Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 22

‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காட்டுகிறீர்களா?

‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காட்டுகிறீர்களா?

1-3. (அ) குழந்தையின் அம்மா யார் என்ற வழக்கில் சாலொமோன் எவ்வாறு அபார ஞானத்தை காட்டினார்? (ஆ) என்ன தருவதாக யெகோவா நமக்கு வாக்குறுதி அளிக்கிறார், என்ன கேள்விகள் எழுகின்றன?

 அது சிக்கலான ஒரு வழக்கு—ஒரு குழந்தைக்காக இரண்டு பெண்கள் சண்டை போட்டார்கள். அந்தப் பெண்கள் ஒரே வீட்டில் குடியிருந்தார்கள், இருவரும் சில நாட்கள் இடைவெளியில் ஒரு மகனை பெற்றெடுத்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டது, இப்பொழுது அந்த இருவரும் உயிருள்ள குழந்தை தன்னுடையது என உரிமை கொண்டாடினார்கள். a உண்மையில் நடந்ததை சொல்ல கண்கண்ட சாட்சிகள் யாருமில்லை. ஒருவேளை இந்த வழக்கு கீழ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து அங்கு தீர்க்கப்படாமல் போயிருந்திருக்கலாம். கடைசியில், இந்த வழக்கு இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோனிடம் கொண்டு செல்லப்பட்டது. அவரால் உண்மையை கண்டுபிடிக்க முடிந்ததா?

2 அந்தப் பெண்களின் வாதத்தை சிறிது நேரம் காதுகொடுத்து கேட்டுவிட்டு, ஒரு வாளை எடுத்துவரும்படி சாலொமோன் சொன்னார். பின்பு, உறுதியான குரலில், அந்தக் குழந்தையை வெட்டி ஆளுக்குப் பாதி கொடுக்கும்படி ஆணையிட்டார். உடனே, உண்மையான அம்மா அந்தக் குழந்தையை—தன் அருமை செல்வத்தை—அடுத்தவளிடமே கொடுத்துவிடும்படி அரசனிடம் மன்றாடினாள். ஆனால் அடுத்தவளோ அந்தக் குழந்தையை இரண்டாக வெட்டும்படி வற்புறுத்தினாள். சாலொமோன் இப்பொழுது உண்மையை உணர்ந்து கொண்டார். ஒரு அம்மாவுக்கு தன் கர்ப்பத்து பிள்ளை மீது இருக்கும் கனிவான இரக்கத்தைப் பற்றி அவர் அறிந்திருந்தார். அந்த அறிவின் அடிப்படையில் வழக்கைத் தீர்த்து வைத்தார். “அந்த முதல் பெண்தான் அவனுடைய அம்மா” என்று சொல்லி உண்மையான அம்மாவிடம் அந்தக் குழந்தையை ஒப்படைத்தபோது அவள் அடைந்த நிம்மதியை சற்று கற்பனை செய்து பாருங்கள்.—1 ராஜாக்கள் 3:16-27.

3 அபார ஞானம் அல்லவா? இந்த வழக்கை சாலொமோன் எப்படி தீர்த்தார் என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டபோது மலைத்துப் போனார்கள், “கடவுள் கொடுத்த ஞானத்தால்தான் அவர் நியாயம் வழங்குகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.” ஆம், சாலொமோனின் ஞானம் கடவுள் அருளிய ஒரு வரம். யெகோவா அவருக்கு “ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ள இதயத்தை” தந்தார். (1 ராஜாக்கள் 3:12, 28) ஆனால் நம்மைப் பற்றியென்ன? நாமும் தெய்வீக ஞானத்தைப் பெற முடியுமா? ஆம், பெற முடியும், ஏனென்றால் “யெகோவாவே ஞானத்தைக் கொடுக்கிறார்” என கடவுளுடைய தூண்டுதலால் சாலொமோன் எழுதினார். (நீதிமொழிகள் 2:6) உள்ளப்பூர்வமாக நாடுகிறவர்களுக்கு ஞானத்தை—அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பகுத்துணர்வையும் நன்கு பயன்படுத்தும் திறமையை—தருவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தை நாம் எவ்வாறு பெறலாம்? அதை நம்முடைய வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்தலாம்?

‘ஞானத்தை சம்பாதியுங்கள்’—எப்படி?

4-7. ஞானத்தை சம்பாதிப்பதற்கு தேவைப்படும் நான்கு அம்சங்கள் யாவை?

4 தெய்வீக ஞானத்தைப் பெறுவதற்கு அறிவு ஜீவியாகவோ மெத்தப் படித்த மேதாவியாகவோ இருக்க வேண்டுமா? இல்லை. நம்முடைய பின்னணியும் கல்வியும் எதுவாக இருந்தாலும் யெகோவா தமது ஞானத்தை நமக்கு அருள மனமுள்ளவராக இருக்கிறார். (1 கொரிந்தியர் 1:26-29) ஆனால் அதற்கு நாம் முதலில் முயற்சி எடுக்க வேண்டும், ஏனென்றால் “ஞானத்தைச் சம்பாதி” என பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (நீதிமொழிகள் 4:7) நாம் எவ்வாறு ஞானத்தை சம்பாதிக்க முடியும்?

5 முதலாவதாக, நாம் கடவுளுக்குப் பயப்பட வேண்டும். “யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி” என நீதிமொழிகள் 9:10 கூறுகிறது. கடவுளுக்குப் பயப்படுவதே உண்மையான ஞானத்திற்கு அஸ்திவாரம். ஏன்? ஞானம் என்பது அறிவை வெற்றிகரமாக பயன்படுத்தும் திறமையை குறிக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். கடவுளுக்கு பயப்படுவதென்றால், அவரைக் கண்டு பயந்து நடுங்குவதை அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் மிகுந்த பயபக்தியுடனும் மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் அவருக்கு தலைவணங்குவதைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட பயம் ஆரோக்கியமானது, உந்துவிக்கும் வலிமைமிக்கது. கடவுளுடைய விருப்பத்தையும் வழிகளையும் பற்றி அறிந்தவற்றிற்கு இசைவாக வாழும்படி நம்மை அது தூண்டுகிறது. நாம் தேர்ந்தெடுப்பதற்கு இதைவிட ஞானமான பாதை வேறெதுவும் இல்லை, ஏனென்றால் யெகோவாவின் தராதரங்கள் அவற்றை பின்பற்றுவோருக்கு எப்பொழுதும் மிகுந்த நன்மையைத் தருகின்றன.

6 இரண்டாவதாக, நாம் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் இருக்க வேண்டும். மனத்தாழ்மையும் அடக்கமுமில்லாத இடத்தில் தெய்வீக ஞானம் இருக்க முடியாது. (நீதிமொழிகள் 11:2) ஏன்? நாம் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் இருந்தால், எல்லாவற்றிற்கும் நம்மிடம் பதில் இல்லை என்பதையும், நம்முடைய கருத்துக்கள் எப்பொழுதுமே சரியாக இருப்பதில்லை என்பதையும், காரியங்களின் பேரில் யெகோவாவின் சிந்தையை அறிய வேண்டும் என்பதையும் ஒத்துக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருப்போம். “தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்,” ஆனால் இதயத்தில் தாழ்மையுள்ளவர்களுக்கோ ஞானத்தை அருளுவதில் பிரியப்படுகிறார்.—யாக்கோபு 4:6.

7 மூன்றாவது முக்கியமான அம்சம் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதாகும். யெகோவாவின் ஞானம் அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஞானத்தைப் பெற, ஒரு புதையலைப் போல அதை தோண்டியெடுப்பதற்கு நாம் முயல வேண்டும். (நீதிமொழிகள் 2:1-5) நான்காவது அம்சம் ஜெபம். நாம் கடவுளிடம் ஞானத்திற்காக உள்ளப்பூர்வமாய் கேட்டால், அதை தாராளமாக தரும் குணம் படைத்தவராக இருக்கிறார். (யாக்கோபு 1:5) அவருடைய சக்தியின் உதவிக்காக நாம் ஏறெடுக்கும் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது. அவருடைய வார்த்தையில் அடங்கியுள்ள பொக்கிஷங்களை கண்டடைய அவருடைய சக்தி நமக்கு உதவும்; அது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஆபத்தை தவிர்ப்பதற்கும் ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கும் நமக்கு உதவும்.—லூக்கா 11:13.

தெய்வீக ஞானத்தைப் பெற, ஒரு புதையலைப் போல அதை தோண்டியெடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்

8. நாம் உண்மையிலேயே தெய்வீக ஞானத்தைப் பெற்றிருந்தால், அது எவ்வாறு தெளிவாக தெரியும்?

8 பதினேழாம் அதிகாரத்தில் நாம் கவனித்தபடி, யெகோவாவின் ஞானம் நடைமுறையானது. ஆகவே, நாம் உண்மையிலேயே தெய்வீக ஞானத்தைப் பெற்றிருந்தால், நம்முடைய நடத்தையில் அது தெளிவாக தெரியும். பின்வருமாறு எழுதியபோது தெய்வீக ஞானத்தின் கனிகளை சீஷனாகிய யாக்கோபு விவரித்தார்: “பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது. பின்பு சமாதானம் பண்ணுவதாக, நியாயமானதாக, கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக, பாரபட்சம் இல்லாததாக, வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.” (யாக்கோபு 3:17) தெய்வீக ஞானத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொன்றையும் நாம் சிந்திக்கும்போது, ‘பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தை என்னுடைய வாழ்க்கையில் வெளிக்காட்டுகிறேனா?’ என நம்மையே கேட்டுக்கொள்ளலாம்.

‘சுத்தமானதாக இருக்கிறது, பின்பு சமாதானம் பண்ணுவதாக இருக்கிறது’

9. சுத்தமாக இருப்பது என்றால் என்ன, சுத்தமாக இருப்பதை ஞானத்தின் முதல் அம்சமாக சொல்லியிருப்பது ஏன் பொருத்தமானது?

9 “முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.” சுத்தமாக இருப்பது என்பது வெளிப்புறத்தில் மாத்திரமல்ல உட்புறத்திலும் களங்கமின்றி தூய்மையாக இருப்பதைக் குறிக்கிறது. ஞானத்தை இதயத்தோடு பைபிள் இணைத்துப் பேசுகிறது, ஆனால் பொல்லாத சிந்தனைகளால், ஆசைகளால், எண்ணங்களால் களங்கமான இதயத்திற்குள் பரலோகத்திலிருந்து வரும் ஞானம் நுழைய முடியாது. (நீதிமொழிகள் 2:10; மத்தேயு 15:19, 20) என்றபோதிலும், நம்முடைய இதயம் சுத்தமாக இருந்தால்—அதாவது, பாவமுள்ள மனிதரின் திறனுக்கு எட்டியவரை சுத்தமாக இருந்தால்—‘கெட்டதை விட்டுவிட்டு, நல்லது செய்வோம்.’ (சங்கீதம் 37:27; நீதிமொழிகள் 3:7) ஞானம் முதலாவது சுத்தமுள்ளதாக இருக்கிறது என்று சொல்வது பொருத்தமாக இல்லையா? சொல்லப்போனால், நாம் ஒழுக்க ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் சுத்தமாக இல்லையென்றால், பரலோகத்திலிருந்து வருகிற மற்ற குணங்களை எப்படி பிரதிபலிக்க முடியும்?

10, 11. (அ) நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருப்பது ஏன் முக்கியம்? (ஆ) சக வணக்கத்தார் ஒருவரை புண்படுத்திவிட்டதாக உணர்ந்தால், நீங்கள் சமாதானம் பண்ணுகிறவர் என எவ்வாறு நிரூபிக்கலாம்? (அடிக்குறிப்பையும் காண்க.)

10 ‘பின்பு சமாதானம் பண்ணுவதாக இருக்கிறது.’ பரலோகத்திலிருந்து வரும் ஞானம் சமாதானத்தை நாடுவதற்கு நம்மை தூண்டுகிறது, அது கடவுளுடைய சக்தியின் கனியில் ஒன்றாகும். (கலாத்தியர் 5:22) யெகோவாவின் ஜனங்களை ஒன்றுபடுத்தும் ‘சமாதானப் பிணைப்பை’ குலைக்காமலிருக்க நாம் கடும் முயற்சி செய்கிறோம். (எபேசியர் 4:3, அடிகுறிப்பு) சமாதானம் குலைக்கப்படும்போது அதை திரும்ப நிலைநாட்டுவதற்கும் நாம் ஊக்கமாய் போராடுகிறோம். இது ஏன் முக்கியம்? பைபிள் இவ்வாறு கூறுகிறது: “எப்போதும் . . . சமாதானத்தோடு வாழுங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற கடவுள் உங்களோடு இருப்பார்.” (2 கொரிந்தியர் 13:11) ஆகவே, நாம் தொடர்ந்து சமாதானமாய் வாழும்வரை, சமாதானத்தின் தேவன் நம்மோடு இருப்பார். சக கிறிஸ்தவர்களை நாம் நடத்தும் விதம் யெகோவாவுடன் உள்ள நம்முடைய உறவை நேரடியாக பாதிக்கிறது. நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருப்பதை எவ்வாறு நிரூபிக்கலாம்? ஓர் உதாரணத்தை கவனியுங்கள்.

11 சக வணக்கத்தார் ஒருவரை நீங்கள் புண்படுத்திவிட்டதாக உணரும்போது என்ன செய்ய வேண்டும்? இயேசு இவ்வாறு கூறினார்: “அதனால், பலிபீடத்தில் காணிக்கை செலுத்த நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதோ மனவருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.” (மத்தேயு 5:23, 24) உங்களுடைய சகோதரரிடம் சென்று பேச முதற்படி எடுப்பதன் மூலம் இந்த அறிவுரையைப் பொருத்தலாம். என்ன நோக்கத்தோடு செல்ல வேண்டும்? அவருடன் ‘சமாதானமாகும்’ நோக்கத்தோடு செல்ல வேண்டும். b அதற்காக, அவரது உணர்ச்சிகள் புண்பட்டிருப்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும், மறுக்கக் கூடாது. சமாதானத்தை ஏற்படுத்தி அதை காத்துக்கொள்ளும் மனப்பான்மையோடு நீங்கள் அவரை அணுகினால், எந்தவொரு மனஸ்தாபத்தையும் ஒருவேளை தீர்த்துக்கொள்ளலாம், தகுந்த விதத்தில் மன்னிப்பும் கேட்கலாம், மன்னிக்கவும் செய்யலாம். சமாதானம் பண்ணுவதற்கு நீங்கள் முதற்படி எடுக்கும்போது, தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்படுகிறீர்கள் என்பதை காட்டுகிறீர்கள்.

‘நியாயமானதாக, கீழ்ப்படியத் தயாரானதாக இருக்கிறது’

12, 13. (அ) யாக்கோபு 3:17-ல் “நியாயமானதாக” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையின் அர்த்தம் என்ன? (ஆ) நாம் நியாயமானவர்கள் என எவ்வாறு காண்பிக்கலாம்?

12 ‘நியாயமானதாக இருக்கிறது.’ நியாயமாக இருப்பது என்றால் என்ன? யாக்கோபு 3:17-ல் ‘நியாயமானதாக இருக்கிறது’ என்பதற்குரிய மூல கிரேக்க வார்த்தையை துல்லியமாக மொழிபெயர்ப்பது கடினம் என கல்விமான்கள் சொல்கிறார்கள். வளைந்துகொடுப்பது, விட்டுக்கொடுப்பது போன்ற அர்த்தங்கள் அதற்கு இருக்கின்றன. “மென்மை,” “பொறுத்துக்கொள்ளுதல்,” “கரிசனை காட்டுதல்” போன்ற வார்த்தைகளை மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தின் இந்த அம்சத்தை நாம் எவ்வாறு வெளிக்காட்டலாம்?

13 “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்” என பிலிப்பியர் 4:5 சொல்கிறது. மற்றொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: “நியாயத்தன்மை உள்ளவர்களாக பெயரெடுங்கள்.” (நவீன ஆங்கிலத்தில் புதிய ஏற்பாடு [ஆங்கிலம்], ஜே.பி. ஃபிலிப்ஸ்) நாம் நம்மை எப்படி கருதுகிறோம் என்பதல்ல, ஆனால் மற்றவர்கள் நம்மை எப்படி கருதுகிறார்கள் என்பதும் நாம் எப்படிப்பட்டவர்களாக பெயரெடுத்திருக்கிறோம் என்பதுமே முக்கியம் என்பதை கவனியுங்கள். நியாயத்தன்மையுள்ளவர் எப்பொழுதும் ஓர் அட்சரம்கூட பிசகாமல் சட்டத்தை நுணுக்கமாக கடைப்பிடிப்பவராகவோ அல்லது தன் இஷ்டப்படியே எல்லாவற்றையும் செய்யும்படி மற்றவர்களை வற்புறுத்துகிறவராகவோ இருக்க மாட்டார். மாறாக, மற்றவர்களுடைய கருத்துக்களை மதிக்க மனமுள்ளவராகவும், பொருத்தமான சந்தர்ப்பத்தில், பிறருடைய விருப்பங்களுக்கு இணங்கிச் செல்பவராகவும் இருப்பார். மூர்க்கமானவராகவோ கொடூரமானவராகவோ இல்லாமல் மற்றவர்களிடம் மென்மையானவராக நடந்துகொள்வார். இது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இன்றியமையாததாக இருந்தாலும் மூப்பர்களாக சேவிப்போருக்கு மிகவும் முக்கியம். மென்மை மற்றவர்களைக் கவருகிறது, மூப்பர்களை அணுகத்தக்கவர்களாக்குகிறது. (1 தெசலோனிக்கேயர் 2:7, 8) ‘கரிசனை காட்டுகிறவராக, வளைந்து கொடுப்பவராக, மென்மையானவராக இருப்பதற்கு பெயர்பெற்றிருக்கிறேனா?’ என நாம் அனைவரும் நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது.

14. நாம் ‘கீழ்ப்படியத் தயாராக இருப்பவர்கள்’ என்பதை எவ்வாறு காட்டலாம்?

14 ‘கீழ்ப்படியத் தயாரானதாக இருக்கிறது.’ ‘கீழ்ப்படியத் தயாரானதாக இருக்கிறது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் வேறெங்கும் பயன்படுத்தப்படவில்லை. இந்த வார்த்தை “பெரும்பாலும் ராணுவத்தில் கண்டிப்புடன் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படும் ஒன்று” என அறிஞர் ஒருவர் கூறுகிறார். “இணங்க வைப்பதற்கு எளிதான,” “அடிபணிகிற” என்ற கருத்தை இது தருகிறது. பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தின்படி நடப்பவர் பைபிள் என்ன சொல்கிறதோ அதற்கு உடனடியாக அடிபணிகிறார். ஒரு முடிவெடுத்த பிறகு, உண்மைகள் எடுத்துச் சொல்லப்பட்டாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றிருப்பவர் அல்ல. மாறாக, அவர் தவறான நிலைநிற்கை எடுத்திருப்பதாக அல்லது தவறான முடிவுக்கு வந்திருப்பதாக தெளிவான வேதப்பூர்வ அத்தாட்சியோடு அவரிடம் காட்டப்படுகையில் உடனடியாக தன்னை மாற்றிக்கொள்கிறார். இப்படிப்பட்டவரென நீங்களும் பெயரெடுத்திருக்கிறீர்களா?

‘இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக இருக்கிறது’

15. இரக்கம் என்றால் என்ன, யாக்கோபு 3:17-ல் “இரக்கமும்” “நல்ல செயல்களும்” ஒருசேர குறிப்பிடப்பட்டிருப்பது ஏன் பொருத்தமானது?

15 ‘இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக இருக்கிறது.’ பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தின் ஓர் இன்றியமையாத அம்சம் இரக்கம்; ஏனென்றால் இத்தகைய ஞானம் ‘இரக்கம் நிறைந்தது’ என சொல்லப்படுகிறது. “இரக்கமும்” “நல்ல செயல்களும்” ஒருசேர குறிப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். இது பொருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் பைபிளில் இரக்கம் என்பது பெரும்பாலும் மற்றவர்கள் மீது காட்டும் ஆழ்ந்த அக்கறையையும், அன்பான செயல்களைப் பிறப்பிக்கும் கரிசனையையும் குறிக்கிறது. இரக்கம் என்பது “ஒருவருடைய மோசமான சூழ்நிலையைக் கண்டு வருத்தப்படுவது, மேலும் அதற்காக ஏதாவது செய்ய முயற்சிப்பது” என ஒரு புத்தகம் வரையறுக்கிறது. ஆகவே, தெய்வீக ஞானம் என்பது கனிவற்ற, உணர்ச்சியற்ற, அல்லது வெறுமனே அறிவாற்றல் சார்ந்த ஒன்றல்ல. மாறாக, கனிவானது, இதயப்பூர்வமானது, உணர்ச்சிகளை மதிப்பது. நாம் இரக்கம் நிறைந்தவர்கள் என எப்படி காட்டலாம்?

16, 17. (அ) பிரசங்க வேலையில் ஈடுபடுவதற்கு கடவுள் மீதுள்ள அன்போடு வேறு எதுவும் நம்மை உந்துவிக்கிறது, ஏன்? (ஆ) நாம் இரக்கம் நிறைந்தவர்கள் என்பதை என்னென்ன வழிகளில் காட்டலாம்?

16 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதே அதற்கு முக்கியமான ஒரு வழி. இந்த வேலையை செய்வதற்கு எது நம்மை உந்துவிக்கிறது? பிரதானமாக, கடவுள் மீதுள்ள அன்பே. அதோடு, மற்றவர்கள் மீதுள்ள இரக்கத்தால் அல்லது கரிசனையால் நாம் உந்துவிக்கப்படுகிறோம். (மத்தேயு 22:37-39) அநேகர் “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் . . . கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்” இருக்கிறார்கள். (மத்தேயு 9:36) பொய் மத மேய்ப்பர்களால் புறக்கணிக்கப்பட்டும் ஆவிக்குரிய ரீதியில் குருடாக்கப்பட்டும் இருக்கிறார்கள். அதனால் கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஞானமான வழிநடத்துதலைப் பற்றியோ அந்த அரசாங்கம் விரைவில் இந்தப் பூமிக்கு அருளும் ஆசீர்வாதங்களைப் பற்றியோ அவர்களுக்குத் தெரியவே தெரியாது. நம்மை சுற்றியுள்ளவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்போது, அவர்களுக்கு யெகோவாவின் அன்பான நோக்கத்தை சொல்வதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய இதயப்பூர்வமான இரக்கம் நம்மை தூண்டுகிறது.

பிறரிடம் இரக்கம் அல்லது கரிசனை காட்டும்போது, ‘பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தை’ நாம் வெளிக்காட்டுகிறோம்

17 நாம் இரக்கம் நிறைந்தவர்கள் என்பதை வேறெந்த வழிகளில் காண்பிக்கலாம்? திருடர்களால் தாக்கப்பட்டு, அனைத்தையும் பறிகொடுத்த நிலையில் கிடந்த ஒரு பயணியைக் கண்ட சமாரியனைப் பற்றிய இயேசுவின் உவமையை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அந்த சமாரியன் மனதுருகி அவனுடைய காயங்களைக் கட்டி அவனை கவனித்துக்கொள்வதன் மூலம் ‘இரக்கத்தோடு நடந்துகொண்டான்.’ (லூக்கா 10:29-37) தேவையில் இருப்போருக்கு நடைமுறையான உதவி அளிப்பதையும் இரக்கம் உட்படுத்துகிறது என்பதை இந்த உவமை காட்டுகிறது அல்லவா? “எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும், முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய வேண்டும்” என்று பைபிள் நமக்கு சொல்கிறது. (கலாத்தியர் 6:10) அதற்குரிய வாய்ப்புகள் சிலவற்றைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போய்வர வயதான சக கிறிஸ்தவர் ஒருவருக்கு போக்குவரத்து உதவி தேவைப்படலாம். சபையிலுள்ள விதவைக்கு அவருடைய வீட்டை பழுதுபார்ப்பதற்கு உதவி தேவைப்படலாம். (யாக்கோபு 1:27) சோர்ந்திருப்பவருக்கு உற்சாகப்படுத்தும் “நல்ல வார்த்தை” தேவைப்படலாம். (நீதிமொழிகள் 12:25) இத்தகைய வழிகளில் நாம் இரக்கத்தைக் காட்டும்போது, பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தை பயன்படுத்துகிறோம் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறோம்.

“பாரபட்சம் இல்லாததாக, வெளிவேஷம் போடாததாக இருக்கிறது”

18. பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தால் நாம் வழிநடத்தப்பட்டால், நம்முடைய இதயத்திலிருந்து எதை வேரோடு களைந்தெறிய முயல வேண்டும், ஏன்?

18 ‘பாரபட்சம் இல்லாததாக இருக்கிறது.’ தெய்வீக ஞானம் இன தப்பெண்ணத்தையும் தேசிய பெருமையையும் தவிர்ப்பதற்கு உதவுகிறது. நாம் இத்தகைய ஞானத்தால் வழிநடத்தப்படுவோமாகில், பாரபட்சத்திற்கு இடமளிக்கும் எந்தவொரு மனச்சாய்வையும் நம் இதயத்திலிருந்து வேரோடு களைய கடினமாக முயலுவோம். (யாக்கோபு 2:9) கல்வித் தகுதி, பொருளாதார அந்தஸ்து, அல்லது சபை பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களுக்கு சலுகை காண்பிக்க மாட்டோம். சக வணக்கத்தார் எவரையும், அவர்கள் எவ்வளவு தாழ்வானவர்களாக தோன்றினாலும், நாம் இழிவாக கருத மாட்டோம். இப்படிப்பட்டவர்களை யெகோவா தம்முடைய அன்புக்கு உரியவர்களாக கருதினால், நாமும் அவர்களை நம்முடைய அன்புக்கு உரியவர்களாக கருத வேண்டும்.

19, 20. (அ) ‘வெளிவேஷம் போடுகிறவன்’ என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின் பின்னணி என்ன? (ஆ) “வெளிவேஷம் இல்லாத சகோதரப் பாசத்தை” நாம் எவ்வாறு காட்டுகிறோம், இது ஏன் முக்கியம்?

19 “வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.” ‘வெளிவேஷம் போடுகிறவன்’ என்பதற்குரிய கிரேக்க வார்த்தை “ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு நடிகரை” குறிக்கலாம். பூர்வ காலங்களில், கிரேக்க மற்றும் ரோம நடிகர்கள் நடிக்கும்போது பெரிய முகமூடிகளை அணிந்து கொண்டார்கள். ஆகவே, ‘வெளிவேஷம் போடுகிறவன்’ என்பதற்குரிய கிரேக்க வார்த்தை பாசாங்கு செய்பவரை, அல்லது ஏமாற்றுக்காரரை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. தெய்வீக ஞானத்தின் இந்த அம்சம் சக வணக்கத்தாரை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை மட்டுமல்ல, அவர்களை எப்படி கருதுகிறோம் என்பதையும் பாதிக்க வேண்டும்.

20 நாம் ‘சத்தியத்துக்குக் கீழ்ப்படிவது,’ “வெளிவேஷம் இல்லாத சகோதரப் பாசத்தைக்” காட்டுவதில் விளைவடைய வேண்டும் என அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். (1 பேதுரு 1:22) ஆம், சகோதரர்கள் மீது நாம் காட்டும் பாசம் போலியாக இருக்கக் கூடாது. பிறரை வஞ்சிப்பதற்காக நாம் முகமூடியோ அல்லது வேஷமோ போடக் கூடாது. நம்முடைய பாசம் உண்மையானதாக, இதயப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், நம்முடைய சக விசுவாசிகளுடைய நம்பிக்கையை சம்பாதிப்போம், ஏனென்றால் நாம் எப்படிப்பட்டவர்களாக காட்டிக்கொள்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே உண்மையில் இருப்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். இப்படிப்பட்ட உள்ளப்பூர்வமான பண்பு கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் ஒளிவுமறைவற்ற, நேர்மையான நட்புறவுகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் சபையில் நம்பிக்கையான சூழலை உருவாக்கவும் உதவுகிறது.

‘நடைமுறை ஞானத்தைக் பாதுகாத்துக்கொள்’

21, 22. (அ) சாலொமோன் எவ்வாறு ஞானத்தைக் காத்துக்கொள்ளத் தவறினார்? (ஆ) நாம் எவ்வாறு ஞானத்தைக் காத்துக்கொள்ளலாம், அதனால் நாம் எவ்வாறு பயனடைவோம்?

21 தெய்வீக ஞானம் என்பது கடவுளிடமிருந்து வரும் ஒரு வரம், அது நாம் காத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. சாலொமோன் இவ்வாறு கூறினார்: “என் மகனே, . . . நடைமுறை ஞானத்தையும் யோசிக்கும் திறனையும் பாதுகாத்துக்கொள்.” (நீதிமொழிகள் 3:21, அடிக்குறிப்பு) இப்படி சொன்ன சாலொமோனே இதைச் செய்ய தவறியது வருந்தத்தக்கது. கீழ்ப்படிதலுள்ள இதயத்தைக் காத்துக்கொண்ட வரையில் அவர் ஞானியாக விளங்கினார். ஆனால் முடிவிலோ அவருடைய மற்ற தேசத்து மனைவிமார் யெகோவாவின் தூய வணக்கத்திலிருந்து அவருடைய இதயத்தை திசைதிருப்பி விட்டார்கள். (1 ராஜாக்கள் 11:1-8) அறிவை நாம் சரியாக பயன்படுத்தாவிட்டால் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை சாலொமோனுக்கு ஏற்பட்ட முடிவு காட்டுகிறது.

22 நடைமுறை ஞானத்தை நாம் எவ்வாறு காத்துக்கொள்ளலாம்? பைபிளையும் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையால்’ வழங்கப்படும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களையும் தவறாமல் வாசிப்பதோடு மட்டுமல்லாமல், கற்றுக்கொண்டதை கடைப்பிடிப்பதற்கும் நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். (மத்தேயு 24:45) தெய்வீக ஞானத்தை பொருத்திப் பயன்படுத்துவதற்கு நமக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அது இப்பொழுதே மேம்பட்ட வாழ்க்கையை அளிக்கிறது. மேலும், “உண்மையான வாழ்வை”—கடவுளுடைய புதிய உலகில் வாழ்வை—“உறுதியாகப் பிடித்துக்கொள்ள” நமக்கு உதவுகிறது. (1 தீமோத்தேயு 6:19) எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோகத்திலிருந்து வரும் ஞானத்தை வளர்த்துக்கொள்வது எல்லா ஞானத்திற்கும் ஊற்றுமூலராகிய யெகோவா தேவனிடம் நம்மை நெருங்கி வரச் செய்கிறது.

a 1 ராஜாக்கள் 3:16-ன்படி, இந்த இரண்டு பெண்களும் விபச்சாரிகள். வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “இந்தப் பெண்கள் பணத்திற்காக விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அல்ல, ஆனால் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம்; இவர்கள் யூத பெண்களாகவோ அல்லது பெரும்பாலும் வேறு தேசத்து பெண்களாகவோ இருந்திருக்கலாம்.”—யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

b “சமாதானமாகு” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை “விரோதத்தை விட்டுவிட்டு நண்பராவதை; சமரசமாவதை; மறுபடியும் ஒரு நல்ல உறவுக்குள் வருவதை” குறிக்கிறது. ஆகவே, முடிந்தால் புண்படுத்தப்பட்டவருடைய மனதிலிருந்து மனத்தாங்கலை நீக்கி மாற்றத்தை உண்டுபண்ணுவதே உங்களுடைய இலக்கு.—ரோமர் 12:18.