Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 20

அடுத்த ஆறு தண்டனைகள்

அடுத்த ஆறு தண்டனைகள்

பார்வோனிடம், ‘நீ என்னுடைய மக்களை அனுப்பவில்லை என்றால், நாடு முழுவதும் கொடிய ஈக்களை அனுப்புவேன்’ என்று யெகோவா சொல்லச் சொன்னார். அதைச் சொல்வதற்காக மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போனார்கள். அதற்குப் பிறகு, ஈக்கள் கூட்டம் கூட்டமாக எகிப்தியர்களின் வீடுகளுக்குள் புகுந்தன. ஏழைகள், பணக்காரர்கள் என எல்லாருடைய வீடுகளிலும் புகுந்தன. நாடு முழுவதும் ஈக்கள் மொய்த்தன. ஆனால், இஸ்ரவேலர்கள் வாழ்ந்த கோசேன் என்ற இடத்தில் மட்டும் ஈக்கள் வரவில்லை. ஏனென்றால், நான்காவது தண்டனையிலிருந்து அடுத்து வந்த தண்டனைகள் எல்லாமே எகிப்தியர்களுக்கு மட்டும்தான் வந்தன. உடனே பார்வோன், ‘யெகோவாவிடம் கெஞ்சி கேட்டு இந்தக் கொடிய ஈக்களைப் போக வையுங்கள். நான் உங்கள் மக்களை அனுப்பிவிடுகிறேன்’ என்று சொன்னான். ஆனால், யெகோவா அந்த ஈக்களைப் போக வைத்த பிறகு இஸ்ரவேலர்களை அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டான். இந்த பார்வோன் என்றைக்காவது திருந்துவானா?

பிறகு யெகோவா, ‘பார்வோன் என்னுடைய மக்களை அனுப்பவில்லை என்றால், எகிப்தியர்களின் மிருகங்கள் எல்லாம் நோய் வந்து, செத்துப்போகும்’ என்று சொன்னார். அடுத்த நாள், மிருகங்கள் எல்லாம் செத்துப்போக ஆரம்பித்தன. இஸ்ரவேலர்களின் மிருகங்கள் மட்டும் சாகவில்லை. ஆனாலும் பார்வோன் பிடிவாதமாகவே இருந்தான். இஸ்ரவேலர்களைப் போக விடவில்லை.

பிறகு, பார்வோனுடைய கண் முன்னால் சாம்பலை காற்றில் வீசும்படி யெகோவா மோசேயிடம் சொன்னார். அந்தச் சாம்பல் காற்றில் கலந்து எல்லா எகிப்தியர்கள் மேலும் படிந்தது. அதனால், எகிப்தியர்கள் எல்லாருக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் பயங்கரமான கொப்புளங்கள் வந்தன. ஆனாலும், பார்வோன் இஸ்ரவேலர்களைப் போக விடவில்லை.

யெகோவா மறுபடியும் பார்வோனிடம் பேசுவதற்கு மோசேயை அனுப்பினார். ‘என்னுடைய மக்களை அனுப்ப முடியாது என்று இன்னுமா சொல்கிறாய்? நாளைக்கு ஆலங்கட்டி மழை பெய்யும்’ என்று சொல்லச் சொன்னார். அவர் சொன்னபடியே அடுத்த நாள் ஆலங்கட்டி மழை பெய்தது, பயங்கரமாக இடி இடித்தது, நெருப்பு தாக்கியது. இந்த மாதிரி ஒரு பயங்கரமான மழையை எகிப்தியர்கள் பார்த்ததே இல்லை. எல்லா மரங்களும் பயிர்களும் அழிந்தன. ஆனால், கோசேனில் மட்டும் ஒன்றும் ஆகவில்லை. உடனே பார்வோன், ‘இதை நிறுத்தச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சுங்கள், அதற்குப் பிறகு நீங்கள் இங்கிருந்து போகலாம்’ என்று சொன்னான். ஆலங்கட்டி மழை நின்றது. ஆனாலும், இஸ்ரவேலர்களை அவன் விடவில்லை.

அப்போது மோசே, ‘ஆலங்கட்டி மழையில் தப்பித்த எல்லா செடிகொடிகளையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிடும்’ என்று சொன்னார். மரங்களிலும் வயல்களிலும் மிச்சமீதியிருந்த எல்லாவற்றையும் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து தின்றுதீர்த்தன. உடனே பார்வோன், ‘தயவுசெய்து இந்த வெட்டுக்கிளிகள் போகும்படி யெகோவாவிடம் கேள்’ என்று கெஞ்சினான். வெட்டுக்கிளிகளின் தொல்லையை ஒழித்த பிறகும், பார்வோன் பிடிவாதமாகவே இருந்தான்.

அதனால் யெகோவா மோசேயிடம், ‘வானத்துக்கு நேராக உன் கையை நீட்டு’ என்று சொன்னார். உடனே, வானம் அப்படியே இருட்டாகி விட்டது. எகிப்தியர்களால் மூன்று நாட்களுக்கு எதையுமே பார்க்க முடியவில்லை. இஸ்ரவேலர்கள் வாழ்ந்த இடத்தில் மட்டும் வெளிச்சம் இருந்தது.

அப்போது பார்வோன் மோசேயிடம், ‘நீ உன் மக்களைக் கூட்டிக்கொண்டு போகலாம். மிருகங்களை மட்டும் இங்கேயே விட்டுவிடு’ என்று சொன்னான். அதற்கு மோசே, ‘எங்கள் கடவுளுக்குப் பலி கொடுக்க மிருகங்கள் வேண்டும், அதனால் அவற்றையும் நாங்கள் கொண்டுபோவோம்’ என்று சொன்னார். அதைக் கேட்டதும் பார்வோனுக்குப் பயங்கர கோபம் வந்தது. ‘என்னுடைய கண் முன்னால் நிற்காதே. இன்னொரு தடவை உன்னைப் பார்த்தால், உன்னைக் கொன்று விடுவேன்’ என்று கத்தினான்.

“நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் மறுபடியும் பார்ப்பீர்கள்.”—மல்கியா 3:18