரிந்துகொண்டார்கள். அதனால், அப்போதே அவரைப் பிடிக்கப் பார்த்தார்கள். ஆனாலும், மக்களுக்குப் பயந்தார்கள்.+ 20  அதனால் அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள். பின்பு, ரகசியமாக ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவரிடம் அனுப்பினார்கள். நீதிமான்களைப் போல நடித்து, அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைத்து,+ அரசாங்கத்திடமும் ஆளுநரிடமும்* அவரை ஒப்படைப்பதற்காக அவர்களை அனுப்பினார்கள். 21  அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் சரியாகப் பேசுகிறவர், சரியாகக் கற்பிக்கிறவர், பாரபட்சம் காட்டாதவர், கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு, 22  “ரோம அரசனுக்கு* வரி* கட்டுவது சரியா இல்லையா?” என்று கேட்டார்கள். 23  இயேசு அவர்களுடைய தந்திரத்தைப் புரிந்துகொண்டு, 24  “ஒரு தினாரியுவை* என்னிடம் காட்டுங்கள். இதில் இருக்கிற உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?” என்று கேட்டார். அவர்கள், “ரோம அரசனுடையது” என்று சொன்னார்கள். 25  அதற்கு அவர், “அப்படியானால், அரசனுடையதை அரசனுக்கும்+ கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்”+ என்று அவர்களிடம் சொன்னார். 26  மக்கள்முன் அவரைப் பேச்சிலேயே சிக்க வைக்க அவர்களால் முடியவில்லை. மாறாக, அவர் சொன்ன பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப்போய் அமைதியாகிவிட்டார்கள். 27  உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர்களில்+ சிலர் அப்போது அவரிடம் வந்து,+ 28  “போதகரே, ‘திருமணமான ஒருவன் பிள்ளை இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும்’ என மோசே எழுதி வைத்திருக்கிறார்.+ 29  எங்களோடு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளை இல்லாமல் இறந்துபோனான். 30  இரண்டாவது சகோதரனும் மூன்றாவது சகோதரனும் அவளைத் திருமணம் செய்து, பின்பு இறந்துபோனார்கள். 31  அப்படியே ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து பிள்ளை இல்லாமல் இறந்துபோனார்கள். 32  கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். 33  அவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அந்த ஏழு பேருக்கும் அவள் மனைவியாக இருந்தாளே” என்றார்கள். 34  அதற்கு இயேசு, “இந்தக் காலத்தில்* மக்கள் பெண் எடுக்கிறார்கள், பெண் கொடுக்கிறார்கள். 35  ஆனால், வரப்போகும் காலத்தில்* வாழ்வு பெறுவதற்கும் உயிரோடு எழுப்பப்படுவதற்கும் தகுதியானவர்களாகக் கருதப்படுகிறவர்கள் பெண் எடுப்பதும் இல்லை, பெண் கொடுப்பதும் இல்லை.+ 36  சொல்லப்போனால், இனி அவர்களால் சாக முடியாது, அவர்கள் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்; அவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள்* என்பதால் கடவுளுடைய பிள்ளைகளாக இருப்பார்கள். 37  இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதை மோசேயும்கூட முட்புதரைப் பற்றிய தன் பதிவில் சொல்லியிருக்கிறார். அதில், யெகோவாவை* ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’+ என்று அவர் அழைத்திருக்கிறார். 38  கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்”+ என்று சொன்னார். 39  வேத அறிஞர்களில் சிலர் அதைக் கேட்டு, “போதகரே, சரியாகச் சொன்னீர்கள்” என்றார்கள். 40  அதன் பிறகு அவரிடம் எந்தக் கேள்வியையும் கேட்க அவர்களுக்குத் தைரியம் வரவில்லை. 41  பின்பு இயேசு அவர்களிடம், “கிறிஸ்துவை தாவீதின் மகன் என்று எப்படிச் சொல்கிறார்கள்?+ 42  தாவீதும், ‘யெகோவா* என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை 43  என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’+ எனச் சங்கீத புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். 44  அதனால், தாவீதே அவரை எஜமான் என்று அழைத்திருப்பதால் அவர் எப்படி இவருடைய மகனாக இருக்க முடியும்?” என்று கேட்டார். 45  மக்கள் எல்லாரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் தன்னுடைய சீஷர்களிடம், 46  “வேத அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் நீளமான அங்கிகளைப் போட்டுக்கொண்டு திரிய விரும்புகிறார்கள், சந்தைகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஜெபக்கூடங்களில் முன்வரிசை* இருக்கைகளிலும் விருந்துகளில் மிக முக்கியமான இடங்களிலும் உட்கார விரும்புகிறார்கள்.+ 47  விதவைகளுடைய சொத்துகளை* விழுங்கிவிடுகிறார்கள். மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நீண்ட ஜெபம் செய்கிறார்கள். அதனால், அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களும்.”
நே.மொ., “பரலோகமா.”
நே.மொ., “பரலோகம்.”
நே.மொ., “ஆளுநருடைய அதிகாரத்திடமும்.”
நே.மொ., “சீஸருக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “தலைவரி.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “உயிர்த்தெழுதலின் பிள்ளைகளாக இருப்பார்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “மிகச் சிறந்த.”
நே.மொ., “வீடுகளை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள்
ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள்

இந்த அனிமேஷன் வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் காட்சி, காம்லாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நூற்றாண்டு ஜெபக்கூடத்தின் இடிபாடுகளை ஓரளவு அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. காம்லா என்பது கலிலேயா கடலின் வடகிழக்கே சுமார் 10 கி.மீ. (6 மைல்) தூரத்தில் அமைந்திருந்த ஒரு நகரம். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லா ஜெபக்கூடங்களுமே காலப்போக்கில் சேதமடைந்துவிட்டன. அதனால், அன்று ஜெபக்கூடம் எப்படி இருந்தது என்று சரியாகத் தெரியவில்லை. இந்த அனிமேஷனில் காட்டப்படுகிற சில அம்சங்கள், அந்தக் காலத்திலிருந்த நிறைய ஜெபக்கூடங்களில் இருந்ததாகத் தெரிகிறது.

1. பேச்சாளர் நிற்கும் மேடையில் அல்லது அதற்குப் பக்கத்தில் ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள், அதாவது முக்கிய இருக்கைகள், இருந்திருக்கலாம்.

2. போதகர் மேடையில் நின்றுகொண்டுதான் திருச்சட்டத்தை வாசித்திருப்பார். மேடை இருந்த இடம் ஒவ்வொரு ஜெபக்கூடத்திலும் வித்தியாசமாக இருந்திருக்கலாம்.

3. சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றவர்கள் சுவர்பக்கமாக இருந்த இருக்கைகளில் உட்கார்ந்திருக்கலாம். மற்றவர்கள் தரையில் பாய்களை விரித்து உட்கார்ந்திருக்கலாம். காம்லாவில் இருந்த ஜெபக்கூடத்தில் நான்கு வரிசைகளில் இருக்கைகள் இருந்ததாகத் தெரிகிறது.

4. பரிசுத்த சுருள்களைக் கொண்ட பெட்டி, பின்பக்கச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கலாம்.

ஜெபக்கூடத்தில் இருக்கைகள் போடப்பட்டிருந்த விதம், சிலருக்கு மற்றவர்களைவிட உயர்ந்த அந்தஸ்து இருந்ததை எப்போதும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது. இந்த விஷயத்தைப் பற்றித்தான் இயேசுவின் சீஷர்கள் அடிக்கடி வாக்குவாதம் செய்தார்கள்.—மத் 18:1-4; 20:20, 21; மாற் 9:33, 34; லூ 9:46-48.

விருந்துகளில் மிக முக்கியமான இடங்கள்
விருந்துகளில் மிக முக்கியமான இடங்கள்

முதல் நூற்றாண்டில், மேஜைமேல் சாய்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இடது முழங்கையை ஒரு திண்டுமேல் அல்லது தலையணைமேல் வைத்துக்கொண்டு, வலது கையால் சாப்பிட்டார்கள். கிரேக்க-ரோம வழக்கத்தின்படி, சாப்பாட்டு அறையில் தாழ்வான ஒரு மேஜையும், அதைச் சுற்றி உட்காருவதற்கு மூன்று மெத்தைகளும் இருந்தன. இப்படிப்பட்ட சாப்பாட்டு அறையை ரோமர்கள் ட்ரைக்லீனியம் என்று அழைத்தார்கள். (இந்த லத்தீன் வார்த்தை, “மூன்று மெத்தைகள் கொண்ட அறை” என்ற அர்த்தத்தைத் தருகிற ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது.) ஆரம்பத்தில், இப்படிப்பட்ட மேஜையைச் சுற்றி ஒன்பது பேர் உட்காருவது வழக்கமாக இருந்தது; ஒவ்வொரு மெத்தையிலும் மூன்று பேர் உட்கார்ந்தார்கள். ஆனால் பிற்பாடு, அதைவிட அதிகமானவர்கள் உட்காருவதற்கு வசதியாக இன்னும் நீளமான மெத்தைகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் எங்கே உட்கார்ந்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய மதிப்பு கூடியதாகவோ குறைந்ததாகவோ நம்பப்பட்டது. முதல் மெத்தைக்கு மிகவும் குறைந்த மதிப்பு இருந்ததாகவும் (A), இரண்டாவது மெத்தைக்கு ஓரளவு மதிப்பு இருந்ததாகவும் (B), மூன்றாவது மெத்தைக்கு மிக அதிக மதிப்பு இருந்ததாகவும் (C) நம்பப்பட்டது. ஒவ்வொரு மெத்தையிலும்கூட எங்கே உட்கார்ந்தார்கள் என்பதைப் பொறுத்து மதிப்பு கூடியது அல்லது குறைந்தது. ஒருவர் தன்னுடைய வலது பக்கத்தில் இருந்தவரைவிட அதிக மதிப்புள்ளவராகவும், தன்னுடைய இடது பக்கத்தில் இருந்தவரைவிட குறைந்த மதிப்புள்ளவராகவும் கருதப்பட்டார். விருந்து கொடுப்பவர் மிகவும் தாழ்வான மெத்தையின் முதல் இடத்தில் (1) பொதுவாக உட்கார்ந்தார். நடுவிலிருந்த மெத்தையின் மூன்றாவது இடம் (2) மிகவும் மதிப்புள்ளதாக இருந்தது. இந்த வழக்கத்தை யூதர்கள் எந்தளவுக்குப் பின்பற்றினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை; ஆனாலும், மனத்தாழ்மையின் அவசியத்தைப் பற்றி இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது இந்த வழக்கத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.