Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 59

யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்த நான்கு பையன்கள்

யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்த நான்கு பையன்கள்

யூதாவில் இருந்த அரச குடும்பத்தையும் உயர் குடும்பத்தையும் சேர்ந்தவர்களை பாபிலோனுக்கு நேபுகாத்நேச்சார் கொண்டுபோனபோது, அவர்களைப் பார்த்துக்கொள்ளும்படி அஸ்பேனாஸ் என்ற அரண்மனை அதிகாரியிடம் சொன்னான். அவர்களில் நல்ல அறிவும் ஆரோக்கியமும் உள்ள இளம் பையன்களைக் கண்டுபிடிக்கும்படி அவனிடம் சொன்னான். அவர்களுக்கு 3 வருஷங்கள் பயிற்சி கொடுக்கப்படும். பாபிலோனில் முக்கிய அதிகாரிகளாக ஆவதற்கு இந்தப் பயிற்சி அவர்களுக்கு உதவும். அக்காடியன் என்ற பாபிலோனிய மொழியில் வாசிக்கவும், எழுதவும், பேசவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதோடு, ராஜாவும் அரண்மனை அதிகாரிகளும் சாப்பிடுகிற அதே உணவைச் சாப்பிடும்படி அவர்களிடம் சொல்லப்பட்டது. அவர்களில் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்ற நான்கு பேர் இருந்தார்கள். அவர்களுக்கு பெல்தெஷாத்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற பாபிலோனிய பெயர்களைக் அஸ்பேனாஸ் வைத்தான். பாபிலோனில் படிப்பதால் யெகோவாவை வணங்குவதை அவர்கள் நிறுத்திவிடுவார்களா?

அந்த நான்கு பையன்களும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். ராஜா சாப்பிடும் உணவைத் தாங்கள் சாப்பிடக் கூடாது என்று அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், சில மிருகங்களைச் சாப்பிடக் கூடாது என்ற சட்டத்தை யெகோவா கொடுத்திருந்தார். அதனால் அவர்கள் அஸ்பேனாசிடம், ‘தயவுசெய்து, ராஜா சாப்பிடும் உணவை எங்களுக்குக் கொடுக்காதீர்கள்’ என்று சொன்னார்கள். அஸ்பேனாஸ் அவர்களிடம், ‘நீங்கள் அதைச் சாப்பிடாமல் நோஞ்சான் மாதிரி இருந்தால், ராஜா என்னைக் கொன்றுவிடுவார்’ என்று சொன்னான்.

தானியேலுக்கு ஒரு யோசனை இருந்தது. அவர் பாதுகாவலனிடம் போய், ‘தயவுசெய்து 10 நாட்களுக்கு காய்கறிகளும் தண்ணீரும் மட்டும் எங்களுக்குக் கொடுங்கள். பிறகு ராஜாவின் உணவைச் சாப்பிடும் பையன்களோடு எங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்’ என்று சொன்னார். அந்தப் பாதுகாவலன் அதற்கு ஒத்துக்கொண்டான்.

பத்து நாட்களுக்குப் பிறகு, தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களும் மற்ற பையன்களைவிட ஆரோக்கியமாகத் தெரிந்தார்கள். அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் அவர் ரொம்பச் சந்தோஷப்பட்டார். அதனால், தரிசனங்களையும் கனவுகளையும் புரிந்துகொள்ள தானியேலுக்கு யெகோவா ஞானத்தைக் கொடுத்தார்.

பயிற்சி முடிந்த பிறகு, அஸ்பேனாஸ் எல்லா பையன்களையும் நேபுகாத்நேச்சாரிடம் கூட்டிக்கொண்டு போனான். அவர்களிடம் ராஜா பேசிய பிறகு, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகிய நான்கு பேரும் மற்ற பையன்களைவிட புத்திசாலிகளாகவும் கெட்டிக்காரர்களாகவும் இருந்ததைப் பார்த்தான். தன்னுடைய அரண்மனையில் வேலை செய்ய இந்த நான்கு பேரை நேபுகாத்நேச்சார் தேர்ந்தெடுத்தான். சில முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு இவர்களிடம் ஆலோசனை கேட்டான். ராஜாவின் ஞானிகளையும் மந்திரவாதிகளையும்விட இவர்களை யெகோவா அதிக ஞானமுள்ளவர்களாக ஆக்கினார்.

இவர்கள் வேறொரு நாட்டில் இருந்தாலும் தாங்கள் யெகோவாவின் மக்கள் என்பதை மறக்கவே இல்லை. அப்பா அம்மா உன் பக்கத்தில் இல்லையென்றாலும், நீ யெகோவாவை மறக்காமல் இருப்பாயா?

“நீ இளைஞனாக இருப்பதால் யாரும் உன்னை அற்பமாக நினைக்காதபடி பார்த்துக்கொள். பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், ஒழுக்கத்திலும் உண்மையுள்ளவர்களுக்கு நீ முன்மாதிரியாக இரு.”—1 தீமோத்தேயு 4:12