Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்குப் பிரியமான துதியின் பலிகள்

யெகோவாவுக்குப் பிரியமான துதியின் பலிகள்

யெகோவாவுக்குப் பிரியமான துதியின் பலிகள்

“நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.”ரோமர் 12:1.

1. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் செலுத்தின பலிகள் நிரந்தர பலனைத் தரவில்லை என்பதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?

 “நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.” (எபிரெயர் 10:1) இப்படி சொல்கையில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு முக்கிய குறிப்பை வலியுறுத்தினார். அது, மனிதனுடைய இரட்சிப்பைப் பொறுத்த வரை மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்ட பலிகள் அனைத்துமே நிரந்தரமான பலனை அளிக்கவில்லை என்பதே.கொலோசெயர் 2:16, 17.

2. நியாயப்பிரமாணத்தின்கீழ் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் பலிகளையும் பற்றி பைபிளிலுள்ள விவரங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது ஏன் வீணல்ல?

2 அப்படியென்றால், காணிக்கைகளையும் பலிகளையும் பற்றி பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களிலுள்ள தகவல்கள் இன்று கிறிஸ்தவர்களுக்கு எந்த விதத்திலும் பயனளிப்பதில்லை என இது அர்த்தப்படுத்துகிறதா? சொல்லப்போனால், உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நடைபெறும் தேவராஜ்ய ஊழிய பள்ளிகளில் பங்கெடுப்போர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை வாசித்து முடித்தனர். அவற்றிலுள்ள எல்லா விவரங்களையும் வாசித்து, தெளிவாக புரிந்துகொள்வதற்கு சிலர் பெரும் முயற்சி எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் அவர்களுடைய முயற்சிகளெல்லாம் வீண்தானா? நிச்சயமாகவே இல்லை; ஏனெனில், “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) அப்படியென்றால், காணிக்கைகளையும் பலிகளையும் பற்றி நியாயப்பிரமாணம் குறிப்பிடுவதிலிருந்து ‘போதனையும்’ ‘ஆறுதலும்’ தரும் எந்த தகவல்களை நாம் பெறலாம் என்பதே இப்போது எழும் கேள்வி.

நம் போதனைக்கும் ஆறுதலுக்கும்

3. நமக்கு என்ன அடிப்படை தேவை இருக்கிறது?

3 நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட விதமாக இன்று நாம் பலி செலுத்துவதில்லை. ஆனால் இஸ்ரவேலர்கள் பலிகளால் பெற்ற பலன்கள் இன்று நமக்கும் மிகத் தேவை. அவர்கள் அந்தப் பலிகளால் எவ்வாறு பலனடைந்தனர்? அவை, பாவங்கள் மன்னிக்கப்படவும், கடவுளுடைய தயவை அனுபவித்து மகிழவும் வழிசெய்தன. நாமோ பலிசெலுத்துவதில்லை; அப்படியிருக்கையில் அவர்களுக்குக் கிடைத்த பலன் நமக்கு எப்படி கிடைக்கும்? மன்னிப்பைப் பெறுவதற்கு மிருக பலிகள் முழுமையாய் பயனளிக்கவில்லை என்பதைப் பற்றி குறிப்பிட்ட பின்னர் பவுல் இவ்வாறு சொல்கிறார்: “ஆகையால் அவர் [இயேசு] உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.”எபிரெயர் 10:5-7.

4. சங்கீதம் 40:6-8-ஐ பவுல் எவ்வாறு இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்துகிறார்?

4 சங்கீதம் 40:6-8-ஐ மேற்கோள் காட்டி, “பலியையும் காணிக்கையையும்,” ‘சர்வாங்க தகனபலிகளையும் பாவநிவாரண பலிகளையும்’ நிலைத்திருக்க செய்வதற்காக இயேசு வரவில்லை என்பதை பவுல் சுட்டிக்காட்டுகிறார். பவுல் இதை எழுதிய சமயத்தில் பலிகளை கடவுள் அங்கீகரிக்கவில்லை. ஆகவே இயேசு, தம்முடைய பரம பிதா தமக்குக் கொடுத்த உடலுடன்—கடவுள் ஆதாமைப் படைத்தபோது அளித்த உடலுக்கு சரிசமமான உடலுடன்—வந்தார். (ஆதியாகமம் 2:7; லூக்கா 1:35; 1 கொரிந்தியர் 15:22, 45) கடவுளின் பரிபூரண குமாரனாக இயேசு, ஆதியாகமம் 3:15-ல் முன்னறிவிக்கப்பட்ட ஸ்திரீயினுடைய ‘வித்துவின்’ ஸ்தானத்தை ஏற்றார். இயேசுவின் ‘குதிங்கால் நசுக்கப்பட்ட’ போதிலும், அவரே ‘சாத்தானின் தலையை நசுக்குவதற்கு’ நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு, இயேசுவின் மூலம் மனிதகுலத்திற்கு இரட்சிப்பை அளிக்க யெகோவா ஏற்பாடு செய்தார். இந்த ஏற்பாட்டையே ஆபேலின் நாட்கள் முதற்கொண்டு விசுவாசமுள்ள மனிதர்கள் எதிர்நோக்கி இருந்தனர்.

5, 6. கடவுளை அணுக என்ன மேம்பட்ட வழி கிறிஸ்தவர்களுக்கு உள்ளது?

5 இயேசுவின் அந்த விசேஷ ஸ்தானத்தைப் பற்றி பவுல் சொல்கிறதாவது: ‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காக [கடவுள்] பாவமாக்கினார்.’ (2 கொரிந்தியர் 5:21) “பாவமாக்கினார்” என்ற வார்த்தையை “பாவநிவாரண பலியாக்கினார்” என்றும் மொழிபெயர்க்கலாம். “நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” என்று அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார். (1 யோவான் 2:2) மிருக பலிகள், இஸ்ரவேலர்கள் கடவுளை அணுகுவதற்கான தற்காலிக ஏற்பாடாக இருந்தன; ஆனால் இயேசு கிறிஸ்துவின் பலியோ கிறிஸ்தவர்கள் கடவுளை அணுகுவதற்கான மேம்பட்ட ஏற்பாடாக அமைகிறது. (யோவான் 14:6; 1 பேதுரு 3:18) கடவுள் அருளிய கிரய பலியில் விசுவாசம் வைத்து அவருக்கு நாம் கீழ்ப்படிகையில், நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பை பெறுவதோடு கடவுளுடைய தயவையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிப்போம். (யோவான் 3:17, 18) இந்த விஷயம் நமக்கு ஆறுதலளிக்கிறது அல்லவா? எனினும், கிரய பலியில் விசுவாசம் வைத்திருக்கிறோம் என்பதை நாம் எவ்வாறு செயலில் காட்டலாம்?

6 கடவுளை அணுகுவதற்கு கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் மேம்பட்ட வழியைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் முதலாவது விளக்கினார். பின்பு, கடவுளின் அன்பான ஏற்பாட்டில் நம் விசுவாசத்தையும் போற்றுதலையும் வெளிக்காட்டுவதற்கான மூன்று வழிகளைப் பற்றி குறிப்பிட்டார். இதை நாம் எபிரெயர் 10:22-25-ல் வாசிக்கிறோம். பவுலின் அறிவுரை முக்கியமாய், ‘பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் . . . மார்க்கத்தில்’ உள்ளவர்களுக்கு அதாவது, பரலோக அழைப்பை பெற்ற அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. எனினும், இயேசுவின் கிருபாதார பலியிலிருந்து நன்மை அடைய விரும்பினால், முழு மனிதகுலமும் தேவாவியால் ஏவப்பட்ட பவுலின் வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்துவது அவசியம்.—எபிரெயர் 10:19.

சுத்தமான, பழுதற்ற பலிகளைச் செலுத்துங்கள்

7. (அ) பலிசெலுத்துகையில் என்ன செய்யப்பட்டது என்பதை எபிரெயர் 10:22 எவ்வாறு காட்டுகிறது? (ஆ) பலி கடவுளுக்கு ஏற்கத்தக்கதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள என்ன செய்யப்பட்டது?

7 முதலாவதாக, “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” என பவுல் கிறிஸ்தவர்களை ஊக்குவிக்கிறார். (எபிரெயர் 10:22) நியாயப்பிரமாணத்தின்கீழ் பலிசெலுத்துகையில் என்ன செய்யப்பட்டது என்பதை இந்த வார்த்தைகள் அப்படியே வெளிப்படுத்துகின்றன. இது பொருத்தமாகவும் இருக்கிறது, ஏனெனில் ஒரு பலி ஏற்கத்தக்கதாக இருக்க சரியான உள்நோக்கத்துடன் செலுத்தப்படுவதோடு, சுத்தமானதாயும் பழுதற்றதாயும் இருக்க வேண்டும். சுத்தமான மிருகங்களான ஆடுமாடுகளே பலியாக செலுத்தப்பட வேண்டும்; அவை ஊனமற்றதாகவும் ‘பழுதற்றதாகவும்’ இருக்க வேண்டும். பறவைகளில் காட்டுப்புறாக்கள் அல்லது புறாக்குஞ்சுகள் பலியாக செலுத்தப்பட வேண்டும். இந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பலிகளே, ஒருவனின் ‘பாவநிவிர்த்திக்கென்று அங்கீகரிக்கப்பட்ட’ பலிகளாயின. (லேவியராகமம் 1:2-4, 10, 14; 22:19-25) போஜனபலி அல்லது தானிய பலி புளிப்பில்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் புளிப்பு அசுத்தத்திற்கு அடையாளம். அந்தப் பலியில் தேனும் கலக்கக்கூடாது; தேன் ஒருவேளை புளிக்கச் செய்யும் தன்மையுள்ள பழரசப் பாகைக் குறித்திருக்கலாம். மிருக பலியோ தானிய பலியோ பலிபீடத்தில் செலுத்தப்படுகையில், கெடாமல் இருக்க உப்பு சேர்க்கப்பட்டது.—லேவியராகமம் 2:11-13.

8. (அ) பலி செலுத்துபவருக்கு என்ன தராதரங்கள் தேவைப்பட்டன? (ஆ) நம்முடைய வணக்கத்தை யெகோவா ஏற்க விரும்பினால் நாம் என்ன செய்ய வேண்டும்?

8 பலி செலுத்துபவருக்கும் தராதரங்கள் இருந்தனவா? யெகோவாவுக்கு முன்பாக வரும் எவரும் சுத்தமாகவும் தீட்டுப்படாமலும் இருக்க வேண்டும் என்று நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது. ஏதோ காரணத்தினால் ஒருவர் தீட்டுப்பட்டிருந்தால், யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலையைக் காத்துக்கொள்ள முதலாவது அவர் பாவநிவாரண பலியை அல்லது குற்றநிவாரண பலியை செலுத்த வேண்டும். அப்போதுதான் அவரது சர்வாங்க தகனபலியை அல்லது சமாதானபலியை கடவுள் ஏற்றுக்கொள்வார். (லேவியராகமம் 5:1-6, 15, 17) ஆகையால், எப்போதும் யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலையைக் காத்துக்கொள்வது எந்தளவுக்கு முக்கியம் என்பதை நாம் மதித்துணருகிறோமா? கடவுள் நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினால், கடவுளுடைய சட்டங்களை மீறி நடக்கையில் உடனடியாக நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். இதில் நமக்கு உதவ ‘சபையின் மூப்பர்களையும்,’ “நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி”யாக சேவிக்கும் இயேசு கிறிஸ்துவையும் கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார். இவர்களின் உதவியை உடனடியாக நாடினால் நமக்கு நன்மையே.—யாக்கோபு 5:14; 1 யோவான் 2:1, 2.

9. யெகோவாவுக்குச் செலுத்தின பலிகளுக்கும், பொய்த் தெய்வங்களுக்குச் செலுத்தின பலிகளுக்கும் இடையே உள்ள பெரும் வித்தியாசம் என்ன?

9 எந்த விதத்திலும் தீட்டில்லாத பலியை செலுத்த வேண்டிய அவசியம் இஸ்ரவேலருக்கு வலியுறுத்தப்பட்டது. உண்மையில் இதுவே யெகோவாவுக்கு அவர்கள் செலுத்தின பலிகளுக்கும் அவர்களைச் சுற்றியிருந்த தேசத்தார் பொய் தெய்வங்களுக்குச் செலுத்தின பலிகளுக்கும் இடையே பெரும் வித்தியாசத்தை உண்டுபண்ணியது. மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள இந்தக் குறிப்பிடத்தக்க அம்சத்தைப் பற்றி ஒரு புத்தகம் சொல்கிறதாவது: “குறிசொல்லுதல் அல்லது சகுனத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை; மதவெறித்தனம் இல்லை, உடலை சிதைத்துக்கொள்ளுதலோ ஆலய விபசாரமோ இல்லை, சிற்றின்பத்தனமான, கட்டுப்பாடற்ற கருவள சடங்குகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டன; மனித பலிகள் இல்லை; மரித்தோருக்கான பலிகள் இல்லை.” இவை யாவும், யெகோவா பரிசுத்தர், எந்த வகையான பாவத்தையோ ஒழுக்கக்கேட்டையோ அவர் ஆதரிப்பதுமில்லை, அனுமதிப்பதுமில்லை என்ற உண்மைக்கு நம் கவனத்தைத் திருப்புகின்றன. (ஆபகூக் 1:13) அவருக்குச் செலுத்தப்படும் வணக்கமும் பலிகளும், சரீரப்பிரகாரமாயும், ஒழுக்கப்பிரகாரமாயும், ஆவிக்குரியப்பிரகாரமாயும், சுத்தமாகவும் தீட்டுப்படாமலும் இருக்க வேண்டும்.—லேவியராகமம் 19:2; 1 பேதுரு 1:14-16.

10. ரோமர் 12:1, 2-லுள்ள பவுலின் அறிவுரைக்கு இசைய எந்த விதத்தில் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும்?

10 எனவே, நம் சேவையை யெகோவா ஏற்றுக்கொள்வாரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வப்போது கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் சென்றுகொண்டிருக்கும் வரை நம் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை நமக்கு இருக்கக்கூடாது. கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதால் வாழ்க்கையின் பிற அம்சங்களில் கடவுளுடைய சட்டங்களை மீறினாலும் தவறல்ல என்று நினைக்கக்கூடாது. (ரோமர் 2:21, 22) கடவுளுடைய பார்வையில் அசுத்தமாகவோ தீட்டுள்ளதாகவோ இருக்கும் எதுவும் நம் சிந்தனையையோ செயல்களையோ தீட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இல்லாவிட்டால், கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் தயவையும் நாம் இழந்துவிடுவோம். “சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் இந்த வார்த்தைகளை மனதில் வையுங்கள்.ரோமர் 12:1, 2.

இருதயப்பூர்வமான துதியின் பலிகளை செலுத்துங்கள்

11. எபிரெயர் 10:23-ல் குறிப்பிடப்பட்டுள்ள, ‘யாவரறிய அறிவிப்பது’ என்ற சொற்றொடர் என்ன அர்த்தத்தைத் தருகிறது?

11 அடுத்தபடியாக பவுல், உண்மை வணக்கத்தின் முக்கிய அம்சத்திற்கு எபிரெயர்களின் கவனத்தைத் திருப்புகிறார்: “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் [“யாவரறிய அறிவிப்பதில்,” NW] அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.” (எபிரெயர் 10:23) ‘யாவரறிய அறிவித்தல்’ என்ற சொற்றொடரை அப்படியே மொழிபெயர்க்கையில் “அறிக்கையிடுதல்” என்ற அர்த்தத்தைத் தருகிறது. மேலும் ‘துதியின் பலியைக்’ குறித்தும் பவுல் குறிப்பிடுகிறார். (எபிரெயர் 13:15, NW) இது, ஆபேல், நோவா, ஆபிரகாம் போன்றோர் செலுத்தின பலியை நமக்கு நினைப்பூட்டுகிறது.

12, 13. (அ) ஓர் இஸ்ரவேலன் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில் எதற்கு நன்றி தெரிவித்தான்? (ஆ) அதே மனப்பான்மையை வெளிக்காட்ட நாம் என்ன செய்யலாம்?

12 ஓர் இஸ்ரவேலன் சர்வாங்க தகனபலியை ‘தானாகவே மனமுவந்து யெகோவாவுக்கு’ செலுத்தினான். (லேவியராகமம் 1:3, NW) இத்தகைய பலியின்மூலம், யெகோவா தம்முடைய ஜனங்களின்மீது பொழியும் ஏராளமான ஆசீர்வாதங்களைக் குறித்தும், அவர்களிடம் அவர் காட்டும் அன்புள்ள இரக்கத்தைக் குறித்தும் மனமுவந்து யாவரறிய அறிக்கை செய்தான் அல்லது ஒப்புக்கொண்டான். சர்வாங்க தகனபலியைப் பொறுத்ததில் அது பலிபீடத்தில் முழுவதுமாக தகனிக்கப்பட்டது; இதுவே அதன் விசேஷித்த அம்சம். அது முழுமையான பக்திக்கும் ஒப்புக்கொடுத்தலுக்கும் பொருத்தமான அடையாளமாய் திகழ்ந்ததை நினைவில் வையுங்கள். அதைப் போலவே, நம் “உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை” நாம் மனப்பூர்வமாயும் இதயப்பூர்வமாயும் யெகோவாவுக்குச் செலுத்துகையில், கிரய பலியில் நம் விசுவாசத்தையும் அந்த ஏற்பாட்டிற்காக நம் நன்றியையும் வெளிக்காட்டுகிறோம்.

13 கிறிஸ்தவர்கள் இன்று மிருகங்களை அல்லது காய்கறிகளை பலியாக செலுத்துவதில்லை. என்றாலும், ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதும் இயேசு கிறிஸ்துவிற்கு சீஷர்களை உண்டாக்குவதும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு. (மத்தேயு 24:14; 28:19, 20) கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு கடவுள் செய்யவிருக்கும் அதிசயமான காரியங்களை இன்னும் அநேகர் அறிய வேண்டும். அதற்கு, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை யாவரறிய அறிவிப்பதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நீங்கள் நழுவவிடாதிருக்கிறீர்களா? ஆர்வம் காட்டுவோருக்குப் போதிக்கவும், இயேசு கிறிஸ்துவின் சீஷராகும்படி அவர்களுக்கு உதவவும் உங்கள் நேரத்தையும் சக்தியையும் மனப்பூர்வமாய் செலவிடுகிறீர்களா? ஆர்வத்துடன் நாம் ஊழியத்தில் ஈடுபடுவது, சர்வாங்க தகனபலியின் சுகந்த வாசனையைப்போல், கடவுளுக்கு வெகு பிரியமானது.—1 கொரிந்தியர் 15:58.

கடவுளுடனும் மனிதருடனும் இனிய நட்பு

14. எபிரெயர் 10:24, 25-ல் உள்ள பவுலின் வார்த்தைகள் எவ்வாறு சமாதான பலியின் நோக்கத்திற்கு இணையாக உள்ளன?

14 இறுதியாக, பவுல் உடன் கிறிஸ்தவர்களுடனான உறவுக்கு நம் கவனத்தைத் திருப்புகிறார். “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவுதல்,’ ‘சபை கூடிவருதல்,’ “ஒருவருக்கொருவர் புத்திசொல்லுதல்” ஆகிய சொற்றொடர்கள் யாவும், இஸ்ரவேலில் சமாதான பலி கடவுளுடைய ஜனங்களுக்கு எப்படியெல்லாம் பயனளித்தன என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றன.

15. சமாதான பலிக்கும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் இடையே என்ன இசைவை நாம் காண்கிறோம்?

15 “சமாதான பலிகள்” என்ற தொடர் “ஐக்கிய பலிகள்” என்றும் சில சமயங்களில் மொழிபெயர்க்கப்பட்டது. இங்கு, ‘சமாதானம்’ என்பதற்கான எபிரெய சொல் பன்மை வடிவில் உள்ளது. ஒருவேளை, அத்தகைய பலிகளில் பங்குகொள்வது கடவுளுடனும் உடன் வணக்கத்தாருடனும் சமாதானமாய் இருப்பதை குறிக்கலாம். இந்தச் சமாதான பலியைக் [“ஐக்கிய பலியை,” NW] குறித்து ஒரு கல்விமான் சொன்னதாவது: “உண்மையில் இது, உடன்படிக்கையின் கடவுளுடன் சந்தோஷமாக அவர்கள் தோழமை கொள்வதற்குரிய சமயமாய் இருந்தது. இஸ்ரவேலருக்கு விருந்தளித்து உபசரித்தவரும் அவரே; ஆனால் அவர்கள் பலி செலுத்துகையில் அவர்களுடைய விருந்தாளியாக தம்மை தாழ்த்தினவரும் அவரே.” “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்ற இயேசுவின் வாக்குறுதியை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. (மத்தேயு 18:20) ஒவ்வொரு முறை கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வருகையிலும் பெறும் உற்சாகமூட்டும் கூட்டுறவு, ஊக்கமளிக்கும் போதனை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடன் அங்கிருக்கிறார் என்ற எண்ணம் ஆகியவை நமக்குப் பயனளிக்கின்றன. உண்மையிலேயே இது கிறிஸ்தவக் கூட்டத்தை மகிழ்ச்சிமிக்கதாக்குகிறது; விசுவாசத்தையும் பலப்படுத்துகிறது.

16. சமாதான பலியை மனதில் வைக்கையில், எது கிறிஸ்தவக் கூட்டங்களை மிக மகிழ்ச்சிமிக்கதாய் ஆக்குகிறது?

16 இந்தச் சமாதான பலியில் அனைத்து கொழுப்புகளும்—குடல்கள்மீதும், சிறுநீரகங்கள்மீதும், கல்லீரல்கள்மீதும், இடுப்பின்மீதும் சுற்றியிருந்த கொழுப்பும், அதோடுகூட செம்மறியாட்டின் கொழுத்த வாலும்—பலிபீடத்தின்மேல் தகனிக்கப்பட்டன; அவை எழுப்பிய புகை யெகோவாவுக்கு சுகந்த வாசனையாய் இருந்தது. (லேவியராகமம் 3:3-16) ஒரு மிருகத்தின் அதிக ஊட்டமிக்க, மிக அருமையான பாகமாக கொழுப்பு கருதப்பட்டது. அது பலிபீடத்தின்மீது செலுத்தப்படுகையில் மிகச் சிறந்த பாகத்தை யெகோவாவுக்கு சமர்ப்பிப்பதை அடையாளப்படுத்தியது. கிறிஸ்தவக் கூட்டங்களில் நாம் போதனையை மட்டுமே பெறுவதில்லை, யெகோவாவுக்குத் துதியையும் செலுத்துகிறோம். முக்கியமாக இதுவே கூட்டங்களை மகிழ்ச்சிமிக்கதாய் ஆக்குகிறது. ராஜ்ய பாடல்களை உருக்கமாக பாடுவதிலும், கூர்ந்து கவனிப்பதிலும், அவ்வப்போது குறிப்பு சொல்வதிலும், மனத்தாழ்மையோடு பெரும் முயற்சி எடுக்கையில் நாம் யெகோவாவை துதிக்கிறோம். “அல்லேலூயா [யாவைத் துதியுங்கள்]; யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பக்தர் சபையிலே அவர் புகழைப் பாடுங்கள்” என்று சங்கீதக்காரன் ஆர்ப்பரித்தார்.—சங்கீதம் 149:1, தி.மொ.

அபரிமிதமான ஆசீர்வாதம் அருகில்!

17, 18. (அ) எருசலேமிலிருந்த ஆலய பிரதிஷ்டையின்போது, என்ன மகத்தான பலிகளை சாலொமோன் செலுத்தினார்? (ஆ) அந்தக் கொண்டாட்டத்திலிருந்து என்ன ஆசீர்வாதங்களை ஜனங்கள் பெற்றனர்?

17 பொ.ச.மு. 1026-ன் ஏழாம் மாதத்தில், எருசலேமிலிருந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது சாலொமோன் ராஜா, ‘யெகோவாவின் சந்நிதியில் மகத்தான பலிகளைச் செலுத்தினார்.’ “தகனபலிகளையும் போஜனபலிகளையும் சமாதான பலிகளின் நிணத்தையும்” அப்போது செலுத்தினார். போஜனபலிகளோடு மொத்தம் 22,000 மாடுகளும் 1,20,000 ஆடுகளும் அந்தச் சிறப்புமிக்க தருணத்தில் பலி செலுத்தப்பட்டன.—1 இராஜாக்கள் 8:62-65, தி.மொ.

18 அத்தகைய மாபெரும் கொண்டாட்டத்தில் உட்பட்ட செலவையும் வேலையையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? எனினும், இஸ்ரவேலர் பெற்ற ஆசீர்வாதங்கள் சந்தேகமில்லாமல் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தையும் விஞ்சிவிட்டன. அந்தக் கொண்டாட்டங்களின் முடிவில், சாலொமோன் “ஜனங்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி யெகோவா தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மையினிமித்தமும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.” (1 இராஜாக்கள் 8:66, தி.மொ.) “கர்த்தரின் [யெகோவாவின்] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என சாலொமோன் சொன்னது முழுக்க முழுக்க உண்மை.—நீதிமொழிகள் 10:22.

19. இன்றும் என்றும் யெகோவாவிடமிருந்து அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு நாம் என்ன செய்யலாம்?

19 ‘வரப்போகிற நன்மைகளின் நிழலாக’ இருந்தது இப்போது ‘பொருளாகியிருக்கும்’ அதாவது நிஜமாகியிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். (எபிரெயர் 10:1) பூமிக்குரிய ஆலயத்தின் பிரதான ஆசாரியரால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட ஆவிக்குரிய ஆலயத்தின் பிரதான ஆசாரியர் இயேசு கிறிஸ்து, ஏற்கெனவே பரலோகத்திற்கு சென்றுவிட்டார்; அங்கு தம்முடைய பலியின்மீது விசுவாசம் வைப்போர் யாவரும் பாவநிவாரணம் அடைவதற்கு தம்முடைய இரத்தத்தின் மதிப்பை அளித்திருக்கிறார். (எபிரெயர் 9:10, 11, 24-26) அந்த சிறப்புமிக்க பலியின் அடிப்படையில், சுத்தமும் பழுதற்றும் இருக்கும் நம்முடைய துதியின் பலிகளை மனப்பூர்வமாய் கடவுளுக்குச் செலுத்துவோமாக. அப்போது, யெகோவாவிடமிருந்து அபரிமிதமான ஆசீர்வாதங்களை எதிர்பார்த்து நாமும் “சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே” தொடர்ந்து முன்னேறுவோம்.—மல்கியா 3:10.

உங்கள் பதில் என்ன?

• பலிகளையும் காணிக்கைகளையும் பற்றி நியாயப்பிரமாணத்திலுள்ள தகவலிலிருந்து என்ன போதனையையும் ஆறுதலையும் நாம் பெறலாம்?

• பலி ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முதல் தேவை என்ன, அது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?

• மனப்பூர்வமாய் செலுத்தும் சர்வாங்க தகனபலிக்கு ஒப்பாக எதை நாம் அளிக்கலாம்?

• என்ன விதங்களில் கிறிஸ்தவக் கூட்டங்களை சமாதான பலிக்கு ஒப்பிடலாம்?

[கேள்விகள்]

[பக்கம் 18-ன் படம்]

மனிதகுலத்தின் மீட்புக்காக இயேசுவின் கிரய பலியை யெகோவா அளித்தார்

[பக்கம் 20-ன் படம்]

நம்முடைய ஊழியம் யெகோவாவுக்கு ஏற்கத்தக்கதாக ஆவதற்கு, நாம் எல்லா விதத்திலும் கறைபடாதிருக்க வேண்டும்

[பக்கம் 21-ன் படம்]

ஊழியத்தில் ஈடுபடுகையில், யெகோவாவின் நற்குணத்தை யாவரறிய அறிவிக்கிறோம்