லூக்கா எழுதியது 15:1-32

15  வரி வசூலிப்பவர்கள், பாவிகள் ஆகிய எல்லாரும் அவர் சொல்வதைக் கேட்பதற்காக அவர் பக்கத்தில் வந்துகொண்டே இருந்தார்கள்.+  அதனால் பரிசேயர்களும் வேத அறிஞர்களும், “இந்த மனுஷன் பாவிகளோடு பழகுகிறான், அவர்களோடு சேர்ந்து சாப்பிடுகிறான்” என்று முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.  அப்போது அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்;  “உங்களில் யாராவது தன்னுடைய 100 செம்மறியாடுகளில் ஒன்று காணாமல் போனால், மற்ற 99 ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுவிட்டு, வழிதவறிப்போன ஆட்டைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் அதைத் தேடிக்கொண்டிருக்க மாட்டானா?+  அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, தன் தோள்கள்மேல் அதைப் போட்டுக்கொண்டு சந்தோஷப்படுவான்.  பின்பு வீட்டுக்கு வந்து, தன் நண்பர்களையும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் கூப்பிட்டு, ‘காணாமல்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன், என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்’+ என்று சொல்வான்.  அதேபோல், மனம் திருந்தத் தேவையில்லாத 99 நீதிமான்களைக் குறித்து ஏற்படுகிற சந்தோஷத்தைவிட மனம் திருந்துகிற ஒரே பாவியைக் குறித்துப் பரலோகத்தில் ஏற்படுகிற சந்தோஷம் அதிகமாக இருக்கும்+ என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.  பத்து வெள்ளிக் காசுகளை* வைத்திருக்கும் எந்தப் பெண்ணாவது அதில் ஒரு காசைத் தொலைத்துவிட்டால் விளக்கைக் கொளுத்தி, தன்னுடைய வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் கவனமாகத் தேடிக்கொண்டிருக்க மாட்டாளா?  அதைக் கண்டுபிடித்ததும் தன்னுடைய தோழிகளையும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் கூப்பிட்டு, ‘என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள், நான் தொலைத்த வெள்ளிக் காசைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று சொல்வாள். 10  அதேபோல், பாவிகளில் ஒருவன் மனம் திருந்தும்போது கடவுளுடைய தூதர்கள் எல்லாரும் சந்தோஷப்படுவார்கள்+ என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். 11  அதோடு, “ஒரு மனுஷருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். 12  இளைய மகன் தன்னுடைய அப்பாவிடம் வந்து, ‘அப்பா, சொத்தில் எனக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டான். அதனால், அவர் தன்னுடைய சொத்துகளை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். 13  சில நாட்கள் கழித்து, அந்த இளைய மகன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான். அங்கே அவன் மோசமான வாழ்க்கை* வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான். 14  அவன் தன்னிடம் இருந்ததையெல்லாம் செலவழித்த பிறகு, அந்தத் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவன் வறுமையில் வாடினான். 15  அதனால், அந்தத் தேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். அவர் தன்னுடைய பன்றிகளை+ மேய்க்கச் சொல்லி அவனைத் தன்னுடைய வயல்களுக்கு அனுப்பினார். 16  பன்றித் தீவனம்* சாப்பிட்டாவது தன் வயிற்றை நிரப்ப அவன் ஏங்கினான். ஆனால், அவனுக்கு யாரும் எதையும் கொடுக்கவில்லை. 17  அவனுக்குப் புத்தி வந்தபோது, ‘என் அப்பா வீட்டில் எத்தனையோ கூலியாட்கள் வயிறார சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, நான் இங்கே பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன்! 18  அதனால் நான் என் அப்பாவிடம் போய், “அப்பா, கடவுளுக்கும்* உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். 19  உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்கு அருகதையில்லை. உங்களுடைய கூலியாட்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்வேன்’ எனச் சொல்லிக்கொண்டு, 20  தன் அப்பாவிடம் புறப்பட்டுப் போனான். அவன் ரொம்பத் தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார். உடனே அவருடைய மனம் உருகியது, ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். 21  அப்போது அவன், ‘அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்.+ உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்கு அருகதையில்லை’ என்று சொன்னான். 22  ஆனால் அவனுடைய அப்பா தன் அடிமைகளிடம், ‘சீக்கிரம்! முதல்தரமான அங்கியைக் கொண்டுவந்து இவனுக்குப் போட்டுவிடுங்கள். இவனுடைய விரலில் மோதிரத்தையும் காலில் செருப்பையும் போட்டுவிடுங்கள். 23  கொழுத்த கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து அடியுங்கள், நாம் சாப்பிட்டுக் கொண்டாடுவோம். 24  ஏனென்றால், என்னுடைய மகன் செத்துப்போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துவிட்டான்;+ காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான்’ என்று சொன்னார். அதனால், அவர்கள் சந்தோஷமாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். 25  அவருடைய மூத்த மகன் அப்போது வயலில் இருந்தான். அவன் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குப் பக்கத்தில் வந்துகொண்டிருந்தபோது, ஆடல்பாடலின் சத்தத்தைக் கேட்டான். 26  அதனால், வேலைக்காரர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, என்ன நடக்கிறது என்று கேட்டான். 27  அதற்கு அவன், ‘உங்கள் தம்பி வந்துவிட்டார். அவர் பத்திரமாக வீடு திரும்பிவிட்டதால் உங்கள் அப்பா கொழுத்த கன்றுக்குட்டியை அடித்து விருந்து வைத்திருக்கிறார்’ என்று சொன்னான். 28  அதைக் கேட்டு அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது; வீட்டுக்குள் போகவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்போது, அவனுடைய அப்பா வெளியே வந்து, அவனைக் கெஞ்சிக் கூப்பிட்டார். 29  அதற்கு அவன் தன்னுடைய அப்பாவிடம், ‘இத்தனை வருஷங்களாக நான் உங்களுக்காகப் பாடுபட்டு வேலை செய்திருக்கிறேன், உங்கள் பேச்சைத் தட்டியதே இல்லை. இருந்தாலும், என் நண்பர்களோடு விருந்து கொண்டாட இதுவரை நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக்கூட கொடுத்ததில்லை. 30  ஆனால், விபச்சாரிகளோடு உல்லாசமாயிருந்து உங்கள் சொத்துகளை வீணாக்கிய உங்களுடைய மகன் வந்தவுடன் அவனுக்காகக் கொழுத்த கன்றுக்குட்டியை அடித்து விருந்து வைத்திருக்கிறீர்கள்’ என்று சொன்னான். 31  அதற்கு அவர், ‘மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய்; என்னிடம் இருப்பதெல்லாம் உன்னுடையதுதான். 32  ஆனால், உன் தம்பி செத்துப்போயிருந்தான்; இப்போது உயிரோடு வந்துவிட்டான். காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான். இந்தச் சந்தோஷத்தை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?’ என்று கேட்டார்” என்றார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “பத்து திராக்மாவை.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “மனம்போன போக்கில்.”
நே.மொ., “கரோப் மரக் காய்கள்.”
நே.மொ., “பரலோகத்துக்கும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

மேய்ப்பரும் அவருடைய ஆடுகளும்
மேய்ப்பரும் அவருடைய ஆடுகளும்

மேய்ப்பரின் வாழ்க்கை சுலபமாக இருக்கவில்லை. வெயிலிலும் குளிரிலும் அவர் பாடுபட்டார்; ராத்திரி தூங்காமல் ஆடுகளைப் பார்த்துக்கொண்டார். (ஆதி 31:40; லூ 2:8) சிங்கம், ஓநாய், கரடி போன்ற கொடிய மிருகங்களிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் மந்தையைப் பாதுகாத்தார். (ஆதி 31:39; 1சா 17:34-36; ஏசா 31:4; ஆமோ 3:12; யோவா 10:10-12) மேய்ப்பர் தன்னுடைய ஆடுகள் சிதறிப்போகாதபடி பார்த்துக்கொண்டார் (1ரா 22:17), தொலைந்துபோன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடித்தார் (லூ 15:4), மெலிந்த அல்லது தளர்ந்துபோன ஆட்டுக்குட்டிகளைத் தன் நெஞ்சில் (ஏசா 40:11) அல்லது தோள்களில் சுமந்தார், நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளையும் காயமடைந்த ஆடுகளையும் கவனித்துக்கொண்டார் (எசே 34:3, 4; சக 11:16). பைபிள் அடிக்கடி மேய்ப்பர்களையும் அவர்களுடைய வேலையையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, யெகோவா ஒரு மேய்ப்பரைப் போல, தன் ஆடுகளாகிய மக்களை அன்போடு கவனித்துக்கொள்வதாக அது சொல்கிறது. (சங் 23:1-6; 80:1; எரே 31:10; எசே 34:11-16; 1பே 2:25) பைபிள் இயேசுவை ‘பெரிய மேய்ப்பர்’ (எபி 13:20) என்றும், “முதன்மை மேய்ப்பர்” என்றும் அழைக்கிறது. அவருடைய வழிநடத்துதலின்படி கிறிஸ்தவச் சபையில் இருக்கும் கண்காணிகள் கடவுளுடைய மந்தையை மனப்பூர்வமாகவும் ஆர்வமாகவும் சுயநலமில்லாமலும் மேய்க்கிறார்கள்.—1பே 5:2-4.