Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வயிற்றெரிச்சல் நெஞ்சை நஞ்சாக்கும் குணம்

வயிற்றெரிச்சல் நெஞ்சை நஞ்சாக்கும் குணம்

வயிற்றெரிச்சல் நெஞ்சை நஞ்சாக்கும் குணம்

நெப்போலியன் போனபார்ட்டுக்கு இருந்தது. ஜூலியஸ் சீசருக்கு இருந்தது. மகா அலெக்ஸாந்தருக்கு இருந்தது. இவர்கள் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்தபோதிலும் ஒரு கொடிய குணம் இவர்களுடைய நெஞ்சில் இருந்தது. அது நெஞ்சை நஞ்சாக்கும் ஒரு குணம். அதுதான், வயிற்றெரிச்சல்.

“நெப்போலியனுக்கு சீசரைப் பார்த்து வயிற்றெரிச்சல், சீசருக்கு [மகா] அலெக்ஸாந்தரைப் பார்த்து வயிற்றெரிச்சல், அலெக்ஸாந்தருக்கு ஹெர்குலசைப் பார்த்து வயிற்றெரிச்சல், இத்தனைக்கும் இந்த ஹெர்குலஸ் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்” என எழுதினார் ஆங்கில தத்துவஞானி பெர்ட்ரான்ட் ரஸல். வயிற்றெரிச்சல் யாரையும் தொற்றிக்கொள்ளலாம். பண பலம் படைத்தவர்கள், குண நலம் மிக்கவர்கள், வெற்றிக் கொடி நாட்டியவர்கள் என எவரையும் தொற்றிக்கொள்ளலாம்.

மற்றவர்களுடைய சொத்துசுகத்தை... பேர்புகழை... வசதிவாய்ப்பை... பார்த்து மனம் கொதிப்பதுதான் வயிற்றெரிச்சல். பைபிளின்படி, இந்தக் குணத்துக்கும் பொறாமை என்ற குணத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக ஒரு பிரசுரம் இவ்வாறு சொல்கிறது: “‘பொறாமை’ என்பது . . . மற்றவரிடம் இருப்பதைத் தானும் பெற வேண்டுமென்ற ஆசை, ‘வயிற்றெரிச்சல்’ என்பதோ மற்றவரிடம் இருப்பதைப் பறித்துவிட வேண்டுமென்ற ஆசை.” ஆகவே, வயிற்றெரிச்சல் உள்ளவர் பிறரிடம் இருப்பதைப் பார்த்துப் பொறாமையால் வெந்துபோவது மட்டுமில்லாமல், அதை எப்படியாவது பறித்துவிடவும் துடிப்பார்.

வயிற்றெரிச்சல் என்ற நஞ்சு எப்படி நம் இரத்தத்தில் கலந்துவிடலாம்? அதனால் என்ன விபரீதங்கள் ஏற்படலாம்? இவற்றை நாம் சிந்தித்துப் பார்ப்பது புத்திசாலித்தனம். அதுவும், வயிற்றெரிச்சல் நம்மை ஆட்டிப்படைக்காதிருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வயிற்றெரிச்சலைத் தூண்டிவிடும் ஒரு மனப்பான்மை

மனிதர்கள் அபூரணர்களாக இருப்பதால் வயிற்றெரிச்சல் படுவது இயல்புதான்; என்றாலும், பல காரணிகள் வயிற்றெரிச்சல் என்ற தீயிக்கு எண்ணெய் வார்க்கலாம். அவற்றில் ஒன்றைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “வறட்டு கௌரவம் பார்க்காமலும், ஒருவருக்கொருவர் போட்டி போடாமலும், ஒருவர்மீது ஒருவர் வயிற்றெரிச்சல் படாமலும் இருப்போமாக.” (கலா. 5:26) ஆகவே, வயிற்றெரிச்சல் என்ற பாவ இயல்பைப் போட்டி மனப்பான்மை மேன்மேலும் தூண்டிவிடலாம். இது எவ்வளவு நிஜம் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள் கிறிஸ்டீனா, ஹோசே என்பவர்கள். *

“மற்றவர்களைப் பார்த்து அடிக்கடி வயிற்றெரிச்சல் படுகிறேன். அவர்களிடம் இருப்பதெல்லாம் என்னிடம் இல்லையே என நினைத்து மனம் புழுங்குகிறேன்” என்கிறார், ஒழுங்கான பயனியரான கிறிஸ்டீனா. ஒருமுறை, பயணக் கண்காணியையும் அவரது மனைவியையும் கிறிஸ்டீனா சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார். கிறிஸ்டீனாவுக்கும் அவரது கணவருக்கும் அவர்களுடைய வயதுதான்; இருவரும் அவர்களைப் போலவே ஒரு காலத்தில் பயண ஊழியம் செய்தவர்கள்தான்; ஆகவே கிறிஸ்டீனா அவர்களிடம், “என் கணவர்கூடத்தான் ஒரு மூப்பர்! அப்படியிருக்கும்போது, உங்களுக்கு மட்டும் எப்படி இந்தப் பொறுப்பு கிடைச்சிருக்கு, எங்களுக்குக் கிடைக்கில?” என்று கேட்டுவிட்டார். போட்டி மனப்பான்மையினால் கிறிஸ்டீனா வயிற்றெரிச்சல் பட்டார்; அதனால், தானும் தன் கணவரும் செய்துவந்த ஊழியம் எவ்வளவு அருமையானது என்பதை மறந்துவிட்டார், வாழ்வில் திருப்தியை இழந்துவிட்டார்.

அடுத்து, ஹோசேயை எடுத்துக்கொள்ளலாம். இவர் சபையில் உதவி ஊழியராகச் சேவை செய்ய விரும்பினார். ஆனால், இந்தப் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான் கிடைத்தது, இவருக்குக் கிடைக்கவில்லை. அதனால், வயிற்றெரிச்சல் பட்டார். அதோடு, மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்மீது வன்மத்தை வளர்த்துக்கொண்டார். “எனக்கு ஒரே வயிற்றெரிச்சல், அதனால் அவர்மேல் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது; வேண்டுமென்றேதான் என்னை நியமிக்காமல் விட்டுவிட்டாரென நினைத்தேன்” என்று அவர் ஒப்புக்கொள்கிறார். “வயிற்றெரிச்சல் நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தால் நம்மைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்போம். நம்மால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியாது” என்றும் சொல்கிறார்.

பைபிள் உதாரணங்கள் புகட்டும் பாடம்

நம்மை எச்சரிக்கும் பல உதாரணங்கள் பைபிளில் உள்ளன. (1 கொ. 10:11) அவற்றில் சில, வயிற்றெரிச்சல் எப்படி நம்மைத் தொற்றிக்கொள்ளலாம் என்பதை... அதன் பிடியில் சிக்கினால் அது எப்படி நம் வாழ்வையே நாசமாக்கும் நஞ்சாகலாம் என்பதை... காட்டுகின்றன.

உதாரணத்திற்கு, ஆதாம் ஏவாளின் தலைப்பிள்ளை காயீனை எடுத்துக்கொள்ளலாம். யெகோவா அவனுடைய பலியை ஏற்றுக்கொள்ளாமல் ஆபேலின் பலியை மட்டும் ஏற்றுக்கொண்டபோது அவன் எரிச்சலடைந்தான். காயீன் மனம் திருந்தியிருக்கலாம்; ஆனால், வயிற்றெரிச்சல் அவன் கண்களை மறைத்துவிட்டதால் தன் தம்பியைக் கொன்றே போட்டான். (ஆதி. 4:4-8) அவன் ‘பொல்லாதவனின் பக்கம் இருந்ததாக,’ அதாவது சாத்தானின் பக்கம் இருந்ததாக, பைபிள் சொல்வதில் ஆச்சரியமே இல்லை!—1 யோ. 3:12.

யோசேப்பு அவரது அப்பாவின் செல்லப் பிள்ளையாக இருந்ததைப் பார்த்து அவரது பத்து அண்ணன்களும் வயிற்றெரிச்சல் பட்டார்கள். யோசேப்பு தன் கனவுகளைப் பற்றிச் சொன்னபோது இன்னுமதிகமாக அவரை வெறுக்க ஆரம்பித்தார்கள். அதனால், அவரை ஒரேயடியாகத் தீர்த்துக்கட்ட பார்த்தார்கள். கடைசியில், அவரை ஓர் அடிமையாக விற்றுவிட்டு, அவர் செத்துவிட்டதாக வாய்கூசாமல் பொய் சொல்லி தங்கள் அப்பாவை நம்ப வைத்தார்கள். (ஆதி. 37:4-11, 23-28, 31-33) ஆனால், தாங்கள் செய்த பாவத்தைப் பல வருடங்களுக்குப் பிறகு உணர்ந்துகொண்டார்கள்; அதனால்தான், “நாம் நமது இளைய சகோதரனுக்குச் செய்த தீமைக்கே இந்தத் தண்டனை. அவன் துன்பப்படுவதைப் பார்த்தோம். தன்னைக் காப்பாற்றும்படி அவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால் நாம் அவன் சொன்னதைக் கவனிக்க மறுத்துவிட்டோம்” என்று பேசிக்கொண்டார்கள்.—ஆதி. 42:21; 50:15-19; ஈஸி டு ரீட் வர்ஷன்.

இப்போது கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரைப் பற்றிப் பார்க்கலாம். மோசேக்கும் ஆரோனுக்கும் கிடைத்த பொறுப்புகளைத் தங்கள் பொறுப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது அவர்களுடைய வயிறு எரிந்தது. மோசே ‘அதிகாரம் செலுத்தப் பார்ப்பதாகவும்’ எல்லாருக்கும் மேலாகத் தன்னை உயர்த்தப் பார்ப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். (எண். 16:13, NW) ஆனால், அது பொய்க் குற்றச்சாட்டு. (எண். 11:14, 15) யெகோவாதான் மோசேயை நியமித்திருந்தார். இவர்களோ மோசேயின் ஸ்தானத்தைப் பார்த்து வயிற்றெரிச்சல் அடைந்தார்கள். அதன் விளைவு? யெகோவா அவர்களைக் கொன்றுபோட்டார்.—சங். 106:16, 17.

ஒருவருக்கு வயிற்றெரிச்சல் வந்தால் எதையும் செய்யத் துணிந்துவிடுவார் என்பதை சாலொமோன் ராஜா கண்கூடாகக் கண்டார். ஒரு பெண் தன்னுடைய குழந்தை செத்துவிட்டதைப் பார்த்தபோது மற்றொரு பெண்ணின் குழந்தையை எடுத்து வைத்துக்கொண்டு, செத்த குழந்தைதான் அந்தப் பெண்ணுடையது என்று பொய் சொன்னாள். விசாரணையின்போது, அந்தப் பச்சிளம் குழந்தையை இரண்டாக வெட்டிப்போடக்கூட அந்தப் பொய்க்காரி சம்மதித்தாள். ஆனால், அந்தக் குழந்தையை உண்மையான தாயிடம் சாலொமோன் ஒப்படைத்தார்.—1 இரா. 3:16-27.

வயிற்றெரிச்சலினால் பயங்கர விபரீதங்கள் ஏற்படலாம். வெறுப்பு, அநீதி, கொலை ஆகியவற்றிற்கு அது வழிநடத்தலாம் என்பதை மேற்கண்ட பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன. அதோடு, மற்றவருடைய வயிற்றெரிச்சலுக்கு ஆளானவர்கள் எந்தத் தப்பும் செய்யாத அப்பாவிகள் என்பதை அந்த ஒவ்வொரு உதாரணத்திலும் பார்த்தோம். வயிற்றெரிச்சல் நம்மை ஆட்டிப்படைக்காதிருக்க நாம் என்ன பண்ணலாம்? வயிற்றெரிச்சல் என்ற விஷத்தை முறிக்க என்ன செய்யலாம்?

விஷத்தை முறிக்கும் மருந்துகள்!

அன்பையும் சகோதரப் பாசத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு அறிவுரை வழங்கினார்: “நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து உங்களைச் சுத்தமாக்கியிருப்பதால் வெளிவேஷமற்ற சகோதரப் பாசத்தையும், இருதயப்பூர்வ அன்பையும் ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்.” (1 பே. 1:22) அன்பு எப்படிப்பட்டது? “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சொந்த விருப்பங்களை நாடாது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 13:4, 5) இப்படிப்பட்ட அன்பை நம் உள்ளத்தில் ஊட்டி வளர்த்தால் வயிற்றெரிச்சல் நம்மை அண்டாது, அல்லவா? (1 பே. 2:1) யோனத்தானை நினைத்துப் பாருங்கள்; தாவீதைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதற்குப் பதிலாக அவரை ‘உயிரைப்போலச் சிநேகித்தார்.’—1 சா. 18:1.

கடவுளுடைய மக்களோடு கூடி வாருங்கள். சங்கீதம் 73-ஐ இயற்றியவர், கவலையில்லாமல் சுகபோகமாக வாழ்ந்த பொல்லாதவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொண்டார். என்றாலும், ‘தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்கு’ போவதன் மூலம் வயிற்றெரிச்சலை விட்டொழித்தார். (சங். 73:3-5, 16) சக வணக்கத்தாருடன் ஒன்றுகூடி வந்தது அவருக்கு உதவியது; ஆம், ‘தேவனை அண்டிக்கொண்டிருப்பதால்’ வரும் ஆசீர்வாதங்களைப் புரிந்துகொள்ள உதவியது. (சங். 73:28) கிறிஸ்தவக் கூட்டங்களில் சக வணக்கத்தாருடன் தவறாமல் ஒன்றுகூடி வருவது நமக்கும் அதேபோல் உதவும்.

நன்மை செய்யுங்கள். காயீன் வயிற்றெரிச்சலிலும் வெறுப்பிலும் வெந்து கொண்டிருந்ததைக் கடவுள் கவனித்தபோது, ‘நன்மை செய்’ என்று அவனிடம் சொன்னார். (ஆதி. 4:7) கிறிஸ்தவர்கள் எவ்வாறு ‘நன்மை செய்யலாம்’? ‘கடவுளாகிய யெகோவாமீது நம் முழு இருதயத்தோடும் நம் முழு மூச்சோடும் நம் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்,’ ‘நம்மீது நாம் அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என இயேசு சொன்னார். (மத். 22:37-39) யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் நாம் வாழ்வில் முதலிடம் கொடுக்கும்போது திருப்தி கிடைக்கிறது; இதுவே, வயிற்றெரிச்சல் என்ற விஷத்தை முறிக்கும் சக்திவாய்ந்த ஒரு மருந்தாகும். பிரசங்க வேலையிலும் சீடராக்கும் வேலையிலும் ஊக்கமாய் ஈடுபடுவது, கடவுளுக்கும் மனிதருக்கும் சேவை செய்ய சிறந்த வழி; அது, ‘யெகோவாவின் ஆசீர்வாதத்தை’ பெற்றுத் தரும் வழி.—நீதி. 10:22.

“சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்.” (ரோ. 12:15) சீடர்கள் ஊழியத்தில் பலன் கண்டதைப் பார்த்து இயேசு மகிழ்ச்சியடைந்தார்; அவர்கள் தம்மைவிட அதிகமாக ஊழியம் செய்வார்கள் என்று சுட்டிக்காட்டினார். (லூக். 10:17, 21; யோவா. 14:12) யெகோவாவின் ஊழியர்களான நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறோம்; ஆகவே, நம்மில் ஒருவருக்குக் கிடைக்கும் வெற்றி நம் அனைவருக்குமே கிடைக்கும் ஆசீர்வாதமாகும். (1 கொ. 12:25, 26) அப்படியிருக்கும்போது, மற்றவர்களுக்குப் பெரிய பொறுப்புகள் கிடைக்கையில் வயிற்றெரிச்சல் கொள்வதற்குப் பதிலாக நாம் சந்தோஷப்பட வேண்டும், அல்லவா?

பெரிய போராட்டம்தான்!

வயிற்றெரிச்சலை விட்டொழிக்க நெடுநாள் போராட வேண்டியிருக்கலாம். கிறிஸ்டீனா இப்படி ஒப்புக்கொள்கிறார்: “இப்போதும்கூட சிலசமயங்களில் நான் வயிற்றெரிச்சல் படுகிறேன். எனக்கே அது பிடிக்கவில்லை, ஆனால் என்னையும் மீறி அது வந்துவிடுகிறது, அதனால் எப்போதுமே அதைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது.” ஹோசேயும் இதேபோல் போராடினார். “மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் இருந்த நல்ல குணங்களைப் பார்க்க யெகோவா எனக்கு உதவினார். யெகோவாவுடன் எனக்கிருக்கும் பந்தம் பெரிதும் கைகொடுத்திருக்கிறது” என அவர் சொல்கிறார்.

பிறரைக் கண்டு வயிறெரிவது ‘பாவ இயல்புக்குரிய செயல்களில்’ ஒன்றாகும்; கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்தக் குணத்தை எதிர்த்துப் போராட வேண்டும். (கலா. 5:19-21) வயிற்றெரிச்சல் நம்மை ஆட்டிப்படைக்காதபடி பார்த்துக்கொண்டால் அதிக சந்தோஷமாக வாழ்வோம்; நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவின் மனதையும் குளிர்விப்போம்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 7 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]

“சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்”