1 கொரிந்தியர் 1:1-31

1  கடவுளுடைய விருப்பத்தால்* கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருப்பதற்கு அழைக்கப்பட்ட பவுல்,+ சகோதரர் சொஸ்தேனேயோடு சேர்ந்து கொரிந்துவில்+ இருக்கிற கடவுளுடைய சபைக்கு எழுதுவது:  பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.  நீங்கள் கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகப் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறீர்கள்,+ நம் எல்லாருக்கும் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் நம்பிக்கை வைக்கிற* எல்லாரோடும் சேர்ந்து பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள்.+  கிறிஸ்து இயேசுவின் மூலம் என்னுடைய கடவுள் உங்களுக்குக் காட்டிய அளவற்ற கருணைக்காக எப்போதும் அவருக்கு நன்றி சொல்கிறேன்.  கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருப்பதால் பேச்சுத் திறமையும் அறிவும் மற்ற எல்லாமும் உங்களுக்கு நிறைவாகக் கிடைத்திருக்கிறது.+  கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கப்பட்ட செய்தி+ உங்களுக்குள் வேரூன்றியிருக்கிறது.  அதனால், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காக+ ஆவலோடு காத்திருக்கும் நீங்கள் எந்த வரத்திலும் குறைவுபடாமல் இருக்கிறீர்கள்.  நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் நாளில்+ நீங்கள் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதபடி, முடிவுவரை உறுதியோடு இருக்க கடவுள் உங்களுக்கு உதவி செய்வார்.  அவருடைய மகனும் நமது எஜமானுமாகிய இயேசு கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருப்பதற்காக* உங்களை அழைத்திருக்கிற கடவுள் நம்பகமானவர்.+ 10  சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் முரண்பாடில்லாமல் பேச வேண்டுமென்றும், உங்களுக்குள் பிரிவினைகள் இல்லாமல்+ ஒரே மனதோடும் ஒரே யோசனையோடும் முழுமையாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்றும்+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். 11  ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள் பிரிவினைகள் இருப்பதாக குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உங்களைப் பற்றி என்னிடம் சொன்னார்கள். 12  உங்களில் சிலர், “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் அப்பொல்லோவைச்+ சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கேபாவை* சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்” என்றும் சொல்லிக்கொள்வதாகக் கேள்விப்பட்டேன். 13  அப்படியானால், கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? உங்களுக்காக பவுலா மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார்? அல்லது, பவுலின் பெயரிலா ஞானஸ்நானம் எடுத்தீர்கள்? 14  கிறிஸ்புவையும்+ காயுவையும்+ தவிர உங்களில் வேறு யாருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். 15  அதனால், என் பெயரில் ஞானஸ்நானம் எடுத்ததாக உங்களில் யாரும் சொல்ல முடியாது. 16  உண்மைதான், ஸ்தேவனானுடைய வீட்டில் இருப்பவர்களுக்கும்+ நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். மற்றபடி, வேறு யாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை. 17  ஞானஸ்நானம் கொடுப்பதற்கு அல்ல, நல்ல செய்தியை அறிவிப்பதற்குத்தான் கிறிஸ்து என்னை அனுப்பினார்.+ இருந்தாலும், பேச்சுத் திறமையால்* அறிவிப்பதற்கு அவர் என்னை அனுப்பவில்லை; அப்படி அறிவித்தால், சித்திரவதைக் கம்பத்தில்* கிறிஸ்து இறந்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். 18  சித்திரவதைக் கம்பத்தை* பற்றிய செய்தி, அழிவின் பாதையில் போகிறவர்களுக்கு முட்டாள்தனமாக இருக்கிறது,+ ஆனால் மீட்பின் பாதையில் போகிற நமக்குக் கடவுளுடைய வல்லமையாக இருக்கிறது.+ 19  ஏனென்றால், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிவாளிகளின் அறிவை ஒதுக்கிவிடுவேன்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 20  அப்படியானால், இந்த உலகத்தின்* ஞானி எங்கே? வேத அறிஞன்* எங்கே? வாதாடுகிறவன் எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தைக் கடவுள் முட்டாள்தனமாக்கிவிடவில்லையா? 21  இந்த உலக மக்கள் தங்களுடைய ஞானத்தை நம்புவதால்,+ கடவுளைத் தெரிந்துகொள்ளவில்லை.+ நாம் அறிவிக்கிற செய்தி அவர்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது.+ ஆனால், நம்பிக்கை வைக்கிறவர்களை இந்தச் செய்தியின் மூலம் காப்பாற்ற கடவுள் தீர்மானித்தார். இதிலிருந்து கடவுளுடைய ஞானம் தெளிவாகத் தெரிகிறது. 22  யூதர்கள் அடையாளங்களைக் கேட்கிறார்கள்,+ கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள். 23  நாமோ மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கிறோம்; அந்தச் செய்தி யூதர்களுக்குத் தடைக்கல்லாகவும் மற்ற தேசத்து மக்களுக்கு முட்டாள்தனமாகவும் இருக்கிறது.+ 24  ஆனாலும், யூதர்களுக்கும் சரி, கிரேக்கர்களுக்கும் சரி, கடவுளால் அழைக்கப்பட்ட எல்லாருக்கும், கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாகவும் கடவுளுடைய ஞானமாகவும் இருக்கிறார்.+ 25  ஏனென்றால், கடவுளுடைய முட்டாள்தனம் என்று கருதப்படுவது மனிதர்களுடைய ஞானத்தைவிட அதிக ஞானமுள்ளதாக இருக்கிறது; கடவுளுடைய பலவீனம் என்று கருதப்படுவது மனிதர்களுடைய பலத்தைவிட அதிக பலமுள்ளதாக இருக்கிறது.+ 26  சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபோது எப்படிப்பட்டவர்களாக இருந்தீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்; மனிதர்களுடைய பார்வையில், உங்களில் பலர் ஞானிகளாகவோ+ செல்வாக்குள்ளவர்களாகவோ உயர்குடியில் பிறந்தவர்களாகவோ* இல்லை.+ 27  ஆனால் ஞானிகளை வெட்கப்படுத்துவதற்காக, உலகத்தின் பார்வையில் முட்டாள்களாக இருப்பவர்களைக் கடவுள் தேர்ந்தெடுத்தார்; பலமாக இருப்பவர்களை வெட்கப்படுத்துவதற்காக, உலகத்தின் பார்வையில் பலவீனமாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்தார்.+ 28  இந்த உலகம் மதிப்புள்ளதாகக் கருதுகிறவற்றை ஒன்றுமில்லாமல் செய்வதற்காக, இந்த உலகம் அற்பமாகவும் தாழ்வாகவும் தூசியாகவும் கருதுகிறவற்றையே தேர்ந்தெடுத்தார்.+ 29  எந்த மனிதனும் அவர் முன்னால் பெருமை பேசக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்தார். 30  கடவுளால்தான் நீங்கள் கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிறீர்கள்; இவர் கடவுளிடமிருந்து வந்த ஞானமாக இருக்கிறார்; நம்மைக் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக்கி,+ பரிசுத்தமானவர்களாக்கி,+ மீட்புவிலையால் விடுவிக்கிறவராகவும் இருக்கிறார்.+ 31  அதனால், “பெருமை பேசுகிறவன் யெகோவாவை* பற்றியே பெருமை பேசட்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சித்தத்தால்.”
நே.மொ., “பெயரில் கூப்பிடுகிற.”
வே.வா., “பங்குள்ளவர்களாக இருப்பதற்காக.”
பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.
வே.வா., “புத்திசாலித்தனமான பேச்சால்.”
வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “திருச்சட்ட வல்லுநன்.”
வே.வா., “முக்கியமான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவோ.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா