Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 92

மீனவர்கள்முன் இயேசு தோன்றுகிறார்

மீனவர்கள்முன் இயேசு தோன்றுகிறார்

இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்கள் முன்னால் தோன்றி சில நாட்கள் ஆகியிருந்தன. கலிலேயா கடலுக்குப் போய் மீன் பிடிக்கலாம் என்று பேதுரு நினைத்தார். தோமாவும், யாக்கோபும், யோவானும் இன்னும் சில சீஷர்களும் அவரோடு போனார்கள். அன்று ராத்திரி முழுவதும் அவர்களுக்கு ஒரு மீன்கூட கிடைக்கவில்லை.

பொழுது விடியும் நேரத்தில், கடற்கரையில் ஒருவர் நிற்பதைப் பார்த்தார்கள். அவர் அங்கிருந்து அவர்களைப் பார்த்து, ‘ஏதாவது மீன் கிடைத்ததா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்று சொன்னார்கள். அப்போது அவர், “படகின் வலது பக்கத்தில் வலையைப் போடுங்கள்” என்று சொன்னார். அப்படிப் போட்டபோது, ஏராளமான மீன்கள் சிக்கின. அவர்களால் வலையை இழுக்கக்கூட முடியவில்லை. தங்களிடம் பேசுகிறவர் இயேசுதான் என்பது அப்போதுதான் யோவானுக்குப் புரிந்தது. உடனே, “அவர் நம் எஜமான்தான்!” என்று சொன்னார். அதைக் கேட்டதும், பேதுரு கடலில் குதித்து, நீந்தி கரைக்கு வந்தார். பின்னாலேயே மற்ற சீஷர்கள் படகில் வந்தார்கள்.

அவர்கள் கரைக்கு வந்தபோது, அங்கே ரொட்டி இருந்தது, நெருப்பில் மீன் வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் பிடித்த மீன்கள் சிலவற்றையும் கொண்டுவரும்படி இயேசு சொன்னார். பிறகு அவர்களிடம், ‘வந்து சாப்பிடுங்கள்’ என்றார்.

அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, இயேசு பேதுருவிடம், ‘மீன் பிடிப்பதைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?’ என்று கேட்டார். அதற்கு பேதுரு, ‘ஆமாம், எஜமானே. அது உங்களுக்கே தெரியும்’ என்றார். அப்போது இயேசு, ‘அப்படியானால், என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார். இயேசு மறுபடியும், ‘பேதுரு, என்மேல் உனக்கு அன்பு இருக்கிறதா?’ என்று கேட்டார். அதற்கு பேதுரு, ‘ஆமாம் எஜமானே. அது உங்களுக்கே தெரியும்’ என்றார். அப்போது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளை நீ மேய்க்க வேண்டும்” என்று சொன்னார். இயேசு அதே கேள்வியை மூன்றாவது தடவையும் கேட்டார். பேதுருவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. அவர் இயேசுவிடம், ‘எஜமானே, உங்களுக்கு எல்லாமே தெரியும். நான் உங்கள்மேல் அன்பு வைத்திருப்பதும் தெரியும்’ என்றார். அப்போது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்” என்று சொன்னார். பிறகு பேதுருவிடம், “நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா” என்றார்.

“இயேசு அவர்களிடம், ‘என் பின்னால் வாருங்கள், உங்களை மனுஷர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்’ என்று சொன்னார். அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.”—மத்தேயு 4:19, 20