Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 27

யெகோவாவுக்கு எதிரான கலகம்

யெகோவாவுக்கு எதிரான கலகம்

கொஞ்ச காலத்துக்குப் பிறகு, இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்த சமயத்தில் கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரும் இன்னும் 250 பேரும் மோசேக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். அவர்கள் மோசேயிடம், ‘உங்களால் நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் போதும்! நீங்கள் ஏன் எங்களுக்குத் தலைவராக இருக்க வேண்டும்? ஆரோன் ஏன் எங்களுக்குத் தலைமைக் குருவாக இருக்க வேண்டும்? யெகோவா உங்களோடும் ஆரோனோடும் மட்டும்தான் இருக்கிறாரா? மக்கள் எல்லாரோடும்தான் இருக்கிறார்’ என்று சொன்னார்கள். அவர்கள் செய்தது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தனக்கு எதிராகவே கலகம் செய்ததாக யெகோவா நினைத்தார்.

மோசே கோராகுவிடமும் அவரோடு வந்தவர்களிடமும், ‘நாளைக்கு வழிபாட்டுக் கூடாரத்துக்கு வாருங்கள். உங்களுடைய தூபக்கரண்டியில் தூபப்பொருளை நிரப்பிக் கொண்டுவாருங்கள். யெகோவா யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை அவரே நமக்குக் காட்டுவார்’ என்று சொன்னார்.

அடுத்த நாள், கோராகுவும் 250 ஆட்களும் மோசேயைப் பார்ப்பதற்காக வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போனார்கள். குருமார்களைப் போல தூபத்தை எரித்தார்கள். அப்போது யெகோவா, ‘கோராகுவையும் அவனுடைய ஆட்களையும் விட்டு தள்ளிப் போங்கள்’ என்று மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னார்.

வழிபாட்டுக் கூடாரத்துக்கு வரும்படி மோசே சொல்லியிருந்தும், தாத்தானும் அபிராமும் அவர்களுடைய குடும்பத்தாரும் வரவில்லை. யெகோவா இஸ்ரவேலர்களிடம், ‘கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோருடைய கூடாரங்களை விட்டு தள்ளிப் போங்கள்’ என்று சொன்னார். உடனே, இஸ்ரவேலர்கள் அங்கிருந்து தள்ளிப் போனார்கள். தாத்தானும் அபிராமும் அவர்களுடைய குடும்பத்தாரும் தங்கள் கூடாரத்துக்கு வெளியே நின்றார்கள். அப்போது, அவர்கள் நின்றுகொண்டிருந்த இடம் திடீரென்று இரண்டாகப் பிளந்தது. அவர்கள் எல்லாரும் அப்படியே பூமிக்குள் புதைந்துபோனார்கள். வழிபாட்டுக் கூடாரத்தில் நின்றுகொண்டிருந்த கோராகுவையும் 250 ஆட்களையும் வானத்திலிருந்து நெருப்பு வந்து எரித்துப்போட்டது.

பிறகு யெகோவா மோசேயிடம், ‘ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவரிடமிருந்தும் ஒரு கோலை வாங்கி, அவரவர் பெயரை அதில் எழுது. லேவி கோத்திரத்தின் கோலில் ஆரோனுடைய பெயரை எழுது. அவற்றை வழிபாட்டுக் கூடாரத்துக்குள் வை. நான் தேர்ந்தெடுக்கிறவனின் கோலில் பூ பூக்கும்’ என்று சொன்னார்.

அடுத்த நாள், மோசே அந்தக் கோல்களை வெளியே கொண்டுவந்து கோத்திரத் தலைவர்களிடம் காட்டினார். ஆரோனின் கோலில் பூ பூத்திருந்தது, வாதுமைப் பழங்களும் அதில் இருந்தன. இப்படி, ஆரோனைத் தலைமைக் குருவாகத் தான் தேர்ந்தெடுத்திருப்பதை யெகோவா தெளிவாகக் காட்டினார்.

‘உங்களை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்.’—எபிரெயர் 13:17