Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் ‘அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறீர்களா’?

நீங்கள் ‘அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறீர்களா’?

“வேதவசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடைய மனக்கண்களை [இயேசு] முழுமையாகத் திறந்தார்.”—லூக். 24:45.

1, 2. இயேசு மறுபடியும் உயிரோடு வந்தபோது அவருடைய சீடர்களை எப்படி தைரியப்படுத்தினார்?

இயேசுவின் இரண்டு சீடர்கள், எருசலேமில் இருந்து ஒரு கிராமத்திற்கு நடந்து போய்கொண்டு இருந்தார்கள். அது சுமார் 11 கிலோமீட்டர் (7 மைல்) தூரத்தில் இருந்தது. இயேசு இறந்து போனதை நினைத்து அவர்கள் ரொம்ப கவலையாக இருந்தார்கள், சோர்ந்து போயிருந்தார்கள். அவர் மறுபடியும் உயிரோடு வந்தது அவர்களுக்கு தெரியாது. அப்போது அந்த இடத்திற்கு இயேசு வந்து, அவர்கள்கூடவே நடந்து போனார். அவர்களுக்கு, “மோசேயின் புத்தகங்கள்முதல் அனைத்து தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்வரை வேதாகமத்தில் தம்மைப் பற்றி எழுதப்பட்டுள்ள எல்லாவற்றையும் விளக்கி” சொன்னார். (லூக். 24:13-15, 27) இயேசு அந்த வசனங்களை ‘விளக்கிக் காட்டியது’ அவர்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது, உற்சாகத்தையும் தந்தது.—லூக். 24:32.

2 அதனால் அன்று சாயங்காலமே அந்த இரண்டு சீடர்களும் எருசலேமிற்கு திரும்பி போனார்கள். அங்கிருந்த சீடர்களைப் பார்த்து, நடந்ததை எல்லாம் சொன்னார்கள். அப்படி பேசிக்கொண்டு இருந்தபோது, இயேசு அவர்கள் முன்பு தோன்றினார். அவர்கள் ரொம்ப பயந்துபோய், ‘அவர் உண்மையிலேயே இயேசுதானா?’ என்று சந்தேகப்பட்டார்கள். அப்போது, இயேசு அவர்களை தைரியப்படுத்தினார். எப்படி? “வேதவசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடைய மனக்கண்களை முழுமையாகத் திறந்தார்” என்று பைபிள் சொல்கிறது.—லூக். 24:45.

3. சில சமயங்களில் நாம் ஏன் சோர்ந்து போய்விடுகிறோம், ஆனால் சந்தோஷமாக இருக்க என்ன செய்யலாம்?

3 சில சமயத்தில், அந்த சீடர்களை போலவே நாமும் சோர்ந்து போகலாம். என்னதான் சுறுசுறுப்பாக ஊழியம் செய்தாலும், நாம் சொல்கிற செய்தியை சிலர் கேட்காமல் போகலாம். (1 கொ. 15:58) ஒருவேளை, நம்மோடு பைபிள் படிக்கிறவர்கள் எந்த முன்னேற்றமும் செய்யாமல் இருக்கலாம். நன்றாக படித்துக்கொண்டிருந்த சிலர், பைபிள் படிப்பே வேண்டாம் என்று சொல்லிவிடலாம். இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு ரொம்ப கவலையாக இருக்கலாம். இருந்தாலும், சோர்ந்து போகாமல் நாம் எப்படி சந்தோஷமாக ஊழியம் செய்யலாம்? இயேசு சொன்ன உதாரணங்களுடைய அர்த்தத்தை நன்றாக புரிந்துகொண்டால் நாம் சந்தோஷமாக ஊழியம் செய்யலாம். இப்போது, இயேசு சொன்ன 3 உதாரணங்களை பார்க்கலாம்; அதிலிருந்து நாம் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.

விதை தூவுகிறவர்

4. விதை தூவுகிறவர் உதாரணத்தின் அர்த்தம் என்ன?

4 மாற்கு 4:26-29-ஐ வாசியுங்கள். இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன? இதில் சொல்லி இருக்கிற ‘விதை தூவுகிறவரை,’ கடவுளுடைய அரசாங்கத்தை பற்றி சொல்கிற ஆட்களுக்கு ஒப்பிடலாம். நல்ல மனது இருக்கிற ஆட்களிடம் நாம் சொல்கிற நற்செய்திதான் அந்த “விதை.” விதை தூவுகிறவர், ‘ஒவ்வொரு இரவும் தூங்கிவிட்டு காலையில் வந்து பார்க்கிறார்’ என்று இயேசு சொன்னார். அதாவது, அவர் எப்போதும் போல அவருடைய வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார் என்று இயேசு சொன்னார். அந்த சமயத்தில் இன்னொரு விஷயமும் நடக்கிறது. அதாவது, அந்த விதை ‘முளைத்துப் பெரிதாக வளருகிறது.’ இதற்கு, கொஞ்ச காலம் எடுக்கும். அதுமட்டுமில்லை அதனுடைய வளர்ச்சி, “தானாகவே படிப்படியாக” நடக்கும். அதுபோல பைபிள் படிக்கிறவர்களும் படிப்படியாகத்தான் முன்னேற்றம் செய்வார்கள். யெகோவாவை வணங்க வேண்டுமென்று அவர்களாகவே முடிவு செய்வார்கள். அதற்குப் பிறகு, அவர்கள் ‘பலன் தருவார்கள்,’ அதாவது யெகோவாவுக்கு தங்களை அர்ப்பணம் செய்து, ஞானஸ்நானம் எடுப்பார்கள்.

5. இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்?

5 இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்? நல்ல மனது இருக்கிறவர்கள், அதாவது நாம் சொல்கிற செய்தியை கேட்கிற “மனப்பான்மை” இருக்கிறவர்கள், முன்னேற்றம் செய்ய யெகோவாதான் உதவுகிறார். (அப். 13:48; 1 கொ. 3:7) நாம் என்னதான் விதை விதைத்து தண்ணீர் ஊற்றினாலும், அது வேகமாக வளருவது நம் கையில் இல்லை. அந்த விதையின் வளர்ச்சி எப்படி நடக்கிறது என்று நம்மால் பார்க்க முடியாது. அதேபோல், நாம் சொல்லித் தருகிற பைபிள் விஷயங்கள் ஒருவருடைய மனதில் எப்படி வேர்விட்டு வளருகிறது என்று நமக்கு தெரியாது. ஆனால், அந்த பைபிள் விஷயங்கள் அவருடைய மனதில் படிப்படியாக வளரலாம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவர் நம்முடன் சேர்ந்து அறுவடை வேலை செய்யவும், அதாவது ஊழியம் செய்யவும் ஆரம்பிக்கலாம்.—யோவா. 4:36-38.

6. இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இயேசு சொன்ன உதாரணத்தில் இருந்து நாம் 3 விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். ஒன்று, பைபிள் படிக்கிறவர்கள் வேகமாக முன்னேற்றம் செய்வதும் செய்யாததும் நம் கையில் இல்லை. அவர்கள் முன்னேற்றம் செய்வதற்கு நாம் என்னதான் உதவி செய்தாலும், ஞானஸ்நானம் எடுக்க சொல்லி அவர்களை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், முழு மனதோடு யெகோவாமீது அன்பு காட்டும் ஆட்களைத்தான் யெகோவாவுக்கு பிடிக்கும்.—சங். 51:12; 54:6; 110:3.

7, 8. (அ) இந்த உதாரணத்தில் இருந்து நாம் இன்னும் என்ன விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்? அதற்கு ஒரு அனுபவம் சொல்லுங்கள். (ஆ) விதை தூவுகிறவர் உதாரணத்தில் இருந்து யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

7 இரண்டாவதாக, நம்மோடு பைபிள் படிக்கிறவர்கள் முன்னேற்றம் செய்யும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும், சோர்ந்து போய்விடக் கூடாது. (யாக். 5:7, 8) ஒருவேளை, அவர்கள் எந்த முன்னேற்றமும் செய்யவில்லை என்றால், நாம் ஒழுங்காக பைபிள் படிப்பு எடுக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், மனத்தாழ்மையாக இருக்கிறவர்கள் மட்டும்தான் நாம் சொல்கிற செய்தியை கேட்டு மாற்றங்கள் செய்வார்கள். அப்படிப்பட்ட மனது இருக்கிற ஆட்களுக்குத்தான் யெகோவா உதவுவார். (மத். 13:23) நம்முடைய பைபிள் படிப்புகள் எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்தால்தான் நாம் நன்றாக ஊழியம் செய்கிறோம் என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால், நாம் எந்தளவு முயற்சி எடுக்கிறோம் என்றுதான் யெகோவா பார்க்கிறார்.லூக்கா 10:17-20-ஐயும்; 1 கொரிந்தியர் 3:8-ஐயும் வாசியுங்கள்.

8 மூன்றாவதாக, பைபிள் படிக்கிறவர்களுடைய மனதிற்குள் என்ன மாற்றம் நடக்கிறது என்று நம்மால் பார்க்க முடியாது. இப்போது, ஒரு கணவன்-மனைவியுடைய அனுபவத்தை பார்க்கலாம். அவர்களுக்கு ஒரு மிஷனரி சகோதரர் பைபிள் படிப்பு எடுத்தார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அவர்கள் ஊழியத்திற்குப் போக ஆசைப்பட்டார்கள். அதை பற்றி அந்த மிஷனரி சகோதரரிடம் சொன்னார்கள். அதற்கு, கணவனும் மனைவியும் சிகரெட் பிடிப்பதை விடவேண்டும் என்று அந்த சகோதரர் சொன்னார். அவர்கள் இரண்டு பேரும் சிகரெட் பிடிப்பதை ரொம்ப நாட்களுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக அந்த சகோதரரிடம் சொன்னார்கள். அதைக் கேட்டதும் அந்த சகோதரர் ரொம்ப ஆச்சரியப்பட்டார். ஏனென்றால், அவர்கள் இரண்டு பேரும் அந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தியது இவருக்கு தெரியவே தெரியாது. அந்த கணவனும் மனைவியும் சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதற்கு என்ன காரணம்? ரகசியமாக சிகரெட் பிடிப்பதை மனிதர்கள் பார்க்கவில்லை என்றாலும் யெகோவா பார்க்கிறார் என்று அவர்கள் இரண்டு பேரும் புரிந்துகொண்டார்கள். அதனால், இனிமேல் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். யெகோவாமீது இருந்த அன்பினால்தான் இவ்வளவு பெரிய மாற்றத்தை அந்த கணவனும் மனைவியும் செய்தார்கள். ஆனால், அவர்கள் செய்த மாற்றம் அந்த சகோதரருக்கு தெரியவே இல்லை.

மீன் வலை

9. இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன?

9 மத்தேயு 13:47-50-ஐ வாசியுங்கள். இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன? கடவுளுடைய அரசாங்கத்தை பற்றி மக்களிடம் சொல்வதை, கடலில் வீசும் ஒரு பெரிய மீன் வலைக்கு ஒப்பிடலாம். கடலில் வீசுகிற அந்த வலை, “எல்லா வகையான” மீன்களையும் இழுத்து கொண்டுவரும். அதுபோல நம்முடைய பிரசங்க வேலையும் எல்லா விதமான ஆட்களையும் பைபிள் செய்தியிடம் கொண்டுவருகிறது. (ஏசா. 60:5) அதனால்தான், ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான ஆட்கள் நம்முடைய மாநாட்டிற்கும் இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கும் வருகிறார்கள். இதில் சில ஆட்கள், “நல்ல” மீன்களை போல் இருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக ஆகிறார்கள். வேறு சிலர், “ஆகாத” மீன்களைப் போல் இருக்கிறார்கள்; அவர்களை யெகோவா ஏற்றுக்கொள்வதில்லை.

மத்தேயு 13:47-50-ஐ வாசித்த பிறகு . . .

10. இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்?

10 இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்? மீன்களை பிரிப்பதைப் பற்றிய இந்த உதாரணம், மிகுந்த உபத்திரவத்தில் நடக்கும் பிரிக்கும் வேலையைப் பற்றி சொல்லவில்லை. இந்த கடைசி நாட்களில் நடக்கிற சம்பவங்களை பற்றித்தான் சொல்கிறது. பைபிள் செய்தியை விரும்பி கேட்கிற எல்லாரும் யெகோவாவின் சாட்சியாக ஆக மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளத்தான் இயேசு இந்த உதாரணத்தை சொன்னார். அதாவது பைபிளை படித்து கூட்டங்களுக்கு வரும் சிலர் ஞானஸ்நானம் எடுக்காமலேயே போய்விடலாம். (1 இரா. 18:21) இன்னும் சிலர், கூட்டங்களுக்கு வருவதையே நிறுத்திவிடலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் சிலர் பெரியவர்களாக ஆகும்போது யெகோவாவை விட்டு போய்விடலாம். அப்படியென்றால், யெகோவாவை வணங்குவதும் வணங்காததும் ஒருவருடைய சொந்த தீர்மானம் என்று இந்த உதாரணத்தில் இருந்து புரிந்துகொள்கிறோம். ஆனால், சரியான தீர்மானம் எடுக்கிறவர்கள்தான் யெகோவாவுக்கு ‘விரும்பப்பட்டவர்களாக’ இருப்பார்கள். அதாவது, அவர்களைத்தான் யெகோவாவுக்கு ரொம்ப பிடிக்கும்.—ஆகா. 2:7.

. . . இஇன்று அது எப்படி நடக்கிறது என்று பாருங்கள்

11, 12. (அ) இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) இந்த உதாரணத்தில் இருந்து யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

11 இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்த உதாரணத்தை நன்றாகப் புரிந்துகொண்டால் நம்முடைய பைபிள் படிப்புகளும், பிள்ளைகளும் யெகோவாவை விட்டு விலகிப் போகும்போது நாம் அளவுக்கு அதிகமாக கவலைப்பட மாட்டோம். அவர்களுக்கு யெகோவாவைப் பற்றி நிறைய சொல்லிக் கொடுத்திருப்போம், நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருப்போம். இருந்தாலும் ஒரு விஷயத்தை மனதில் வைக்க வேண்டும்: பைபிள் படிக்கிற எல்லாருமே யெகோவாவுடைய நண்பராக ஆக முடியாது. யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளாக இருந்தாலும் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டு அவருக்கு கீழ்ப்படிந்து நடந்தால்தான் அவருடைய நண்பராக இருக்க முடியும்.

யெகோவாமீது அன்பு இருக்கிறவர்கள்தான் அவருக்கு சேவை செய்வார்கள் (பாராக்கள் 9-12)

12 அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவை விட்டு விலகிப் போனவர்கள் அவரிடம் திரும்பி வரவே முடியாதா? பைபிள் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் யெகோவாவிடம் திரும்பி வரவே மாட்டார்களா? அப்படியில்லை! இவர்கள் எல்லாருக்குமே மிகுந்த உபத்திரவம் வரை நேரம் இருக்கிறது. “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்” என்று யெகோவா சொல்கிறார். (மல். 3:7) கெட்ட மகனை பற்றி இயேசு சொன்ன உதாரணத்தில் இருந்து இதை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ளலாம்.லூக்கா 15:11-32-ஐ வாசியுங்கள்.

கெட்ட மகன்

13. இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன?

13 இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன? இந்த உதாரணத்தில் பார்த்த அந்த அன்பான அப்பா, யெகோவா தேவன். பரம்பரை சொத்தை வீணாக செலவு செய்த அந்த மகன், கிறிஸ்தவ சபையை விட்டு விலகிப்போன ஆட்கள். அந்த மகன் ‘தூரதேசத்திற்கு’ போனது, யெகோவாவை விட்டு விலகி சாத்தானுடைய உலகத்தில் இருக்கிற ஆட்களோடு நண்பர்களாக ஆனதை குறிக்கிறது. (எபே. 4:18; கொலோ. 1:21) அவர்களில் சிலர் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறார்கள். யெகோவாவிடம் திரும்பி வர முயற்சி எடுக்கிறார்கள். அதனால், யெகோவா அவர்களை தாராளமாக மன்னிக்கிறார், அவர்களை மறுபடியும் ஏற்றுக்கொள்கிறார்.—ஏசா. 44:22; 1 பே. 2:25.

14. இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்?

14 இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்? யெகோவாவை விட்டு விலகிப்போனவர்கள் எல்லாரும் அவரிடம் திரும்பி வர வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். இந்த உதாரணத்தில் பார்த்த அன்பான அப்பா, தன்னுடைய மகன் நிச்சயம் திரும்பி வருவார் என்று நம்பிக்கையாக இருந்தார். மகன் திரும்பி வருவதை அப்பா ரொம்ப ‘தூரத்திலேயே’ பார்த்தார்; உடனே ஓடிப்போய் அவனை கட்டிப்பிடித்தார். அவன் திரும்பி வந்தது அவருக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது என்று மகன் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். யெகோவாவும் அந்த அப்பாவை போலத்தான் இருக்கிறார்; தம்மை விட்டு விலகிப்போனவர்கள் உடனே திரும்பி வரமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார். யெகோவாவிடம் எப்படி திரும்பி வருவது என்று நினைத்து சிலர் தயங்கிக்கொண்டு இருக்கலாம். ஒருவேளை திரும்பி வரவே முடியாது என்றுகூட நினைக்கலாம். ஆனால், அவர்கள் திரும்பி வரும்போது யெகோவா, இயேசு, தேவதூதர்கள் எல்லாருமே ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.—லூக். 15:7.

15, 16. (அ) இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அதற்கு சில அனுபவங்களை சொல்லுங்கள். (ஆ) இந்த உதாரணத்தில் இருந்து யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

15 இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவைப் போலவே நாமும் அன்பு காட்ட வேண்டும். ஒருவர் சபைக்கு திரும்பி வரும்போது அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘மிஞ்சின நீதிமானாக’ இருக்கக் கூடாது, அதாவது அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், யெகோவாவுக்கு நம்மை பிடிக்காமல் போய்விடும். (பிர. 7:16) ‘காணாமல்போன ஆடு’ திரும்பி வருவது போல், சபையை விட்டு போனவர்களும் திரும்பி வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். (சங். 119:176) சபையை விட்டு விலகிப்போன யாரையாவது ஊழியத்திலோ வேறு எங்கேயாவதோ பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம்? அவர்களைப் பற்றி மூப்பர்களிடம் உடனே சொல்லுங்கள். மூப்பர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். இப்படி செய்யும்போது நாமும் யெகோவாவையும் இயேசுவையும் போல அன்பு காட்டுகிறோம் என்று சொல்லலாம்.

16 சபைக்கு திரும்பி வருகிறவர்கள், யெகோவாவும் சகோதர சகோதரிகளும் காட்டுகிற அன்பை ரொம்ப பெரிதாக நினைக்கிறார்கள். 25 வருடங்களாக சபை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஒரு சகோதரர் சொல்கிறார்: “சபைக்கு திரும்பி வந்ததுல இருந்து, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். யெகோவா தருகிற ‘புத்துணர்ச்சியால’ என்னோட சந்தோஷம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது. (அப். 3:19) சபையில இருக்கிறவங்க எல்லாரும் எனக்கு ஆதரவா இருக்காங்க, என்கிட்ட அன்பா நடந்துக்கிறாங்க. எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைச்ச மாதிரி இருக்கு.” 5 வருடங்களுக்குப் பிறகு சபைக்கு திரும்பி வந்த ஒரு இளம் சகோதரி சொல்கிறார்: “சபையில இருக்கிறவங்க காட்டுன அன்பை விவரிக்க வார்த்தையே இல்ல. யெகோவாவோட அமைப்புல இருக்கிறத நினைக்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு!”

17, 18. (அ) இந்த 3 உதாரணங்களில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? (ஆ) நீங்கள் என்ன செய்ய முடிவு செய்திருக்கிறீர்கள்?

17 இயேசு சொன்ன 3 உதாரணங்களில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1) பைபிள் படிக்கிறவர்கள் வேகமாக முன்னேற்றம் செய்வதும் செய்யாததும் நம் கையில் இல்லை. அதை யெகோவாவிடம் விட்டுவிட வேண்டும். (2) நம்முடன் பைபிள் படிக்கிறவர்கள், கூட்டங்களுக்கு வருகிறவர்கள் எல்லாருமே யெகோவாவின் சாட்சியாக ஆவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. (3) யெகோவாவை விட்டு விலகிப்போனவர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அவர்கள் திரும்பி வரும்போது யெகோவாவைப் போல் நாமும் அவர்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

18 அறிவு, புரிந்துகொள்ளுதல், ஞானம்—இந்த மூன்றும் நமக்கு வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். இயேசு சொன்ன உதாரணங்களை படிக்கும்போது, இந்த கேள்விகளை யோசித்து பாருங்கள்: ‘இந்த உதாரணத்தோட அர்த்தம் என்ன? இதை பத்தி ஏன் பைபிள்ல சொல்லியிருக்கு? இதுல கத்துக்கிட்ட விஷயங்களை நான் எப்படி கடைப்பிடிக்கலாம்? இந்த உதாரணங்கள்ல இருந்து யெகோவாவ பத்தியும் இயேசுவ பத்தியும் என்ன தெரிஞ்சுக்கலாம்?’ இப்படி யோசித்துப் பார்த்தால், இயேசு சொன்ன உதாரணங்களின் அர்த்தத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறோம் என்று சொல்லலாம்.