Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்று ‘அற்புத சுகப்படுத்தல்கள்’ யாருடைய சக்தியால்?

இன்று ‘அற்புத சுகப்படுத்தல்கள்’ யாருடைய சக்தியால்?

இன்று ‘அற்புத சுகப்படுத்தல்கள்’ யாருடைய சக்தியால்?

சில நாடுகளில், “தீராத” நோய்களுக்குத் தீர்வு கிடைத்துவிட்டதாக புனித தலங்களுக்கு சென்று வந்த பக்தர்கள் சொல்கின்றனர். வேறு நாடுகளிலோ, நோய்வாய்ப்பட்டவர்களை மந்திரித்துவிட்டதாகச் சொல்லி சாமியார்கள் பெருமை பாராட்டுகின்றனர். இன்னும் சில நாடுகளில், பரவச கூட்டங்கள் நடத்தப்படும் இடங்களுக்கு செல்லும் வியாதியஸ்தர்கள் சக்கர நாற்காலியிலிருந்து துள்ளிக் குதிப்பதையும் ஊன்றுகோலைத் தூக்கியெறிந்துவிட்டு வீறுநடை போடுவதையும் பற்றிய செய்திகள் காற்றில் வருகின்றன.

பொதுவாக பல்வேறு மதத்தவர் இப்படிப்பட்ட சுகப்படுத்தல்களைச் செய்கிறார்கள். இவர்கள், ஒருவரையொருவர் போலி சாமியார், கள்ளத் தீர்க்கதரிசி என முத்திரை குத்துவதைக் கேள்விப்படுகிறோம். இப்படி ‘ஒன்றுக்கொன்று முரண்படுகிற மதங்கள் மூலம் கடவுள் அற்புதங்களைச் செய்கிறாரா?’ என்ற கேள்வி எழுவது நியாயமானதே. ஏனென்றால், “தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 14:33) எனவே, இப்படிப்பட்ட ‘அற்புத சுகப்படுத்தல்களைச்’ செய்வது உண்மையிலேயே கடவுள் என்று சொல்ல முடியுமா? அற்புத சுகமளிக்கும் சிலர் இயேசுவின் வல்லமையில் சுகப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்கின்றனர். ஆனால், இயேசு எவ்வாறு மற்றவர்களைக் குணப்படுத்தினார் என்பதைச் சற்று ஆராயலாம்.

இயேசு சுகப்படுத்திய விதம்

வியாதியஸ்தர்களை இயேசு சுகப்படுத்தியதற்கும், நவீனகால சுகமளிப்பவர்கள் சுகப்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக, தம்மிடம் வந்த அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். கூட்டத்திலிருந்த சிலரை மட்டுமே அழைத்து சுகப்படுத்திவிட்டு மற்றவர்களை சுகப்படுத்தாமல் திருப்பி அனுப்பிவிடவில்லை. அதுமட்டுமல்ல, இயேசுவால் சுகப்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் உடனடியாகக் குணமடைந்தார்கள், பூரண சுகமடைந்தார்கள். ‘அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்கு திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்’ என்று பைபிள் கூறுகிறது.​​⁠⁠லூக்கா 6:​19, பொது மொழிபெயர்ப்பு.

இன்று, சிலரைக் குணப்படுத்த முடியவில்லை என்றால் அதற்கு அவர்களுடைய விசுவாசக் குறைவே காரணம் என்று அற்புத சுகமளிப்பவர்கள் பெரும்பாலும் குறைகூறுகிறார்கள். இயேசுவோ, சிலர் தம்மீது விசுவாசம் வைக்கும் முன்னே அவர்களைக் குணப்படுத்தினார். உதாரணமாக, உதவி கேட்டு தம்மை அழைக்காத ஒரு குருடனிடம் அவராகவே சென்று குணப்படுத்தினார். பின்னர் இயேசு அவனிடம், “நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா” என்று கேட்டார். “ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார்” என்று அவன் கேட்டான். இயேசு அவனிடம், “உன்னுடனே பேசுகிறவர் அவர்தான்” என்று சொன்னார்.​​⁠⁠யோவான் 9:1–7, 35–38.

‘குணமடைய விசுவாசம் தேவையில்லை என்றால், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று பல சந்தர்ப்பங்களில் இயேசு ஏன் கேட்டார்?’ (லூக்கா 8:48; 17:19; 18:42) விசுவாசம் வைத்து தம்மிடம் வந்தவர்கள் சுகம் பெற்றார்கள், அப்படி வராதவர்கள் அந்த வாய்ப்பை இழந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இயேசு அவ்வாறு கேட்டார். குணம் பெற்றவர்கள் தங்கள் விசுவாசத்தால் அல்ல, கடவுளுடைய சக்தியால்தான் குணம் பெற்றார்கள். “இயேசுவைக் கடவுள் தம்முடைய சக்தியினாலும் வல்லமையினாலும் கிறிஸ்துவாக்கினார்; கடவுள் அவரோடு இருந்ததால் அவர் தேசமெங்கும் போய் நன்மை செய்து, பிசாசின் கொடுமைக்கு ஆளான எல்லாரையும் குணப்படுத்தினார்” என்று இயேசுவைப் பற்றி பைபிள் கூறுகிறது.​​⁠⁠அப்போஸ்தலர் 10:​38, NW.

இன்று “சுகமளிப்பவர்களிடம்” பெருமளவு பணம் புரளுவதாகத் தெரிகிறது. இவர்கள் நிதி திரட்டுவதில் கில்லாடிகள் என்பது உலகறிந்த உண்மை. இப்படிப்பட்டவர்களில் ஒருவர் விசுவாசக் கூட்டங்கள் மூலம் ஒரே வருடத்தில் 89 மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டியதாகக் கூறப்படுகிறது. சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புனித தலங்களுக்கு வருகிற விசுவாசிகள் மூலம் சர்ச்சுகளுக்கும் ஏராளமான பணம் கிடைக்கிறது. ஆனால், இயேசு தாம் குணப்படுத்திய நபர்களில் ஒருவரிடமிருந்தும் பணம் வசூலிக்கவில்லை. சொல்லப்போனால், சில சமயங்களில் அவர்தான் மக்களுக்கு உணவளித்தார். (மத்தேயு 15:30–38) பிரசங்கிப்பதற்கு சீடர்களை அனுப்பியபோது இயேசு அவர்களிடம், “வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று சொன்னார். (மத்தேயு 10:8) நவீனகால சுகப்படுத்துகிறவர்களுக்கும் இயேசுவுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?

“சுகப்படுத்தல்கள்”​—⁠யாருடைய சக்தியால்?

மருத்துவ துறையைச் சேர்ந்த சிலர், அற்புத சுகப்படுத்தலைக் குறித்து பல வருடங்களாகவே ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்? “அற்புத சுகமளிப்பவர்களின் அறிக்கைகளை உண்மையென நிரூபிப்பதற்கு மருத்துவ அத்தாட்சி ஒன்றுகூட இல்லை” என்று 20 வருடங்களாக இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த இங்கிலாந்து டாக்டர் ஒருவர் கூறுவதாக லண்டன் செய்தித்தாள் டெய்லி டெலிகிராஃப் சொல்கிறது. இருந்தாலும், புனித நினைவுச்சின்னங்கள், புனித தலங்கள், அல்லது அற்புத சுகப்படுத்தல் மூலம்தான் தாங்கள் குணம் அடைந்ததாக அநேக ஜனங்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள். அவர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்களா?

மத வேடதாரிகள், “கர்த்தாவே! கர்த்தாவே! . . . உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” என்று தம்மிடம் கூறுவார்கள் என பிரசித்தி பெற்ற மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்னார். அதற்கு, “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 7:​22, 23) சுகமளிப்பவர்கள் தங்களுக்குச் சக்தி இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்களே, அந்தச் சக்தி எங்கிருந்து வருகிறது? இதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் கொடுக்கும் எச்சரிப்பைக் கேளுங்கள்: “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் . . . சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்.”​​⁠⁠2 தெசலோனிக்கேயர் 2:​9, 10.

அதுமட்டுமல்ல, புனித சின்னங்கள், சிலைகள் அல்லது உருவப் படங்கள் மூலம் “சுகப்படுத்தப்பட்டதாக” மக்கள் கூறினாலும் உண்மையில் கடவுளுடைய சக்தியால் அவர்கள் சுகப்படுத்தப்பட்டதாகச் சொல்ல முடியாது. ஏன்? ஏனென்றால், “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்,” “விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக” என்று கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் தெளிவாகக் கட்டளையிடுகிறது. (1 கொரிந்தியர் 10:14; 1 யோவான் 5:21) இப்படிப்பட்ட ‘சுகப்படுத்தல்கள்’ ஜனங்களை உண்மை வணக்கத்திலிருந்து திசை திருப்ப பிசாசு பயன்படுத்தும் தந்திரங்களே. ‘சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வதாக’ பைபிள் கூறுகிறது.​​⁠⁠2 கொரிந்தியர் 11:⁠14.

இயேசுவும் அப்போஸ்தலரும் சுகமளித்ததற்குக் காரணம்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அற்புத சுகப்படுத்தல்கள் அனைத்தும், இயேசுவையும் அவருடைய அப்போஸ்தலரையும் கடவுளே அனுப்பினார் என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டின. (யோவான் 3:2; எபிரெயர் 2:​3, 4) அதோடு, இயேசு அற்புதமாய் சுகமளித்தது அவர் பிரசங்கித்த செய்திக்கு வலுவூட்டியது. அதனால்தான் பைபிள் இப்படிச் சொல்கிறது: “இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.” (மத்தேயு 4:23) இயேசுவின் அனைத்து அற்புத செயல்களும்​—⁠வியாதியஸ்தரை குணப்படுத்தியது, ஏராளமானோருக்கு உணவளித்தது, இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தியது, மரித்தோரை மீண்டும் உயிர்பெறச் செய்தது ஆகிய அனைத்து அற்புத செயல்களும்​—⁠அவர் ராஜாவாக ஆட்சி செய்கையில் கீழ்ப்படிகிற மனிதர்களுக்கு என்னவெல்லாம் செய்வார் என்பதற்கு அத்தாட்சி அளித்தன. உண்மையிலேயே நற்செய்தி, அல்லவா!

என்றாலும், இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும், அவர்களிடமிருந்து இந்த வரங்களைப் பெற்றவர்களும் இறந்ததோடு இத்தகைய அற்புத செயல்கள், அதாவது ஆவியின் வரங்கள், முடிவடைந்துவிட்டன. “அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், [அற்புதமாய் பேசப்பட்ட] அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், [கடவுள் வெளிப்படுத்திய] அறிவானாலும் ஒழிந்துபோம்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 13:8) ஏன்? ஏனெனில், அத்தகைய அற்புதங்கள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டதால்​—⁠இயேசுவே மேசியா என்பதையும் கிறிஸ்தவ சபையே கடவுளின் சபை என்பதையும் அடையாளம் காட்டிவிட்டதால்​—⁠சுகப்படுத்தல் உட்பட, அனைத்து அற்புதங்களும் இதற்குமேல் அவசியம் இல்லை. ஆகவே, அவை ‘ஒழிந்துபோயின.’

இருந்தாலும், இயேசு அற்புதமாய் சுகப்படுத்தியதிலிருந்து இன்று நாம் ஒரு முக்கிய விஷயத்தைக் கற்றுக்கொள்கிறோம். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி இயேசு கற்பித்தவற்றிற்கு நாம் கவனம் செலுத்தி, அவற்றில் விசுவாசம் வைத்தால் சந்தோஷமான எதிர்பார்ப்பு நமக்கு முன்னிருக்கிறது. அப்போது, “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என கடவுள் உரைத்த தீர்க்கதரிசனம் உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நிறைவேறுவதைக் காண்போம்.​​⁠⁠ஏசாயா 33:24; 35:​5, 6; வெளிப்படுத்துதல் 21:⁠4. (w08 12/1)