லூக்கா எழுதியது 24:1-53

24  பின்பு, வாரத்தின் முதலாம் நாள் விடியற்காலையிலேயே, தாங்கள் தயார் செய்து வைத்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறைக்கு* அவர்கள் போனார்கள்.+  ஆனால், கல்லறையின் கல் ஏற்கெனவே உருட்டிப் போடப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள்.+  உள்ளே போனபோது, எஜமானாகிய இயேசுவின் உடல் அங்கே இருக்கவில்லை.+  அதைப் பற்றி அவர்கள் குழம்பிக்கொண்டிருந்தபோது, ஒளிவீசும் உடையில் இரண்டு ஆண்கள் திடீரென்று அவர்கள் பக்கத்தில் வந்து நின்றார்கள்.  பயத்தில் அந்தப் பெண்கள் தலைநிமிராமல் குனிந்தபடியே நின்றார்கள். அப்போது, அந்த ஆண்கள் அவர்களிடம், “உயிரோடு இருப்பவரை ஏன் இறந்தவர்களுடைய இடத்தில் தேடுகிறீர்கள்?+  அவர் இங்கே இல்லை, அவர் உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார். அவர் கலிலேயாவில் இருந்தபோது சொன்ன விஷயங்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.  மனிதகுமாரன் பாவிகளிடம் ஒப்படைக்கப்படவும், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்படவும், அதன் பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படவும் வேண்டுமென்று அவர் சொன்னாரே” என்றார்கள்.+  அப்போது, அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தன.+  அவர்கள் கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் நடந்த எல்லா விஷயங்களையும் பதினொரு பேருக்கும் மற்ற எல்லா சீஷர்களுக்கும் சொன்னார்கள்.+ 10  மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் அம்மாவான மரியாள் ஆகியவர்கள்தான் அந்தப் பெண்கள்; அவர்களோடு போன மற்ற பெண்களும் அப்போஸ்தலர்களுக்கு இந்த விஷயங்களைச் சொன்னார்கள். 11  ஆனால், இந்த விஷயங்கள் இவர்களுக்கு அபத்தமாகத் தோன்றியதால் அந்தப் பெண்கள் சொன்னதை இவர்கள் நம்பவில்லை. 12  ஆனால், பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கே அவர் குனிந்து பார்த்தபோது நாரிழை* துணிகளை மட்டுமே கண்டார். இதைப் பற்றி ஆச்சரியப்பட்டுக்கொண்டே அங்கிருந்து திரும்பிப் போனார். 13  அதே நாளில் சீஷர்களில் இரண்டு பேர் எருசலேமிலிருந்து சுமார் 7 மைல்* தூரத்திலிருந்த எம்மாவு என்ற கிராமத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். 14  நடந்த எல்லா சம்பவங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே போனார்கள். 15  இப்படி அவர்கள் பேசிக்கொண்டு போனபோது, இயேசுவே அங்கு வந்து அவர்களோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். 16  ஆனால், அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.+ 17  அப்போது அவர், “நீங்கள் ஒருவருக்கொருவர் எதைப் பற்றி விவாதம் செய்துகொண்டே போகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் சோகமாக அப்படியே நின்றார்கள். 18  அவர்களில் கிலெயோப்பா என்ற ஒருவர், “நீங்கள் எருசலேமில் தனியாக வாழ்கிற அன்னியரா?* கடந்த சில நாட்களாக இங்கு நடந்த விஷயங்களைப் பற்றித் தெரியாமல் இருக்கிறீர்களே!” என்றார். 19  அதற்கு அவர், “எந்த விஷயங்களை?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைப்+ பற்றிய விஷயங்களைத்தான் சொல்கிறோம். அவர் கடவுளுக்கு முன்பாகவும் எல்லா மக்களுக்கு முன்பாகவும் சொல்லிலும் செயலிலும் வலிமையான ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்.+ 20  ஆனால், எங்களுடைய முதன்மை குருமார்களும் அதிகாரிகளும் அவருக்கு மரண தண்டனை வாங்கிக்கொடுத்து+ அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள். 21  அவர்தான் இஸ்ரவேலை விடுவிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.+ இதெல்லாம் நடந்து இன்றோடு மூன்று நாள் ஆகிறது. 22  அதுமட்டுமல்ல, எங்கள் மத்தியிலிருந்த சில பெண்கள் விடியற்காலையில் கல்லறைக்குப் போனபோது,+ 23  அவருடைய உடல் அங்கு இல்லாததால் திரும்பிவந்து, தேவதூதர்களைப் பார்த்ததாகவும் இயேசு உயிரோடிருப்பதாக அவர்கள் சொன்னதாகவும் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு நாங்கள் பிரமித்துப்போனோம். 24  பின்பு, எங்களோடிருந்த சிலரும் கல்லறைக்குப் போய்+ அந்தப் பெண்கள் சொன்னபடியே இருந்ததைப் பார்த்தார்கள்; ஆனால் அவரைப் பார்க்கவில்லை” என்று சொன்னார்கள். 25  அப்போது இயேசு அவர்களிடம், “புத்தியில்லாதவர்களே, மந்த இதயம் உள்ளவர்களே, தீர்க்கதரிசிகள் சொன்ன விஷயங்களையெல்லாம் நம்பாமல் இருக்கிறீர்களே! 26  கிறிஸ்து தன்னுடைய மகிமையைப் பெறுவதற்காக+ இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிப்பது அவசியமாக இருந்ததுதானே?”+ என்று கேட்டார். 27  அதன் பின்பு, மோசேயின் புத்தகங்கள்முதல் எல்லா தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்வரை+ வேதவசனங்களில் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கினார். 28  கடைசியில், அவர்கள் போக வேண்டிய கிராமத்தை நெருங்கினார்கள்; அவர் அதற்கும் அப்பால் போகிறவர்போல் காட்டிக்கொண்டார். 29  அப்போது அவர்கள், “எங்களோடு தங்கிவிடுங்கள்; பொழுது சாயப்போகிறது, சீக்கிரத்தில் இருட்டிவிடும்” என்று சொல்லி, அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அதனால் அவர்களோடு போய்த் தங்கினார். 30  அவர்களோடு சாப்பிட உட்கார்ந்தபோது, அவர் ரொட்டியை எடுத்து, ஜெபம் செய்து,* அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தார்.+ 31  அப்போது அவர்களுடைய கண்கள் முழுமையாகத் திறக்கப்பட்டதால், அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். ஆனால், அவர்களைவிட்டு அவர் மறைந்துபோனார்.+ 32  அப்போது அவர்கள், “வழியில் அவர் நம்மோடு பேசி, வேதவசனங்களை முழுமையாக* விளக்கிக் காட்டியபோது, நம் இதயம் கொழுந்துவிட்டு எரிந்தது,* இல்லையா?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு, 33  அப்போதே எழுந்து எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொரு பேரும் மற்ற சீஷர்களும் கூடியிருந்ததைப் பார்த்தார்கள். 34  அங்கே இருந்தவர்கள், “எஜமான் நிஜமாகவே உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார்! சீமோனுக்குத் தோன்றினார்!”+ என்று சொல்வதைக் கேட்டார்கள். 35  பின்பு, வழியில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவர் ரொட்டியைப் பிட்டுக்கொடுத்த விதத்தை வைத்து அவரை அடையாளம் கண்டுகொண்டதைப் பற்றியும்+ இவர்கள் விளக்கமாகச் சொன்னார்கள். 36  இந்த விஷயங்களை அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவரே அவர்கள் நடுவில் வந்து நின்று, “உங்களுக்குச் சமாதானம்!”+ என்று சொன்னார். 37  அவர்கள் திகிலடைந்து, ஒரு மாய உருவத்தைப் பார்ப்பதாக நினைத்து நடுங்கினார்கள். 38  அதனால் அவர், “ஏன் கலங்குகிறீர்கள், உங்கள் இதயத்தில் ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? 39  என் கைகளையும் பாதங்களையும் பாருங்கள். நான்தான், என்னைத் தொட்டுப் பாருங்கள். எனக்குச் சதையும் எலும்புகளும் இருக்கின்றன, மாய உருவத்துக்கு இவை இருக்காதே” என்று சொல்லி, 40  தன்னுடைய கைகளையும் பாதங்களையும் அவர்களுக்குக் காட்டினார். 41  ஆனாலும் அவர்கள் நம்ப முடியாமல் ஆச்சரியப்பட்டார்கள், மிகுந்த சந்தோஷமும் அடைந்தார்கள். அப்போது அவர், “உங்களிடம் சாப்பிட ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார். 42  அதற்கு அவர்கள், சுட்ட மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். 43  அதை எடுத்து அவர்கள் கண் முன்னால் சாப்பிட்டார். 44  பின்பு அவர்களிடம், “என்னைப் பற்றி மோசேயின் திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் எழுதப்பட்ட எல்லா விஷயங்களும் நிறைவேற வேண்டுமென்று+ நான் உங்களோடு இருந்தபோது சொன்னேனே”+ என்றார். 45  அதன் பின்பு, வேதவசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடைய மனக்கண்களை முழுமையாகத் திறந்தார்.+ 46  பின்பு அவர்களிடம், “கிறிஸ்து பாடுகள் பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பார்+ என்றும், 47  பாவ மன்னிப்பு பெறுவதற்காக மனம் திருந்தும்படி+ எருசலேம் தொடங்கி+ எல்லா தேசங்களிலும் அவருடைய பெயரில் பிரசங்கிக்கப்படும்+ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. 48  இவற்றைப் பற்றி நீங்கள் சாட்சி கொடுக்க வேண்டும்.+ 49  என் தகப்பன் வாக்குறுதி கொடுத்ததை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். பரலோகத்திலிருந்து வரும் வல்லமையால் நீங்கள் நிரப்பப்படும்வரை இந்த நகரத்திலேயே தங்கியிருங்கள்”+ என்று சொன்னார். 50  பின்பு, அவர்களை பெத்தானியா வரைக்கும் கூட்டிக்கொண்டுபோய்த் தன்னுடைய கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51  அப்படி அவர்களை ஆசீர்வதிக்கும்போதே அவர்களிடமிருந்து பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.+ 52  அவர்கள் அவருக்குத் தலைவணங்கிவிட்டு, மிகவும் சந்தோஷமாக எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.+ 53  அதன் பின்பு, ஆலயத்தில் இடைவிடாமல் கடவுளைப் புகழ்ந்து வந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “நினைவுக் கல்லறைக்கு.”
அதாவது, “லினன்.”
வே.வா., “சுமார் 11 கி.மீ.” நே.மொ., “60 ஸ்டேடியா.” ஒரு ஸ்டேடியம் என்பது 185 மீ. (606.95 அடி). இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அல்லது, “எருசலேமுக்கு வந்திருப்பவர்களில் இந்த விஷயத்தைப் பற்றித் தெரியாதவர் நீங்கள் ஒருவர்தானோ?”
நே.மொ., “ஆசீர்வதித்து.”
வே.வா., “தெள்ளத்தெளிவாக.”
வே.வா., “நம் இதயம் நெகிழ்ந்துபோனது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு
ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு

4.5 அங். (11.5 செ.மீ.) நீளமுள்ள இரும்பு ஆணியால் துளைக்கப்பட்ட ஒரு மனித குதிங்கால் எலும்பு, 1968-ல் வட எருசலேமில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. பிற்பாடு, அதேபோல் செய்யப்பட்ட ஒரு செயற்கை குதிங்கால் எலும்பைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறோம். 1968-ல் கண்டெடுக்கப்பட்ட குதிங்கால் எலும்பு ரோமர்களின் காலத்தைச் சேர்ந்தது. ஆட்களை மரக் கம்பத்தில் அறைந்து கொல்ல ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அந்தப் புதைபொருள் கண்டுபிடிப்பு ஒரு அத்தாட்சி. ஒருவேளை, இயேசு கிறிஸ்துவை மரக் கம்பத்தில் அறைவதற்காக ரோம வீரர்கள் அதுபோன்ற ஆணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்தக் குதிங்கால் எலும்பு, ஆஸ்யூரி என்ற ஒரு கல் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது; அழுகிப்போன சடலத்தில் இருந்த உலர்ந்த எலும்புகள் இந்தப் பெட்டியில் வைக்கப்பட்டன. மரக் கம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் அடக்கமும் செய்யப்பட்டிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.