ஆதியாகமம் 50:1-26

50  யோசேப்பு தன்னுடைய அப்பாவின் உடல்மேல் விழுந்து கதறி அழுதார்,+ அவருக்கு முத்தம் கொடுத்தார்.  அதன்பின், தன் அப்பாவின் உடலைப் பாடம் செய்யும்படி*+ தன் ஊழியர்களான வைத்தியர்களுக்குக் கட்டளை கொடுத்தார். அவர்களும் இஸ்ரவேலின் உடலைப் பாடம் செய்தார்கள்.  அதற்கு 40 நாட்கள் பிடித்தன. ஏனென்றால், ஓர் உடலை முறையாகப் பாடம் செய்ய 40 நாட்கள் ஆகும். அவருக்காக எகிப்தியர்கள் 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள்.  துக்கம் அனுசரிக்கும் நாட்கள் முடிந்த பிறகு யோசேப்பு பார்வோனின் அதிகாரிகளிடம்,* “எனக்கு ஒரு உதவி செய்ய நினைத்தால் பார்வோனிடம் நான் இப்படிச் சொன்னதாகத் தயவுசெய்து சொல்லுங்கள்:  ‘என் அப்பா என்னிடம், “நான் சீக்கிரத்தில் இறந்துவிடுவேன்.+ கானான் தேசத்தில்+ எனக்காக நான் வெட்டியிருக்கும் கல்லறையில் நீ என்னை அடக்கம் செய்ய வேண்டும்”+ என்று என்னிடம் சத்தியம் வாங்கியிருந்தார்.+ அதனால், தயவுசெய்து எனக்கு அனுமதி கொடுங்கள், நான் போய் என் அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்’” என்றார்.  அதற்கு பார்வோன், “உன் அப்பாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தபடியே நீ போய் அவரை அடக்கம் செய்துவிட்டு வா”+ என்றார்.  அதனால், யோசேப்பு தன்னுடைய அப்பாவை அடக்கம் செய்யப் புறப்பட்டார். அவருடன் பார்வோனுடைய ஊழியர்களாகிய அரசவைப் பெரியோர்கள்+ எல்லாரும், எகிப்து தேசத்திலிருந்த பெரியோர்கள் எல்லாரும்,  யோசேப்பின் வீட்டிலிருந்த எல்லாரும், அவருடைய சகோதரர்களும், அவருடைய அப்பாவின் குடும்பத்தாரும்+ போனார்கள். பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் மட்டுமே கோசேனில் விட்டுவிட்டுப் போனார்கள்.  யோசேப்போடு ரதவீரர்களும்+ குதிரைவீரர்களும்கூட போனார்கள். இப்படி, அவர்கள் பெரிய கூட்டமாகப் போனார்கள். 10  யோர்தான் பிரதேசத்திலிருந்த ஆத்தாத்தின் களத்துமேட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், அவர்கள் ஒப்பாரி வைத்துக் கதறி அழுதார்கள். யோசேப்பு தன் அப்பாவுக்காக ஏழு நாட்கள் துக்கம் அனுசரித்தார். 11  அவர்கள் ஆத்தாத்தின் களத்துமேட்டில் துக்கம் அனுசரிப்பதை அங்கு குடியிருந்த கானானியர்கள் பார்த்தபோது, “எகிப்தியர்கள் பெரியளவில் துக்கம் அனுசரிக்கிறார்களே!” என்றார்கள். அதனால்தான், யோர்தான் பிரதேசத்தில் இருந்த அந்த இடத்துக்கு ஆபேல்-மிஸ்ராயீம்* என்று பெயர் வைக்கப்பட்டது. 12  யாக்கோபு கட்டளை கொடுத்தது போலவே அவருடைய மகன்கள் செய்தார்கள்.+ 13  அவரை கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், மம்ரேக்குப் பக்கத்தில் மக்பேலா நிலத்திலிருந்த குகையில் அடக்கம் செய்தார்கள். அந்த நிலத்தை, அடக்கம் செய்வதற்கான நிலமாக ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார்.+ 14  யோசேப்பு தன்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு, தன்னுடைய சகோதரர்களோடும் மற்ற எல்லாரோடும் எகிப்துக்குத் திரும்பினார். 15  யோசேப்பின் சகோதரர்கள் தங்களுடைய அப்பா இறந்த பின்பு, “யோசேப்புக்கு நம்மேல் முன்விரோதம் இருந்தாலும் இருக்கும். நாம் அவனுக்குச் செய்த எல்லா துரோகத்துக்கும் அவன் ஒருவேளை நம்மைப் பழிவாங்கலாம்”+ என்று பேசிக்கொண்டார்கள். 16  பின்பு யோசேப்புக்குச் செய்தி அனுப்பி, “உன்னுடைய அப்பா சாவதற்குமுன் எங்களைக் கூப்பிட்டு, 17  ‘நீங்கள் யோசேப்பிடம் போய், அவனுக்குச் செய்த கெடுதலையும் பாவத்தையும் துரோகத்தையும் மன்னிக்கச் சொல்லிக் கெஞ்சிக் கேளுங்கள்’ என்றார். அதனால், உன் அப்பாவுடைய கடவுளின் ஊழியர்களான நாங்கள் செய்த துரோகத்தைத் தயவுசெய்து மன்னித்துவிடு” என்றார்கள். இதைக் கேட்டதும் யோசேப்பு கண்ணீர்விட்டு அழுதார். 18  பின்பு, அவருடைய சகோதரர்கள் அவர்முன் வந்து விழுந்து, “நாங்கள் உன் அடிமைகள்!”+ என்றார்கள். 19  அப்போது யோசேப்பு, “பயப்படாதீர்கள். உங்களைத் தண்டிக்க நான் என்ன கடவுளா? 20  நீங்கள் எனக்குக் கெட்டது செய்ய நினைத்தும்,+ அதை நல்லதாக மாற்றி பலருடைய உயிரைக் காப்பாற்ற கடவுள் நினைத்தார்.+ அதைத்தான் இன்று செய்துவருகிறார். 21  அதனால் பயப்படாதீர்கள். உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நான் தொடர்ந்து உணவுப் பொருள்களைக் கொடுப்பேன்”+ என்றார். இப்படி, அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்தார். 22  யோசேப்பும் அவருடைய அப்பாவின் குடும்பத்தாரும் எகிப்திலேயே வாழ்ந்தார்கள். யோசேப்பு 110 வருஷங்கள் உயிர்வாழ்ந்தார். 23  எப்பிராயீமின் பேரன்களையும்+ மனாசேயின் மகனான மாகீரின் மகன்களையும்+ பார்க்கும்வரை யோசேப்பு உயிர்வாழ்ந்தார். அவர்களைத் தன்னுடைய சொந்த மகன்களாகவே நினைத்தார்.* 24  கடைசியில் யோசேப்பு தன்னுடைய சகோதரர்களிடம், “நான் சீக்கிரத்தில் இறந்துவிடுவேன். ஆனால், கடவுள் கண்டிப்பாக உங்களுக்குக் கருணை காட்டுவார்,+ ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குறுதி தந்த தேசத்துக்கு உங்களை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போவார்”+ என்றார். 25  பின்பு யோசேப்பு, “கடவுள் கண்டிப்பாக உங்களுக்குக் கருணை காட்டுவார். நீங்கள் இங்கிருந்து போகும்போது என்னுடைய எலும்புகளைக் கொண்டுபோக வேண்டும்” என்று சொல்லி, இஸ்ரவேலின் மகன்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார்.+ 26  யோசேப்பு 110 வயதில் இறந்தார். அவருடைய உடல் எகிப்து தேசத்தில் பாடம் செய்யப்பட்டு,+ ஒரு சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.

அடிக்குறிப்புகள்

பாடம் செய்வது என்பது, உடல் அழுகிப்போகாதபடி அதைப் பாதுகாக்கும் முறையைக் குறிக்கிறது.
வே.வா., “வீட்டில் உள்ளவர்களிடம்.”
அர்த்தம், “எகிப்தியர்களின் துக்க அனுசரிப்பு.”
நே.மொ., “அவர்கள் யோசேப்பின் முழங்கால்களில் பிறந்தார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா