1 ராஜாக்கள் 14:1-31

14  பின்பு, யெரொபெயாமின் மகன் அபியா நோய்வாய்ப்பட்டான்.  அப்போது யெரொபெயாம் தன்னுடைய மனைவியிடம், “நீ உடனே சீலோவுக்குப் போய் அகியா தீர்க்கதரிசியைப் பார்த்துவிட்டு வா. இஸ்ரவேல் மக்கள்மீது நான் ராஜாவாக ஆவேன் என்று சொன்னவர் அவர்தான்.+ நீ என்னுடைய மனைவி என்று யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக மாறுவேஷத்தில் போ.  பத்து ரொட்டிகளையும் அப்பங்களையும் ஒரு ஜாடியில் தேனையும் எடுத்துக்கொண்டு போ. நம்முடைய மகனுக்கு என்ன ஆகும் என்பதை அவர் சொல்வார்” என்றார்.  அவர் சொன்னபடியே யெரொபெயாமின் மனைவி செய்தாள். சீலோவில்+ இருந்த அகியாவின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனாள். அகியா வயதானவராக இருந்தார், அதனால் அவருக்குக் கண் தெரியவில்லை.  ஏற்கெனவே யெகோவா அகியாவிடம், “நோய்வாய்ப்பட்ட தன் மகனுக்கு என்ன ஆகும் என்று விசாரிப்பதற்காக யெரொபெயாமின் மனைவி வந்துகொண்டிருக்கிறாள். தன்னை அடையாளம் கண்டுபிடிக்காமலிருக்க மாறுவேஷத்தில் வருகிறாள். நான் சொல்வதை நீ அவளிடம் சொல்ல வேண்டும்” என்று சொல்லியிருந்தார்.  அவள் அகியாவின் வீட்டு வாசலில் நுழைந்தபோதே அவளுடைய காலடி சத்தத்தை அகியா கேட்டார். உடனே, “யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா. ஏன் மாறுவேஷத்தில் வந்திருக்கிறாய்? கடவுள் உன்னிடம் கெட்ட செய்தியைச் சொல்லச் சொல்லியிருக்கிறார்.  நீ போய் யெரொபெயாமிடம் இந்தச் செய்தியைச் சொல். ‘இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், “நான் உன்னைச் சாதாரண மக்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுத்து, என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+  தாவீதுடைய வம்சத்தின் கையிலிருந்த ஆட்சியைப் பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்.+ ஆனால், நீ என் ஊழியனான தாவீதைப் போல் நடந்துகொள்ளவில்லை. தாவீது என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தான். முழு இதயத்தோடு என் வழியில் நடந்தான். எனக்குப் பிடித்ததை மட்டுமே செய்தான்.+  நீயோ, உனக்கு முன்பிருந்த எல்லாரையும்விட படுமோசமாக நடந்துகொண்டாய். என்னைப் புண்படுத்துவதற்காக இன்னொரு தெய்வத்தை உருவாக்கினாய், உலோகச் சிலைகளைச் செய்தாய்.+ இப்படியெல்லாம் செய்து நீ என்னை ஒதுக்கித்தள்ளிவிட்டாய்.+ 10  அதனால், உன்னுடைய வம்சத்துக்கு முடிவுகட்டுவேன். உன் வம்சத்து ஆண்கள் எல்லாரையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, அடியோடு அழிப்பேன். சாணத்தைத் துடைத்து சுத்தமாக்குவதைப் போல், யெரொபெயாமின் வம்சத்தைத் துடைத்து அழித்துவிடுவேன்.+ 11  யெரொபெயாமின் வம்சத்தைச் சேர்ந்த எவனாவது நகரத்துக்குள்ளே செத்துப்போனால் அவனை நாய்கள் தின்னும். நகரத்துக்கு வெளியே செத்துப்போனால் வானத்துப் பறவைகள் தின்னும். யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.”’ 12  இப்போது புறப்பட்டு உன் வீட்டுக்குப் போ. நகரத்துக்குள்ளே நீ காலெடுத்து வைக்கும்போது உன் மகன் இறந்துவிடுவான். 13  இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவனுக்காகத் துக்கம் அனுசரிப்பார்கள், பின்பு அவனை அடக்கம் செய்வார்கள். ஏனென்றால், அவனிடம் மட்டும்தான் இஸ்ரவேலின் கடவுளான யெகோவா ஏதோவொரு நல்ல காரியத்தைப் பார்த்திருக்கிறார். அதனால், யெரொபெயாமின் வம்சத்தில் அவன் ஒருவன் மட்டும்தான் கல்லறையில் வைக்கப்படுவான். 14  யெகோவா தனக்காக இன்னொரு ராஜாவை இஸ்ரவேல்மீது ஏற்படுத்துவார். அந்த நாளில் அவன் யெரொபெயாமின் வம்சத்தை அடியோடு அழித்துப்போடுவான்.+ கடவுள் நினைத்தால் இப்போதே அதைச் செய்துவிடுவார். 15  யெகோவா இஸ்ரவேலர்களைத் தண்டிப்பார், தண்ணீரில் அலைக்கழிக்கப்படும் நாணற்புல் போலாக்குவார். அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த இந்த அருமையான தேசத்திலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கிப்போடுவார்.+ ஆற்றுக்கு* அப்பால் அவர்களைச் சிதறிப்போகச் செய்வார்.+ ஏனென்றால், அவர்கள் பூஜைக் கம்பங்களை*+ செய்து யெகோவாவைப் புண்படுத்தினார்கள். 16  யெரொபெயாம் செய்த பாவத்துக்காகவும் அவனுடைய தூண்டுதலால் இஸ்ரவேலர்கள் செய்த பாவத்துக்காகவும் அவர் இஸ்ரவேலர்களைக் கைவிட்டுவிடுவார்”+ என்று சொன்னார். 17  அதன் பின்பு, யெரொபெயாமின் மனைவி திர்சாவுக்குப் புறப்பட்டுப் போனாள். வீட்டு வாசலில் அவள் நுழைந்தபோது அவளுடைய மகன் இறந்துபோனான். 18  பின்பு, அவனை அடக்கம் செய்தார்கள். இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவனுக்காகத் துக்கம் அனுசரித்தார்கள். யெகோவா தன்னுடைய ஊழியரான அகியா தீர்க்கதரிசி மூலம் சொன்ன வார்த்தை நிறைவேறியது. 19  யெரொபெயாமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அதாவது அவருடைய ஆட்சியைப் பற்றியும் அவர் செய்த போர்களைப் பற்றியும், இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.+ 20  யெரொபெயாம் 22 வருஷங்கள் ஆட்சி செய்தார், அதன் பிறகு அவர் இறந்துபோனார்;*+ அவருக்குப் பின்பு அவருடைய மகன் நாதாப் ராஜாவானார்.+ 21  இதற்கிடையே, சாலொமோனின் மகன் ரெகொபெயாம் யூதாவில் ராஜாவாக ஆகியிருந்தார். அப்போது, அவருக்கு 41 வயது. யெகோவா தன்னுடைய பெயரை நிலைநாட்டுவதற்காக இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் தேர்ந்தெடுத்திருந்த எருசலேம் நகரத்திலிருந்து 17 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ ரெகொபெயாமின் அம்மா பெயர் நாமாள்; அவள் ஓர் அம்மோனியப் பெண்.+ 22  யெகோவா வெறுக்கிற காரியங்களை யூதா மக்கள் செய்தார்கள்.+ அவர்கள் பயங்கரமான பாவங்களைச் செய்து தங்களுடைய முன்னோர்களைவிட அதிகமாக அவரைக் கோபப்படுத்தினார்கள்.+ 23  அதோடு, எல்லா மலைகளின் மீதும்+ அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும்+ ஆராதனை மேடுகளைக் கட்டினார்கள், பூஜைத் தூண்களையும் பூஜைக் கம்பங்களையும்*+ வைத்தார்கள். 24  அந்தத் தேசத்திலுள்ள கோயில்களில் ஆண் விபச்சாரக்காரர்களும் இருந்தார்கள்.+ இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான செயல்கள் எல்லாவற்றையும் யூதா மக்கள் செய்தார்கள். 25  ரெகொபெயாம் ராஜா ஆட்சி செய்த ஐந்தாம் வருஷத்தில், எகிப்தின் ராஜாவான சீஷாக்+ எருசலேம்மீது படையெடுத்து வந்தான்.+ 26  யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டுபோனான்.+ சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கக் கேடயங்கள் உட்பட, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனான்.+ 27  அதனால், ரெகொபெயாம் ராஜா அந்தத் தங்கக் கேடயங்களுக்குப் பதிலாக செம்புக் கேடயங்களைச் செய்து, அரண்மனை வாசலைக் காக்கிற காவலாளிகளின் தலைவர்களிடம் ஒப்படைத்தார். 28  யெகோவாவின் ஆலயத்துக்கு ராஜா போகும்போதெல்லாம் காவலாளிகள் அவற்றை எடுத்துக்கொண்டு போவார்கள். பின்பு, அவற்றைக் காவலாளிகளின் அறையில் திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள். 29  ரெகொபெயாமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 30  ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் தொடர்ந்து போர் நடந்துவந்தது.+ 31  ரெகொபெயாம் இறந்ததும்,* அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய அம்மா பெயர் நாமாள்; இவள் ஓர் அம்மோனியப் பெண்.+ ரெகொபெயாமுக்குப் பிறகு அவருடைய மகன் அபியாம்*+ ராஜாவானார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “சுவரில் சிறுநீர் கழிக்கிற எவரையும்.” வெறுப்பைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த எபிரெய வார்த்தைகள் ஆண்களைக் குறிக்கின்றன.
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டார்.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”
அபியா என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா