ஆதியாகமம் 42:1-38

42  எகிப்தில் தானியம் இருக்கிறது என்று யாக்கோபு கேள்விப்பட்டார்.+ அதனால் அவர் தன்னுடைய மகன்களிடம், “ஏன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்கள்?  எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கு போய் நமக்காகக் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள். அப்போதுதான், நாம் பட்டினியால் சாக மாட்டோம்”+ என்று சொன்னார்.  அவர் சொன்னபடியே, யோசேப்பின் 10 அண்ணன்களும்+ தானியம் வாங்க எகிப்துக்குப் போனார்கள்.  யோசேப்பின் தம்பி பென்யமீனை அவர்களுடன் யாக்கோபு அனுப்பி வைக்கவில்லை.+ ஏனென்றால், அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று பயந்தார்.+  தானியம் வாங்குவதற்காகப் போன ஜனங்களுடன் இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள். ஏனென்றால், பஞ்சம் கானான் தேசத்திலும் பரவியிருந்தது.+  யோசேப்பு எகிப்து தேசத்துக்கு அதிகாரியாக இருந்தார்.+ அவர்தான் உலகத்திலிருந்த எல்லா ஜனங்களுக்கும் தானியம் விற்றுவந்தார்.+ அதனால், யோசேப்பின் அண்ணன்கள் அவரிடம் வந்து அவர்முன் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்கள்.+  யோசேப்பு தன்னுடைய அண்ணன்களைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டார். ஆனால், தான் யார் என்று காட்டிக்கொள்ளவே இல்லை.+ அவர்களிடம், “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கடுகடுப்பாகக் கேட்டார். அதற்கு அவர்கள், “தானியம் வாங்குவதற்காக கானான் தேசத்திலிருந்து வந்திருக்கிறோம்”+ என்று சொன்னார்கள்.  அவர்கள் யாரென்று யோசேப்புக்குத் தெரிந்துவிட்டது, ஆனால் யோசேப்பு யாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை.  அவர்களைப் பற்றிக் கனவு கண்டதை உடனே யோசேப்பு நினைத்துப் பார்த்தார்.+ பின்பு அவர்களிடம், “நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்! எந்தெந்த இடங்களைத் தாக்கினால் நாட்டைப் பிடித்துவிடலாம் என்று பார்க்க வந்திருக்கிறீர்கள்!” என்றார். 10  அதற்கு அவர்கள், “இல்லை எஜமானே! உங்கள் அடிமைகளாகிய நாங்கள் தானியம் வாங்க வந்திருக்கிறோம். 11  நாங்கள் எல்லாரும் அண்ணன் தம்பிகள், நேர்மையானவர்கள். உங்கள் அடிமைகளாகிய நாங்கள் உளவு பார்க்கிறவர்கள் அல்ல” என்றார்கள். 12  ஆனால் அவர், “பொய் சொல்கிறீர்கள்! எந்தெந்த இடங்களைத் தாக்கினால் நாட்டைப் பிடித்துவிடலாம் என்று பார்க்க வந்திருக்கிறீர்கள்!” என்றார். 13  அதற்கு அவர்கள், “எஜமானே, எங்களுடைய அப்பா கானான் தேசத்தில் வாழ்ந்துவருகிறார். அவருக்கு மொத்தம் 12 மகன்கள்.+ எங்களுடைய கடைசித் தம்பி இப்போது அப்பாவுடன் இருக்கிறான்.+ இன்னொருவன் உயிரோடு இல்லை”+ என்று சொன்னார்கள். 14  ஆனால் யோசேப்பு, “இல்லை! நான் சொன்னதுபோல் நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்தான்! 15  நீங்கள் எந்தளவுக்கு உண்மை பேசுகிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால், பார்வோனுடைய உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* உங்களுடைய கடைசித் தம்பி இங்கே வராவிட்டால் உங்களை இங்கிருந்து அனுப்ப மாட்டேன்.+ 16  நீங்கள் யாராவது போய் உங்களுடைய தம்பியைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அதுவரை மற்ற எல்லாரும் இங்கே கைதிகளாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தளவுக்கு உண்மை பேசுகிறீர்கள் என்று அப்போது தெரிந்துவிடும். நான் சொன்னதை நீங்கள் செய்யவில்லை என்றால், பார்வோனுடைய உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன், நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்தான்” என்று சொன்னார். 17  பின்பு, மூன்று நாட்களுக்கு அவர்கள் எல்லாரையும் ஒன்றாகக் காவலில் வைத்தார். 18  மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களிடம், “நான் தெய்வத்துக்குப் பயப்படுகிறவன். நான் சொல்கிறபடி செய்தால் உயிர்தப்புவீர்கள். 19  நீங்கள் நேர்மையானவர்கள் என்றால், உங்களில் ஒருவன் மட்டும் இந்தச் சிறையிலே கைதியாய் இருக்கட்டும். பஞ்சத்தில் தவிக்கிற குடும்பத்தாருக்காக மற்றவர்கள் தானியம் கொண்டுபோகலாம்.+ 20  அதன்பின் உங்களுடைய கடைசித் தம்பியை என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான், நீங்கள் சொன்னது உண்மை என்று நம்புவேன், உங்களை உயிரோடு விடுவேன்” என்று சொன்னார். அவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டார்கள். 21  அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், “நம் தம்பிக்கு நாம் செய்த துரோகத்துக்குத்தான் இந்தத் தண்டனையை அனுபவிக்கிறோம்.+ அவன் வேதனையில் துடித்ததை நாம் பார்த்தோம். கருணை காட்டச் சொல்லி அவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால், நாம் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இப்போது நமக்கு இந்தக் கஷ்டமெல்லாம் வந்திருக்கிறது” என்றார்கள். 22  அதற்கு ரூபன், “தம்பிக்கு விரோதமாக எந்தப் பாவமும் செய்யாதீர்கள் என்று அன்றைக்கே நான் சொன்னேன் இல்லையா? நீங்கள்தான் கேட்கவே இல்லை.+ இப்போது, அவனுடைய சாவுக்காக* நாம் பழிவாங்கப்படுகிறோம்”+ என்று சொன்னார். 23  அவர்கள் பேசியதை யோசேப்பு புரிந்துகொண்டார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால், ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துதான் யோசேப்பு அவர்களோடு பேசினார். 24  யோசேப்பு அவர்களைவிட்டுத் தள்ளிப்போய்க் கண்ணீர்விட்டு அழுதார்.+ திரும்பி வந்து அவர்களிடம் மறுபடியும் பேசினார். பின்பு, அவர்களுடைய கண் முன்னாலேயே சிமியோனைப் பிடித்துக் கட்டிவைத்தார்.+ 25  அதன் பின்பு, அவர்களுடைய சாக்குப் பைகளில் தானியங்களை நிரப்பவும், அவரவர் பணத்தைத் திரும்ப அவரவர் சாக்குப் பையில் போட்டு வைக்கவும், பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் யோசேப்பு தன்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளை கொடுத்தார். அவர்கள் அப்படியே செய்தார்கள். 26  யோசேப்பின் அண்ணன்கள் தங்களுடைய தானியப் பைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றி அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள். 27  சத்திரத்தில், கழுதைக்குத் தீனிபோட அவர்களில் ஒருவன் தன்னுடைய சாக்குப் பையை அவிழ்த்தபோது அந்தப் பையில் தன்னுடைய பணம் இருப்பதைப் பார்த்தான். 28  உடனே தன்னுடைய சகோதரர்களிடம், “இங்கே பாருங்கள், என்னுடைய பணத்தை என் பையிலேயே திரும்பவும் போட்டிருக்கிறார்கள்!” என்று சொன்னான். அவர்களுக்குப் பகீர் என்றது. எல்லாரும் நடுநடுங்கிப்போய், “கடவுள் ஏன் நம்மை இப்படித் தண்டிக்கிறார்?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள். 29  பின்பு, கானான் தேசத்தில் இருந்த தங்களுடைய அப்பா யாக்கோபிடம் வந்து, நடந்த எல்லா விஷயங்களையும் சொன்னார்கள். 30  “அந்த நாட்டின் அதிகாரி எங்களிடம் கடுகடுப்பாகப் பேசினார்,+ நாங்கள் உளவு பார்க்க வந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். 31  அப்போது நாங்கள் அவரிடம், ‘நாங்கள் நேர்மையானவர்கள். உளவு பார்க்கிறவர்கள் அல்ல.+ 32  எங்கள் அப்பாவுக்கு மொத்தம் 12 மகன்கள்.+ ஒரு தம்பி உயிரோடு இல்லை,+ கடைசித் தம்பி இப்போது கானான் தேசத்தில் அப்பாவுடன் இருக்கிறான்’+ என்று சொன்னோம். 33  ஆனால் அவர் எங்களிடம், ‘நீங்கள் நேர்மையானவர்களா இல்லையா என்று நான் பார்க்க வேண்டும். அதனால், உங்களில் ஒருவனை மட்டும் என்னிடம் விட்டுவிட்டு,+ பஞ்சத்தில் இருக்கிற உங்கள் குடும்பத்தாருக்காகத் தானியம் கொண்டுபோங்கள்.+ 34  அதன்பின், உங்களுடைய கடைசித் தம்பியை என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான், நீங்கள் உளவு பார்ப்பவர்கள் அல்ல, நேர்மையானவர்கள் என்று நம்புவேன். உங்கள் சகோதரனையும் உங்களிடம் ஒப்படைப்பேன். பிறகு இந்தத் தேசத்தில் நீங்கள் வியாபாரம்கூட செய்யலாம்’ என்று சொன்னார்” என்றார்கள். 35  அவர்கள் தங்களுடைய சாக்குப் பைகளை அவிழ்த்துக் கொட்டியபோது ஒவ்வொருவருடைய சாக்கிலும் பணப் பை இருந்தது. அவர்களும் அவர்களுடைய அப்பாவும் அந்தப் பணப் பைகளைப் பார்த்துப் பயந்துபோனார்கள். 36  அவர்களுடைய அப்பா யாக்கோபு அவர்களைப் பார்த்து, “உங்களால் என் பிள்ளைகள் எல்லாரையுமே பறிகொடுத்துவிடுவேன் போலிருக்கிறது!+ யோசேப்பு செத்துவிட்டான்,+ சிமியோனும் இல்லை,+ இப்போது பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள். எல்லா கஷ்டங்களும் எனக்குத்தான் வந்துசேருகிறது!” என்று புலம்பினார். 37  அப்போது ரூபன், “அப்பா, அவனை என்னுடைய பொறுப்பில் விடுங்கள், நான் உங்களிடம் அவனைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்க்கிறேன்.+ அவனை நான் திரும்பவும் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், என்னுடைய இரண்டு மகன்களைக் கொன்றுவிடுங்கள்”+ என்றார். 38  ஆனால் அவர், “என் மகனை நான் உங்களோடு அனுப்ப மாட்டேன். அவனுடைய அண்ணன் செத்துப்போய்விட்டான், இப்போது இவன் மட்டும்தான் இருக்கிறான்.+ போகும் வழியில் இவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அவ்வளவுதான்! இந்த வயதான காலத்தில், உங்களால் நான் துக்கத்தோடுதான்+ கல்லறைக்குள் போவேன்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பார்வோன் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
நே.மொ., “இரத்தத்துக்காக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா