மாற்கு 12:1-44

12  பின்பு, உவமைகளைப் பயன்படுத்தி பேச ஆரம்பித்தார்; அவர்களிடம், “ஒரு மனுஷர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு,+ அதைச் சுற்றிலும் வேலியடைத்தார். அதில் திராட்சரசத் தொட்டியை அமைத்து, காவலுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினார்.+ அதைத் தோட்டக்காரர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார்.+  அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கி வரச் சொல்லி ஓர் அடிமையை அந்தத் தோட்டக்காரர்களிடம் அனுப்பினார்.  ஆனால், அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு அனுப்பிவிட்டார்கள்.  அதனால், மறுபடியும் வேறொரு அடிமையை அனுப்பினார்; அவர்கள் அவனைத் தலையில் தாக்கி, அவமானப்படுத்தினார்கள்.+  பின்பு இன்னும் ஒருவனை அனுப்பினார், அவனைக் கொன்றுபோட்டார்கள். வேறு பலரையும் அனுப்பினார்; அவர்களில் சிலரை அடித்தார்கள், சிலரைக் கொலை செய்தார்கள்.  அவருக்கு ஒரு அன்பான மகன்+ இருந்தான்; ‘என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று நினைத்து, கடைசியாக அவர் தன்னுடைய மகனையே அனுப்பினார்.  ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், ‘இவன்தான் வாரிசு.+ வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிடலாம், இவனுடைய சொத்து நமக்குக் கிடைத்துவிடும்’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு,  அவனைப் பிடித்து, கொலை செய்து, திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தூக்கிப்போட்டார்கள்.+  இப்போது, அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் என்ன செய்வார்? அவர் வந்து, அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்றுவிட்டு, திராட்சைத் தோட்டத்தை மற்றவர்களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்.+ 10  ‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ 11  இது யெகோவாவின்* செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்ற வசனத்தை நீங்கள் வாசித்ததே இல்லையா?” என்று கேட்டார். 12  அதைக் கேட்டதும், அவரைப் பிடிக்க* நினைத்தார்கள்; ஏனென்றால், தங்களை மனதில் வைத்துதான் அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால், மக்களுக்குப் பயந்து அவரைவிட்டு விலகிப்போனார்கள்.+ 13  பின்பு, அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைப்பதற்காக பரிசேயர்கள் சிலரையும் ஏரோதுவின் ஆதரவாளர்கள் சிலரையும் அனுப்பினார்கள்.+ 14  அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் எப்போதும் உண்மை பேசுகிறவர், யாருடைய தயவையும் எதிர்பார்க்காதவர், மனுஷர்களுடைய வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர், கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரோம அரசனுக்கு* வரி* கட்டுவது சரியா இல்லையா? 15  நாங்கள் வரி கட்ட வேண்டுமா வேண்டாமா?” என்று கேட்டார்கள். அவர்களுடைய வெளிவேஷத்தை அவர் புரிந்துகொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? ஒரு தினாரியுவை* என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். 16  அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். “இதில் இருக்கிற உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?” என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள், “ரோம அரசனுடையது” என்று சொன்னார்கள். 17  அப்போது இயேசு, “அரசனுடையதை* அரசனுக்கும்+ கடவுளுடையதைக் கடவுளுக்கும்+ கொடுங்கள்” என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். 18  உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர்கள்+ அவரிடம் வந்து,+ 19  “போதகரே, ஒருவன் பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்திருக்கிறார்.+ 20  எங்களோடு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, வாரிசு இல்லாமல் இறந்துபோனான். 21  இரண்டாவது சகோதரன் அவளைத் திருமணம் செய்து அவனும் வாரிசு இல்லாமல் இறந்துபோனான். மூன்றாவது சகோதரனும் அதேபோல் செய்து இறந்துபோனான். 22  அந்த ஏழு பேரும் வாரிசு இல்லாமல் இறந்துபோனார்கள்; கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். 23  அவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது, அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்? அந்த ஏழு பேருக்கும் அவள் மனைவியாக இருந்தாளே” என்றார்கள். 24  அதற்கு இயேசு, “உங்கள் எண்ணம் தவறு. ஏனென்றால் உங்களுக்கு வேதவசனங்களும் தெரியவில்லை, கடவுளுடைய வல்லமையும் தெரியவில்லை;+ 25  உயிரோடு எழுப்பப்படுகிற ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்; அவர்கள் பரலோகத்திலுள்ள தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்.+ 26  இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் புத்தகத்தில் இருக்கிற முட்புதரைப் பற்றிய பதிவில் நீங்கள் வாசித்ததில்லையா? கடவுள் அவரிடம், ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’+ என்று சொன்னார், இல்லையா? 27  அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார். அதனால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு”+ என்று சொன்னார். 28  அவர்கள் அவரிடம் வாதாடியதையும் அவர் மிக நன்றாகப் பதில் சொன்னதையும் பார்த்து, அங்கே வந்திருந்த வேத அறிஞர்களில் ஒருவன், “கட்டளைகளிலேயே முதலாவது* கட்டளை எது?”+ என்று அவரிடம் கேட்டான். 29  அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கடவுளாகிய யெகோவா* ஒருவரே யெகோவா.* 30  உங்கள் கடவுளாகிய யெகோவாமேல்* உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்’+ என்பதே முதலாவது கட்டளை. 31  ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாவது கட்டளை.+ இவற்றைவிட முக்கியமான கட்டளை வேறெதுவும் இல்லை” என்று சொன்னார். 32  அதற்கு அந்த வேத அறிஞன், “போதகரே, நீங்கள் அருமையாகச் சொன்னீர்கள், நீங்கள் சொன்னதுதான் உண்மை; ‘கடவுள் ஒருவரே, அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை’;+ 33  அதுமட்டுமல்ல, தகன பலிகளையும் மற்ற பலிகளையும் கொடுப்பதைவிட முழு இதயத்தோடும் முழு மனதோடும்* முழு பலத்தோடும் அவர்மேல் அன்பு காட்டுவதும், தன்மேல் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்டுவதும்தான் சிறந்தது”+ என்று சொன்னான். 34  அவன் புத்திசாலித்தனமாகச் சொன்னதைப் பார்த்து, “கடவுளுடைய அரசாங்கம் உனக்கு ரொம்பத் தூரத்தில் இல்லை” என்று இயேசு சொன்னார். அதன் பின்பு அவரிடம் கேள்வி கேட்க யாருக்குமே தைரியம் வரவில்லை.+ 35  ஆலயத்தில் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது அவர்களிடம், “கிறிஸ்துவை தாவீதின் மகன்+ என்று வேத அறிஞர்கள் எப்படிச் சொல்கிறார்கள்? 36  ‘யெகோவா* என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார்’ எனக் கடவுளுடைய சக்தியால்+ தாவீது சொன்னார். 37  தாவீதே அவரை எஜமான் என்று அழைத்திருப்பதால் அவர் எப்படி இவருடைய மகனாக இருக்க முடியும்?”+ என்று கேட்டார். அவர் பேசியதை ஏராளமான மக்கள் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 38  அவர் தொடர்ந்து கற்பித்தபோது, “வேத அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் நீளமான அங்கிகளைப் போட்டுக்கொண்டு திரிய விரும்புகிறார்கள்; சந்தைகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள்.+ 39  அதோடு, ஜெபக்கூடங்களில் முன்வரிசை* இருக்கைகளிலும் விருந்துகளில் மிக முக்கியமான இடங்களிலும் உட்கார விரும்புகிறார்கள்.+ 40  விதவைகளுடைய சொத்துகளை* விழுங்கிவிடுகிறார்கள்; மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நீண்ட ஜெபம் செய்கிறார்கள்; அதனால், அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று சொன்னார். 41  பின்பு, காணிக்கைப் பெட்டிகளைப்+ பார்த்தபடி அவர் உட்கார்ந்துகொண்டு, அவற்றில் மக்கள் காசு போடுவதைக் கவனிக்க ஆரம்பித்தார். பணக்காரர்கள் பலர் நிறைய காசுகளைப் போட்டார்கள்.+ 42  அந்தச் சமயத்தில், ஓர் ஏழை விதவை வந்து, மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை* போட்டாள்.+ 43  அப்போது, அவர் தன்னுடைய சீஷர்களைக் கூப்பிட்டு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், காணிக்கைப் பெட்டிகளில் மற்ற எல்லாரும் போட்டதைவிட இந்த ஏழை விதவைதான் அதிகமாகப் போட்டாள்.+ 44  அவர்கள் எல்லாரும் தங்கள் தேவைக்கு அதிகமாக இருந்ததைத்தான் போட்டார்கள்; ஆனால், இவள் தனக்குத் தேவையிருந்தும், தன்னிடமிருந்த எல்லாவற்றையும், தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “கைது செய்ய.”
நே.மொ., “சீஸருக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “தலைவரி.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “சீஸருடையதை.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “மிக முக்கியமான.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “சக மனிதர்மேலும்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலோடும்.”
வே.வா., “சக மனிதர்மேலும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “மிகச் சிறந்த.”
நே.மொ., “வீடுகளை.”
நே.மொ., “இரண்டு லெப்டன் காசுகளை.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

திராட்சரச ஆலை
திராட்சரச ஆலை

இஸ்ரவேலில் திராட்சைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்பட்டன. திராட்சையின் வகையைப் பொறுத்தும் அந்தப் பகுதியின் சீதோஷ்ணத்தைப் பொறுத்தும் அறுவடைக் காலம் மாறுபட்டது. அவை பொதுவாக சுண்ணாம்புக்கல் தொட்டிகளில் அல்லது பாறைகளில் வெட்டப்பட்ட தொட்டிகளில் வைக்கப்பட்டன. ஆண்கள் பொதுவாகப் பாட்டு பாடிக்கொண்டே வெறுங்காலில் திராட்சைகளை மிதித்தார்கள்.—ஏசா 16:10; எரே 25:30; 48:33.

1. அறுவடை செய்யப்பட்ட திராட்சைகள்

2. திராட்சரச ஆலை

3. வடிகால்

4. திராட்சரசம் வடிவதற்கான கீழ்த் தொட்டி

5. திராட்சமதுவுக்கான மண் ஜாடிகள்

ரோம அரசன் திபேரியு
ரோம அரசன் திபேரியு

திபேரியு கி.மு. 42-ல் பிறந்தான். கி.பி. 14-ல் அவன் ரோமப் பேரரசின் இரண்டாவது அரசனாக ஆனான். கி.பி. 37, மார்ச் மாதம்வரை அவன் வாழ்ந்தான். இயேசு ஊழியம் செய்த காலப்பகுதி முழுவதும் அவன்தான் அரசனாக இருந்தான். அதனால், ‘அரசனுடையதை அரசனுக்கு . . . கொடுங்கள்’ என்று வரி கட்டுவது சம்பந்தமாக இயேசு சொன்னபோது திபேரியுதான் அரசனாக ஆட்சி செய்துகொண்டிருந்தான்.—மாற் 12:14-17; மத் 22:17-21; லூ 20:22-25.

சந்தை
சந்தை

இங்கே காட்டப்பட்டிருப்பதைப் போன்ற சில சந்தைகள் சாலையோரமாக அமைந்திருந்தன. வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பொருள்களைத் தெருவில் குவித்து வைத்ததால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளால் வீட்டு உபயோகப் பொருள்களையும், மண்பாண்டங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருள்களையும் அங்கே வாங்க முடிந்தது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்களும் அங்கே கிடைத்தன. அந்தக் காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாததால், தேவையான பொருள்களை வாங்க மக்கள் தினமும் சந்தைக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே பொதுவாக, மற்ற ஊர் வியாபாரிகள் மூலமோ மற்ற ஊர் மக்கள் மூலமோ கடைக்காரர்கள் சில செய்திகளைத் தெரிந்துகொள்வார்கள்... பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... வேலை இல்லாதவர்கள் கூலி வேலைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற சந்தையில் இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார், அங்கே பவுலும் ஊழியம் செய்திருக்கிறார். (அப் 17:17) ஆனால், பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும், இந்தப் பொது இடங்களில் மக்கள் தங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள்.

ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள்
ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள்

இந்த அனிமேஷன் வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் காட்சி, காம்லாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நூற்றாண்டு ஜெபக்கூடத்தின் இடிபாடுகளை ஓரளவு அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. காம்லா என்பது கலிலேயா கடலின் வடகிழக்கே சுமார் 10 கி.மீ. (6 மைல்) தூரத்தில் அமைந்திருந்த ஒரு நகரம். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லா ஜெபக்கூடங்களுமே காலப்போக்கில் சேதமடைந்துவிட்டன. அதனால், அன்று ஜெபக்கூடம் எப்படி இருந்தது என்று சரியாகத் தெரியவில்லை. இந்த அனிமேஷனில் காட்டப்படுகிற சில அம்சங்கள், அந்தக் காலத்திலிருந்த நிறைய ஜெபக்கூடங்களில் இருந்ததாகத் தெரிகிறது.

1. பேச்சாளர் நிற்கும் மேடையில் அல்லது அதற்குப் பக்கத்தில் ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள், அதாவது முக்கிய இருக்கைகள், இருந்திருக்கலாம்.

2. போதகர் மேடையில் நின்றுகொண்டுதான் திருச்சட்டத்தை வாசித்திருப்பார். மேடை இருந்த இடம் ஒவ்வொரு ஜெபக்கூடத்திலும் வித்தியாசமாக இருந்திருக்கலாம்.

3. சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றவர்கள் சுவர்பக்கமாக இருந்த இருக்கைகளில் உட்கார்ந்திருக்கலாம். மற்றவர்கள் தரையில் பாய்களை விரித்து உட்கார்ந்திருக்கலாம். காம்லாவில் இருந்த ஜெபக்கூடத்தில் நான்கு வரிசைகளில் இருக்கைகள் இருந்ததாகத் தெரிகிறது.

4. பரிசுத்த சுருள்களைக் கொண்ட பெட்டி, பின்பக்கச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கலாம்.

ஜெபக்கூடத்தில் இருக்கைகள் போடப்பட்டிருந்த விதம், சிலருக்கு மற்றவர்களைவிட உயர்ந்த அந்தஸ்து இருந்ததை எப்போதும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது. இந்த விஷயத்தைப் பற்றித்தான் இயேசுவின் சீஷர்கள் அடிக்கடி வாக்குவாதம் செய்தார்கள்.—மத் 18:1-4; 20:20, 21; மாற் 9:33, 34; லூ 9:46-48.

விருந்துகளில் மிக முக்கியமான இடங்கள்
விருந்துகளில் மிக முக்கியமான இடங்கள்

முதல் நூற்றாண்டில், மேஜைமேல் சாய்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இடது முழங்கையை ஒரு திண்டுமேல் அல்லது தலையணைமேல் வைத்துக்கொண்டு, வலது கையால் சாப்பிட்டார்கள். கிரேக்க-ரோம வழக்கத்தின்படி, சாப்பாட்டு அறையில் தாழ்வான ஒரு மேஜையும், அதைச் சுற்றி உட்காருவதற்கு மூன்று மெத்தைகளும் இருந்தன. இப்படிப்பட்ட சாப்பாட்டு அறையை ரோமர்கள் ட்ரைக்லீனியம் என்று அழைத்தார்கள். (இந்த லத்தீன் வார்த்தை, “மூன்று மெத்தைகள் கொண்ட அறை” என்ற அர்த்தத்தைத் தருகிற ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது.) ஆரம்பத்தில், இப்படிப்பட்ட மேஜையைச் சுற்றி ஒன்பது பேர் உட்காருவது வழக்கமாக இருந்தது; ஒவ்வொரு மெத்தையிலும் மூன்று பேர் உட்கார்ந்தார்கள். ஆனால் பிற்பாடு, அதைவிட அதிகமானவர்கள் உட்காருவதற்கு வசதியாக இன்னும் நீளமான மெத்தைகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் எங்கே உட்கார்ந்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய மதிப்பு கூடியதாகவோ குறைந்ததாகவோ நம்பப்பட்டது. முதல் மெத்தைக்கு மிகவும் குறைந்த மதிப்பு இருந்ததாகவும் (A), இரண்டாவது மெத்தைக்கு ஓரளவு மதிப்பு இருந்ததாகவும் (B), மூன்றாவது மெத்தைக்கு மிக அதிக மதிப்பு இருந்ததாகவும் (C) நம்பப்பட்டது. ஒவ்வொரு மெத்தையிலும்கூட எங்கே உட்கார்ந்தார்கள் என்பதைப் பொறுத்து மதிப்பு கூடியது அல்லது குறைந்தது. ஒருவர் தன்னுடைய வலது பக்கத்தில் இருந்தவரைவிட அதிக மதிப்புள்ளவராகவும், தன்னுடைய இடது பக்கத்தில் இருந்தவரைவிட குறைந்த மதிப்புள்ளவராகவும் கருதப்பட்டார். விருந்து கொடுப்பவர் மிகவும் தாழ்வான மெத்தையின் முதல் இடத்தில் (1) பொதுவாக உட்கார்ந்தார். நடுவிலிருந்த மெத்தையின் மூன்றாவது இடம் (2) மிகவும் மதிப்புள்ளதாக இருந்தது. இந்த வழக்கத்தை யூதர்கள் எந்தளவுக்குப் பின்பற்றினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை; ஆனாலும், மனத்தாழ்மையின் அவசியத்தைப் பற்றி இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது இந்த வழக்கத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.