லூக்கா எழுதியது 9:1-62

9  பின்பு, அவர் பன்னிரண்டு பேரையும்* ஒன்றாக வரவழைத்து பேய்களையெல்லாம் துரத்துவதற்கும், நோய்களைக் குணமாக்குவதற்கும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்.+  கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காகவும் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்காகவும் அவர்களை அனுப்பினார்.  அப்போது அவர்களிடம், “பயணத்துக்காகத் தடியோ உணவுப் பையோ ரொட்டியோ காசோ* எதையுமே எடுத்துக்கொண்டு போகாதீர்கள்; இரண்டு உடைகளையும்* கொண்டுபோகாதீர்கள்.+  நீங்கள் எந்த ஊரிலாவது ஒரு வீட்டுக்குப் போனால், புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.+  மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்களுடைய நகரத்தைவிட்டுப் புறப்படும்போது உங்கள் பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்; இது அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருக்கும்”+ என்று சொன்னார்.  அவர்கள் புறப்பட்டு கிராமம் கிராமமாகப் போய், அந்தப் பகுதி முழுவதும் நல்ல செய்தியை அறிவித்தார்கள், நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.+  நடந்துகொண்டிருந்த எல்லா விஷயங்களையும் மாகாண அதிபதி ஏரோது* கேள்விப்பட்டான். யோவான்தான் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்+ என்று சிலரும்,  எலியாதான் மறுபடியும் வந்திருக்கிறார் என்று வேறு சிலரும், பூர்வ தீர்க்கதரிசிகளில் ஒருவர்தான் உயிரோடு எழுந்துவந்திருக்கிறார் என்று இன்னும் சிலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.+ அதனால், அவன் பயங்கர குழப்பத்தில் இருந்தான்.  “யோவானுடைய தலையை நான் வெட்டினேனே.+ அப்படியானால், இந்த மனுஷர் யார்? இவரைப் பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுகிறேனே” என்று சொன்னான். அதனால், அவரைப் பார்க்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தான்.+ 10  அப்போஸ்தலர்கள் திரும்பி வந்தபோது, தாங்கள் செய்த எல்லாவற்றையும் இயேசுவிடம் சொன்னார்கள்.+ அதன் பின்பு, அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனியாய் இருப்பதற்காக பெத்சாயிதா என்ற நகரத்துக்குப் போனார்.+ 11  அதைத் தெரிந்துகொண்டு ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். அவர்களை அவர் அன்போடு வரவேற்று, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்; நோயாளிகளைக் குணமாக்கினார்.+ 12  பொழுதுசாயும் நேரத்தில் பன்னிரண்டு பேரும் அவரிடம் வந்து, “நாம் ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கிறோம். அதனால், சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் இந்த மக்களை அனுப்பிவிடுங்கள்; இவர்கள் அங்கே போய்த் தங்கி, உணவுப் பொருள்களை வாங்கிக்கொள்ளட்டும்”+ என்று சொன்னார்கள். 13  ஆனால் அவர், “நீங்களே இவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்”+ என்று சொன்னார். அதற்கு அவர்கள், “ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் தவிர எங்களிடம் வேறெதுவும் இல்லையே. நாங்கள் போய் இவர்கள் எல்லாருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் உண்டு” என்று சொன்னார்கள். 14  அங்கே சுமார் 5,000 ஆண்கள் இருந்தார்கள்; ஆனாலும், அவர் தன்னுடைய சீஷர்களிடம், “இவர்களைச் சுமார் ஐம்பதுஐம்பது பேராக உட்கார வையுங்கள்” என்று சொன்னார். 15  அவர் சொன்னபடியே அவர்கள் எல்லாரையும் உட்கார வைத்தார்கள். 16  அப்போது அவர் அந்த ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தைப் பார்த்து, ஜெபம் செய்தார்.* பின்பு ரொட்டிகளைப் பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காக அந்த ரொட்டிகளையும் மீன்களையும் சீஷர்களிடம் கொடுத்தார். 17  எல்லாரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள்; மீதியிருந்த ரொட்டித் துண்டுகளை 12 கூடைகளில் அவர்கள் சேகரித்தார்கள்.+ 18  பின்பு, அவர் தனியாக ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்; அப்போது அவர், “நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?”+ என்று கேட்டார். 19  அதற்கு அவர்கள், “சிலர் யோவான் ஸ்நானகர்* என்றும், வேறு சிலர் எலியா என்றும் சொல்கிறார்கள்; இன்னும் சிலர், பூர்வ தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிரோடு எழுந்து வந்துவிட்டார் என்று சொல்கிறார்கள்”+ என்றார்கள். 20  அப்போது அவர், “ஆனால் நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட கிறிஸ்து”+ என்று சொன்னார். 21  இதை யாருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கண்டிப்புடன் கட்டளையிட்டார்.+ 22  அதோடு, “மனிதகுமாரன் பல பாடுகள் பட வேண்டும், பெரியோர்களாலும்* முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் ஒதுக்கித்தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட வேண்டும்,+ பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும்”+ என்றும் சொன்னார். 23  அதன்பின் எல்லாரிடமும், “யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறந்து,+ தன் சித்திரவதைக் கம்பத்தை* தினமும் சுமந்துகொண்டு, தொடர்ந்து என் பின்னால் வர வேண்டும்.+ 24  தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறவன் அதை இழந்துபோவான். ஆனால், எனக்காகத் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்.+ 25  சொல்லப்போனால், ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் சம்பாதித்தாலும் தன் உயிரை இழந்துவிட்டால் அல்லது தனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டால் என்ன பிரயோஜனம்?+ 26  என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் ஒருவன் வெட்கப்பட்டால், மனிதகுமாரன் தன்னுடைய மகிமையிலும் தன்னுடைய தகப்பனின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவார்.+ 27  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், கடவுளுடைய அரசாங்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால் சாகவே மாட்டார்கள்” என்று சொன்னார்.+ 28  அவர் இந்த வார்த்தைகளைச் சொல்லி சுமார் எட்டு நாட்களுக்குப் பின்பு, பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம் செய்வதற்காக ஒரு மலைமேல் ஏறினார்.+ 29  அவர் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது, அவருடைய உடை வெண்மையாக மின்னியது. 30  அவரோடு மோசே, எலியா ஆகிய இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். 31  மகிமையுடன் தோன்றிய இவர்கள் எருசலேமில் நிறைவேறப்போகிற+ அவருடைய இறுதிப் பயணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். 32  பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் விழித்துக்கொண்டபோது, அவருடைய மகிமையையும் அந்த இரண்டு பேர் அவருடன் நின்றுகொண்டிருந்ததையும் பார்த்தார்கள்.+ 33  அந்த இரண்டு பேரும் அவரைவிட்டுப் புறப்பட்டபோது பேதுரு இயேசுவிடம், “போதகரே, இங்கே இருப்பது எங்கள் பாக்கியம். உங்களுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை நாங்கள் போடுகிறோம்” என்று சொன்னார்; அவர் என்ன சொன்னார் என்று அவருக்கே தெரியவில்லை. 34  அவர் இதைச் சொல்லிக்கொண்டிருந்தபோதே, ஒரு மேகம் தோன்றி அவர்கள்மேல் நிழலிடத் தொடங்கியது; அது அவர்களைச் சூழ்ந்துகொண்டபோது அவர்கள் பயந்துபோனார்கள். 35  அப்போது, “இவர் என் மகன், இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்;+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல்+ ஒலித்தது. 36  அந்தச் சமயத்தில் இயேசு மட்டும் தனியாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் தாங்கள் பார்த்த எதையும் அந்த நாட்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.+ 37  அடுத்த நாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கியபோது, பெரிய கூட்டமாக மக்கள் அவரைப் பார்க்க வந்தார்கள்.+ 38  அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், “போதகரே, உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், என் மகனுக்கு உதவி செய்யுங்கள்,* அவன் எனக்கு ஒரே மகன்.+ 39  அவனை ஒரு பேய் பிடித்துக்கொள்கிறது, திடீர் திடீரென்று கத்த வைக்கிறது; அவனுக்கு வலிப்பு உண்டாக்கி வாயில் நுரை தள்ள வைக்கிறது; அவனைக் காயப்படுத்திய பிறகும் எளிதில் அவனைவிட்டுப் போவதில்லை. 40  அந்தப் பேயை விரட்டச் சொல்லி உங்கள் சீஷர்களிடம் கெஞ்சினேன், அவர்களால் முடியவில்லை” என்று சொன்னார். 41  அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையே!+ நான் இன்னும் எத்தனை காலம்தான் உங்களோடிருந்து உங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமோ?” என்று சொல்லிவிட்டு, “உன் மகனை இங்கே கொண்டுவா”+ என்றார். 42  அவன் வந்துகொண்டிருந்தபோதே, அந்தப் பேய் அவனைக் கீழே தள்ளி அவனுக்குப் பயங்கரமாக வலிப்பு உண்டாக்கியது. ஆனாலும், இயேசு அந்தப் பேயை அதட்டி, அந்தப் பையனைக் குணமாக்கி, அவனுடைய அப்பாவிடம் ஒப்படைத்தார். 43  கடவுளுடைய மகா வல்லமையைப் பார்த்து எல்லாரும் பிரமித்துப்போனார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டபோது அவர் தன்னுடைய சீஷர்களிடம், 44  “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்பட்டு, மக்களுடைய கையில் ஒப்படைக்கப்படுவார்”+ என்று சொன்னார். 45  ஆனால், அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. சொல்லப்போனால், அவர்கள் உணர்ந்துகொள்ளாதபடி அது அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்கவும் பயந்தார்கள். 46  பின்பு, தங்களில் யார் மிக உயர்ந்தவர் என்ற விவாதம்+ சீஷர்கள் மத்தியில் உண்டானது. 47  அவர்களுடைய எண்ணங்களை இயேசு தெரிந்துகொண்டு, ஒரு சின்னப் பிள்ளையைக் கொண்டுவந்து தன் பக்கத்தில் நிறுத்தி, 48  “இந்தச் சின்னப் பிள்ளையை எனக்காக* ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்.+ உங்கள் எல்லாரிலும் யார் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்”+ என்று அவர்களிடம் சொன்னார். 49  அப்போது யோவான், “போதகரே, ஒருவன் உங்களுடைய பெயரைச் சொல்லி பேய்களை விரட்டுவதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றி வராததால், அவனைத் தடுக்க முயற்சி செய்தோம்”+ என்று சொன்னார். 50  ஆனால் இயேசு, “அவனைத் தடுக்காதீர்கள், உங்களுக்கு விரோதமாக இல்லாதவன் உங்கள் பக்கம் இருக்கிறான்” என்று சொன்னார். 51  பின்பு, அவர் மேலே எடுத்துக்கொள்ளப்படும்+ காலம் நெருங்கிக்கொண்டிருந்தபோது, எருசலேமுக்குப் போகத் தீர்மானமாக இருந்தார். 52  அதனால், தனக்கு முன்னால் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள் புறப்பட்டு, அவருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக சமாரியர்களுடைய ஒரு கிராமத்துக்குள் போனார்கள். 53  அவர் எருசலேமுக்குப் போகத் தீர்மானமாக இருந்ததால் அந்தக் கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.+ 54  அதைப் பார்த்து அவருடைய சீஷர்களான யாக்கோபும் யோவானும்,+ “எஜமானே, எங்களுக்குக் கட்டளையிடுங்கள், வானத்திலிருந்து நெருப்பை வரவழைத்து இவர்களை அழித்துவிடுகிறோம்”+ என்று சொன்னார்கள். 55  அவரோ திரும்பிப் பார்த்து அவர்களைக் கண்டித்தார். 56  அதன் பின்பு, அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள். 57  அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது வழியில் ஒருவன் அவரிடம், “நீங்கள் எங்கே போனாலும் நான் உங்கள் பின்னால் வருவேன்” என்று சொன்னான். 58  அதற்கு இயேசு, “குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருக்கின்றன, ஆனால் மனிதகுமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை”+ என்று சொன்னார். 59  பின்பு இன்னொருவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னார். அப்போது அவன், “எஜமானே, முதலில் நான் போய் என்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன், எனக்கு அனுமதி கொடுங்கள்”+ என்று கேட்டான். 60  அதற்கு அவர், “இறந்தவர்கள்+ இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும், நீ போய்க் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லா இடங்களிலும் சொல்”+ என்றார். 61  வேறொருவன், “எஜமானே, நான் உங்களைப் பின்பற்றி வருவேன். ஆனால், என் வீட்டில் இருப்பவர்களிடமிருந்து விடைபெற்று வர முதலில் எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டான். 62  இயேசு அவனிடம், “கலப்பையின் மேல் கை வைத்த பிறகு, பின்னால் திரும்பிப் பார்க்கிற+ எவனும் கடவுளுடைய அரசாங்கத்துக்குத் தகுதி இல்லாதவன்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “அப்போஸ்தலர்களையும்.”
நே.மொ., “வெள்ளிக் காசோ.”
வே.வா., “கூடுதல் உடையையும்.”
அதாவது, “ஏரோது அந்திப்பா.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “அவற்றை ஆசீர்வதித்தார்.”
ஸ்நானகர் என்றால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்.
வே.வா., “மூப்பர்களாலும்.”
வே.வா., “என் மகனைக் கண்ணோக்கிப் பாருங்கள்.”
வே.வா., “என் பெயரில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

தடியும் உணவுப் பையும்
தடியும் உணவுப் பையும்

பழங்காலத்தில் எபிரெயர்கள் தடிகளை அல்லது கம்புகளைப் பயன்படுத்துவது சகஜமாக இருந்தது. பல காரணங்களுக்காக அவர்கள் தடிகளைப் பயன்படுத்தினார்கள்; உதாரணமாக, பிடிமானத்துக்கு (யாத் 12:11; சக 8:4; எபி 11:21), தற்காப்புக்கு அல்லது பாதுகாப்புக்கு (2சா 23:21), போரடிப்பதற்கு (ஏசா 28:27) மற்றும் ஒலிவப்பழங்களை உதிர்ப்பதற்கு (உபா 24:20) அவற்றைப் பயன்படுத்தினார்கள். உணவுப் பை பொதுவாகத் தோலால் செய்யப்பட்டிருந்தது. பயணிகளும் மேய்ப்பர்களும் விவசாயிகளும் மற்றவர்களும் அதைத் தங்கள் தோளில் சுமந்துகொண்டு போனார்கள். உணவு, துணிமணி போன்றவற்றை எடுத்துக்கொண்டு போவதற்காக அந்தப் பைகள் பயன்படுத்தப்பட்டன. ஊழியம் செய்வதற்காக இயேசு தன் அப்போஸ்தலர்களை அனுப்பியபோது, பல அறிவுரைகளைக் கொடுத்தார். அப்போது, தடிகளையும் உணவுப் பைகளையும் பற்றிக் குறிப்பிட்டார். யெகோவா அவர்களுக்குத் தேவையானதைத் தருவார் என்பதால், தங்களிடம் இருப்பதை மட்டும் கொண்டு போக வேண்டும் என்றும், எதையும் கூடுதலாக வாங்கிக்கொண்டு போகக் கூடாது என்றும் அவர் சொன்னார்.—இயேசு கொடுத்த அறிவுரைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள லூ 9:3 மற்றும் 10:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

ஏரோது அந்திப்பா தயாரித்த காசு
ஏரோது அந்திப்பா தயாரித்த காசு

இயேசு ஊழியம் செய்த காலத்தில் தயாரிக்கப்பட்ட கலப்பு வெண்கலக் காசின் இரண்டு பக்கங்களையும்தான் இந்தப் போட்டோக்களில் பார்க்கிறோம். இந்தக் காசைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டது ஏரோது அந்திப்பா. இவர் கால்பங்கு தேசத்தை, அதாவது கலிலேயா மற்றும் பெரேயாவை, ஆட்சி செய்த மாகாண அதிபதியாக இருந்தார். இயேசு எருசலேமுக்குப் போகும் வழியில் ஏரோதுவின் ஆட்சிப்பகுதியாகிய பெரேயாவைக் கடந்துபோனதாகத் தெரிகிறது; அப்போதுதான், இயேசுவைக் கொலை செய்ய ஏரோது திட்டம் போட்டிருந்ததைப் பற்றி பரிசேயர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தச் சமயத்தில், ஏரோதுவை “அந்தக் குள்ளநரி” என்று இயேசு சொன்னார். (லூ 13:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) ஏரோதுவின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் யூதர்களாக இருந்தார்கள். அதனால், யூதர்களைக் கோபப்படுத்தாத சின்னங்களாகிய பனை ஓலை (1), கிரீடம் (2) போன்றவை அவர் தயாரித்த காசுகளில் பதிக்கப்பட்டிருந்தன.

கூடைகள்
கூடைகள்

பைபிளில், வித்தியாசப்பட்ட பல கூடைகளைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 5,000 ஆண்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட 12 கூடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சின்ன பிரம்புக் கூடைகளைக் குறிக்கலாம். ஆனால், கிட்டத்தட்ட 4,000 ஆண்களுக்கு இயேசு உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட ஏழு கூடைகளுக்கு வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (மாற் 8:8, 9) அது பெரிய கூடைகளைக் குறிக்கிறது. அப் 9:25-லும் இதே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், பவுல் ஒரு “கூடையில்” உட்கார வைக்கப்பட்டு, தமஸ்கு நகர மதிலிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

எர்மோன் மலை
எர்மோன் மலை

பிலிப்புச் செசரியாவுக்குப் பக்கத்தில் அமைந்திருந்த எர்மோன் மலையின் உயரம் 2,814 மீ. (9,232 அடி); இஸ்ரவேலின் சுற்றுவட்டாரத்திலேயே அதுதான் மிக உயரமான மலையாக இருந்தது. பனி போர்த்திய அதன் சிகரங்களில் நீராவி நீர்த்துளிகளாக, அதாவது பனித்துளிகளாக, மாறுகின்றன. இப்படி உருவாகும் ஏராளமான பனித்துளிகளால், வறண்ட காலம் முழுவதும் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. (சங் 133:3) எர்மோன் மலையிலிருந்து உருகிவரும் பனிதான் யோர்தான் ஆற்றுக்கு மூலாதாரம். இயேசு தோற்றம் மாறியது ஒருவேளை எர்மோன் மலையாக இருந்திருக்கலாம்.—மத் 17:2.

ஹூலா பள்ளத்தாக்கின் சரணாலயத்திலிருந்து எர்மோன் மலையின் காட்சி
ஹூலா பள்ளத்தாக்கின் சரணாலயத்திலிருந்து எர்மோன் மலையின் காட்சி

வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் வட எல்லைப் பகுதியில் எர்மோன் மலை அமைந்திருக்கிறது. அதற்கு நிறைய சிகரங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பெரிய சிகரம், கடல் மட்டத்திலிருந்து 2,814 மீ. (9,232 அடி) உயரத்தில் அமைந்திருக்கிறது. எர்மோன் மலையின் சிகரங்கள்தான், கிழக்கு லீபனோன் மலைத்தொடரின் தெற்குப் பகுதியாக இருக்கின்றன. இயேசு தோற்றம் மாறிய இடம் ஒருவேளை எர்மோன் மலையாக இருந்திருக்கலாம்.

குள்ளநரிகளின் குழிகளும் பறவைகளின் கூடுகளும்
குள்ளநரிகளின் குழிகளும் பறவைகளின் கூடுகளும்

குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருந்தாலும் தனக்கு நிரந்தரமான ஒரு வீடு இல்லை என்று இயேசு சொன்னார். இங்கே படத்தில் காட்டப்பட்டிருக்கும் குள்ளநரிகள் (வல்பெஸ் வல்பெஸ்) மத்தியக் கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன. அவை ஆஸ்திரேலியாவுக்கும் கொண்டு போகப்பட்டிருக்கின்றன. குள்ளநரிகள் பொதுவாக நிலத்தில் குழி பறித்து வாழ்கின்றன. சிலசமயங்களில் இயற்கையான பாறை இடுக்குகளிலோ, வேறொரு விலங்கு விட்டுச்சென்ற அல்லது வேறொரு விலங்கிடமிருந்து பறித்துக்கொண்ட பொந்துகளிலோ வாழ்கின்றன. இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள குருவி [Cetti’s Warbler (Cettia cetti)], இஸ்ரவேலில் ஏதோவொரு பருவத்தில் காணப்படும் கிட்டத்தட்ட 470 வகையான குருவிகளில் ஒன்று. பொதுவாக, பறவைகளின் கூடுகள் வித்தியாசப்படுகின்றன. அவை மரங்களின் மேலும், மரப் பொந்துகளிலும், செங்குத்தான பாறைகளிலும் கூடு கட்டுகின்றன. குச்சிகள், இலைகள், கடற்பாசிகள், கம்பளி, வைக்கோல், பாசி, இறகுகள் ஆகியவற்றால் அவற்றைக் கட்டுகின்றன. இஸ்ரவேலில் உள்ள வித்தியாசப்பட்ட இயற்கை அமைப்புகள், அதாவது குளிரான மலை உச்சிகளோ சூடான பெரிய பள்ளத்தாக்குகளோ, வறண்ட பாலைவனங்களோ கடற்கரையோர சமவெளிகளோ, எல்லா பகுதிகளுமே பறவைகளைக் கவரும் இடங்களாக இருக்கின்றன. மத்தியதரைக் கடலின் தென்கிழக்கு மூலைக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் இந்த எல்லா இடங்களிலும் அவை நிரந்தரமாக வாழ்கின்றன அல்லது அந்தப் பகுதி முழுவதும் இடப்பெயர்ச்சி செய்கின்றன.