லூக்கா எழுதியது 17:1-37
17 பின்பு, இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “மக்களைப் பாவம் செய்ய வைக்கிற காரியங்கள் கண்டிப்பாக வரும். ஆனால், அவை எந்த மனுஷனால் வருகிறதோ அந்த மனுஷனுக்குக் கேடுதான் வரும்!
2 இந்தச் சிறியவர்களில் ஒருவரை யாராவது பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் ஒரு கல்லை* அவனுடைய கழுத்தில் கட்டி கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது.+
3 உங்களைக் குறித்துக் கவனமாயிருங்கள். உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனை எச்சரியுங்கள்;*+ அவன் மனம் திருந்தினால் அவனை மன்னியுங்கள்.+
4 அவன் உங்களுக்கு விரோதமாக ஒரே நாளில் ஏழு தடவை பாவம் செய்து அந்த ஏழு தடவையும் உங்களிடம் வந்து, ‘மனம் திருந்திவிட்டேன்’ என்று சொன்னால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்”+ என்று சொன்னார்.
5 அப்போது அப்போஸ்தலர்கள், “எங்களுடைய விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”+ என்று இயேசுவிடம் சொன்னார்கள்.
6 அதற்கு அவர், “உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட இந்த முசுக்கட்டை மரத்தைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்!’ என்று நீங்கள் சொன்னால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.+
7 ஒரு அடிமை வயலில் உழுதுவிட்டு அல்லது மந்தையை மேய்த்துவிட்டு வந்ததுமே, ‘நீ வந்து முதலில் சாப்பிடு’ என்று எந்த எஜமானாவது சொல்வாரா?
8 அதற்குப் பதிலாக, ‘நீ எனக்கு உணவு தயார் செய்து, துண்டைக் கட்டிக்கொண்டு எனக்குப் பரிமாறு; நான் சாப்பிட்டுக் குடித்த பிறகு நீ போய்ச் சாப்பிட்டுக் குடிக்கலாம்’ என்றுதானே சொல்வார்?
9 கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்ததற்காக அந்த அடிமைக்கு அவர் நன்றியுள்ளவராக இருக்க மாட்டார்தானே?
10 அதனால் நீங்களும் கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்பு, ‘நாங்கள் ஒன்றுக்கும் உதவாத அடிமைகள்; செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தோம்’+ என்று சொல்லுங்கள்” என்றார்.
11 அவர் எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயாவின் எல்லை வழியாகப் போனார்.
12 அவர் ஒரு கிராமத்துக்குள் நுழைந்தபோது, தொழுநோயாளிகள் பத்துப் பேர் அவரைப் பார்த்தார்கள். தூரத்திலிருந்த+ அவர்கள் எழுந்து நின்று,
13 “இயேசுவே, போதகரே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று சத்தமாகச் சொன்னார்கள்.
14 அவர் அவர்களைப் பார்த்தபோது, “நீங்கள் போய் குருமார்களிடம் உங்களைக் காட்டுங்கள்”+ என்று சொன்னார். அவர்கள் போய்க்கொண்டிருந்தபோதே சுத்தமானார்கள்.+
15 அவர்களில் ஒருவன் தான் குணமானதைப் பார்த்து, சத்தமாகக் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டே திரும்பி வந்தான்.
16 பின்பு, இயேசுவின் காலில் விழுந்து அவருக்கு நன்றி சொன்னான்; அவன் ஒரு சமாரியன்.+
17 அப்போது இயேசு, “பத்துப் பேர் சுத்தமாக்கப்பட்டார்களே, மற்ற ஒன்பது பேர் எங்கே?
18 வெளிதேசத்தைச் சேர்ந்த இவனைத் தவிர வேறு யாருமே கடவுளை மகிமைப்படுத்துவதற்குத் திரும்பி வரவில்லையா?” என்று கேட்டார்.
19 பிறகு, “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது”+ என்று சொன்னார்.
20 கடவுளுடைய அரசாங்கம் எப்போது வரும்+ என்று பரிசேயர்கள் அவரிடம் கேட்டபோது, “கடவுளுடைய அரசாங்கம் வெளிப்படையாகத் தெரியும் விதத்தில் வராது.
21 ‘இங்கே பாருங்கள்!’ அல்லது ‘அங்கே பாருங்கள்!’ என்று மக்கள் சொல்லிக்கொண்டும் இருக்க மாட்டார்கள். இதோ! கடவுளுடைய அரசாங்கம் உங்கள் மத்தியிலேயே இருக்கிறது”+ என்று சொன்னார்.
22 பின்பு அவர் தன்னுடைய சீஷர்களிடம், “மனிதகுமாரனுடைய நாட்களில் ஒரு நாளைப் பார்க்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுகிற காலம் வரும், ஆனால் அதைப் பார்க்க மாட்டீர்கள்.
23 மக்கள் உங்களிடம், ‘அங்கே பாருங்கள்!’ அல்லது ‘இங்கே பாருங்கள்!’ என்று சொல்வார்கள். ஆனால், வெளியே போகாதீர்கள், அவர்களுக்குப் பின்னாலும் ஓடாதீர்கள்.+
24 ஏனென்றால், வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை மின்னல் மின்னுவதுபோல் மனிதகுமாரன்+ தன்னுடைய நாளில் வெளிப்படுவார்.+
25 இருந்தாலும், முதலில் அவர் பல பாடுகள் பட்டு, இந்தத் தலைமுறையினரால் ஒதுக்கித்தள்ளப்பட வேண்டும்.+
26 நோவாவின் நாட்களில்+ நடந்தது போலவே மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.+
27 நோவா பேழைக்குள்* நுழைந்த+ நாள்வரை மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து அவர்கள் எல்லாரையும் அழித்துப்போட்டது.+
28 லோத்துவின் நாட்களில்+ நடந்தது போலவும் நடக்கும்; மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் வாங்கிக்கொண்டும் விற்றுக்கொண்டும் நட்டுக்கொண்டும் கட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
29 ஆனால், சோதோம் நகரத்தைவிட்டு லோத்து வெளியே போன நாளில் வானத்திலிருந்து நெருப்பும் கந்தகமும் பெய்து அவர்கள் எல்லாரையும் அழித்துப்போட்டது.+
30 மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.+
31 அந்த நாளில், வீட்டு மாடியில் இருப்பவர் தன் வீட்டில் இருக்கிற பொருள்களை எடுப்பதற்காகக் கீழே இறங்கி வர வேண்டாம். வயலில் இருப்பவர் தான் விட்டுவந்த பொருள்களை எடுப்பதற்காகத் திரும்பிப் போக வேண்டாம்.
32 லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்.+
33 தன்னுடைய உயிரைப் பாதுகாக்க முயற்சி செய்கிறவன் அதை இழந்துபோவான். ஆனால், தன் உயிரை இழப்பவன் அதைப் பாதுகாத்துக்கொள்வான்.+
34 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவில் ஒரே படுக்கையில் இரண்டு பேர் படுத்திருப்பார்கள்; அவர்களில் ஒருவன் அழைத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.+
35 ஒரே கல்லில்* இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி அழைத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்” என்று சொன்னார்.
36 *——
37 அப்போது அவர்கள், “எங்கே, எஜமானே?” என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகளும் வந்து கூடும்”+ என்று சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “திரிகைக் கல்லை.”
^ வே.வா., “கண்டியுங்கள்.”
^ இது கப்பலைப் போல் பெரிதாக இருந்தது, ஆனால் நீளமான ஒரு பெட்டிபோல் இருந்தது.
^ வே.வா., “திரிகைக் கல்லில்.”
^ இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா
திரிகையின் மேற்கல்லும் அடிக்கல்லும்
படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற பெரிய திரிகைக் கற்கள், அதாவது மாவு அரைக்கும் கற்கள், கழுதை போன்ற வீட்டு விலங்குகளை வைத்துச் சுற்றப்பட்டன. தானியங்களை அரைப்பதற்கோ ஒலிவப் பழங்களைப் பிழிவதற்கோ அவை பயன்படுத்தப்பட்டன. திரிகையின் மேற்கல் 1.5 மீ. (5 அடி) விட்டத்தில்கூட இருந்திருக்கலாம். அதைவிடப் பெரிய அடிக்கல்லின் மீது அது வைக்கப்பட்டுச் சுற்றப்பட்டிருக்கலாம்.