மத்தேயு எழுதியது 18:1-35

18  அந்த நேரத்தில் சீஷர்கள் இயேசுவின் பக்கம் வந்து, “பரலோக அரசாங்கத்தில் உண்மையில் யார் மிக உயர்ந்தவராக இருப்பார்?”+ என்று கேட்டார்கள்.  அப்போது அவர் ஒரு சின்னப் பிள்ளையைக் கூப்பிட்டு அவர்கள் நடுவில் நிறுத்தி,  “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டு* சின்னப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால்,+ ஒருபோதும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.+  இந்தச் சின்னப் பிள்ளையைப் போல் தாழ்மையாக நடந்துகொள்கிறவர்தான் பரலோக அரசாங்கத்தில் மிக உயர்ந்தவராக இருப்பார்.+  இப்படிப்பட்ட ஒரு சின்னப் பிள்ளையை எனக்காக* ஏற்றுக்கொள்கிறவர் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்.+  ஆனால், என்மேல் விசுவாசம் வைக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவரை யாராவது பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை அவனுடைய கழுத்தில் கட்டி, ஆழமான கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது.+  மக்களைப் பாவம் செய்யத் தூண்டுகிற இந்த உலகத்துக்குக் கேடுதான் வரும்! மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டுகிற ஆட்கள் கண்டிப்பாக இருப்பார்கள்;* ஆனால், அவர்களுக்குக் கேடுதான் வரும்!  உன் கையோ காலோ உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு;+ என்றுமே அணையாத நெருப்புக்குள் இரண்டு கைகளுடனோ இரண்டு கால்களுடனோ நீ வீசப்படுவதைவிட, ஊனமாகவோ முடமாகவோ வாழ்வை* பெறுவது நல்லது.+  உன் கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு; கொழுந்துவிட்டு எரிகிற கெஹென்னாவுக்குள் இரண்டு கண்களோடு நீ வீசப்படுவதைவிட ஒற்றைக் கண்ணோடு வாழ்வைப் பெறுவது நல்லது.+ 10  இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட கேவலமாக நினைக்காதபடி கவனமாக இருங்கள்; ஏனென்றால், அவர்களுடைய தேவதூதர்கள் என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள்+ என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். 11  —— 12  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனிடம் 100 ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால்,+ அவன் மற்ற 99 ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டு, வழிதவறி அலைகிற ஆட்டைத் தேடிப் போவான், இல்லையா?+ 13  அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால், வழிதவறிப் போகாத மற்ற 99 ஆடுகளைவிட அந்த ஒரு ஆட்டை நினைத்தே அதிக சந்தோஷப்படுவான் என்று நான் உங்களுக்கு நிச்சயமாகவே சொல்கிறேன். 14  அதுபோலவே, இந்தச் சிறியவர்களில் ஒருவர்கூட அழிந்துபோவதை என் பரலோகத் தகப்பன் விரும்புவதில்லை.+ 15  உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்துவிட்டால், அவரிடம் தனியாகப் போய் அவர் செய்த தவறை எடுத்துச் சொல்லுங்கள்;*+ நீங்கள் சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்டால், நீங்கள் அவரை நல்ல வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்.+ 16  நீங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை என்றால், ஒருவரையோ இருவரையோ உங்களோடு கூட்டிக்கொண்டு போய்ப் பேசுங்கள். ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலம்* எல்லா விஷயங்களையும்* உறுதிசெய்யும்.*+ 17  அவர்கள் சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால்,* சபைக்குத் தெரியப்படுத்துங்கள். சபை சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால்,* அவர் உங்களுக்கு மற்ற தேசத்தாரைப் போலவும்+ வரி வசூலிப்பவரைப் போலவும் இருக்கட்டும்.+ 18  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் பூமியில் பூட்டுவதெல்லாம் பரலோகத்தில் ஏற்கெனவே பூட்டப்பட்டிருக்கும், நீங்கள் பூமியில் திறப்பதெல்லாம் பரலோகத்தில் ஏற்கெனவே திறக்கப்பட்டிருக்கும்.+ 19  மறுபடியும் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தப் பூமியிலே உங்களில் இரண்டு பேர் முக்கியமான எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் ஒருமனதாக வேண்டிக்கொண்டால், என் பரலோகத் தகப்பன் அதை நிறைவேற்றுவார்.+ 20  ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று பேர் எங்கெல்லாம் என் பெயரில் ஒன்றுகூடுகிறார்களோ+ அங்கெல்லாம் நான் அவர்கள் நடுவில் இருப்பேன்” என்று சொன்னார். 21  அப்போது பேதுரு அவரிடம் வந்து, “எஜமானே, எனக்கு விரோதமாக என் சகோதரன் பாவம் செய்தால் நான் எத்தனை தடவை அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவையா?” என்று கேட்டார். 22  அதற்கு இயேசு, “ஏழு தடவை அல்ல, 77 தடவை என்று நான் உனக்குச் சொல்கிறேன்.+ 23  அதனால்தான் பரலோக அரசாங்கம், அடிமைகளிடம் கடனை வசூலிக்க நினைத்த ஒரு ராஜாவைப் போல் இருக்கிறது. 24  அந்த ராஜா அவர்களிடம் கடனை வசூலிக்க ஆரம்பித்தபோது, 10,000 தாலந்து கடன்பட்டிருந்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். 25  அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் அவன் இருந்ததால், அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அவனிடமிருந்த எல்லாவற்றையும் விற்று கடனை அடைக்க வேண்டுமென்று+ அந்த ராஜா கட்டளையிட்டார். 26  அப்போது அந்த அடிமை அவருடைய காலில் விழுந்து, ‘கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், எல்லாவற்றையும் உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொல்லிக் கெஞ்சினான். 27  அதைப் பார்த்தபோது ராஜாவின் மனம் உருகியது; அதனால் அவனை விடுதலை செய்து, அவனுடைய கடன்களையெல்லாம் ரத்து செய்துவிட்டார்.+ 28  ஆனால் அந்த அடிமை வெளியே போய், தனக்கு 100 தினாரியு கடன்பட்டிருந்த சக அடிமை ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து, ‘எனக்குக் கொடுக்க வேண்டிய கடனையெல்லாம் திருப்பிக் கொடு’ என்று சொல்லி, அவனைப் பிடித்து, கழுத்தை நெரிக்க ஆரம்பித்தான். 29  அப்போது அந்தச் சக அடிமை அவனுடைய காலில் விழுந்து, ‘கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொல்லிக் கெஞ்ச ஆரம்பித்தான். 30  ஆனால், அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அங்கிருந்து புறப்பட்டுப் போய், கடனைத் திருப்பிக் கொடுக்கும்வரை அந்த அடிமையைச் சிறையில் அடைக்கச் செய்தான். 31  நடந்ததையெல்லாம் பார்த்து அவனுடைய சக அடிமைகள் மிகவும் வேதனைப்பட்டார்கள்; பின்பு, ராஜாவிடம் போய் நடந்ததையெல்லாம் சொன்னார்கள். 32  அப்போது, அந்த ராஜா அவனை வரவழைத்து, ‘பொல்லாத அடிமையே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபோது உன் கடனையெல்லாம் ரத்து செய்தேன். 33  நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?’+ என்று கேட்டார். 34  அவருக்கு அவன்மேல் பயங்கர கோபம் வந்ததால், எல்லா கடனையும் அடைக்கும்வரை அவனைச் சிறைக்காவலர்களிடம் ஒப்படைத்தார். 35  அப்படியே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை உள்ளப்பூர்வமாக மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தகப்பனும் உங்களை மன்னிக்க மாட்டார்”+ என்று சொன்னார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

உண்மையாகவே: கிரேக்கில், ஆமென். இது, ஆமன் என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பு. இதன் அர்த்தம், “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே.” ஒரு விஷயத்தை, வாக்குறுதியை, அல்லது தீர்க்கதரிசனத்தைச் சொல்வதற்கு முன்பு இயேசு அடிக்கடி இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். இப்படி, அவர் சொல்லவந்த விஷயம் முழுக்க முழுக்க உண்மை என்பதையும் நம்பகமானது என்பதையும் வலியுறுத்திக் காட்டினார். “உண்மையாகவே” அல்லது ஆமென் என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தியதுபோல் வேறு யாரும் பயன்படுத்தியதாக வேறெந்தப் புனித நூலும் சொல்வதில்லை. தான் சொல்லவரும் விஷயம் நம்பகமானது என்பதை இன்னும் அதிகமாக வலியுறுத்துவதற்காக இயேசு இந்த வார்த்தையை அடுத்தடுத்து இரண்டு தடவை சொல்லியிருக்கிறார் (ஆமென் ஆமென்); யோவான் சுவிசேஷம் முழுவதிலும் அந்தப் பதிவுகளை நாம் பார்க்கலாம்.—யோவா 1:51.

மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை: வே.வா., “கழுதையை வைத்து இழுக்கப்படும் திரிகைக் கல்லை.” நே.மொ., “ஒரு கழுதையின் திரிகைக் கல்லை.” அப்படிப்பட்ட ஒரு திரிகை கல் அநேகமாக 1.2-1.5 மீ. (4-5 அடி) விட்டத்தில் இருந்திருக்கும். அது மிகவும் கனமாக இருந்ததால் ஒரு கழுதையை வைத்துத்தான் இழுக்க வேண்டியிருந்தது.

மக்களைப் பாவம் செய்யத் தூண்டுகிற: வே.வா., “முட்டுக்கட்டையாக இருக்கிற.” இதற்கான கிரேக்க வார்த்தை ஸ்கான்டேலான். ஆரம்பத்தில் இது ஒரு பொறியைக் குறித்ததாக நம்பப்படுகிறது. அதுவும், ஒரு பொறிக்குள் இருந்த குச்சியை (இரை வைக்கப்பட்ட குச்சியை) அது குறித்திருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். காலப்போக்கில், ஒருவரைத் தடுக்கி விழவைக்கும் எல்லா பொருள்களையுமே குறிப்பதற்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அடையாள அர்த்தத்தில், ஒருவரைத் தவறான பாதையில் போக வைக்கிற, அல்லது ஒழுக்க நெறிகளை மீற வைக்கிற, அல்லது பாவக் குழியில் விழ வைக்கிற செயலையோ சூழ்நிலையையோ அது குறிக்கிறது. இந்த வார்த்தையோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல்லான ஸ்கான்டலைசோ மத் 18:8, 9-ல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “பாவம் செய்ய வைத்தால்” என்று அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “உன்னை விழ வைத்தால்; உனக்குக் கண்ணியாக இருந்தால்” என்றெல்லாம்கூட அதை மொழிபெயர்க்கலாம்.

கெஹென்னாவுக்குள்: ‘கெஹென்னா’ என்ற வார்த்தை, “இன்னோம் பள்ளத்தாக்கு” என்ற அர்த்தத்தைத் தரும் ஃகேஹ் இன்னோம் என்ற எபிரெய வார்த்தைகளிலிருந்து வந்திருக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு பழங்கால எருசலேமுக்கு மேற்கிலும் தெற்கிலும் அமைந்திருந்தது. (இணைப்பு B12-ஐயும், “எருசலேமும் சுற்றுப்புறமும்” என்ற வரைபடத்தையும் பாருங்கள்.) இயேசுவின் காலத்தில், அது குப்பைக்கூளங்களை எரிக்கும் இடமாக ஆகியிருந்தது. அதனால், “கெஹென்னா” என்ற வார்த்தை நிரந்தர அழிவைக் குறிப்பதற்குப் பொருத்தமான வார்த்தையாக இருந்தது.—சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.

கெஹென்னாவுக்குள்: மத் 5:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பையும் பாருங்கள்.

என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள்: வே.வா., “என் தகப்பனின் முகத்தை எப்போதும் பார்க்கிறார்கள்.” தேவதூதர்களால் மட்டும்தான் கடவுளுடைய முகத்தைப் பார்க்க முடியும்; ஏனென்றால், கடவுளுடைய சன்னிதிக்குப் போய்வர அவர்களால் முடியும்.—யாத் 33:20.

சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன: “வழிதவறிப்போனவர்களை மீட்பதற்காக மனிதகுமாரன் வந்தார்.” ஆனால், மிகவும் பழமையான மற்றும் நம்பகமான கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இல்லை. கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட லூ 19:10-ல் இதேபோன்ற வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், பழங்காலத்தில் நகலெடுப்பவராக இருந்த ஒருவர் லூக்காவின் பதிவிலிருந்து இந்த வார்த்தைகளை எடுத்திருக்க வேண்டுமென்று சிலர் நினைக்கிறார்கள்.​—இணைப்பு A3-ஐப் பாருங்கள்.

என்: சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் “உங்கள்” என்று கொடுக்கப்பட்டுள்ளது.

சபையை: சபை என்பதற்கான கிரேக்க வார்த்தை எக்லிசீயா. இந்த வசனத்தில்தான் இது முதல் தடவை வருகிறது. எக் என்ற கிரேக்க வார்த்தையும் (அர்த்தம், “வெளியே”), கலீயோ என்ற கிரேக்க வார்த்தையும் (அர்த்தம், “அழைப்பது”) சேர்ந்ததுதான் எக்லிசீயா. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அல்லது வேலைக்காக வரவழைக்கப்பட்ட அல்லது ஒன்றுதிரட்டப்பட்ட தொகுதியை இது குறிக்கிறது. (சொல் பட்டியலைப் பாருங்கள்.) இந்த வசனத்தில், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் அடங்கிய கிறிஸ்தவ சபை உருவாவதைப் பற்றி இயேசு முன்னறிவித்தார்; “உயிருள்ள கற்களாகிய” அவர்கள் ‘ஆன்மீக வீடாகக் கட்டப்படுகிறார்கள்.’ (1பே 2:4, 5) “சபை” என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு இந்தக் கிரேக்க வார்த்தையைத்தான் செப்டுவஜன்ட் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறது; சபை என்பது பெரும்பாலும் கடவுளுடைய மக்களை ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. (உபா 23:3; 31:30) எகிப்திலிருந்து அழைத்துவரப்பட்ட இஸ்ரவேலர்களை “ஒரு சபை” என்று அப் 7:38 குறிப்பிடுகிறது. அதேபோல், ‘இருளிலிருந்து . . . அழைக்கப்பட்டதாகவும்,’ ‘இந்த உலகத்திலிருந்து . . . தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்’ சொல்லப்படுகிற கிறிஸ்தவர்கள் ‘கடவுளுடைய சபையாக’ இருக்கிறார்கள்.—1பே 2:9; யோவா 15:19; 1கொ 1:1.

சபைக்கு: திருச்சட்டத்தின்படி, நீதிவிசாரணைகள் நடத்தப்பட்டபோது நியாயாதிபதிகளும் அதிகாரிகளும் இஸ்ரவேல் சபையின் சார்பாகச் செயல்பட்டார்கள். (உபா 16:18) இயேசுவின் காலத்தில், குற்றம் செய்தவர்கள் உள்ளூர் நீதிமன்றங்களில் யூதர்களுடைய பெரியோர்களால் விசாரணை செய்யப்பட்டார்கள். (மத் 5:22) பிற்பாடு, தீர்ப்புகளை வழங்குவதற்குக் கடவுளுடைய சக்தியால் ஒவ்வொரு கிறிஸ்தவ சபையிலும் பொறுப்புள்ள ஆண்கள் நியமிக்கப்பட்டார்கள். (அப் 20:28; 1கொ 5:1-5, 12, 13) “சபை” என்ற வார்த்தையின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வதற்கு, மத் 16:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “சபை” என்ற தலைப்பையும் பாருங்கள்.

மற்ற தேசத்தாரைப் போலவும் வரி வசூலிப்பவரைப் போலவும்: அதாவது, “யூதர்கள் அநாவசியமாக சகவாசம் வைத்துக்கொள்ளாத ஆட்களைப் போல.”​—அப் 10:28-ஐ ஒப்பிடுங்கள்.

பூட்டுவதெல்லாம் . . . திறப்பதெல்லாம்: வே.வா., “கட்டுவதெல்லாம் . . . கட்டவிழ்ப்பதெல்லாம்.” சில செயல்களையோ மாற்றங்களையோ தடை செய்கிற அல்லது அனுமதிக்கிற தீர்மானங்களைக் குறிப்பதாகத் தெரிகிறது.​—மத் 18:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஏற்கெனவே பூட்டப்பட்டிருக்கும் . . . ஏற்கெனவே திறக்கப்பட்டிருக்கும்: வே.வா., “ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் . . . ஏற்கெனவே கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.” இந்த வார்த்தைகளுக்கான கிரேக்க வினைச்சொற்கள் இந்த வசனத்தில் வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேதுரு என்ன தீர்மானம் எடுத்தாலும் (அவர் “கட்டுவதெல்லாம்”; “கட்டவிழ்ப்பதெல்லாம்”), அதற்கு முன்பே பரலோகத்தில் அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை அவை காட்டுகின்றன. அதாவது, பேதுரு தீர்மானம் எடுத்துவிட்ட பின்பு பரலோகத்தில் தீர்மானம் எடுக்கப்படாது, பரலோகத்தில்தான் முதலில் தீர்மானம் எடுக்கப்படும் என்பதைக் காட்டுகின்றன.​—மத் 18:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

பூட்டுவதெல்லாம் . . . திறப்பதெல்லாம்: வே.வா., “கட்டுவதெல்லாம் . . . கட்டவிழ்ப்பதெல்லாம்.” இந்த வசனத்தில், ‘கட்டுவது’ என்பது அநேகமாக ‘குற்றவாளியாகக் கருதுவதை’ குறிக்கிறது; ‘கட்டவிழ்ப்பது’ என்பது ‘நிரபராதியாகக் கருதுவதை’ குறிக்கிறது. “நீங்கள்” என்று பன்மையில் கொடுக்கப்பட்டிருப்பதால், பேதுரு மட்டுமல்லாமல் மற்றவர்களும் இப்படிப்பட்ட தீர்மானங்களை எடுப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.​—மத் 16:19-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஏற்கெனவே பூட்டப்பட்டிருக்கும் . . . ஏற்கெனவே திறக்கப்பட்டிருக்கும்: வே.வா., “ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் . . . ஏற்கெனவே கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.” இந்த வார்த்தைகளுக்கான கிரேக்க வினைச்சொற்கள் இந்த வசனத்தில் வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீஷர்கள் என்ன தீர்மானம் எடுத்தாலும் (அவர் “கட்டுவதெல்லாம்”; “கட்டவிழ்ப்பதெல்லாம்”), அதற்கு முன்பே பரலோகத்தில் அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை அவை காட்டுகின்றன. அதாவது, சீஷர்கள் தீர்மானம் எடுத்துவிட்ட பின்பு பரலோகத்தில் தீர்மானம் எடுக்கப்படாது, பரலோகத்தில்தான் முதலில் தீர்மானம் எடுக்கப்படும் என்பதைக் காட்டுகின்றன. பரலோகத்தில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருக்கும் நியமங்களின் அடிப்படையில்தான் சீஷர்கள் தீர்மானங்களை எடுப்பார்கள். ஆனால், பூமியில் எடுக்கப்படும் தீர்மானத்துக்குப் பரலோகத்திலிருந்து ஆதரவு காட்டப்படும் என்பதையோ, அந்தத் தீர்மானம் உறுதிசெய்யப்படும் என்பதையோ இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, சீஷர்களுக்குப் பரலோகத்திலிருந்து வழிநடத்துதல் கிடைக்கும் என்பதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. பூமியில் எடுக்கப்படும் தீர்மானங்கள், ஏற்கெனவே பரலோகத்தில் எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானங்களோடு ஒத்திருப்பதற்கு அப்படிப்பட்ட வழிநடத்துதல் தேவை என்பதை இது சிறப்பித்துக் காட்டுகிறது.​—மத் 16:19-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

77 தடவை: நே.மொ., “ஏழு எழுபது தடவை.” இதற்கான கிரேக்க வார்த்தைகள், 7-ஐயும் 70-ஐயும் கூட்டினால் வரும் தொகையை (77) குறிக்கலாம், அல்லது 7-ஐயும் 70-ஐயும் பெருக்கினால் வரும் தொகையை (490) குறிக்கலாம். ஆதி 4:24-ல், “77 தடவை” என்பதற்கான எபிரெய வார்த்தைகளுக்கு இதே கிரேக்க வார்த்தைகளைத்தான் செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது. அதனால், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அந்த வார்த்தைகளை “77 தடவை” என்று மொழிபெயர்ப்பது சரியாக இருக்கும் என்று தெரிகிறது. அது எந்தத் தொகையைக் குறித்தாலும் சரி, ஏழு என்ற எண் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருப்பது, “அளவே இல்லாமல்” அல்லது “கணக்கில்லாமல்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. “ஏழு தடவை” என்று பேதுரு சொன்னதை “77 தடவை” என்று இயேசு மாற்றிச் சொன்னபோது, மன்னிப்பதற்கு அளவே இருக்கக் கூடாது என்று தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதற்கு நேர்மாறாக, பாபிலோனிய தால்முட் (யோமா 86) இப்படிச் சொல்கிறது: “ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டால், முதல் தடவையும் இரண்டாவது தடவையும் மூன்றாவது தடவையும் மன்னிக்கப்படுகிறான், ஆனால் நான்காவது தடவை மன்னிக்கப்படுவதில்லை.”

100 தினாரியு: 10,000 தாலந்தோடு (6,00,00,000 தினாரியுவோடு) ஒப்பிடும்போது 100 தினாரியு ஒரு சிறிய தொகைதான்; ஆனாலும், அதற்கு மதிப்பு இருந்தது. 100 தினாரியு கூலி கிடைப்பதற்கு ஒருவர் 100 நாட்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது.​—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

10,000 தாலந்து: ஒரு சாதாரண கூலியாள் கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு வேலை செய்தால்தான் ஒரு தாலந்து கூலி கிடைக்கும். அப்படிப் பார்த்தால், 10,000 தாலந்து கடனை அடைக்க அவர் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வேலை செய்ய வேண்டும். அந்தக் கடனை அடைக்கவே முடியாது என்பதைக் காட்டுவதற்கு இயேசு உயர்வு நவிற்சி அணியைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 10,000 தாலந்து வெள்ளி என்பது 6,00,00,000 தினாரியு.​—மத் 18:28-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “தாலந்து” என்ற தலைப்பையும், இணைப்பு B14-ஐயும் பாருங்கள்.

அவருடைய காலில் விழுந்து: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசனத்தில், ஒரு அடிமை தன் எஜமானுக்கு மரியாதையோடு அடிபணிவதைக் காட்டுகிறது.​—மத் 2:2; 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

தலைவணங்க: வே.வா., “மண்டிபோட.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனத்தில், “யூதர்களுடைய ராஜா எங்கே பிறந்திருக்கிறார்?” என்றுதான் அந்த ஜோதிடர்கள் கேட்டார்கள். அதனால், ஒரு தெய்வத்துக்கு முன்னால் அல்ல, ஒரு மனித ராஜாவுக்கு முன்னால் தலைவணங்குவதையே இது அர்த்தப்படுத்துகிறது. மாற் 15:18, 19-லும் இதே அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சில படைவீரர்கள் இயேசுவை “யூதர்களுடைய ராஜாவே” என்று கேலியாக அழைத்து, அவர் முன்னால் “தலைவணங்கினார்கள்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.—மத் 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவர் முன்னால் தலைவணங்கி: வே.வா., “அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” எபிரெய வேதாகமத்தில் குறிப்பிடப்படும் நபர்கள்கூட தீர்க்கதரிசிகளையோ ராஜாக்களையோ கடவுளுடைய மற்ற பிரதிநிதிகளையோ சந்தித்தபோது அவர்கள் முன்னால் தலைவணங்கினார்கள். (1சா 25:23, 24; 2சா 14:4-7; 1ரா 1:16; 2ரா 4:36, 37) இங்கே சொல்லப்படும் தொழுநோயாளி, மக்களைக் குணப்படுத்தும் சக்திபெற்றிருந்தவரிடம், அதாவது கடவுளுடைய பிரதிநிதியிடம், பேசிக்கொண்டிருந்ததைப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. எதிர்கால ராஜாவாக கடவுளால் நியமிக்கப்பட்டவருக்கு மரியாதை காட்ட அவர் முன்னால் தலைவணங்குவது பொருத்தமானதாக இருந்தது.—மத் 9:18; இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, மத் 2:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கடன்களை: இங்கே கடன்கள் என்பது பாவங்களைக் குறிக்கிறது. ஒருவர் இன்னொருவருக்கு எதிராகப் பாவம் செய்யும்போது, அவருக்குக் கடன்படுகிறார் அல்லது அவருக்கு ஒன்றைச் செய்ய கடமைப்பட்டிருக்கிறார். அதனால், அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒருவர் கடவுளுடைய மன்னிப்பைப் பெற வேண்டுமென்றால், தன்னுடைய கடனாளிகளை, அதாவது தனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை, அவர் மன்னித்திருக்க வேண்டும்.—மத் 6:14, 15; 18:35; லூ 11:4.

அவனுடைய கடன்களையெல்லாம் ரத்து செய்துவிட்டார்: வே.வா., “அவனுடைய கடன்களையெல்லாம் மன்னித்துவிட்டார்.” கடன்கள் என்பது அடையாள அர்த்தத்தில் பாவங்களைக் குறிக்கலாம்.​—மத் 6:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

100 தினாரியு: 10,000 தாலந்தோடு (6,00,00,000 தினாரியுவோடு) ஒப்பிடும்போது 100 தினாரியு ஒரு சிறிய தொகைதான்; ஆனாலும், அதற்கு மதிப்பு இருந்தது. 100 தினாரியு கூலி கிடைப்பதற்கு ஒருவர் 100 நாட்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது.​—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

உன் கடனையெல்லாம் ரத்து செய்தேன்: வே.வா., “உன் கடனையெல்லாம் மன்னித்துவிட்டேன்.”​—மத் 6:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மன்னியுங்கள்: இதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “விட்டுவிடுங்கள்.” ஆனால், மத் 18:27, 32 ஆகிய வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளபடி, “கடனை ரத்து செய்யுங்கள்” என்றும் அது அர்த்தப்படுத்தலாம்.

சிறைக்காவலர்களிடம்: சிறைக்காவலர்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை, பஸானிஸ்டெஸ். இதன் அடிப்படை அர்த்தம், “வதைக்கிறவர்கள்.” ஒருவேளை, சிறைக்காவலர்கள் கைதிகளைப் பெரும்பாலும் கொடூரமாகத் துன்புறுத்தியதால் இந்த வார்த்தை அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், சிறைக்காவலர்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. சிறைக்காவலர்கள் கைதிகளைச் சித்திரவதை செய்தார்களோ இல்லையோ, அவர்களைச் சிறையில் அடைத்ததே அவர்களை வதைப்பதுபோல் இருந்ததாகக் கருதப்பட்டிருக்கலாம்.​—மத் 8:29-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் “எங்களைப் பாடுபடுத்த” என்ற தலைப்பைப் பாருங்கள்.

எங்களைப் பாடுபடுத்த: இதனோடு சம்பந்தப்பட்ட ஒரு கிரேக்க வார்த்தை மத் 18:34-ல் ‘சிறைக்காவலர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வசனத்தில் “பாடுபடுத்த” என்பது, இதன் இணைவசனமான லூ 8:31-ல் சொல்லப்பட்டிருக்கும் ‘அதலபாதாளத்தில்’ அடைக்கப்படுவதைக் குறிப்பதாகத் தெரிகிறது.

மீடியா

திரிகையின் மேற்கல்லும் அடிக்கல்லும்
திரிகையின் மேற்கல்லும் அடிக்கல்லும்

படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற பெரிய திரிகைக் கற்கள், அதாவது மாவு அரைக்கும் கற்கள், கழுதை போன்ற வீட்டு விலங்குகளை வைத்துச் சுற்றப்பட்டன. தானியங்களை அரைப்பதற்கோ ஒலிவப் பழங்களைப் பிழிவதற்கோ அவை பயன்படுத்தப்பட்டன. திரிகையின் மேற்கல் 1.5 மீ. (5 அடி) விட்டத்தில்கூட இருந்திருக்கலாம். அதைவிடப் பெரிய அடிக்கல்லின் மீது அது வைக்கப்பட்டுச் சுற்றப்பட்டிருக்கலாம்.

மாவு அரைக்கும் கல்
மாவு அரைக்கும் கல்

இது திரிகைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது. இது தானியங்களை அரைப்பதற்கும் ஒலிவப் பழங்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. சில திரிகைக் கற்கள் சின்னதாக இருந்ததால் கையினால் சுற்றப்பட்டன. ஆனால், மற்ற திரிகைக் கற்கள் மிகப் பெரியவையாக இருந்ததால் ஒரு விலங்கை வைத்துச் சுற்றப்பட்டன. படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு பெரிய திரிகைக் கல்லில்தான் ஒருவேளை சிம்சோனை பெலிஸ்தியர்கள் மாவு அரைக்க வைத்திருப்பார்கள். (நியா 16:21) விலங்குகளை வைத்துச் சுற்றப்பட்ட திரிகைக் கற்கள் இஸ்ரவேலில் மட்டுமல்லாமல், ரோம சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டன.

இன்னோம் பள்ளத்தாக்கு (கெஹென்னா)
இன்னோம் பள்ளத்தாக்கு (கெஹென்னா)

கிரேக்கில் கெஹென்னா என்று அழைக்கப்பட்ட இன்னோம் பள்ளத்தாக்கு, பழங்கால எருசலேமின் தெற்கிலும் தென்மேற்கிலும் இருந்த ஒரு பள்ளத்தாக்கு. இயேசுவின் காலத்தில் அது குப்பைகூளங்களை எரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதனால், முழுமையான அழிவுக்குப் பொருத்தமான அடையாளமாக இருக்கிறது.

மேய்ப்பரும் அவருடைய ஆடுகளும்
மேய்ப்பரும் அவருடைய ஆடுகளும்

மேய்ப்பரின் வாழ்க்கை சுலபமாக இருக்கவில்லை. வெயிலிலும் குளிரிலும் அவர் பாடுபட்டார்; ராத்திரி தூங்காமல் ஆடுகளைப் பார்த்துக்கொண்டார். (ஆதி 31:40; லூ 2:8) சிங்கம், ஓநாய், கரடி போன்ற கொடிய மிருகங்களிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் மந்தையைப் பாதுகாத்தார். (ஆதி 31:39; 1சா 17:34-36; ஏசா 31:4; ஆமோ 3:12; யோவா 10:10-12) மேய்ப்பர் தன்னுடைய ஆடுகள் சிதறிப்போகாதபடி பார்த்துக்கொண்டார் (1ரா 22:17), தொலைந்துபோன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடித்தார் (லூ 15:4), மெலிந்த அல்லது தளர்ந்துபோன ஆட்டுக்குட்டிகளைத் தன் நெஞ்சில் (ஏசா 40:11) அல்லது தோள்களில் சுமந்தார், நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளையும் காயமடைந்த ஆடுகளையும் கவனித்துக்கொண்டார் (எசே 34:3, 4; சக 11:16). பைபிள் அடிக்கடி மேய்ப்பர்களையும் அவர்களுடைய வேலையையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, யெகோவா ஒரு மேய்ப்பரைப் போல, தன் ஆடுகளாகிய மக்களை அன்போடு கவனித்துக்கொள்வதாக அது சொல்கிறது. (சங் 23:1-6; 80:1; எரே 31:10; எசே 34:11-16; 1பே 2:25) பைபிள் இயேசுவை ‘பெரிய மேய்ப்பர்’ (எபி 13:20) என்றும், “முதன்மை மேய்ப்பர்” என்றும் அழைக்கிறது. அவருடைய வழிநடத்துதலின்படி கிறிஸ்தவச் சபையில் இருக்கும் கண்காணிகள் கடவுளுடைய மந்தையை மனப்பூர்வமாகவும் ஆர்வமாகவும் சுயநலமில்லாமலும் மேய்க்கிறார்கள்.—1பே 5:2-4.