Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடையாளங் கண்டுகொள்ளப்படுவது அழிவுக்காதப்பிப்பிழைப்பதற்கா?

அடையாளங் கண்டுகொள்ளப்படுவது அழிவுக்காதப்பிப்பிழைப்பதற்கா?

அதிகாரம் 12

அடையாளங் கண்டுகொள்ளப்படுவது அழிவுக்கா தப்பிப்பிழைப்பதற்கா?

இன்று இருந்துவரும் மத நிலைமைகள் நம்முடைய இருதயத்தில் உண்மையில் உள்ளதை வெளிப்படுத்திக் காட்டும்படி நம்மை அழைக்கிறது. யெகோவாவையும் அவருடைய வழிகளையும் நாம் உண்மையில் நேசிக்கிறோமா? அவருடைய குமாரனைக் குறித்து: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்,” என்று சொல்லப்பட்ட இயேசு கிறிஸ்துவைப் போல் நாம் இருக்கிறோமா? (எபிரெயர் 1:9) நாம் எங்கே நிலைநிற்கிறோமென மற்றவர்கள் தெரிந்துகொள்ளும்படி இதை நாம் யாவரறிய வெளிப்படுத்திக் காட்ட மனங்கொண்டிருக்கிறோமா? யேகூவையும் ரேகாபின் குமாரனான யோனதாபையும் பற்றிய பைபிள் பதிவு நம்முடைய நிலையை ஆராய்ந்து பார்க்க நமக்கு உதவி செய்கிறது.

2பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில், யேகூ இஸ்ரவேலின் பத்துக்-கோத்திர ராஜ்யத்தின்மேல் அரசனாயிருக்கும்படி அபிஷேகஞ்செய்யப்பட்டான், சமாரியா அதன் தலைநகராயிருந்தது. இஸ்ரவேலில் பாகால் வணக்கத்தை முன்னேற்றுவித்து, யெகோவாவின் வணக்கத்தை முற்றிலும் நீக்கிப்போட முயற்சி செய்த அரசி யேசபேல் உட்பட அரசன் ஆகாபின் பொல்லாதக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் அழிக்கும்படி அவன் அதிகாரங்கொடுத்துக் கட்டளையிடப்பட்டான். கேனியனான (ஆகவே, இஸ்ரவேலனல்லாத), யோனதாப், யேகூவைச் சந்திக்கச் சென்றபோது, தண்டனை நிறைவேற்றும் யேகூவின் திட்டத்தைச் சந்தேகமில்லாமல் அறிந்திருந்தான். ஆனால் யெகோவாவின்பேரில் யோனதாபின் அன்பு எவ்வளவு உறுதியாயிருந்தது? உண்மையான கடவுளாகிய யெகோவா ஒருவர் மாத்திரமே வணங்கப்பட வேண்டுமென்று உறுதியாய் நம்புகிறவனென அவன் தன்னை வெளிப்படையாய் அடையாளங் கண்டுகொள்ளச் செய்வானா?

‘உன் இருதயம் என்னுடன் உண்மையாய் இசைந்திருக்கிறதா?’

3 இந்த இருவரும் ஒருவருக்கொருவர் சந்திப்பு மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டபின், யேகூ, யோனதாப் தன் நிலைநிற்கையைத் தெளிவாக்கும்படி கேட்டான். “என் மனம் உன் மனதோடே [இருதயம் உன் இருதயத்தோடு, NW] உண்மையாய் இசைந்திருப்பதுபோல உன் மனமும் [இருதயமும், NW] உண்மையாய் இசைந்திருக்கிறதா?” என்று யேகூ கேட்டான். தாமதமில்லாமல் யோனதாப், “அப்படியே இருக்கிறது,” என்று பதிலளித்தான். “அப்படியிருக்கிறதானால் நீ கைகொடு,” என யேகூ கூறினான். அவ்வாறு அவன் யோனதாபைத் தன் இரதத்துக்குள் ஏறச் செய்து: “நீ என்னோடு வந்து யெகோவாவின் விஷயத்தில் எனக்குள்ள பக்தி வைராக்கியத்தைப் பார்,” என்று சொன்னான். யோனதாப் பயந்து பின்தங்கவில்லை.—2 இராஜாக்கள் 10:15, 16, தி.மொ.; உபாகமம் 6:13-15-ஐப் பாருங்கள்.

4சமாரியாவுக்கு வந்து சேர்ந்தபோது, பாகாலை வணங்கின யாவரையும் அடையாளங்கண்டுகொள்ள செய்யும்படி தேவைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தான். பாகாலின் தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், வணக்கத்தார் எல்லாரும் பாகாலின் கோவிலில், பாகாலுக்குப் பெரும் பலி செலுத்துவதற்கு வரும்படி அழைப்பித்தான்; வரத் தவறும் எவரும் உயிரோடிருப்பதில்லையென அவர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. பாகால் வணக்கத்தார் தெளிவாக அடையாளங் கண்டுகொள்ளப்படுவதற்கு, அவர்கள் தரித்துக்கொள்ள அவர்களெல்லாருக்கும் வஸ்திரங்களைக் கொடுக்கும்படி யேகூ கட்டளையிட்டான். யெகோவாவை வணங்குவதாக உரிமை பாராட்டினவர்களும் இவ்வாறு தாங்கள் யாரை உண்மையில் சேவித்தனரென்று காட்டும்படி செய்யப்பட்டனர். அது பாகாலுக்கும், பாகால் உண்மையில் குறித்துக்காட்டின பொய்க் கடவுளாகிய பிசாசான சாத்தானுக்கும் பெருஞ்சிறப்பு வாய்ந்த நேரமாகத் தோன்றிற்று.

5யெகோவாவை வணங்கும் உண்மை வணக்கத்தாருக்கு இது இடமல்ல. பாகாலின் வணக்கத்தார் மாத்திரமே அங்கிருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ள தேடிப் பார்க்கப்பட்டது. பின்பு சமயச் சடங்கு தொடர்ந்தது. இதற்கிடையில் வெளியே, யேகூவின் ஆட்கள் தயாராகி, அவன் சமிக்கை கொடுத்தவுடன் செயல்பட்டனர். “அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம்,” என்று அவன் கட்டளையிட்டான். பாகால் வணக்கத்தார் ஒருவரும் விடாமல் எல்லாரும் அழிக்கப்பட்டனர். பாகாலின் கோவில் இடித்துப் போடப்பட்டது. “இப்படியே யேகூ பாகால் இஸ்ரவேலில் இராதபடி அதை அழித்துப் போட்டான்.” இந்தச் சம்பவங்களை நேரில் காண யோனதாப் யேகூவின் பக்கத்தில் இருந்தான். (2 இராஜாக்கள் 10:18-28, தி.மொ.) நடந்தேறிய இவற்றிற்கு உங்களுடைய சொந்தப் பிரதிபலிப்பு என்ன? அவர்கள் பொல்லாதவர்களாயிருந்தாலும், மற்றவர்கள் சாவதில் நம்மில் எவரும் மகிழ்ச்சியடைகிறதில்லையென்றாலும், அது ஏன் அவசியமாயிருந்தது, இன்று நாம் வாசிக்கும்படி அது ஏன் பைபிளில் பதிவுசெய்து வைக்கப்பட்டது என்பவற்றை நாம் மதித்துணருகிறோமா?—எசேக்கியேல் 33:11-ஐ ஒத்துப் பாருங்கள்.

6மதத் தொகுதிகளுக்கு உரியதாயுள்ள கட்டடங்களையோ அல்லது பொய் வணக்கத்தில் ஈடுபட்டுள்ள ஆட்களையோ அழிப்பதற்கு இந்த விவரப்பதிவு நமக்கு அதிகாரங் கொடுக்கிறதில்லை. தம்முடைய தற்கால சாட்சிகளையல்ல, மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவையே பெரிய யேகூவாக, தம்முடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்கு யெகோவா நியமித்திருக்கிறார். ஒன்றுசேர்ந்த அரசியல் வல்லரசுகள் மகா பாபிலோனின்பேரில் தங்கள் சொந்தப் பகைமையை வெளிப்படுத்தும்படி அனுமதிப்பதன்மூலம், பரலோக அரசர், பொய் மத உலகப் பேரரசின் அழிவைக் கொண்டுவருவார். (வெளிப்படுத்துதல் 6:2; 17:16; 19:1, 2) இயேசு பூமியிலிருந்தபோது, பிசாசுக்கு மதிப்புதரும் ஒரு வணக்கச் செயலையுங்கூட நடப்பிக்க மறுத்துவிட்டார். மனித பாரம்பரியத்துக்காக யெகோவாவின் வார்த்தையை அவமதிப்பதையும், கடவுளுடைய வணக்கத்தை வியாபார லாபத்துக்காகப் பயன்படுத்துவதையும் அவர் வெளிப்படையாய்க் கண்டனம் செய்தார். யெகோவாவுக்கெதிரான எத்தகைய போட்டியையும் அவர் சகிக்கவில்லை.—லூக்கா 4:5-8; மத்தேயு 15:3-9; 21:12, 13.

7அப்படியானால், தம்முடைய சத்துருக்களின் மத்தியில் இப்பொழுது ஆட்சி செய்யும் கிறிஸ்து ஏன், தற்கால பாகால் வணக்கமுறை பார்வைக்கு முன்னேறிக்கொண்டிருக்க அனுமதிக்கிறார்? ஜனங்கள் யெகோவாவின் கட்டளைகளை ஒருபுறமாகத் தள்ளிவிட்டு, இவ்வாறு இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளுக்கு மதிப்பு தந்து தண்டனை பெறாமல் தப்பிக் கொண்டிருப்பதாகத் தோன்ற அவர் ஏன் அனுமதிக்கிறார்? அவர்களுடைய பால்சம்பந்த ஒழுக்கக்கேடான நடத்தையையும், பொருள் பேராசை கொண்ட வாழ்க்கை முறையை அவர்கள் பெருமைப்படுத்துவதையும், கிறிஸ்தவர்களென உரிமை பாராட்டிக்கொண்டு அதே சமயத்தில் ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களில் ஈடுபடுவதையும், பாபிலோனிய கோட்பாடுகளைக் கடவுளுடைய வார்த்தை என்பதுபோல் அவர்கள் போதிப்பதையும் கடவுள் தடைசெய்வதில்லை என்பதுபோல் அவர்கள் நடந்துகொள்வதற்கு அவர் ஏன் இடங்கொடுக்கிறார்? இது ஜனங்களைச் சோதித்தறியவும், தாங்கள் யாரை வணங்குகிறார்களென அவர்கள்தாமே வெளிப்படையாய்க் காட்டி, தாங்கள் பாதுகாத்து வைக்கப்படுவதற்கா அல்லது தண்டனைத் தீர்ப்பு நிறைவேற்றப்படுவதற்கா எதற்குத் தகுதியுள்ளவர்களென வெளிப்படுத்த வைக்கவுமே என அந்தப் பூர்வ நாடகம் காட்டுகிறது.

8நீங்கள் என்ன போக்கைத் தெரிந்துகொண்டீர்கள்? தற்கால பாகால் வணக்க முறையை அனுசரிக்கிறவராக உங்களை அடையாளங்காட்டக் கூடிய எல்லாப் பழக்க வழக்கங்களையும் நீங்கள் விட்டுவிட்டீர்களா? உலகத்திலிருந்து வேறுபட்டவராக உங்களைப் பிரித்துக்கொண்டு யெகோவாவின் உண்மை வணக்கத்தாராக உங்கள் நிலைநிற்கையை ஏற்றுவிட்டீர்களா?—2 கொரிந்தியர் 6:17.

9இஸ்ரவேலனல்லாதவனாக யெகோவாவை வணங்கின யோனதாப், பூமியில் நித்திய ஜீவனடையும் நம்பிக்கையுடன் இப்பொழுது கூட்டிச் சேர்க்கப்படுகிற “மற்றச் செம்மறியாடுகளை” முன்குறித்துக் காட்டினான். யோனதாபின் மனப்பான்மையை நீங்கள் பிரதிபலிக்கிறீர்களா? பெரிய யேகூவுடனும், நெருங்கிக் கொண்டிருக்கும் “நமது கடவுள் பழிவாங்கும் நாளை” யாவருக்கும் அறிவிக்கும், அவரைப் பின்பற்றும் பூமியிலுள்ள அவருடைய அபிஷேகஞ் செய்யப்பட்டவர்களுடனும் உங்களை யாவர்முன்னும் வெளிப்படையாய் அடையாளங் கண்டுகொள்ள செய்ய நீங்கள் மனமுடையோரா? இந்த அவசரமான வேலையில் நீங்கள் அவர்களுடன் பங்குகொள்கிறீர்களா? (ஏசாயா 61:1, 2; லூக்கா 9:26; சகரியா 8:23) உங்கள் இருதயத்தில் யெகோவா கொண்டிருக்க வேண்டிய இடத்தில் வேறு எதுவும் நுழைய அனுமதியாமல், யெகோவாவுக்கு உங்கள் தனிப்பட்ட பக்தியைக் கொடுக்கிறீர்களா? (மத்தேயு 6:24; 1 யோவான் 2:15-17) அவருடன் உங்களுக்குள்ள உறவே எல்லாவற்றையும்விட மிக அதிக மதிப்புவாய்ந்த உங்கள் உடைமை எனவும், மற்ற எல்லாம் அதைச் சுற்றியே கட்டப்படுகிறதெனவும் உங்கள் வாழ்க்கை மெய்ப்பித்துக் காட்டுகிறதா?—சங்கீதம் 37:4; நீதிமொழிகள் 3:1-6.

நீங்கள் அடையாளத்தைக் கொண்டிருக்கிறீர்களா?

10 ஒருவன், தான் “நல்ல” வாழ்க்கை நடத்த முயற்சி செய்து, கடவுளுடைய வார்த்தையில் தெளிவாய்க் கண்டனம் செய்துள்ள காரியங்களைச் செய்யும் மதங்களை விட்டு விலகியிருந்தால், வேறு அதிகம் எதுவும் அவனிடத்தில் எதிர்பார்க்கப்படுவதில்லையென்ற முடிவுக்கு வருவது வினைமையான பிழையாகும். “புதிய பூமிக்குள்” தப்பிப்பிழைக்கும் நம்பிக்கை கொள்ளும் யாவரும் யெகோவாவின் வணக்கத்தாராகத் தவறாமல் அடையாளங் கண்டுகொள்ளப்படவும் வேண்டும். (வெளிப்படுத்துதல் 14:6, 7; சங்கீதம் 37:34; யோவேல் 2:32) பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டதற்கு முன்னால் தீர்க்கதரிசி எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தரிசனத்தில் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.

11உண்மையற்ற எருசலேமையும் அதன் குடிமக்களையும் அழிக்கும்படி நியமிக்கப்பட்டவர்களை வரும்படி யெகோவா கட்டளையிட்டதை எசேக்கியேல் கேட்டான். ஆறு ஆண்கள் நொறுக்கும் போராயுதங்களுடன் இருப்பதையும், மேலும் ஒரு மனிதன் சணல்நூல் அங்கிதரித்து தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்ததையும் அவன் கண்டான். முதலாவது, சணல்நூல் அங்கி தரித்திருந்தவனிடம் யெகோவா பின்வருமாறு கூறினார்: “நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற, மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு.” பின்பு மற்ற ஆறு பேரிடம் அவர் சொன்னதாவது: “நீங்கள் இவன் பின்னே நகரத்திலே திரிந்து அடித்துக் கொல்லுங்கள்; நீங்கள் இரக்கத்தோடே பார்க்கவேண்டாம், பரிதாபங் காட்ட வேண்டாம். முதியோரையும் வாலிபரையும் கன்னிகைகளையும் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் அடித்துச் சங்கரியுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற எவனையும் கிட்டவேண்டாம்; என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள்.” (தி.மொ.) இதைப் பின் தொடர்ந்த அழிவை எசேக்கியேல் கண்டான்—அது அவ்வளவு விரிவாக இருந்ததனால் தேசத்தில் இன்னுமிருந்த எல்லா இஸ்ரவேலரும் சங்கரிக்கப்படுவதாகத் தோன்றிற்று. (எசேக்கியேல் 9:1-11) தப்பிப்பிழைப்பதற்கு உயிர்நிலையாக இருந்ததென்ன? கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த மனிதன் ஒருவருடைய நெற்றியில் போட்ட அந்த அடையாளமேயாகும்.

12எருசலேமில் செய்யப்பட்டு வந்த “சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுத” ஆட்கள் மாத்திரமே தப்பிப்பிழைப்பதற்கு அடையாளம் போடப்பட்டார்கள். அந்த ‘அருவருப்பான காரியங்கள்’ யாவை? ஐந்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. யெகோவாவின் ஆலயத்தின் உட்பிரகார வாசலில் (1) “எரிச்சல் விக்கிரகம்.” இது என்ன உருவத்தில் இருந்ததோ, எனினும் இந்தப் பொருளுக்கு இஸ்ரவேலர் யெகோவாவுக்குச் செலுத்தக் கடன்பட்ட பக்தியைச் செலுத்தினார்கள். (1 இராஜாக்கள் 14:22-24) (2) சுவரில் சித்திரந்தீட்டப்பட்டிருந்த ஊரும் பிராணிகளும் மிருகங்களும், ஆலயத்தின் உட்பிரகாரத்தில்தானே இவற்றிற்குமுன் தூபவர்க்கம் செலுத்தப்பட்டது. (3) தம்மூஸ் தெய்வத்தின் சாவின்பேரில் பெண்கள் அழுதுகொண்டிருந்தார்கள், இது யெகோவாவுக்கு எதிரான கலகக்காரனான நிம்ரோதுக்கு மற்றொரு பெயர். (ஆதியாகமம் 10:9) (4) ஆண்கள், யெகோவாவின் ஆலயத்துக்குத் தங்கள் முதுகைத் திருப்பி சூரியனை வணங்குவதன்மூலம் மட்டுக்குமீறிய அவமரியாதையைக் காட்டினார்கள். (உபாகமம் 4:15-19) (5) கடைசியான அவமதிப்பாக ஜனங்கள் தேசத்தை வன்முறைச் செயல்களால் நிரப்பினார்கள் அதோடுகூட ஓர் “அடிக்கிளையை,” அநேகமாய்ப் பால் அறிகுறியாய் இருந்திருக்கக் கூடியதை யெகோவாவின் மூக்குக்கு நேரே நீட்டினார்கள். அவர்களிடம் யெகோவா கடும் வெறுப்பு கொண்டதன் காரணத்தை நீங்கள் மதித்துணர முடிகிறதா?—எசேக்கியேல் 8:5-17.

13இந்த “அருவருப்புகளுக்கு” ஒப்பிடக்கூடிய கிறிஸ்தவ மண்டலத்தின் தற்கால பழக்கச் செயல்களுக்கு தனிப்பட்டவராய் நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்? (1) அதன் கோயில்கள் பலவற்றில் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன, அவற்றின் முன் மக்கள் குனிந்து வணங்குகிறார்கள், இவ்வாறு செய்வதற்கு எதிராக பைபிள் எச்சரிக்கிறபோதிலும் அவ்வாறு செய்கிறார்கள். (1 கொரிந்தியர் 10:14; 2 இராஜாக்கள் 17:40, 41-உடன் ஒத்துப் பாருங்கள்.) (2) மனிதன் கடவுளால் படைக்கப்பட்ட உண்மைக்குப் பதிலாக அவன் மிருகங்களிலிருந்து தோன்றினான் என்ற பரிணாமக் கொள்கையை வைக்கும் போக்கோடு அது செல்கிறது; மேலும் தேசீய சின்னங்களாகப் பயன்படுத்தப்படும் மிருக மற்றும் பறவைகளின் குறியீடுகளுக்கு முன் உணர்ச்சிமிகுந்த பக்தியை வெளிப்படுத்திக் காட்டுவதிலும் அது பங்குகொள்ளுகிறது. (3) அதன் வணக்கத்தில் சிலுவையை முக்கியப்படுத்திக் காட்டுகிறது, அது பண்டைக்காலம் முதற்கொண்டு தம்மூஸின் மத அடையாளக் குறியாயிருந்தது, மேலும் நிம்ரோதுவின் மனப்பான்மையைப் பிரதிபலிக்கும் இரத்தஞ்-சிந்தும் போர்களில் மாண்டோருக்காகத் துயரங்கொண்டாடும் ஆசாரங்களில் அது சேர்ந்துகொள்கிறது. (ஆனால் யோவான் 17:16, 17-ஐப் பாருங்கள்.) (4) தம்முடைய வார்த்தையின் மூலம் கடவுள் சொல்பவற்றிற்கு அது தன் முதுகைத் திருப்பிக்கொள்கிறது, அதற்குப் பதில், நவீன விஞ்ஞானமும் மனிதத் தத்துவ ஞானமும் அளிக்கும் “அறிவு ஒளியைத்” தெரிந்துகொள்கிறது. (1 தீமோத்தேயு 6:20, 21; எரேமியா 2:13-உடன் ஒத்துப் பாருங்கள்.) (5) இவை போதாவென்பதுபோல், கடவுளுடைய பெயரில் பேசுவதாக உரிமைபாராட்டிக்கொண்டு அதே சமயத்தில் சில இடங்களில் அது புரட்சியை ஆதரிக்கிறது, மேலும் பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டைக் குறித்ததில் மனம்போன போக்கில் செல்லவிடும் நோக்கை அது ஏற்கிறது. (2 பேதுரு 2:1, 2) சிலர் இந்தப் போக்குகளை முற்போக்கு மனப்பான்மையென கருதுகின்றனர். அவை எல்லாவற்றையும் அவர்கள் ஒருவேளை சம்மதியாவிடினும், மற்றவற்றில் அவர்கள் ஒருவேளை பங்குகொள்ளலாம் அல்லது அவற்றைக் குற்றம் பாராட்டாமலாவது விடலாம். மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகரிடமிருந்து ஆட்களை விலகிப்போகச் செய்யும் இத்தகைய, கடவுளை அவமதிக்கும் பழக்கச் செயல்களைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

14பலர் சர்ச்சுகளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டு இனிமேலும் அவற்றிற்குச் செல்வதில்லை. இந்த உலகத்தில் காணும் வன்முறைச் செயல்களையும் நேர்மையற்றத் தன்மையையும்பற்றி அவர்கள் வெகுவாய் மனக்கலக்கம் கொண்டிருக்கலாம். ஆனால் அது அவர்கள் தப்பிப்பிழைப்பதற்காக அடையாளம் போடப்பட்டிருக்கிறார்களென குறிக்கிறதில்லை. ‘கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற மனிதனால்’ அவர்கள் அடையாளம் போடப்பட வேண்டும். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பு இன்று இந்த அடையாளம் போடும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறதென உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.—மத்தேயு 24:45-47.

15கடவுளுடைய அங்கீகாரத்தைக் கொண்டிருக்கிறார்களென அடையாளம் போடப்பட விரும்பும் யாவரும் இந்த “அடிமை” வகுப்பின் மூலம் யெகோவா அளித்துக்கொண்டிருக்கும் போதனையை ஏற்று யெகோவாவை உண்மையாய் வணங்குகிறவர்களாக வேண்டும். தங்கள் வாய்களால் யெகோவாவைக் கனப்படுத்தி ஆனால் உலகத்தின் வழிகளையே உண்மையில் நேசிக்கிற ஆட்களாக அவர்கள் இருக்கக்கூடாது. (ஏசாயா 29:13, 14; 1 யோவான் 2:15) அவர்கள் யெகோவாவையும் அவருடைய தராதரங்களையும் நேசித்து, அவரை அவமதிக்கும் போதகங்கள் மற்றும் பழக்கச் செயல்களின்பேரில் “பெருமூச்சுவிட்டழுது” இருதயத்தில் துக்க உணர்ச்சியடைய வேண்டும். சொல்லர்த்தமான மையைக் கொண்டு அவர்களுடைய நெற்றியில் அடையாளத்தை ஒருவரும் போடப்போவதில்லை. ஆனால் இந்த அறிகுறியான அடையாளத்தை அவர்கள் கொண்டிருக்கையில், அவர்கள், ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக, எபேசியர் 4:24-ல் விவரித்துள்ள “புதிய சுபாவத்தைத்” (NW) தரித்துக் கொண்டது எல்லாருக்கும் தெளிவாய்த் தெரியும். அவர்களுக்கு உயிருள்ள விசுவாசம் இருக்கிறது. யெகோவாவுக்கு நன்மதிப்பைக் கொண்டுவருவதையே யாவர் முன்னும் தனிமையிலும் செய்ய அவர்கள் பிரயாசப்படுகிறார்கள். கிறிஸ்தவ மண்டலத்திலிருந்து வெளிவந்துள்ள ஆட்கள் மட்டுமல்ல, எல்லாரும், அவர்கள் எத்தகைய சூழ்நிலையிலிருந்து வந்தாலும் சரி, அபிஷேகஞ் செய்யப்பட்ட வகுப்பினரின் கூட்டாளிகளாக “புதிய பூமிக்”குள் தப்பிப்பிழைக்க நம்பிக்கை கொண்டுள்ள யாவரும் இந்த அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

16யெகோவாவை அவமதித்து நடந்தவர்களைத் தப்பவிடுவதற்கு வயதோ, ஆண் அல்லது பெண்ணாக இருப்பதோ, தனித்தவராக அல்லது மண உறவில் இருப்பதோ எதுவும் காரணமில்லையென யெகோவாவின் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவோருக்குச் சொல்லப்பட்ட இந்த உண்மை முக்கியமாய்க் கவனிக்கத்தக்கது. மணமான ஆள், அவன் அல்லது அவள் தனித்தவராக அவரவர் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அடையாளம் போடப்படுவதை எதிர்த்து நின்றால் அல்லது அவர்களை யெகோவாவின் ஊழியராக வளர்த்துவரத் தவறினால், அந்தப் பிள்ளைகளுக்கு நேரிடுவதற்குப் பொறுப்பை அவர்கள்தாமே தாங்கவேண்டும். தெய்வபக்தியுள்ள பெற்றோரின் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளை யெகோவா “பரிசுத்தமாகக்” கருதுகிறபோதிலும், அடங்காதப் பிள்ளைகளை அவ்வாறு கருதுகிறதில்லை. (1 கொரிந்தியர் 7:14; சங்கீதம் 102:28; நீதிமொழிகள் 20:11; 30:17) பிள்ளைகள் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாவதற்குப் போதிய வயதுடையவர்களாயிருந்து, அவர்கள் முழுக்காட்டப்பட்டிருந்தாலும் அல்லது இல்லாவிடினும் அந்தத் தேவைகளுக்கிணங்க வாழ்வதற்கு விரும்புகிறதில்லையென்றால், அவர்களுடைய வயது அவர்களைத் தப்பவிடுவதில் பலன்தராது. அப்படியானால், பொறுப்பறிந்த வயதுடைய ஒவ்வொரு தனி நபரும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய சித்தத்தைச் செய்யும் ஆளாகத் தெளிவாய் அடையாளம் போடப்பட்டிருப்பது எவ்வளவு இன்றியமையாதது!

17எக்கணமும் நடைபெறவிருக்கும் அழிவைக் குறித்து மனிதவர்க்கத்தை எச்சரிக்கவும் பாதுகாப்புக்குரிய வழியைச் சுட்டிக் காட்டவும், யெகோவா, தமது சாட்சிகளை அனுப்புவதன்மூலம் மனிதவர்க்கத்துக்கு மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறார். ஆனால் பொய் மதத்தின் பதிவையும் அது விளைவித்துள்ள சீரழிந்தக் கனிகளையும் அவர் நன்றாய் அறிந்திருக்கிறார். மகா பாபிலோன் அழிக்கப்படுகையில், அதைப் பற்றிக் கொண்டிருப்பதில் விடாப்பிடியாய் இருக்கிற எவருக்கும் இரக்கம் காண்பிக்கப்படாது. வரவிருக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றத்தைத் தப்பிப்பிழைக்க, வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய யெகோவாவை உண்மையாய் வணங்குவோராக, இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நாம் நடக்க வேண்டும்.

[கேள்விகள்]

1. என்ன கேள்விகளை ஆழ்ந்து ஆலோசிக்கும்படி இந்தப் பாடம் நம்மை ஊக்குவிக்கிறது?

2. யேகூவும் யோனதாபும் யாவர்?

3. யெகோவாவை வணங்குவதைக் குறித்தத் தன் நிலைநிற்கையை யோனதாப் எவ்வாறு யாவரறிய வெளிப்படையாய்த் தெரிய செய்தான்?

4, 5. (எ) என்ன வழிவகையின் மூலம் பாகால் வணக்கத்தார் தங்களை அடையாளங் கண்டுகொள்ள வைக்க யேகூ செய்தான்? (பி) பின்பு யேகூ என்ன நடவடிக்கை எடுத்தான், யோனதாப் எங்கிருந்தான்? (சி) பாகால் வணக்கத்தாரின் அந்த அழிவுக்கு உங்களுடைய பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கிறது?

6. (எ) மகா பாபிலோன் எவ்வாறு அழிக்கப்படும்? (பி) பூமியிலிருந்தபோது இயேசு, யெகோவாவுக்கெதிரான எத்தகைய போட்டியையும் தாம் சகிப்பதில்லையென எவ்வாறு காட்டினார்?

7. (எ) பாகால் வணக்கமுறையின் தற்கால அத்தாட்சிகள் சில யாவை? (பி) அரசராயிருக்கும் கிறிஸ்து இக்காரியங்களை ஏன் சகித்துக்கொண்டிருக்கிறார்?

8. முக்கிய கவனத்துக்குரிய என்ன கேள்விகளை நாம் நம்மைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

9. (எ) நாம் உண்மையில் யோனதாபைப்போலிருந்தால், என்ன செய்துகொண்டிருப்போம்? (பி) இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்கள் இக்காரியங்களின் முக்கியத்துவத்தை எவ்வாறு அறிவுறுத்துகின்றன?

10. யெகோவாவை வணங்குவோர் மாத்திரமே தப்பிப்பிழைப்பார்களென்று பைபிள் எவ்வாறு காட்டுகிறது?

11. (எ) எசேக்கியேல் 9:1-11-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள தரிசனத்தை விவரியுங்கள். (பி) தப்பிப்பிழைப்பதற்கு உயிர்நிலையாக இருந்ததென்ன?

12. (எ) அடையாளம் போடப்பட்டவர்கள், அருவருக்கத்தக்க எந்தக் காரியங்களின்பேரில் “பெருமூச்சுவிட்டழுது” கொண்டிருந்தனர்? (பி) இத்தகைய காரியங்களின்பேரில் யெகோவா ஏன் கடும் வெறுப்பு கொள்ள வேண்டும்?

13. (எ) அந்த “அருவருப்புகளுக்கு” ஒப்பிடக்கூடிய தற்கால பழக்கச் செயல்களின்பேரில் ஒவ்வொன்றாய்த் தனித்தனியே குறிப்புச் சொல்லுங்கள். (பி) இந்தப் பழக்கச் செயல்களைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

14. ஒருவன் சர்ச்சுகளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டது அவன் தப்பிப்பிழைப்பானென ஏன் குறிக்காது?

15. (எ) அந்த அடையாளம் என்ன? (பி) அதை ஒருவன் எப்படிப் பெறுகிறான்?

16. இந்தத் தரிசனம் ஏன் குறிப்பிடத்தக்க முறையில் பிள்ளைகளுக்கும் அவர்கள் பெற்றோருக்கும் முக்கியமாயிருக்கிறது?

17. யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி இங்கே நாம் என்ன கற்றுக்கொண்டோம்?

[பக்கம் 95-ன் படங்கள்]

தப்பிப்பிழைப்பதற்குத் தேவைப்படும் அடையாளத்தை நீங்கள் உண்மையில் பெற்றிருக்கிறீர்களா?