Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர் ஏன் மிக முக்கியமானவர்

அவர் ஏன் மிக முக்கியமானவர்

அவர் ஏன் மிக முக்கியமானவர்

இரண்டாயிரம் வருடங்களாக இயேசுவின் பிறப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. முதல் நூற்றாண்டு மருத்துவரான லூக்கா தரும் தகவலின்படி, கன்னிப்பெண் மரியாளிடம் தேவதூதர் இவ்வாறு சொன்னார்: “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.” இயேசுவைக் குறித்து அந்த தேவதூதர் என்ன சொன்னார்? “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்,” என்றும் “அவர் [இயேசு] . . . அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” என்றும் சொன்னார்.​—லூக்கா 1:31-33.

உலக விவகாரங்களை அன்பாக நிர்வகிக்கிற நீதிநேர்மையான உலக அரசர்! மனிதகுலம் இப்படிப்பட்ட ஒருவருக்காகத்தானே ஏங்குகிறது. உண்மையில், இயேசு பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே பைபிள் இவ்வாறு முன்னுரைத்தது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் [“ஆட்சிப் பொறுப்பு,” பொது மொழிபெயர்ப்பு] அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் . . . நித்திய பிதா, சமாதானப்பிரபு [“சமாதானத்தின் இளவரசர்,” NW] என்னப்படும். . . . அவருடைய கர்த்தத்துவத்தின் [“ஆட்சியின்,” பொ.மொ.] பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”​—ஏசாயா 9:6, 7.

நீதிநெறி தவறாத ஆட்சியும் சமாதானமும்​—⁠இவை என்னே அற்புதமான எதிர்பார்ப்புகள்! ஆனால் இதைக் கவனியுங்கள்: படைப்புக்கெல்லாம் பேரரசரான உன்னதமான கடவுள் இந்த ஆட்சிப் பொறுப்பை தம்முடைய மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். அதனால்தான் அவருடைய மகன் பைபிளில் இளவரசர்​—⁠அதுவும் “சமாதானத்தின் இளவரசர்”​—⁠என்று அழைக்கப்படுகிறார். இவருடைய தோளின்மேல் இந்த அரசாங்கம் இருக்கும் என முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுளிடமிருந்து ஆட்சிப்பொறுப்பை பெற்றதால்தான், இந்த அரசாங்கத்தின் எதிர்கால அரசரான இயேசு அதை ‘தேவனுடைய ராஜ்யம்’ என்று பலமுறை குறிப்பிட்டார்.​—லூக்கா 9:27, 60, 62.

ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்தில், இயேசு இவ்வாறு சொன்னார்: ‘நான் . . . தேவனுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்.’ (லூக்கா 4:43) இயேசு தம்மை பின்பற்றியவர்களிடம் கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக ஜெபிக்கும்படியும்கூட கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) கிறிஸ்தவமும் நெருக்கடியும் என்ற ஆங்கிலப் பத்திரிகை இவ்வாறு தெரிவித்தது: “ராஜ்யமே [இயேசுவுடைய] போதனையின் முக்கியப்பொருளாக இருந்தது. வேறெந்த விஷயமும் அவருடைய மனதை இந்தளவுக்கு ஆக்கிரமிக்கவுமில்லை, அவருடைய செய்தியின் மையக்கருத்தாக அமையவுமில்லை. இந்தப் பொருள் சுவிசேஷ பதிவுகளில் நூற்றுக்கும் அதிகமான தடவைகள் காணப்படுகிறது.”

சிந்திக்கச் சில கேள்விகள்

இயேசுவை இப்போது நீங்கள் எவ்வாறு எண்ணிப் பார்க்கிறீர்கள்? தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு குழந்தையாகத்தான் இந்தக் காலப்பகுதியில் அவர் பொதுவாக சித்தரிக்கப்படுகிறார். கொஞ்ச நாட்களுக்கு அவர் உதவியற்ற பச்சிளம் குழந்தையாக இருந்திருக்கிறார் என்பது உண்மைதான். (லூக்கா 2:15-20) அதற்காக அவரை ஒரு குழந்தையாகத்தான் நாம் கருத வேண்டுமா? அதற்குப் பதிலாக இப்படி யோசித்துப் பாருங்கள்: இயேசு ஏன் ஒரு மனிதராக பிறந்தார்? உண்மையில், அவர் யார்?

1996-⁠ஆம் ஆண்டு என்கார்ட்டா இயர்புக் பின்வரும் கேள்விகளை எழுப்பியது: “இயேசு கடவுளுடைய குமாரனாக, பழைய ஏற்பாட்டில் வாக்குறுதி அளிக்கப்பட்ட மேசியாவாக இருந்தாரா? அல்லது, ஒருவேளை மாமனிதராகவே இருந்தாலும் நம்மைப்போல அவரும் ஒரு மனிதர்தானா?” இவை ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய கேள்விகள். ஏன் அவ்வாறு சொல்கிறோம்? ஏனென்றால், நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியும் நாம் இயேசுவை எவ்வாறு கருதுகிறோம் என்பதையும் அவரை பின்பற்றுகிறோமா இல்லையா என்பதையும் சார்ந்தே இருக்கிறது. “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை” என்று பைபிள் கூறுகிறது.​—யோவான் 3:⁠36.

சாதாரண மனிதர் அல்ல

பன்னிரண்டு வயதில் எருசலேம் ஆலயத்தில் இயேசு செய்தவற்றை விவரித்த பிறகு, மரியாளோடும் அவருடைய கணவராகிய யோசேப்போடும் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, “[இயேசு] அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 2:51, 52) ஆனால், வளர்ந்து பெரியவரானபோது, அவர் சாதாரண மனிதர் அல்ல என்பது தெளிவானது.

சுழல் காற்றால் சீறியெழுந்த கடலை இயேசு அமைதிப்படுத்தியபோது, பயந்துபோயிருந்த அவருடைய நண்பர் ஒருவர், “இவர் யாரோ?” என்று ஆச்சரியத்தோடு வினவினார். (மாற்கு 4:41) கடைசியில், பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்துவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், இயேசு நிரபராதி என்பதை பிலாத்து தெளிவாக புரிந்துகொண்டார்; அதுமட்டுமல்லாமல் கொடூரமாகவும் அநியாயமாகவும் நடத்தப்பட்டபோதிலும் இயேசு கண்ணியம் காத்ததைக் கண்டும் அசந்துபோனார்; அதன் காரணமாக, “பாருங்கள், இவர்தான் மனிதன்” என்று அங்கிருந்த கூட்டத்தாரிடம் மெச்சும் தொனியில் தெரிவித்தார். ஆனால் அந்த யூதர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்” என்று சொன்னார்கள்.​—யோவான் 19:4-7, பொ.மொ.

ஆனால், இயேசுவை “இறைமகன்” என்று அவர்கள் குறிப்பிட்டதைக் கேட்டு பிலாத்து பயந்துபோனார். சற்று முன்புதான் அவருடைய மனைவியும் இயேசுவைக் குறித்து தான் கண்ட கனவை அவருக்கு சொல்லியனுப்பியிருந்தாள்; அதில் ‘அந்த நீதிமான்’ என்று அவள் இயேசுவை குறிப்பிட்டிருந்தாள். (மத்தேயு 27:19) எனவே, இயேசு உண்மையில் யார் என பிலாத்து வியந்தார். அவர் கலிலேயாவைச் சேர்ந்தவரென்று தெரிந்தபோதிலும், ‘நீ எங்கேயிருந்து வந்தவன்?’ என்று பிலாத்து கேட்டார். அதற்கு இயேசு பதிலளிக்க மறுத்ததால், அந்த உரையாடல் சீக்கிரத்தில் முடிவடைந்தது.​—யோவான் 19:9, 10.

தெளிவாகவே, பூமியில் இயேசு ஒரு மனிதராகத்தான் இருந்தார், ஆனால் மற்ற மனிதருக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்றால், அவர் பூமிக்கு வருவதற்கு முன்பு பரலோகத்தில் இருந்தார்; அங்கே வார்த்தை என அழைக்கப்பட்ட ஆவி ஆளாக இருந்தார். பிறகு, கடவுள் அவருடைய உயிரை மரியாளின் கருப்பைக்குள் அதிசயமான முறையில் வைத்தார். “அந்த வார்த்தை மாம்சமாகி, . . . நமக்குள்ளே வாசம்பண்ணினார்” என்று அப்போஸ்தலன் யோவான் உறுதிப்படுத்தினார்.​—யோவான் 1:1, 2, 14, 18; வெளிப்படுத்துதல் 3:⁠14.

கடவுளுடைய மகன் ஏன் பூமிக்கு வந்தார்?

முதல் மனிதனாகிய ஆதாம், பிள்ளைகளைப் பெறுவதற்கு முன்பே பாவத்தில் வீழ்ந்துவிட்டான். ஆதாமை கடவுளுக்குக் கீழ்ப்படியாதவனாக ஆக்க பிசாசு என்றும் சாத்தான் என்றும் பிற்பாடு அழைக்கப்பட்ட ஒரு கலகக்கார தூதன் எடுத்த முயற்சி பலித்தது. அதன் விளைவாக, கடவுள் எச்சரித்திருந்தபடியே அவருடைய மகன் என்ற உறவை ஆதாம் இழந்துவிட்டான். கீழ்ப்படியாமையின் பின்விளைவுகளையும் அனுபவித்தான். அதாவது, அவன் பரிபூரணத்தை இழந்து குறைபாடுள்ளவனாக ஆனான்; காலப்போக்கில், வயதாகி இறந்தும் போனான்.​—ஆதியாகமம் 2:15-17; 3:17-19; வெளிப்படுத்துதல் 12:⁠9.

ஆதாமின் கீழ்ப்படியாமையால் அவனுடைய சந்ததிகளான நாம் அனைவரும் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்பதைக் குறித்து பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “இப்படியாக, ஒரே மனுஷனாலே [ஆதாமாலே] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) வருத்தகரமாக, நம்முடைய மூதாதையான ஆதாமிடமிருந்து பாவத்தை வழிவழியாக நாம் பெற்றிருக்கிறோம்; அதன் படுபயங்கர விளைவுகளான முதுமையையும் மரணத்தையும் நாம் அனுபவிக்கிறோம்.​—யோபு 14:4; ரோமர் 3:⁠23.

வழிவழியாக வந்த பாவத்தையும் அதன் கொடிய விளைவுகளையும் பெற்றிராத ஒரு பரிபூரண தகப்பனால்தான் அதன் கோரப்பிடியிலிருந்து நமக்கு விடுதலை தரமுடியும். பரிபூரண ஆதாமுக்கு ஒத்திருக்கிற ஒரு புதிய தகப்பன் நமக்கு எப்படிக் கிடைத்தார் என்பதைச் சிந்திப்போம்.

பரிபூரண தகப்பன் கிடைத்தார்!

கடவுள் வாக்குறுதி அளித்த “சமாதானப்பிரபு” என்பவர் “நித்தியப் பிதா” என்றும் அழைக்கப்படுகிறார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அவர் மனிதராக பிறப்பதைக் குறித்து இவ்வாறு முன்னுரைக்கப்பட்டது: “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.” (ஏசாயா 7:14; மத்தேயு 1:20-23) முதல் மனிதன் ஆதாமுக்கும்சரி, இயேசுவுக்கும்சரி மனிதத் தந்தை இருக்கவில்லை. பைபிள் சரித்திராசிரியரான லூக்கா, இயேசுவின் குடும்பப் பரம்பரையை ஆதாம் வரையாக பின்னோக்கி குறிப்பிடுகிறார்; அதில் ஆதாமைப்பற்றிச் சொல்லும்போது, “கடவுளின் மகன்” என்று குறிப்பிடுகிறார். (லூக்கா 3:38, பொ.மொ.) ஆனால், நாம் பார்த்தவிதமாகவே, ஆதாம் கடவுளுடைய மகன் என்ற உறவை இழந்துவிட்டான்; தன்னுடைய சந்ததிகளும் அந்த உறவை அனுபவிக்க முடியாதபடி செய்துவிட்டான். எனவே, அடையாள அர்த்தத்தில், ஆதாம் படைக்கப்பட்டபோது இருந்ததைப்போல பரிபூரணரான ஒரு புதிய தகப்பன் நம் எல்லாருக்கும் தேவை.

பழைய ஆதாமுக்கு பதிலாக புதிய ஆதாமாக கடவுள் தம் மகனை இந்தப் பூமிக்கு அனுப்பினார். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் . . . பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.” (1 கொரிந்தியர் 15:45, 47) பரிபூரணர்களாக பூமியில் என்றென்றும் வாழக்கூடிய பிள்ளைகளை பரிபூரண மனிதனாகிய இயேசுவால் பெற்றெடுத்திருக்க முடியும். அந்தக் கருத்தில்தான், ‘பிந்தின ஆதாமாகிய’ இயேசு ‘முந்தின மனுஷனாகிய’ ஆதாமைப்போல இருக்கிறார்.​—சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.

இயேசு பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லை; சாத்தான் பல்வேறு வழிகளில் தாக்கியபோதிலும் மரணம்வரை கடவுளுக்கு உண்மையுள்ளவராக நிரூபித்தார். பரிபூரணராயும் உத்தமராயும் வாழ்ந்த இயேசு தம் உயிரை பலியாகக் கொடுத்தார்; இதுதான் மீட்கும்பொருள் என அழைக்கப்படுகிறது. “இவருடைய [இயேசுவுடைய] இரத்தத்தினாலே [ஆதாமிடமிருந்து வழிவழியாக வந்த பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும்] பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது,” என்றும் “ஒரே மனுஷனுடைய [ஆதாம்] கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய [இயேசு] கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்,” என்றும் பைபிள் விளக்குகிறது.​—⁠எபேசியர் 1:7; ரோமர் 5:18, 19; மத்தேயு 20:⁠28.

நாம் இயேசுவில் விசுவாசம் வைத்தால் அவர் நம்முடைய ‘நித்தியப் பிதாவாகவும்,’ ‘இரட்சகராகவும்’ ஆவார். தம்முடைய தந்தையின் அரசாங்கத்தை அற்புதமான விதத்தில் அவர் ஆட்சி செய்வார். அவருடைய ஆட்சியின்கீழ் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் அந்த மகத்தான ஆசீர்வாதங்களை எப்போது நாம் அனுபவிப்போம் என்பதையும் அடுத்தக் கட்டுரையில் சிந்திப்போம்.​—லூக்கா 2:8-11.

[பக்கம் 5-ன் படங்கள்]

இயேசுவை இப்போது நீங்கள் எவ்வாறு எண்ணிப் பார்க்கிறீர்கள்?

[பக்கம் 6-ன் படம்]

இயேசு ஏன் “பிந்தின ஆதாம்” என்று அழைக்கப்படுகிறார்?