Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 26

ஏன் இவ்வளவு பிரச்சினை?

ஏன் இவ்வளவு பிரச்சினை?

ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது, “ஏன்தான் இதெல்லாம் நடக்குதோ?” என்று கேட்கிறோம். இதற்கு பைபிள் தெளிவான விளக்கம் தருகிறது!

1. உலகத்தில் எப்படிக் கெட்ட விஷயங்கள் நடக்க ஆரம்பித்தன?

பிசாசாகிய சாத்தான் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தான். மற்றவர்களை ஆட்சி செய்ய அவன் ஆசைப்பட்டதால், ஆதாமையும் ஏவாளையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். (ஆதியாகமம் 3:1-5) எப்படி? ஏவாளிடம் அவன், ‘யெகோவா உங்களுக்கு நல்லதை தராம வெச்சிருக்காரு. இது ரொம்ப அநியாயம். அவரோட பேச்சை கேட்காதீங்க. அப்போதான் இன்னும் சந்தோஷமா இருப்பீங்க’ என்று சொல்லாமல் சொன்னான். ஏவாள் சாக மாட்டாள் என்றும் சொன்னான். இப்படி, முதன்முதலில் பொய் சொன்னவன் அவன்தான் என்பதால், “அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்.”யோவான் 8:44.

2. ஆதாமும் ஏவாளும் என்ன செய்ய முடிவு எடுத்தார்கள்?

ஆதாம் ஏவாளுக்கு யெகோவா எல்லாவற்றையும் தாராளமாகக் கொடுத்தார். ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரேவொரு மரத்தைத் தவிர மற்ற எல்லா மரங்களுடைய பழங்களையும் சாப்பிடலாம் என்று சொன்னார். (ஆதியாகமம் 2:15-17) ஆனால் ஏவாள், தடை செய்யப்பட்ட அந்த மரத்தின் “பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள்.” பிறகு, ஆதாமும் அதை “சாப்பிட்டான்.” (ஆதியாகமம் 3:6) இரண்டு பேரும் கடவுளுடைய பேச்சை மீறிவிட்டார்கள். உண்மையில், அவர்கள் பரிபூரணமாக இருந்ததால் சரியானதைச் செய்யும் இயல்புதான் அவர்களுக்கு இருந்தது. அப்படியென்றால், இது வேண்டுமென்றே செய்த பாவம்! கடவுளுடைய ஆட்சியை ஒதுக்கியதால், அவர்களுடைய வாழ்க்கையே சீரழிந்தது.—ஆதியாகமம் 3:16-19.

3. ஆதாமும் ஏவாளும் எடுத்த முடிவு நம்மை எப்படிப் பாதித்திருக்கிறது?

ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய பேச்சை மீறியதால் அவர்களுக்குப் பாவ இயல்பு வந்தது. அது பரம்பரை நோய் போல அவர்களுடைய வம்சத்துக்கும் வந்துவிட்டது. “ஒரே மனிதனால் [அதாவது, ஆதாமினால்] பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”ரோமர் 5:12.

நிறைய காரணங்களால் நமக்குக் கஷ்டங்கள் வருகின்றன. ஒருவேளை, நம்முடைய தவறான முடிவுகளால் அல்லது மற்றவர்களுடைய தவறான முடிவுகளால் நமக்குக் கஷ்டங்கள் வரலாம். எதிர்பாராத சம்பவங்களாலும் நமக்குக் கஷ்டங்கள் வரலாம்.—பிரசங்கி 9:11-ஐ வாசியுங்கள்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

இன்று உலகத்தில் இருக்கும் கெட்ட விஷயங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கடவுள் காரணம் இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? நம்முடைய கஷ்டத்தைப் பார்க்கும்போது அவருக்கு எப்படி இருக்கும்? இப்போது பார்க்கலாம்.

4. நம் கஷ்டங்களுக்குக் காரணம் ஒருவன்

இந்த உலகம் கடவுளுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையா? வீடியோவைப் பாருங்கள்.

யாக்கோபு 1:13-ஐயும் 1 யோவான் 5:19-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உலகத்தில் இருக்கும் கெட்ட விஷயங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கடவுள்தான் காரணமா?

5. சாத்தானுடைய ஆட்சியின் விளைவுகள்

ஆதியாகமம் 3:1-6-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • சாத்தான் என்ன பொய்யைச் சொன்னான்?—வசனங்கள் 4, 5-ஐப் பாருங்கள்.

  • யெகோவா நல்லதைத் தராமல் இருக்கிறார் என சாத்தான் எப்படி மறைமுகமாகச் சொன்னான்?

  • மனிதர்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு யெகோவாவின் ஆட்சி தேவையில்லை என சாத்தான் எப்படி மறைமுகமாகச் சொன்னான்?

பிரசங்கி 8:9-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவாவின் ஆட்சி இல்லாததால் இந்த உலகத்தில் என்ன நடந்திருக்கிறது?

  1. ஒரு பூஞ்சோலையில் ஆதாமும் ஏவாளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். ஆனால், சாத்தானோடு சேர்ந்துகொண்டு யெகோவாவுக்கு எதிராகக் கலகம் பண்ணினார்கள்

  2. அவர்கள் கலகம் பண்ணிய பிறகுதான் இந்த உலகத்தில் பாவமும் துன்பமும் சாவும் வந்தன

  3. பாவத்துக்கும் துன்பத்துக்கும் சாவுக்கும் யெகோவா முடிவுகட்டுவார். மறுபடியும் மனிதர்கள் எந்தக் குறையும் இல்லாமல் பூஞ்சோலையில் வாழ்வார்கள்

6. யெகோவா நம் கஷ்டத்தைப் பார்க்கிறார்

நாம் என்ன கஷ்டப்பட்டாலும் கடவுளுக்குக் கவலையே இல்லையா? தாவீதும் பேதுருவும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பாருங்கள். சங்கீதம் 31:7-ஐயும் 1 பேதுரு 5:7-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவா நம் கஷ்டத்தைப் பார்த்து வேதனைப்படுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?

7. எல்லா கஷ்டத்தையும் கடவுள் தீர்த்துவைப்பார்

ஏசாயா 65:17-ஐயும் வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • மனிதர்களுக்கு வந்த எல்லா பாதிப்புகளையும் கடவுள் சரிசெய்துவிடுவார் என்று தெரிந்துகொள்வது ஏன் ஆறுதலாக இருக்கிறது?

உங்களுக்குத் தெரியுமா?

சாத்தான் முதன்முதலில் பொய் சொன்னபோது, யெகோவாவைப் பற்றி அவதூறாகப் பேசினான். அதாவது, அவர் நியாயமாகவும் அன்பாகவும் ஆட்சி செய்வதில்லை என்று சொல்லி அவருடைய பெயரைக் களங்கப்படுத்தினான். யெகோவா சீக்கிரத்தில் மனிதர்களுடைய கஷ்டத்தையெல்லாம் தீர்க்கும்போது தன் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார். அதாவது, தன் பெயருக்கு வந்த களங்கத்தை நீக்கி, தன்னுடைய ஆட்சிதான் சிறந்தது என்பதை நிரூபித்துக் காட்டுவார். யெகோவாவுடைய பெயர் பரிசுத்தமாவதுதான் இந்தப் பிரபஞ்சத்திலேயே முக்கியமான விஷயம்.—மத்தேயு 6:9, 10.

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கடவுள்தான் நம்மள சோதிக்கிறாரு.”

  • நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

சுருக்கம்

பிசாசாகிய சாத்தானும் முதல் மனித ஜோடியும்தான் இந்த உலகத்தில் இருக்கும் எல்லா கெட்ட விஷயங்களுக்கும் முக்கியக் காரணம். நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து யெகோவா வேதனைப்படுகிறார். சீக்கிரத்தில் நமக்கு ஒரு விடுதலை தருவார்.

ஞாபகம் வருகிறதா?

  • பிசாசாகிய சாத்தான் ஏவாளிடம் என்ன பொய்யைச் சொன்னான்?

  • ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் நாம் எல்லாரும் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்?

  • யெகோவா நம் கஷ்டத்தைப் பார்க்கிறார், அதைத் தீர்க்கப்போகிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

பாவத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று தெரிந்துகொள்ளுங்கள்.

“பாவம் என்றால் என்ன?” (ஆன்லைன் கட்டுரை)

ஏதேன் தோட்டத்தில் பிசாசாகிய சாத்தான் எழுப்பிய விவாதத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

“கடவுள் ஏன் கஷ்டங்கள அனுமதிக்கிறாரு?” (ஆன்லைன் கட்டுரை)

நிறைய பேருடைய மனதைக் குடையும் ஒரு கேள்விக்கு ஆறுதலான பதிலைப் பாருங்கள்.

“யூத இனப்படுகொலைக்குக் காரணம் என்ன? கடவுள் ஏன் அதைத் தடுக்கவில்லை?” (ஆன்லைன் கட்டுரை)

சுற்றிலும் நடக்கிற பிரச்சினைகளைப் பற்றி ஒருவர் என்ன தெரிந்துகொண்டார் என்று பாருங்கள்.

இப்போ நான் தனியா இல்ல (5:09)